திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

விக்கிமூலம் இலிருந்து
குறிப்பேடு 1 & 2. எபிரேய விவிலியப் பதிப்பு. ஆண்டு: 1618.

2 குறிப்பேடு (The Second Book of Chronicles)[தொகு]

அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

அதிகாரம் 11[தொகு]

செமாயாவின் இறைவாக்கு[தொகு]

(1 அர 12:21-24)


1 ரெகபெயாம் எருசலேமுக்குத் திரும்பியவுடன் யூதா, பென்யமின் குலத்தாரில் ஓர் இலட்சத்து எண்பதாயிரம் போர்வீரர்களைத் திரட்டினான்; ஏனெனில் இஸ்ரயேலுடன் போர்தொடுத்து அரசை மீண்டும் கைப்பற்ற விரும்பினான்.
2 அப்போது கடவுளின் மனிதரான செமாயாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது:
3 "யூதா அரசனும் சாலமோனின் மகனுமான ரெகபெயாமிடமும், யூதாவிலும் பென்யமினிலும் வாழும் இஸ்ரயேலர் அனைவரிடமும் நீ சொல்ல வேண்டியது:
4 'ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் படையெடுத்துச் சென்று, உம் சகோதரருடன் போரிட வேண்டாம். அவரவர் தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; ஏனெனில் என்னாலேயே இச்செயல் நிகழ்ந்தது.'" ஆண்டவரின் வாக்கைக் கேட்ட அவர்கள், எரொபவாமுக்கு எதிராகச் செல்வதைக் கைவிட்டுத் திரும்பிச் சென்றனர்.

ரெகபெயாம் நகர்களை வலுப்படுத்தல்[தொகு]


5 ரெகபெயாம் எருசலேமில் வாழ்ந்து கொண்டு, யூதாவில் அரண்சூழ் நகர்கள் பல எழுப்பினான். அவையாவன:
6 பெத்லகேம், ஏத்தாம், தெக்கோவா,
7 பெத்சூர், சோக்கொ, அதுல்லாம்,
8 காத்து, மாரேசா, சீபு,
9 அதோரயிம், இலாக்கிசு, அசேக்கா,
10 சோரா, அய்யலோன், எபிரோன்; இவையே யூதாவிலும் பென்யமினிலும் கட்டப்பட்ட அரண்சூழ் நகர்கள்.
11 அவன் நகர்க்கோட்டைகளை வலுப்படுத்தி, அவற்றுக்குத் தளபதிகளை நியமித்தான்; உணவுப் பொருள்கள், எண்ணெய், திராட்சை இரசம் போன்றவற்றுக்கான கிடங்குகளையும் ஏற்படுத்தினான்.
12 அவன் ஈட்டிகளாலும் கேடயங்களாலும் ஒவ்வொரு நகரையும் மிகவும் வலிமைமிக்கதாக்கினான். இவ்வாறு யூதாவும் பென்யமினும் அவன் பக்கமாய் இருந்தன.

குருக்கள் மற்றும் லேவியர் வருகை[தொகு]


13 இஸ்ரயேல் முழுவதிலும் இருந்த குருக்களும் லேவியரும் அனைத்துப் பகுதியிலிருந்தும் வந்து அவனோடு சேர்ந்து கொண்டனர்.
14 இவர்கள் ஆண்டவருக்குக் குருத்துவப் பணி செய்யாதவாறு எரொபவாமும் அவன் புதல்வரும் இவர்களை விலக்கி வைத்தனர். எனவே, இவர்கள் தங்கள் மேய்ச்சல் நிலத்தையும் உடைமைகளையும் விட்டுவிட்டு, யூதாவுக்கும் எருசலேமுக்கும் திரும்பிச் சென்றனர்.
15 ஏனெனில், எரொபவாம் தன் தொழுகை மேடுகளுக்கும், தான் செய்திருந்த ஆட்டு, கன்றுக்குட்டிச் சிலைகளுக்கும் தானே குருக்களை நியமித்தான். [*]
16 அந்த லேவியரைத் தொடர்ந்து, இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருதும் தம் கடவுளாம் ஆண்டவரை முழு இதயத்தோடும் வழிபட விரும்பியோர் தம் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவருக்குப் பலி செலுத்த எருசலேமுக்கு வந்தனர்.
17 இவ்வாறு, அவர்கள் யூதா அரசையும் சாலமோன் மகன் ரெகபெயாம் ஆட்சியையும் மூன்றாண்டுகள் உறுதிப்படுத்தினர்; ஏனெனில் அவர்கள் தாவீது, சாலமோன் நடந்த வழியில் மூன்றாண்டுகளே வாழ்ந்தனர்.

ரெகபெயாமின் குடும்பம்[தொகு]


18 பின்பு, ரெகபெயாம் தாவீதின் மகன் எரிமோத்துக்கும் ஈசாயின் பேத்தியும் எலியாபின் மகளுமான அபிகயிலுக்கும் பிறந்த மகலாத்து என்பவளை மணந்து கொண்டான்.
19 அவள் அவனுக்கு எயூசு, செமரியா, சாகாம் என்ற புதல்வர்களைப் பெற்றெடுத்தாள்.
20 அடுத்து, அவன் அப்சலோமின் மகள் மாக்காவை மணந்து கொண்டான். அவள் அவனுக்கு அபியா, அத்தாய், சீசா, செலோமித்து ஆகியோரைப் பெற்றெடுத்தாள்.
21 ரெகபெயாம் பதினெட்டு மனைவியரையும், அறுபது வைப்பாட்டியரையும் கொண்டிருந்தான்; இவர்கள் மூலம் இருபத்தெட்டுப் புதல்வரையும் அறுபது புதல்வியரையும் பெற்றான். ஆனால், மற்ற எல்லா மனைவியர், வைப்பாட்டியரையும் விட அப்சலோம் மகள் மாக்காவிடம் அவன் மிகுதியாக அன்பு பாராட்டினான்.
22 அதனால், ரெகபெயாம் மாக்காவின் மகன் அபியாவை அவன் சகோதரர்களுக்குள் தலைவனாக ஏற்படுத்தியிருந்தான்; இவனையே அரசனாக்கவும் அவன் எண்ணியிருந்தான்.
23 அவன் முன்மதியோடு தன் மற்றெல்லாப் புதல்வரையும், யூதா, பென்யமின் நாடுகள் முழுவதிலுமுள்ள அரண்சூழ் நகர்களுக்குப் பிரித்தனுப்பினான். அவர்களுக்கு ஏராளமான உணவுப் பொருள்களையும், பல மனைவியரையும் ஏற்பாடு செய்தான்.

குறிப்பு

[*] 11:15 = 1 அர 12:31.

அதிகாரம் 12[தொகு]

யூதாவின் மீது எகிப்து படையெடுத்தல்[தொகு]

(1 அர 14:25-28)


1 ரெகபெயாம், தனது அரசை உறுதியுடன் நிலைநாட்டி, தன்னையே வலிமைப்படுத்திக் கொண்டபோது, ஆண்டவரின் திருச்சட்டத்தைப் புறக்கணிக்கத் தொடங்கினான். இஸ்ரயேலர் எல்லாருமே அவனைப்போலவே நடந்தனர்.
2 அவர்கள் ஆண்டவருக்கு எதிராகத் துரோகம் செய்ததால் ரெகபெயாம் ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னன் சீசாக்கு எருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்தான்.
3 சீசாக்கின் படையில் ஆயிரத்து இருநூறு தேர்களும், அறுபதாயிரம் குதிரைப்படை வீரரும் இருந்தனர்; அவனோடு எகிப்திலிருந்து எண்ணற்ற ஆள்கள் - லிபியர், சுக்கியர், எத்தியோப்பியர் வந்திருந்தனர்.
4 அவன் யூதாவின் அரண்சூழ் நகர்களைக் கைப்பற்றியபின், எருசலேமுக்கு வந்தான்.


5 அப்பொழுது இறைவாக்கினர் செமாயா, ரெகபெயாமிடமும் சீசாக்கின் பொருட்டு எருசலேமில் கூடியிருந்த யூதாவின் தலைவர்களிடமும், வந்து அவர்களை நோக்கி, "ஆண்டவர் கூறுவது இதுவே: என்னை நீங்கள் புறக்கணித்ததால், நீங்கள் சீசாக்கின் கையில் பிடிபடும்படி நானும் உங்களைப் புறக்கணித்துவிட்டேன்" என்று கூறினார்.
6 அதைக் கேட்ட இஸ்ரயேல் தலைவர்களும் அரசனும் தங்களையே தாழ்த்தி 'ஆண்டவர் நீதியுள்ளவர்' என்று கூறினர்.


7 அவர்கள் தங்களையே தாழ்த்திக் கொண்டதைக் கண்டு, ஆண்டவர் மீண்டும் செமாயாவிடம், "அவர்கள் தங்களையே தாழ்த்திக்கொண்டதால் அவர்களை நான் அழிக்க மாட்டேன். விரைவில் அவர்களுக்கு விடுதலை அளிப்பேன்; என் கடும் சினம் சீசாக்கின் வழியாக எருசலேம்மீது விழாது.
8 ஆயினும், எனக்கு ஊழியம் செய்வதற்கும் மற்ற நாடுகளின் அரசர்களுக்கு ஊழியம் செய்வதற்குமுள்ள வேறுபாட்டை உணரும்வண்ணம், அவர்கள் சீசாக்கின் அடிமைகளாக இருப்பார்கள்" என்றார்.


9 அவ்வாறே எகிப்தின் மன்னன் சீசாக்கு எருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்து, ஆண்டவரது இல்லத்தின் கருவூலங்கள், அரண்மனைச் செல்வங்கள் அனைத்தையும் சூறையாடினான். மேலும், சாலமோன் செய்திருந்த பொற் கேடயங்களையும் எடுத்துச் சென்றான். [*]
10 அவற்றிற்குப் பதிலாக அரசன் ரெகபெயாம் வெண்கலக் கேடயங்கள் செய்து, அவற்றை அரண்மனை வாயிற்காப்போரின் தலைவரிடம் ஒப்படைத்தான்.
11 ஆண்டவரின் இல்லத்திற்குள் அரசன் நுழையும் போதெல்லாம், வாயிற்காப்போர் அக்கேடயங்களை ஏந்தி உடன் செல்வர்; பின்னர் அவற்றைக் காவல் அறையில் வைப்பர்;
12 இவ்வாறு அரசன் தன்னையே தாழ்த்திக்கொண்டதாலும், யூதாவில் நற்செயல்கள் காணப்பட்டதாலும், ஆண்டவர் அவனை முற்றிலும் அழிக்காதவாறு அவரது சினம் அவனைவிட்டு அகன்றது.

ரெகபெயாமின் இறப்பு[தொகு]


13 அரசன் ரெகபெயாம் தன்னையே வலிமைப்படுத்திக்கொண்டு எருசலேமில் ஆட்சி செய்தான். ரெகபெயாம் அரசனானபோது, அவனுக்கு வயது நாற்பத்து ஒன்று. ஆண்டவர் தம் திருப்பெயரை நிலைபெறச் செய்ய இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருந்தும் தேர்ந்துகொண்ட நகரான எருசலேமில் ரெகபெயாம் பதினேழு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அம்மோனியளான நாமா என்பவளே அவன் தாய்.
14 ஆண்டவரை நாடுவதில் அவனது உள்ளம் உறுதியாய் இராததால், அவன் தீயன செய்தான்.


15 ரெகபெயாமின் பிற செயல்கள், தொடக்கமுதல் இறுதிவரை இறைவாக்கினர் செமாயாவின் குறிப்பேட்டிலும், திருக்காட்சியாளர் இத்தோவின் பதிவேட்டிலும் எழுதப்பட்டுள்ளன அல்லவா? ரெகபெயாமும் எரொபவாமும் வாழ்நாள் முழுவதும் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டிருந்தனர்.
16 பின்பு ரெகபெயாம் தன் மூதாதையருடன் துயில் கொண்டான்; அவனைத் தாவீதின் நகரில் அடக்கம் செய்தனர். அவனுக்குப் பின் அவன் மகன் அபியா ஆட்சி செய்தான்.

குறிப்பு

[*] 12:9 = 1 அர 10:16-17; 2 குறி 9:15-16.

(தொடர்ச்சி): குறிப்பேடு - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை