திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
யூதாவின் அரசர்கள் எரொபவாம், அபியா. ஓவியர்: மைக்கிலாஞ்சலோ. ஆண்டு: 1511-1512. காப்பிடம்: சிஸ்டைன் சிற்றாலயம், வத்திக்கான்.

2 குறிப்பேடு (The Second Book of Chronicles)[தொகு]

அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

அதிகாரம் 13[தொகு]

யூதாவின் அரசன் அபியா[தொகு]

(1 அர 15:1-8)


1 அரசன் எரொபவாம் ஆட்சியேற்ற பதினெட்டாம் ஆண்டில் அபியா யூதாவுக்கு அரசன் ஆனான்.
2 எருசலேமில் அவன் மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். கிபயாவைச் சேர்ந்த உரியேல் மகள் மீக்காயா என்பவளே அவன் தாய். அபியாவுக்கும் எரொபவாமுக்கும் இடையே போர் நடந்து வந்தது.
3 அபியா தேர்ந்தெடுக்கப் பெற்ற நாற்பதாயிரம் வலிமைமிக்க வீரர்களுடன் போருக்குச் சென்றான். அதுபோன்ற எரொபவாம் தேர்ந்தெடுக்கப் பெற்ற வலிமைமிகு எண்பதாயிரம் வீரர்களைச் சேர்த்துக் கொண்டு போருக்கு அணிவகுத்து நின்றான்.


4 அபியா, எப்ராயிம் மலைநாட்டின் செமாரயிம் என்ற குன்றின்மேல் நின்று கொண்டு, "எரொபவாம்! எல்லா இஸ்ரயேல் மக்களே! எனக்குச் செவி கொடுங்கள்!
5 இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவரே, இஸ்ரயேல் அரசைத் தாவீதுக்கும் அவர் மைந்தர்களுக்கும், முறிவுறாத உடன்படிக்கையாக, என்றென்றைக்கும் அளித்ததை நீங்கள் அறியீர்களோ?
6 இருப்பினும், நெபாற்றின் மகனும் தாவீதின் மகன் சாலமோனின் அலுவலனுமான எரொபவாம் தன் தலைவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்;
7 அவன் வீணரான கயவரைச் சேர்த்துத் தன்னை வலிமைப்படுத்திக்கொண்டு, சாலமோன் மகன் ரெகபெயாமை வென்றான். அப்பொழுது ரெகபெயாம் மன வலிமையுற்ற இளைஞனாய் இருந்தான். எனவே, அவனால் அவர்களை எதிர்த்து நிற்க முடியவில்லை.
8 இப்பொழுது, தாவீதின் வழிமரபிற்கு ஆண்டவர் அளித்த அரசை எதிர்த்து நிற்க நீங்கள் எண்ணுகிறீர்கள்; நீங்கள் பெருந்திரளாக இருக்கிறீர்கள்; அத்துடன் எரொபவாம் உங்களுக்குத் தெய்வங்களாகச் செய்த பொற்கன்றுக்குட்டிகளையும் நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.
9 மேலும், நீங்கள் ஆரோனின் வழிவந்த ஆண்டவரின் குருக்களையும் லேவியரையும் புறக்கணித்துவிட்டு, மற்ற நாட்டு மக்களைப் போல் உங்களுக்குக் குருக்களை ஏற்படுத்திக் கொண்டீர்கள்; ஓர் இளம் காளையோடும், ஏழு ஆட்டுக்கிடாய்களோடும் திருநிலை பெற வரும் எவனும் தெய்வமல்லாதவற்றுக்குக் குரு ஆகிவிடுகிறான்!


10 ஆனால் எங்களைப் பொறுத்த வரை, ஆண்டவரே எங்கள் கடவுள்! அவரை நாங்கள் பறக்கணிக்கவில்லை. ஆரோன் வழிவந்த குருக்களே ஆண்டவருக்குப் பணிபுரிவர்! லேவியரோ அப்பணியில் துணைநிற்பர்.
11 அவர்கள் நாள்தோறும், காலையிலும் மாலையிலும், ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தி, நறுமணத் தூபமிட்டு, தூய்மையான மேசைமேல் திருமுன்னிலை அப்பங்களை வைப்பர்; பொன் விளக்குத் தண்டின் அகல்கள் மாலைதோறும் ஏற்றப்படும்; இவ்வாறு நாங்கள் எங்கள் கடவுளாம் ஆண்டவரின் ஒழுங்கு முறைகளை நிறைவேற்றுகிறோம்; நீங்களோ அவர்களை புறக்கணித்துவிட்டீர்கள்.
12 இதோ! கடவுளே எங்கள் தலைவராக எங்களோடு இருக்கிறார்; உங்களுக்கு எதிராகப் போரிட அவருடைய குருக்களே எக்காளங்களை ஊதிப் பேரொலி எழுப்புவார்கள்! ஆதலால், இஸ்ரயேல் மக்களே! உங்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவருக்கு எதிராகப் போரிடதீர்கள்; ஏனெனில். நீங்கள் வெற்றியடைய மாட்டீர்கள்" என்று கூறினான்.


13 ஆனால் எரொபவாம் பதுங்கிச்செல்லும் ஒரு படையை அனுப்பி, யூதாவைப் பின்புறம் சுற்றி வளைக்கச் செய்தான்; அவனோடிருந்த படையோ யூதாவின் முன்னே நின்றது.
14 யூதாவின் வீரர்கள் திரும்பிப் பார்த்தபோது, அவர்களை முன்னும் பின்னும் எதிர்க்கும் படைகளைக் கண்டனர். உடனே அவர்கள் ஆண்டவரை நோக்கி அபயக் குரலிட, குருக்கள் எக்காளங்களை ஊதினர்.
15 யூதாவின் வீரர்கள் போர் முழக்கமிட்டனர்; அப்படி முழக்கமிட்டபோது, கடவுள் அபியா, யூதா முன்பாக எரொபவாமையும் இஸ்ரயேலர் எல்லாரையும் முறியடித்தார்.
16 இஸ்ரயேலர் யூதாவுக்குப் புறமுதுகு காட்டி ஓடினர். கடவுள் இஸ்ரயேல் மக்களை யூதாவிடம் கையளித்தார்.
17 அப்பொழுது, அபியாவும் அவன் மக்களும் அவர்களைப் பெருமளவில் வெட்டி வீழ்த்தி, இஸ்ரயேலில் ஆற்றல்மிகு ஐந்து இலட்சம் வீரர்களைக் கொன்றனர்.
18 அந்நேரத்தில், இஸ்ரயேலின் புதல்வர் சிறுமையுற, தங்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரை நம்பி வாழ்ந்த யூதாவின் புதல்வர் வலிமையுற்றனர்.


19 பின்பு, அபியா எரொபவாமைத் துரத்திச் சென்று, பெத்தேலையும் அதன் சிற்றூர்களையும், எசானாவையும் அதன் சிற்றூர்களையும், எப்ரோனையும் அதன் சிற்றூர்களையும் அவனிடமிருந்து கைப்பற்றினான்.
20 அபியாவின் வாழ்நாள் முழுவதும், எரொபவாம் வலிமையுறவில்லை. ஆண்டவர் அவனைத் தண்டிக்க, அவனும் இறந்தான்.
21 பின்பு, அபியா மிகுந்த வலிமை அடைந்தான்; அவனுக்குப் பதினான்கு மனைவியரும், இருபத்திரண்டு புதல்வரும், பதினாறு புதல்வியரும் இருந்தனர்.


21 அபியாவின் பிற செயல்கள் யாவும், அவன் வழிமுறைகளும் உரைகளும், இறைவாக்கினர் இத்தோ எழுதிய ஆய்வேட்டில் எழுதப்பட்டள்ளன.

அதிகாரம் 14[தொகு]


1 அபியா தன் மூதாதையருடன் துயில்கொண்டான். அவனைத் தாவீதின் நகரில் அடக்கம் செய்தனர். அவனுக்குப்பின் அவன் மகன் ஆசா ஆட்சி செய்தான். அவன் காலத்தில் நாடு பத்தாண்டு அமைதி பெற்றிருந்தது.

யூதாவின் அரசன் ஆசா[தொகு]


2 ஆசா, தன் கடவுளாம் ஆண்டவரின் பார்வையில் நல்லதும் நேரியதும் செய்து வந்தான்.
3 வேற்றுப் பலிபீடங்களையும், தொழுகை மேடுகளையும் அகற்றினான்; சிலைத்தூண்களை உடைத்தெறிந்தான்; அசேராக் கம்பங்களை வெட்டி வீழ்த்தினான்.
4 தங்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரை வழிபட்டு, அவர்தம் திருச்சட்டத்திற்கும் கட்டளைகளுக்கும் ஏற்ப வாழ வேண்டுமென யூதா மக்களுக்கு ஆணையிட்டான்.
5 மேலும், யூதாவின் நகர்களில் இருந்த எல்லாத் தொழுகை மேடுகளையும், தூபப்பீடங்களையும் அகற்றினான். அவனது ஆட்சியில் நாடு அமைதி கண்டது.
6 பின்பு, அவன் யூதாவில் அரண்சூழ் நகர்களை எழுப்பினான். ஏனெனில் நாடு அமைதியாக இருந்தது. அவ்வாண்டுகளில் எவனும் அவனோடு போரிடவில்லை, ஆண்டவர் அவனுக்கு ஓய்வு அளித்திருந்தார்.
7 அவன் யூதா மக்களிடம், "நம் கடவுளாம் ஆண்டவரை நாம் நாடியதால், நாடு நம் கையில் நிலைத்துள்ளது; நமக்கு எத்திக்கிலும் அவர் அமைதி அளித்துள்ளார். எனவே நாம் நகர்களைக் கட்டி, அவற்றைச் சுற்றிலும் கோட்டை, கொத்தளங்களையும், தாழ்ப்பாள்கள் கொண்ட வாயில்களையும் அமைப்போம்" என்று கூறினான்.
8 யூதாவிலிருந்து பரிசையும் ஈட்டியும் தாங்கிய மூன்று லட்சம் வீரரும் பென்யமினிலிருந்து கேடயமும் வில்லும் தாங்கிய இரண்டு இலட்சத்து எண்பதினாயிரம் வீரரும் கொண்ட ஒரு பெரும் படையை ஆசா கொண்டிருந்தான். இவர்கள் எல்லாரும் வலிமைமிகு வீரர்கள்.


9 எத்தியோப்பியன் செராகு, பத்து இலட்சம் வீரரோடும் முந்நூறு தேர்களோடும் அவர்களுக்கு எதிராகப் படையெடுத்து, மாரேசா வரை வந்தான்.
10 ஆசா அவனை எதிர்த்துச் செல்ல, அவர்கள் மாரேசாவிலுள்ள செப்பாத்தா சமவெளியில் போருக்கு அணிவகுத்து நின்றனர்.
11 அப்பொழுது, ஆசா தன் கடவுளாம் ஆண்டவரை நோக்கி, "ஆண்டவரே! வலியோனை எதிர்க்கும் வலிமையற்றவனைக் காப்பவர் உம்மையன்றி எவருமிலர்! எங்கள் கடவுளாம் ஆண்டவரே! உம்மில் நம்பிக்கை வைத்து, உமது பெயரால் இப்படையை எதிர்க்க வந்துள்ள எங்களுக்குத் துணையாக வாரும்! ஆண்டவரே, நீரே எங்கள் கடவுள்! எம்மனிதனும் உம்மை மேற்கொள்ள விடாதீர்" என்று மன்றாடினான்.


12 ஆண்டவர் எத்தியோப்பியரை ஆசா, யூதா முன்பாக முறியடிக்கவே, அவர்கள் தப்பியோடினர்.
13 அப்பொழுது ஆசாவும் அவனோடிருந்த மக்களும் அவர்களைக் கேரார் வரை துரத்திச் சென்றனர். ஆண்டவருக்கும் அவர் மக்களுக்கும் முன்பாக எத்தியோப்பியர் வீழ்ச்சியுற்றனர்; அவர்களுள் எவனும் உயிர் தப்பவில்லை, அவர்கள் முற்றிலும் நசுக்கப்பட்டனர். யூதாவின் வீரர்களோ மிகுதியான பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
14 மேலும் கேராரைச் சுற்றியிருந்த எல்லா நகர்களையும் வீழ்த்தினர்; ஏனெனில் ஆண்டவரின் அச்சம் அவற்றைப் பற்றிக்கொண்டது. எல்லா நகர்களையும் அவர்கள் சூறையாடினர்; ஏனெனில் அங்கே கொள்ளைப் பொருள்கள் மிகுதியாய் இருந்தன.
15 மேலும், அவர்கள் கூடாரங்களை இழுத்துத் தள்ளி, ஏராளமான ஆடுகளையும் ஒட்டகங்களையும் கைப்பற்றி எருசலேமுக்குத் திரும்பினர்.

(தொடர்ச்சி): குறிப்பேடு - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 15 முதல் 16 வரை