திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை
2 குறிப்பேடு (The Second Book of Chronicles)
[தொகு]அதிகாரங்கள் 15 முதல் 16 வரை
அதிகாரம் 15
[தொகு]அசரியாவின் இறைவாக்கும் ஆசாவின் உடன்படிக்கையும்
[தொகு]
1 கடவுளின் ஆவி ஓதேதின் மகன் அசரியாவின்மேல் இறங்கியது.
2 உடனே அவர் ஆசாவிடம் சென்று அவனை நோக்கிக் கூறியது: "ஆசாவே! யூதா, பென்யமின் எல்லா மக்களே! கேளுங்கள். நீங்கள் ஆண்டவரை நாடினால், கண்டடைவீர்கள்; நீங்கள் அவரைப் புறக்கணித்தால், அவரால் நீங்கள் புறக்கணிக்கப்படுவீர்கள்.
3 இஸ்ரயேல் நெடுங்காலமாக உண்மைக் கடவுளைப் போதிக்கும் குருக்களையும் திருச்சட்டத்தையும் கொண்டிருக்கவில்லை.
4 எனினும், இஸ்ரயேலர் தங்கள் துன்பத்தில் தங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பினர்; அவ்வாறு அவர்கள் தேடியபொழுது அவரைக் கண்டு கொண்டனர்.
5 அந்நாள்களில் ஒருவரும் அமைதியாகப் போகவோ வரவோ இயலவில்லை; ஏனெனில் நாடுகளில் குடியிருந்தோர் அனைவரிடையிலும் ஒரே குழப்பமாய் இருந்தது.
6 நாடு நாட்டையும், நகர் நகரையும் எதிர்த்து, ஒன்றை ஒன்று நசுக்கின. ஏனெனில், கடவுள் அவர்களைப் பற்பல இடுக்கண்களால் துன்புறுத்தினர்.
7 நீங்களோ மனத்திடன் கொள்ளுங்கள்; தளர்ந்துபோக வேண்டாம், ஏனெனில், உங்கள் செயல்களுக்கேற்ற கைம்மாறு கிடைக்கும்."
8 ஓதேத்தின் மகன் இறைவாக்கினர் அசரியா [*] உரைத்த இந்த இறைவாக்கைக் கேட்டபோது, ஆசா வீறுகொண்டெழுந்தான்; யூதா, பென்யமின் நாடுகளிலும், எப்ராயிம் மலைநாட்டில் தான் கைப்பற்றிருந்த நகர்களிலும் காணப்பட்ட அருவருப்புகளை அகற்றினான்; ஆண்டவரது மண்டபத்தின்முன் இருந்த அவரது பலிபீடத்தைப் புதுப்பித்தான்.
9 பிறகு, யூதா, பென்யமின் மக்களையும், எப்ராயிம், மனாசே, சிமியோனிலிருந்து வந்து தங்களோடிருந்த அன்னியர் அனைவரையும் ஒன்று கூட்டினான். ஆசாவின் கடவுளாகிய ஆண்டவர் அவனோடிருந்ததைக் கண்டு, அவர்கள் இஸ்ரயேலைவிட்டு அவனிடம் தஞ்சம் புகுந்திருந்தனர்.
10 ஆசா ஆட்சியேற்ற பதினைந்தாம் ஆண்டின் மூன்றாம் மாதத்தில், அவர்கள் எருசலேமில் கூடினர்.
11 தாங்கள் கொள்ளையிட்டுக் கொண்டு வந்த எழுநூறு மாடுகளையும், ஏழாயிரம் ஆடுகளையும் அன்று ஆண்டவருக்குப் பலியிட்டனர்.
12 அவர்கள் தங்கள் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும் தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நாடுவோம் என்றும்,
13 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை யார் யார் நாடாமல் இருக்கிறார்களோ அவர்கள், சிறியோர் பெரியோர், ஆண் பெண் யாராயினும், சாவுக்கு உட்பட வேண்டும் என்றும் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார்கள்.
14 எக்காளங்களும் கொம்புகளும் முழங்க, மிகுந்த ஆரவார ஆர்ப்பரிப்புடன் ஆண்டவரிடம் ஆணையிட்டார்கள்.
15 இதன் பொருட்டு யூதா மக்கள் அனைவரும் மகிழ்ந்தனர்; ஏனெனில், அவர்கள் தங்கள் முழு இதயத்தோடு ஆணையிட்டனர், ஆர்வத்துடன் அவரை நாடிக் கண்டடைந்தனர்; ஆண்டவரும் அவர்களுக்கு எத்திக்கிலும் அமைதி அளித்தார்.
16 அருவருப்பான அசேராக் கம்பம் ஒன்றை ஆசாவின் தாய் மாக்கா செய்திருந்தாள். அதனால், ஆசா அவளை 'அரச அன்னை' நிலையிலிருந்து நீக்கி விட்டான். மேலும் அவன் அக்கம்பத்தை உடைத்துத் தூள் தூளாக்கிக் கிதரோன் பள்ளத்தாக்கில் சுட்டெரித்தான்.
17 ஆனால், தொழுகை மேடுகள் இஸ்ரயேலினின்று அகற்றப்படவில்லை; இருப்பினும் ஆசாவின் இதயம் அவன் வாழ்நாள் முழுவதும் நிறைவுள்ளதாய் இருந்தது.
18 தன் தந்தையும் தானும் நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் மற்றும் ஏனைய பொருள்களையும் கடவுளின் இல்லத்தில் அவன் ஒப்படைத்தான்.
19 ஆசா ஆட்சியின் முப்பத்தைந்தாம் ஆண்டுவரை மீண்டும் போர் எழவில்லை.
- குறிப்பு
[*] 15:8 'இறைவாக்கினர் ஓதேது' என்பது எபிரேய பாடம்.
அதிகாரம் 16
[தொகு]இஸ்ரயேலின் தொல்லை
[தொகு](1 அர 15:17-22)
1 ஆசா ஆட்சியேற்ற முப்பத்தாறாம் ஆண்டில் இஸ்ரயேலின் அரசன் பாசா யூதா நாட்டை எதிர்த்து வந்தான். யூதா அரசன் ஆசாவிடம் போவதையும் வருவதையும் தடைசெய்யுமாறு பாசா இராமாவைக் கட்டி எழுப்பலானான்.
2 அதனால் ஆண்டவரின் இல்லம், அரச அரண்மனை ஆகியவற்றின் கருவூலங்களிலிருந்து பொன்னையும் வெள்ளியையும் எடுத்துத் தமஸ்குவில் வாழ்ந்த சிரியா மன்னன் பெனதாதுக்கு அனுப்பி வைத்தான்.
3 "என் தந்தையும் உம் தந்தையும் செய்ததுபோல், நானும் நீரும் உடன்படிக்கை செய்துகொள்வோம். இதோ! வெள்ளியும் பொன்னும் அனுப்பி வைக்கிறேன்; இஸ்ரயேலின் அரசனான பாசாவோடு உமக்கிருக்கும் உடன்படிக்கையை முறித்துவிடும். அப்போது அவன் என்னைவிட்டு அகன்று போவான்" என்று சொல்லி அனுப்பினான்.
4 அரசன் ஆசாவுக்கு பெனதாது இணங்கி, தன் படைத்தலைவர்களை இஸ்ரயேலின் நகர்களுக்கு எதிராக அனுப்பினான். அவர்கள் ஈயோன் தாண், ஆபேல்-மயீம் ஆகியவற்றையும் நப்தலி நகர்களின் அனைத்துப் பண்டசாலைகளையும் கைப்பற்றினர்.
5 இதைக் கேள்வியுற்ற பாசா இராமாவைக் கட்டுவதைக் கைவிட்டுவிட்டான்.
6 அரசன் ஆசா, யூதா மக்கள் யாவரையும் ஒன்றுதிரட்டி இராமாவைக் கட்டுவதற்காகப் பாசா தயாரித்து வைத்திருந்த கற்களையும் மரங்களையும் எடுத்துவந்து கேபாவையும் மிஸ்பாவையும் கட்டி எழுப்பினான்.
திருக்காட்சியாளர் அனானி
[தொகு]
7 அக்காலத்தில் திருக்காட்சியாளர் அனானி, யூதா அரசனான ஆசாவிடம் வந்து அவனிடம், "உன் கடவுளாகிய ஆண்டவரை நீ நம்பாமல் சிரியா மன்னனை நம்பியதால், அவனது படை உனது கையினின்று நழுவிப்போயிற்று.
8 எத்தியோப்பிருக்கும் லிபியருக்கும் மிகுதியான தேர்களும் குதிரை வீரர்களும் கொண்ட பெரும் படை இருக்கவில்லையா? அப்படியிருந்தும், நீ ஆண்டவர்மேல் நம்பிக்கை கொண்டிருந்ததால், அவர் அவர்களை உனது கையில் ஒப்படைத்தார்.
9 உலகம் அனைத்தையும் ஆண்டவரின் கண்கள் சுழன்று பார்க்கின்றன. அவர் தம்மை முழு மனத்துடன் நம்பும் அனைவர்க்கும் ஆற்றல் அளிக்கிறார். நீயோ இதன் மட்டில் மதியீனமாய் நடந்துகொண்டாய்; எனவே இன்றுமுதல் நீ போர்களைச் சந்திக்க வேண்டும்" என்றார்.
10 இதைக் கேட்ட ஆசா, திருக்காட்சியாளர்மேல் கடும் சினமுற்றான். அவன் எவ்வளவு எரிச்சலுற்றான் எனில், அவரைச் சிறையிலிட்டதோடு, மக்களுள் சிலரையும் கொடுமைப்படுத்தினான்.
ஆசாவின் இறப்பு
[தொகு](1 அர 15:23-24)
11 ஆசாவின் செயல்கள், தொடக்க முதல் இறுதிவரை, யூதா இஸ்ரயேல் அரசர்களின் ஆட்சிக் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.
12 தன் ஆட்சியின் முப்பத்தொன்பதாம் ஆண்டில் ஆசாவுக்குப் பாதங்களில் ஒரு கொடிய நோய் ஏற்பட்டது. ஆனாலும், அவன் ஆண்டவரை நாடாது, மருத்துவர்களையே நம்பினான்.
13 அவன் தன் ஆட்சியின் நாற்பத்தோராம் ஆண்டில் இறந்து, தன் மூதாதையரோடு துயில் கொண்டான்.
14 திறன்மிக்கோர் தயாரித்த நறுமணப் பொருள்கள், மூலிகைகள், தைலங்கள் செறிந்த பாடையின்மேல் அவனது சடலத்தைக் கிடத்தி, தாவீதின் நகரில் ஆசா தனக்கென வெட்டிய கல்லறையில் அடக்கம் செய்தனர். மேலும் அவனுக்கு அஞ்சலியாக மாபெரும் நெருப்பு வளர்த்தனர்.
(தொடர்ச்சி): குறிப்பேடு - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 17 முதல் 18 வரை