திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - முதல் நூல்/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
விவிலிய ஓவியம்: தாவீது அரசராக முடிசூட்டப்படுகிறார். ஓவியம் படைக்கப்பட்ட காலம்: 10ஆம் நூற்றாண்டு. நூல்: பாரிசு திருப்பாடல்கள் தொகுப்பு. காப்பிடம்: பாரிசு, பிரான்சு


1 குறிப்பேடு (The First Book of Chronicles)[தொகு]

அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

அதிகாரம் 11[தொகு]

தாவீது இஸ்ரயேல் மற்றும் யூதாவின் அரசராதல்[தொகு]

(2 சாமு 5:1-10)


1 எனவே இஸ்ரயேலர் அனைவரும் ஒன்றுதிரண்டு எபிரோனிலிருந்த தாவீதிடம் வந்து, "இதோ நாங்கள் உம் எலும்பும் சதையுமாய் இருக்கிறோம்.
2 சென்ற நாள்களில் சவுல் அரசனாயிருந்தபோதும், நீர்தாம் இஸ்ரயேலரின் எல்லாப் போர்களிலும் தலைமை தாங்கினீர். 'என் மக்களாகிய இஸ்ரயேலை நீ மேய்த்து, அவர்களின் தலைவனாயிருப்பாய்' என்று உம் கடவுளாகிய ஆண்டவரும் உம்மிடமே சொன்னார்" என்றார்கள்.
3 இஸ்ரயேலின் மூப்பர்கள் எல்லாரும் எபிரோனிலிருந்த அரசரிடம் வந்தார்கள். ஆண்டவர் திருமுன் தாவீது அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். ஆண்டவர் சாமுவேல் வழியாக உரைத்தபடி அவர்கள் தாவீதை இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்தார்கள்.


4 பின்பு தாவீதும் இஸ்ரயேலர் அனைவரும் எருசலேமுக்குச் சென்றனர். அது அந்நாட்களில் 'எபூசு' என்று அழைக்கப்பட்டது; எபூசியர் அங்கே அப்பகுதியில் வாழ்ந்து வந்தனர். [*]
5 எபூசுவாழ் மக்கள் தாவீதை நோக்கி: "நீர் இங்கு நுழையவே முடியாது" என்றனர்; ஆயினும் தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினார். அதுவே 'தாவீதின் நகர்' ஆயிற்று.
6 தாவீது, "எபூசியரை முதலில் வெட்டி வீழ்த்துபவன் படைத்தலைவனும் தளபதியுமாய் இருப்பான்" என்று அறிவித்திருந்தார். செரூயாவின் மகன் யோவாபு முதலில் உட்புகுந்தார். எனவே, அவர் படைத்தலைவர் ஆனார்.
7 தாவீது அக்கோட்டைக்குள் வாழ்ந்ததன் காரணமாக அது 'தாவீதின் நகர்' என்று அழைக்கப்பட்டது.
8 அவர் கிழக்கிலிருந்த பள்ளத்தை நிரப்பி நகரைச் சற்றிலும் மதில் எழுப்பினார்; யோவாபு நகரின் ஏனைய பகுதிகளைப் பழுது பார்த்தார்.
9 படைகளின் ஆண்டவர் தாவீதோடு இருந்ததால், தாவீதின் புகழ் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே வந்தது.

அரசர் தாவீதின் படைச் சிறப்பு[தொகு]

(2 சாமு 23:8-39)


10 ஆண்டவர் இஸ்ரயேலரைக் குறித்து உரைத்த வாக்கின்படி தாவீது அரசராவதற்கு இஸ்ரயேல் மக்கள் அனைவரோடும் அவருக்கு உறுதுணையாய் இருந்த தாவீதின் ஆற்றல்மிகு வீரர்களின் தலைவர்கள் இவர்களே:


11 தாவீதின் ஆற்றல்மிகு வீரர்களின் பெயர்ப்பட்டியல்: அக்மோனியின் மகன் யாசொபயாம்; இவர் முப்பதின்மர் தலைவர்; தம் ஈட்டியால் முந்நூறு பேரை ஒரே நேரத்தில் முந்நூறு பேரைக் குத்திக் கொன்றவர்.
12 அவரை அடுத்து அகோகியராகிய தோதோவின் மகன் எலயாசர்; இவர் மாவீரர் மூவருள் ஒருவர்.
13 பெலிஸ்தியர் போரிடப் படைதிரட்டிக் கொண்டு வந்திருந்த பொழுது, பஸ்தம்மில் தாவீதுடன் இருந்தார். வாற்கோதுமைப் பயிர் நிறைந்த ஒரு வயல் அங்கிருந்தது. மக்களோ பெலிஸ்தியருக்கு அஞ்சி ஓடினர்.
14 அப்போது அவர்கள் அவ்வயலின் நடுவே நின்றுகொண்டு, அதைக் காத்து, பெலிஸ்தியரை முறியடித்தனர். இவ்வாறு ஆண்டவர் மாபெரும் வெற்றியைத் தந்தருளினார்.


15 பெலிஸ்தியரின் படை இரபாயிம் பள்ளத்தாக்கில் பாளையமிறங்கி இருந்தபோது, முப்பதின்மர் தலைவருள் மூவர் அதுல்லாம் குகைக்குச் சென்றனர்.
16 தாவீது கோட்டைக்குள் இருந்தார். பெலிஸ்தியரின் பாளையம் பெத்லகேமில் இருந்தது.
17 ஒருநாள் தாவீது, "பெத்லகேம் நுழைவாயிலில் உள்ள கிணற்று நீரில் கொஞ்சம் யாராவது குடிக்கக் கொடுத்தால் நலமாயிருக்கும்" என்று ஆவலுடன் கூறினார்.
18 அப்போது அந்த மூவரும் பெலிஸ்தியரின் பாளையத்தினுள்ளே துணிந்து சென்று, பெத்லகேம் நுழைவாயிலில் இருந்த கிணற்று நீரை மொண்டு தாவீதிடம் கொண்டு வந்தார்கள். தாவீதோ அதைக் குடிக்க மனமில்லாமல், அதை ஆண்டவருக்கென்று கீழே கொட்டிவிட்டார்.
19 "நான் இதைச் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக! தங்கள் உயிரை ஒரு பொருட்டாக எண்ணாத இந்த மனிதரின் இரத்தத்தை நான் குடிப்பது எப்படி? இவர்கள் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது இந்தத் தண்ணீரைக் கொண்டுவந்தனரே!" என்று கூறி அதைக் குடிக்க மறுத்துவிட்டார். அந்த மாவீரர் மூவரும் இத்தகையவற்றைச் செய்தனர்.


20 யோவாபின் சகோதரராகிய அபிசாய் முப்பதின்மருள் தலைசிறந்தவர். இவரே தம் ஈட்டியால் முந்நூறு பேரைக் கொன்றவர்; எனவே முப்பதின்மருள் பெயர் பெற்றவராய் இருந்தார்.
21 இவர் முப்பதின்மருள் மிகுந்த புகழ் பெற்றிருந்தார். எனவே அவர்களுக்குத் தலைவராய் இருந்தார். ஆயினும் முந்தின மூவருக்கு அவர் சமமானவர் அல்ல.


22 கப்சியேலைச் சார்ந்தவரும் வலிமைமிக்கவருமான யோயாதாவின் மகன் பெனாயா தீரச் செயல்கள் பல புரிந்தார். மோவாபிய வீரர் இருவரைக் கொன்றார்; மேலும், உறைபனி நாளில் ஒரு குழியினுள் இறங்கி அங்கிருந்த சிங்கத்தைக் கொன்றார்.
23 ஐந்து முழ உயரமுடைய ஒரு எகிபத்தியனையும் இவர் கொன்றார். அந்த எகிப்தியன் கையில் தறிக்கட்டை போன்ற ஈட்டி இருக்கையில், இவர் ஒரு தடியோடு அவனுக்கு எதிராகச் சென்று, அந்த எகிப்தியனின் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அதே ஈட்டியால் அவனைக் கொன்றார்.
24 யோயாதாவின் மகன் பெனாயா இத்தகையவற்றைச் செய்து மாவீரர் மூவருள் பெயர் பெற்றவராய் இருந்தார்.
25 அம்முப்பதின்மருள் அவர் முதல்வராய் இருந்தாலும், முந்தின மூவருக்கு அவர் இணையானவர் அல்ல. அவரையே தாவீது தம் மெய்க்காப்பாளர்க்குத் தலைவராக நியமித்தார்.


26 படையின் மாவீரர் பின்வருமாறு: யோவாபின் சகோதரர் அசாவேல்; பெத்லகேமைச் சார்ந்த தோதோவின் மகன் எல்கானான்;
27 அரோரியரான சம்மோத்து; பெலொனியரான ஏலேசு,
28 தெக்கோவாவைச் சார்ந்த இக்கேசின் மகன் ஈரா; அனதோத்தியரான அபியேசர்,
29 ஊசாயரான சிபக்காய்; அகோகியரான ஈலாய்;
30 நெற்றோபாயரான மகராய், நெற்றோபாயரான பானாவின் மகன் ஏலேது.
31 பென்யமின் குலத்தில், கிபயாவைச் சார்ந்த இரிபாயின் மகன் இத்தாய்; பிராத்தோனியரான பெனாயா;
32 காகசு நீரோடைப் பகுதியைச் சார்ந்த ஊராய்; அர்பாயரான அபியேல்;
33 பகரூமியரான அஸ்மவேத்து; சால்போனியரான எல்யக்பா;
34 கீசோனியரான ஆசேமின் புதல்வர்; ஆராரியரான சாகேயின் மகன் யோனத்தான்;
35 ஆராரியரான சாகாரின் மகன் அகியாம்; ஊரின் மகன் எலிப்பால்;
36 மெக்கராயரான ஏபேர்; பெலோனியரான அகியா;
37 கர்மேலியரான எட்சரோ; எஸ்பாயின் மகன் நாராய்;
38 நாத்தானின் சகோதரர் யோவேல்; அக்ரியின் மகன் மிப்கார்;
39 அம்மோனியரான செலேக்கு; பெயரோத்தியரான நகராய்; இவர் செரூயாவின் மகனான யோவாபின் படைக்கலன் சுமப்பவர்.
40 இத்ரியரான ஈரா; இத்ரியரான காரேபு;
41 இத்தியரான உரியா; அக்லாயின் மகன் சாபாது;
42 ரூபன் குலத்தலைவரும் சீசாவின் மகனுமான அதீனா; இவரோடிருந்த முப்பது பேர்;
43 மாக்காவின் மகன் ஆனான்; மித்னியரான யோசபாற்று;
44 அஸ்தராயரான உசியா; அரோயேரியரான ஓதாமின் புதல்வர் சாமா, எயியேல்;
45 தீட்சியரான சிம்ரியின் மகன் எதியவேல்; அவன் சதோதரர் யோகா;
46 மகவாயரான எலியேல்; எல்னாமின் புதல்வர் எரிபாய், யோசவியா; மோவாபியரான இத்மா;
47 மெட்சோபாயரான எலியேல், ஓபேது, யகசியேல் என்பவர்களே.

குறிப்பு

[*] 11:4 = யோசு 15:63; நீத 1:21.

அதிகாரம் 12[தொகு]

அரசர் தாவீதின் பென்யமின் குல ஆதரவாளர்[தொகு]


1 தாவீது, கீசின் புதல்வர் சவுலிடமிருந்து தப்பித் தலைமறைவாய் சிக்லாகு என்னுமிடத்தில் தங்கியிருக்கையில், அவரிடம் வந்தவர்கள் இவர்களே; அவர்கள் போரில் தோள் கொடுத்த ஆற்றல்மிகு படை வீரர்.
2 அவர்கள், வில்வீரர்; கவண்கல் எறிதற்கும், வில்லினால் அம்பு எய்தற்கும், வலக்கை இடக்கைப் பழக்கமானவர்களாயும் இருந்தனர். அவர்கள் பென்யமின் குலத்தவரான சவுலின் குடும்பத்தவர்கள்.


3 அவர்களுள் முதன்மையானவரான அகியேசர், யோவாசு இருவரும் கிபயாவைச் சார்ந்த செமாயாவின் புதல்வர்கள். அஸ்மவேத்தின் புதல்வர்களான எசியேல், பெலவேற்று, பெராக்கா, அனதோத்தியரான எகூ;
4 முப்பத்தின்மருள் ஆற்றல்மிக்கவரும் முப்பதின்மருக்குத் தலைவருமான கிபயோனியர் இஸ்மாயா, எரேமியா, யகசியேல், யோகனான், கெதேராவியரான யோசபாத்து,
5 எலூசாய், எரிமோத்து, பெயெலியா, செமாரியா, அருப்பியரான செபத்தியா;
6 எல்கானா, எஸ்யா, அசரியேல், யோவேசர், கோராகியரான யாசொபெயாம்;
7 கெதோரியரான எரொகாமின் புதல்வர்கள் யோவேலா, செப்தியா.

காத்தின் குல ஆதரவாளர்[தொகு]


8 பேராற்றலும் படைத்திறனும் கேடயம், ஈட்டி கையாள்வதில் தேர்ச்சியும், சிங்கத்தின் முகமும், மலைவாழ் கலைமானின் வேகமும் உடைய காத்தியர் சிலர் பாலைநில அரணில் இருந்த தாவீதிடம் வந்து சேர்ந்துகொண்டார்கள்.
9 அவர்கள் யாரெனில்: தலைவரான ஏட்சேர், இரண்டாவது ஒபதியா, மூன்றாவது எலியாபு,
10 நான்காவது மிஸ்மன்னா, ஐந்தாவது எரேமியா,
11 ஆறாவது அத்தாய், ஏழாவது எலியேல்,
12 எட்டாவது யோகனான், ஒன்பதாவது எல்சாபாது,
13 பத்தாவது எரேமியா, பதினொன்றாவது மக்பன்னாய்.
14 இவர்களே காத்தின் புதல்வர்களான படைத்தலைவர்கள். இவர்களில் சிறியவர் நூறுபேருக்கும், பெரியவர் ஆயிரம் பேருக்கும் சமம.
15 யோர்தான் நதி கரைபுரண்டு ஓடும் முதல் மாதத்தில் அதைக் கடந்து, பள்ளத்தாக்குகளில் வாழ்ந்துவந்த யாவரையும் கிழக்கேயும் மேற்கேயும் துரத்தி அடித்தவர்கள் இவர்களே.

பென்யமின், யூதா குல ஆதரவாளர்[தொகு]


16 பென்யமின், யூதா புதல்வர்களில் சிலர் அரணில் இருந்த தாவீதிடம் வந்தனர்.
17 தாவீது அவர்களைச் சந்திக்க வெளியே வந்து அவர்களை நோக்கி: "நீங்கள் சமாதான நோக்குடன் எனக்கு உதவி செய்ய வந்துள்ளீர்களென்றால், நான் உங்களை இதயப் பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். மாறாக, குற்றமற்றவனான என்னை என் எதிரிகள் கையில் ஒப்புவிக்கும் பொருட்டு வந்துள்ளீர்களென்றால் நம் முன்னோரின் கடவுள் அதைக் கண்டு தீர்ப்புக் கூறட்டும்" என்றார்.


18 அப்போது முப்பதின்மர் தலைவராகிய அமாசாயை ஆவி ஆட்கொள்ளவே, அவர்: "தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள்; ஈசாயின் மகனே! நாங்கள் உம்மோடிருப்போம்; வெற்றி உமக்கே வெற்றி! எனனில் உம் கடவுள் உமக்குத் துணைநிற்கிறார்" என்றார். அப்போது தாவீது அவர்களைச் சேர்த்துக்கொண்டு தம் படைக்குத் தலைவர்கள் ஆக்கினார்.

மனாசே குல ஆதரவாளர்[தொகு]


19 தாவீது, பெலிஸ்தியரோடு சேர்ந்து சவுலுக்கு எதிராகப் போரிடச் செல்கையில், மனாசேயருள் சிலர் அவரோடு சேர்ந்து கொண்டனர். பெலிஸ்தியத் தலைவர்கள் தங்களுக்குள் ஆலோசனை செய்து, தாவீது தன் தலைவன் சவுலோடு சேர்ந்து கொண்டால், நம் தலை உருளும், என்று சொல்லி அவர் உதவி பெறாமல் அவரை அனுப்பிவிட்டார்கள்.
20 தாவீது சீக்லாகுக்குத் திரும்பி வந்தபோது மனாசேயருள் ஆயிரத்தவர்க்குத் தலைவர்களான யோசபாத்து, எதியவேல், மிக்கேல், யோசபாத்து, எலிகூ, சில்தாய் ஆகியோர் மனாசேயைவிட்டு அவரோடு சேர்ந்து கொண்டனர்.
21 அங்கே வந்த கொள்ளைக்காரரை முறியடிக்க இவர்கள் தாவீதுக்குத் துணை நின்றனர். ஏனெனில் இவர்கள் அனைவரும் வலிமைமிகு வீரர்கள்; ஆற்றல்மிக்க படைத்தலைவர்கள்.
22 இவ்விதமாகத் தாவீதுக்கு உதவிசெய்வோர் ஒவ்வொரு நாளும் அவரிடம் வந்துசேர்ந்துகொண்டே இருந்தனர். எனவே அவர்கள் கடவுளின் படையெனப் பெரும்படை ஆயினர்.

தாவீதின் படைத்திரள் அட்டவணை[தொகு]


23 ஆண்டவரின் வாக்குறுதிப்படி சவுலின் அரசைத் தாவீதிடம் ஒப்படைக்குமாறு, எபிரோனில் இருந்த தாவீதிடம் வந்த படைக்கலன் தாங்கிய தலைவர்களின் எண்ணிக்கை இதுவே:


24 யூதா புதல்வரில், கேடயமும் ஈட்டியும் தாங்கிப் போர்க்கோலம் பூண்ட ஆராயிரத்து எண்ணுறு பேர்;


25 சிமியோன் புதல்வரில் போரிடத் தயாரான ஆற்றல் மிகு வீரர் ஏழாயிரத்து நூறு பேர்.


26 லேவி புதல்வர்களில் நாலாயிரத்து அறுநூறு பேர்.


27 ஆரோன் வழிவந்த தலைவரான யோயாதா மற்றும் அவரோடிருந்த மூவாயிரத்து எழுநூறு பேர்;
28 ஆற்றல்மிகு இளைஞரான சாதோக்கு மற்றும் அவர் மூதாதை வீட்டைச் சார்ந்த அதிகாரிகள் இருபத்திரண்டு பேர்.


29 பென்யமின் புதல்வரில், சவுலின் உறவினர் மூவாயிரம் பேர்; அவர்களில் பெரும்பான்மையோர் அதுவரை சவுலின் குடும்பத்திற்குச் சார்பாய் இருந்தவர்கள்;


30 எப்ராயிம் புதல்வரில், ஆற்றல் மிகு வீரர் இருபதினாயிரத்து எண்ணூறு பேர், அவர்கள் தங்கள் மூதாதை வீட்டில் புகழ்பெற்றவர்கள்.


31 மனாசேயின் பாதி குலத்தில், பதினெட்டாயிரம் பேர்; அவர்கள் பெயர்ப் பட்டியலின்படி தாவீதை அரசராக்குவதற்கு வந்தனர்.


32 இசக்கார் புதல்வரில், இஸ்ரயேலர் செய்யவேண்டியது இன்னதென்று குறித்த காலத்தில் அறிவுரை வழங்கி வந்த நுண்ணறிவுடைய இரு நூறு தலைவர்கள் மற்றும் இவர்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டிருந்த இவர்களின் எல்லா உறவினர்;


33 செபுலோன் புதல்வரில், அனைத்துப் போர்க்கலன்களுடன் ஒரே மனத்தோராய்ப் போருக்குத் தயார் நிலையில் அணிவகுத்து நின்ற வீரர் ஐம்பதாயிரம் பேர்.


34 நப்தலியைச் சார்ந்த ஆயிரம் அதிகாரிகளும் மற்றும் கேடயமும் ஈட்டியும் தாங்கிய முப்பத்தேழாயிரம் பேர்.


35 தாணைச் சார்ந்த போருக்கு அணிவகுத்து நின்ற இருபத்து எட்டாயிரத்து அறுநூறு பேர்.


36 ஆசேரைச் சார்ந்த போருக்குத் தயார் நிலையில் அணிவகுத்து நின்ற நாற்பதாயிரம் பேர்.


37 யோர்தானுக்கு அப்பால் ரூபன், காத்து, மனாசேயின் பாதிக்குலம் இவற்றைச் சார்ந்த அனைத்துப் போர்க்கோலம் பூண்ட ஓர் இலட்சத்து இருபதினாயிரம் பேர்.


38 இந்தப் போர்வீரர் அனைவரும் போர்க்கள அணி வகுப்பில், தாவீதை இஸ்ரயேல் அனைத்துக்கும் அரசராக ஏற்படுத்துமாறு உறுதிபூண்டவராய் எபிரோனுக்கு வந்தனர். மேலும் எஞ்சியிருந்த இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஒரே மனதாய் தாவீதையே அரசராக்க விரும்பினர்.
39 அவர்கள் அங்கே தாவீதோடு உண்டு குடித்து மூன்று நாள் தங்கினார்கள். அவர்கள் உறவினர் அவர்களுக்காக எல்லாவற்றையும் தயார் செய்திருந்தனர்.
40 மேலும் இசக்கார், செபுலோன், நப்தலி நிலப்பகுதிகளில் அவர்களுக்கு அருகே இருந்தவர்கள், கழுதைகள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள், மாடுகள் ஆகியவற்றின் மீது ஏராளமான அப்பங்கள், உணவுக்கான மாவு, அத்திப்பழ அடைகள், திராட்சைப் பழ அடைகள், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றையும் மேலும் ஆடு மாடுகளையும் கொண்டு வந்தார்கள். இஸ்ரயேல் மகிழ்ச்சியில் திளைத்தது.


(தொடர்ச்சி): குறிப்பேடு - முதல் நூல்: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை