திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - முதல் நூல்/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

விக்கிமூலம் இலிருந்து
யாழிசைக்கும் தாவீது. கலைஞர்: டேவிட் போலுஸ் (1935), இஸ்ரயேல்.


1 குறிப்பேடு (The First Book of Chronicles)[தொகு]

அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

அதிகாரம் 13[தொகு]

உடன்படிக்கைப் பேழை கிரியத் எயாரிமிலிருந்து எருசலேமுக்கு எடுத்துச் செல்லப்படல்[தொகு]

(2 சாமு 6:1-11)


1 தாவீது ஆயிரத்தவர், நூற்றுவர் தலைவர்களோடும் ஏனைய தலைவர் அனைவரோடும் கலந்தாலோசித்தார்.
2 தாவீது இஸ்ரயேல் சபை முழுவதையும் நோக்கிக் கூறியது: "உங்களுக்கு நலமெனத் தோன்றினால், அது நம் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து வருகின்றதென்றால், இஸ்ரயேல் நாடெங்கிலும் வாழ்ந்துவரும் நம் சகோதரர் அனைவருக்கும் அவர்களுடன் மேய்ப்பு நிலம் சூழ்ந்த நகர்களில் வாழ்ந்துவரும் குருக்களும், லேவியரும் நம்மோடு வந்து சேரும்படி ஆளனுப்புவோம்.
3 சவுலின் காலத்தில் நாம் நாடிச்செல்லாமல் விட்டுவிட்ட நம் கடவுளின் பேழையைத் திரும்பக் கொண்டு வருவோம்".
4 இது அனைவருக்கும் நலமென்று தோன்றியதால் சபையோர் அனைவரும் அவ்வாறே செய்ய இசைந்தனர்.


5 எனவே தாவீது கடவுளின் பேழையைக் கிரியத்எயாரிமிலிருந்து கொண்டு வரும்படி எகிப்தைச் சேர்ந்த சீகோர் முதல் ஆமாத்து எல்லைவரை வாழ்ந்து வந்த இஸ்ரயேலர் அனைவரையும் ஒன்று கூட்டினார். [1]
6 பின்னர் கெருபுகள் மேல் வீற்றிருக்கும் ஆண்டவர் பெயர் தாங்கிய கடவுளின் பேழையை யூதாவைச் சார்ந்த கிரியத்எயாரிம் என்னும் பாகலாவிலிருந்து எடுத்துக்கொண்டு வரும்படி தாவீதும் இஸ்ரயேல் அனைவரும் அவ்விடத்துக்குச் சென்றனர். [2]
7 அவர்கள் கடவுளின் பேழையை அபினதாபின் வீட்டிலிருந்து எடுத்து ஒரு புது வண்டியின் மேல் ஏற்றினர். உசாவும் அகியோவும் வண்டியை ஓட்டிவந்தனர்.
8 தாவீதும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் தங்கள் முழு ஆற்றலுடன் கடவுளுக்கு முன்பாகச் சுர மண்டலங்கள், யாழ்கள், மத்தளங்கள், கைத்தாளங்கள், எக்காளங்கள் இவற்றை இசைத்து மகிழ்ச்சி பொங்க ஆர்ப்பரித்துப் பாடினர்.


9 அவர்கள் கீதோன் களத்தில் வந்தபோது மாடுகள் இடறவே, உசா பேழையைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான்.
10 நீட்டவே, ஆண்டவரின் சினம் உசாவுக்கு எதிராகக் கிளர்ந்து, அவன் தன் கையைப் பேழையை நோக்கி நீட்டினதால் அவனைச் சாகடித்தார்; அவன் அங்கேயே கடவுள் திருமுன் இறந்தான்.
11 ஆண்டவர் உசாவை அழித்ததை முன்னிட்டுத் தாவீது பெருந்துயருற்றார். அந்த இடத்துக்குப் 'பேரேட்சு உசா' என்று பெயரிட்டார். அப்பெயர் இந்நாள்வரை வழங்கி வருகிறது.


12 அந்நாளில் தாவீது கடவுளுக்கு அஞ்சி, "கடவுளின் பேழையை என்னிடம் கொண்டுவருவது எப்படி?" என்று சொல்லி,
13 தாவீதின் நகருக்கு, தம்மிடம் பேழையைக் கொண்டுவராமல், இத்தியரான ஓபேது-ஏதோம் வீட்டில் கொண்டுபோய் வைத்தார்.
14 கடவுளின் பேழை ஓபேது-ஏதோம் வீட்டில் அவர் வீட்டாரோடு மூன்று மாதம் இருந்தது. அந்நாளில் அவர் வீட்டாருக்கும் அவருக்கு உரிய அனைத்திற்கும் ஆண்டவர் ஆசி வழங்கினார். [3]

குறிப்புகள்

[1] 13:5 = 1 சாமு 7:1-2.
[2] 13:6 = விப 25:22.
[3] 13:14 = 1 குறி 26:4-5.

அதிகாரம் 14[தொகு]

எருசலேமில் தாவீதின் செயல்கள்[தொகு]

(2 சாமு 5:11-16)


1 தீர் மன்னன் ஈராம் தாவீதிடம் தூதர்களையும் அவருக்கு ஓர் அரண்மணை கட்ட கேதுரு மரங்களையும் மற்றும் கொத்தனார் தச்சரையும் அனுப்பிவைத்தார்.
2 இதனால், ஆண்டவர் இஸ்ரயேலின் மேல் தம்மை அரசராக உறுதிப்படுத்தினார் என்றும் அவருடைய மக்களாகிய இஸ்ரயேலின் பொருட்டுத் தமது அரசை மிகவும் சிறந்தோங்கச் செய்தார் என்றும் தாவீது அறிந்து கொண்டார்.


3 எருசலேமிலும் தாவீது பல பெண்களை மணம் செய்து கொண்டார். அவருக்கு இன்னும் புதல்வர், புதல்வியர் பலர் பிறந்தனர்.
4 அவருக்கு எருசலேமில் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள்: சம்முவா, சோபாபு, நாத்தான், சாலமோன்,
5 இப்கார், எலிசுவா, எல்பலேற்று,
6 நோகாசு, நெபேகு, யாப்பியா,
7 எலிசாமா, பெகலியாதா, எலிப்பலேற்று.

பெலிஸ்தியர்கள் மேல் வெற்றி[தொகு]

(2 சாமு 5:17-25)


8 தாவீது இஸ்ரயேல் முழுவதற்கும் அரசராகத் திருப்பொழிவு செய்யப்பட்டதைப் பெலிஸ்தியர் கேள்விப்பட்டபோது, அவர்கள் அனைவரும் தாவீதைத் தேடிப்பிடிக்கும்படி வந்தனர். தாவீது அதை அறிந்து அவர்களை எதிர்க்கச் சென்றார்.
9 பெலிஸ்தியர் வந்து இரபாயிம் பள்ளத்தாக்கில் கொள்ளையிட்டனர்.


10 தாவீது கடவுளிடம், "நான் பெலிஸ்தியரை எதிர்த்துச் செல்லலாமா? அவர்களை என்கையில் ஒப்புவிப்பீரா?" என்று கேட்டார். ஆண்டவர் அவருக்குப் பதிலுரையாக "போ, அவர்களை உன் கையில் ஒப்புவிப்பேன்" என்றார்.
11 தாவீதும் அவர் ஆள்களும் பாகால் பெராசிமுக்கு வந்து, அவர்களை அங்கே முறியடித்தார். "வெள்ளம் அடித்துக் கொண்டு போவதுபோலக் கடவுள் என் எதிரிகளை என் கைவன்மையால் அழித்துவிட்டார்" என்றார் தாவீது. அதன் காரணமாக, அவ்விடத்திற்குப் 'பாகால் பெராசிம்' [*] என்று பெயரிட்டனர்.


12 பெலிஸ்தியர் தங்கள் தெய்வச் சிலைகளை அங்கு விட்டுச் சென்றிருந்தனர்; தாவீது கட்டளையிட, அவற்றைத் தீக்கிரையாக்கினர்.


13 பெலிஸ்தியர் மீண்டும் அந்தப் பள்ளத்தாக்கில் கொள்ளையிட்டனர்.
14 தாவீது திரும்பவும் கடவுளின் ஆலோசனையைக் கேட்டார். கடவுள், "நீ அவர்களை எதிர்த்து நேராகச் செல்லாமல் அவர்களைச் சுற்றிவளைத்து பிசின் மரத்தோப்புக்கு வா.
15 அம்மரங்களின் உச்சியில் படைசெல்வதன் இரைச்சல் கேட்கும் போது, உடனே போருக்குப் புறப்படு; ஏனெனில் பெலிஸ்தியரின் படையை முறியடிக்கக் கடவுள் உனக்கு முன் செல்கிறார்" என்றார்.
16 கடவுள் கட்டளையிட்டபடியே தாவீது செய்தார். கிபயோன் தொடங்கிக் கெசேர் வரை பெலிஸ்தியரின் படையை முறியடித்தனர்.
17 தாவீதின் புகழ் எல்லா நாடுகளிலும் பரவியது; அனைத்து மக்களினங்களும் அவருக்கு அஞ்சி நடுங்கும்படி ஆண்டவர் செய்தார்.

குறிப்பு

[*] 14:11 = எபிரேயத்தில், 'அழிக்கும் தெய்வம்' என்பது பொருள்.

(தொடர்ச்சி): குறிப்பேடு - முதல் நூல்: அதிகாரங்கள் 15 முதல் 16 வரை