திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - முதல் நூல்/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை
1 குறிப்பேடு (The First Book of Chronicles)
[தொகு]அதிகாரங்கள் 15 முதல் 16 வரை
அதிகாரம் 15
[தொகு]உடன்படிக்கைப் பேழை எருசலேமுக்குக் கொண்டுவரப்படல்
[தொகு]
1 தாவீது நகரில் அவர் தமக்கு வீடுகளைக் கட்டினார். கடவுளின் பேழைக்கென ஓர் இடத்தில் ஏற்பாடு செய்து அதற்கென ஒரு கூடாரத்தையும் அமைத்தார்.
2 பின்னர் தாவீது, "கடவுளின் பேழையைச் சுமக்கவும், என்றென்றும் தமக்குப் பணிவிடை செய்யவும் ஆண்டவர் தேர்ந்துகொண்ட லேவியர் தவிர வேறெருவரும் கடவுளின் பேழையைச் சுமக்கலாகாது" என்றார். [1]
3 ஆண்டவரின் பேழைக்கெனத் தாம் ஏற்பாடு செய்திருந்த இடத்துக்கு அதைக் கொண்டு வரும்படி தாவீது இஸ்ரயேலர் அனைவரையும் எருசலேமில் ஒன்று திரட்டினார்.
4 அவ்வாறே தாவீது ஆரோனின் புதல்வரையும் லேவியரையும் ஒன்று திரட்டினார்.
5 கோகாத்தின் புதல்வருள் தலைவர் உரியேல், அவர் உறவின்முறையினர் நூற்றிருபது பேர்;
6 மெராரியின் புதல்வருள் தலைவர் அசாயா, அவர் உறவின்முறையினர் இருநூற்றிருபது பேர்;
7 கெர்சோம் புதல்வருள், தலைவர் யோவேல், அவன் உறவின்முறையினர் நூற்று முப்பது பேர்;
8 எலிசாப்பான் புதல்வருள் தலைவர் செய்யா, அவர் உறவின்முறையினர் இருநூறு பேர்;
9 எலிசாப்பான் புதல்வருள் தலைவர் எலியேல், அவர் உறவின்முறையினர் எண்பது பேர்;
10 உசியேல் புதல்வருள் தலைவர் அம்மினதாபு, அவர் உறவின்முறையினர் நூற்றிப் பன்னிரண்டுபேர்.
11 தாவீது, குருக்களாகிய சாதோக்கு அபியத்தார் ஆகியோரையும் லேவியராகிய உரியேல், அசாயா, யோவேல், செமாயா, எலியேல், அம்மினதாபு ஆகியோரையும் வரவழைத்தார்.
12 தாவீது அவர்களை நோக்கி, "நீங்கள் லேவியரின் மூதாதையர் வீட்டுத் தலைவர்கள்; ஆண்டவராகிய கடவுளின் பேழைக்கென நான் ஏற்பாடு செய்துள்ள இடத்திற்கு அதைக் கொண்டுவரும்படி நீங்களும் உங்கள் உறவின்முறையினரும் உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.
13 முன்பு ஒருமுறை நீங்கள் சுமக்காததால் நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குள் அழிவு உண்டாகச் செய்தார். ஏனெனில் நாம் அவர் கட்டளைப்படி செயற்படாமற் போனோம்" என்றார்.
14 எனவே, குருக்களும் லேவியரும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பேழையைக் கொண்டு வரத் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டார்கள்.
15 பின்பு லேவியர், மோசேயின் கட்டளையாகத் தந்த ஆண்டவரது வாக்கின்படி, கடவுளின் பேழையை அதன் தண்டுகளால் தங்கள் தோள்மேல் சுமந்து வந்தனர். [2]
16 தாவீது, லேவியரின் தலைவர்களிடம் தங்கள் உறவின்முறையிலிருந்து தம்புரு, சுரமண்டலம், கைத்தாளம் ஆகிய கருவிகளை இசைத்து மகிழ்ச்சி ஒலி எழுப்பக்கூடிய பாடகரை நியமிக்கக் கட்டளையிட்டார்.
17 எனவே, லேவியர் யோவேலின் மகன் ஏமானையும், அவர் உறவின்முறையினருள் பெராக்கியாவின் புதல்வர் ஆசாபையும், மெராரியின் மைந்தரான அவர்கள் உறவின் முறையினருள் கூசயாவின் மகன் ஏத்தானையும்,
18 அவர்களோடு இரண்டாம் நிலையில், அவர்கள் உறவின்முறையினர் செக்கரியா, யகசியேல், செமிராமோத்து, எகியேல், உன்னி, எலியாபு, பெனாயா, மகசேயா, மத்தித்தியா, எலிப்பலேகு, மிக்னேயா மற்றும் வாயில் காவலரான ஓபேது, ஏதோம், எயியேல் ஆகியோரையும் நியமித்தனர்.
19 பாடகரான ஏமான், ஆசாபு, ஏத்தான் ஆகியோர் வெண்கலக் கைத்தாளங்களை ஒலிக்கச் செய்வார்கள்.
20 செக்கரியா, அசியேல், செமிராமோத்து, எகியேல், உன்னி, எலியாபு, மகசேயா, பெனாயா, ஆகியோர் 'அலமோத்து' இசையில் தம்புருகளை வாசிப்பவர்கள்.
21 மத்தித்தியா, எலிப்பலேகு, மிக்னேயா, ஓபேது-ஏதோம், எயியேல், அசசியா ஆகியோர் உச்சத்தொனியில் சுரமண்டலங்கள் வாசிப்பவர்கள்.
22 லேவியர் தலைவர் கெனனியா இசையில் தேர்ச்சி பெற்றவராகையால், அவர் இசை கற்பிக்கவேண்டும்.
23 பெரக்கியாவும் எல்கானாவும் பேழையின் காவலர்.
24 குருக்களான செபனியா, யோசபாத்து, நெத்தனியேல், அமாசாய், செக்கரியா, பெனாயா, எலியேசர் ஆகியோர் கடவுளுடைய பேழைக்கு முன்பாக எக்காளங்களை ஊதியவர்கள். ஓபேது ஏதோமும், எகியாவும் பேழைக்குக் காவலாளர்.
உடன்படிக்கைப் பேழையை எருசலேமுக்கு எடுத்துச் செல்லல்
[தொகு](2 சாமு 6:12-22)
25 இவ்வாறு தாவீதும், இஸ்ரயேலின் பெரியோரும், ஆயிரவர் தலைவரும் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை ஓபேது-ஏதோம் வீட்டிலிருந்து மகிழ்ச்சியுடன் கொண்டு வரச் சென்றார்கள்.
26 ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சுமந்த லேவியருக்குக் கடவுள் உதவி செய்தபடியால், அவர்கள் அவருக்கு ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கிடாய்களையும் பலி செலுத்தினர்.
27 தாவீதும், பேழையைச் சுமந்த லேவியர் எல்லாரும், பாடகரும், பாடகர் தலைவரான கெனனியாவும், மெல்லிய நார்ப்பட்டு அங்கி அணிந்திருந்தனர். மேலும் தாவீது நார்ப்பட்டாலான ஏபோது அணிந்திருந்தார்.
28 இஸ்ரயேல் அனைவரும் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை ஆர்ப்பரிப்போடும், இசைக்கொம்பு, எக்காளம், கைத்தாள ஒலியோடும், தம்புரு சுரமண்டல இசையோடும் கொண்டு வந்தார்கள்.
29 ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழை தாவீதின் நகரை அடைந்த போது, சவுலின் புதல்வி மீக்கால் சன்னல் வழியாக எட்டிப்பார்த்தாள். அப்பொழுது, தாவீது அரசர் அக்களித்து ஆடிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரைத் தன்னுள்ளத்தில் இகழ்ந்தாள்.
- குறிப்புகள்
[1] 15:2 = இச 10:8.
[2] 15:15 = விப 25:14.
அதிகாரம் 16
[தொகு]1 அவர்கள் கடவுளின் பேழையைக் கொண்டு வந்து, தாவீது அதற்கென்று அமைத்திருந்த கூடாரத்தின் நடுவே வைத்தனர். பின்பு கடவுளின் முன் எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினர்.
2 தாவீது எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்திய பின்பு மக்களுக்கு ஆண்டவரின் பெயரால் ஆசி வழங்கினார்.
3 அவர் இஸ்ரயேலராகிய ஆண் பெண் அனைவருக்கும் ஆளுக்கு ஓர் அப்பமும், ஒரு துண்டு இறைச்சியும், ஒரு திராட்சைப்பழ அடையும் கொடுத்தார்.
4 பின்பு அவர் ஆண்டவரின் பேழையின் முன் வழிபாடு நடத்தவும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்தவும், அவரைப் போற்றவும், லேவியரில் சிலரைத் திருப்பணியாளராக நியமித்தார்.
5 ஆசாபு தலைவராகவும், செக்கரியா துணைத் தலைவராகவும் எயியேல், செமிரா மோத்து, எகியேல், மத்தித்தியா, எலியாபு, பெனாயா, ஓபேது-ஏதோம், எயியேல் ஆகியோர் தம்புரு, சுரமண்டலம் கருவிகளை வாசிக்கவும், ஆசாபு கைத்தாளம் கொட்டவும்,
6 பெனாயா, யகசியேல் ஆகிய குருக்கள் இருவரும் கடவுளின் உடன்படிக்கைப் பேழையின் முன் இடைவிடாமல் எக்காளங்களை ஊதவும் நியமிக்கப்பட்டனர்.
இறை புகழ்ச்சிப் பாடல்
[தொகு](திபா 105:1-15; 96:1-13; 106:1,47-48)
7 இவ்வாறு, தாவீது ஆண்டவருக்கு நன்றிப்பாடல்களைப் பாடும் பொறுப்பை ஆசாபுக்கும் அவர் உறவின்முறையினருக்கும் முதன்முதலாக அளித்தார்:
8 "ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்; அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.
9 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்; அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!
10 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!
11 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்; அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!
12 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்; அவர்தம் அருஞ்செயல்களையும் அவரது வாய் மொழிந்த நீதித்தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள்.
13 அவரின் ஊழியராம் இஸ்ரயேலின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் புதல்வரே!
14 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித்தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன.
15 அவரது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்ளுங்கள்; ஆயிரம் தலைமுறைக்கென அவர் அளித்த வாக்குறுதியை மறவாதீர்கள்!
16 ஆபிரகாமுடன் அவர் செய்து கொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்கு அவர் ஆணையிட்டுக் கூறியதையும் நினைவில் கொள்ளுங்கள்! [1]
17 யாக்கோபுக்கு நியமமாகவும் இஸ்ரயேலுக்கு என்றுமுள உடன்படிக்கையாகவும் அதை அவர் உறுதிப்படுத்தினார்.
18 'கானான் நாட்டை உனக்கு அளிப்பேன்; அப்பங்கே உனக்கு உரிமைச்சொத்தாய் இருக்கும்' என்றார் அவர். [2]
19 அப்போது, அவர்கள் மதிப்பிலும் எண்ணிக்கையிலும் மிகக் குறைந்தவராய் இருந்தார்கள்; அங்கே அன்னியராய் இருந்தார்கள்.
20 ஒரு நாட்டினின்று மற்றொரு நாட்டிற்கும் ஓர் அரசினின்று மற்றொரு மக்களிடமும் அலைந்து திரிந்தார்கள்.
21 யாரும் அவர்களை ஒடுக்குமாறு அவர் விட்டுவிடவில்லை; அவர்களின் பொருட்டு மன்னர்களை அவர் கண்டித்தார்;
22 'நான் அருள்பொழிவு செய்தாரைத் தொடாதீர்; என் இறைவாக்கினர்க்குத் தீங்கிழைக்காதீர்', என்றார் அவர். [3]
23 உலகெங்கும் வாழ்வோரே! ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்!
24 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை
அறிவியுங்கள்.
25 ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத்தக்கவர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே!
26 மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே! ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர்!
27 மாட்சியும் புகழ்ச்சியும் அவர் திருமுன் உள்ளன! ஆற்றலும் அக்களிப்பும் அவரது திருத்தலத்தில் உள்ளன!
28 மக்களினங்களின் குடும்பங்களே! ஆண்டவருக்குச் சாற்றுங்கள்! மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்!
29 ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்; உணவுப் படையல் ஏந்தி அவர்திருமுன் வாருங்கள்; தூய கோலத்துடன்
ஆண்டவரை வழிபடுங்கள்!
30 உலகெங்கும் வாழ்வோரே! அவர் திருமுன் நடுங்குங்கள்; உலகம் உறுதியுடன் நிலை கொண்டுள்ளது; இனி அது அசைக்கப்படுவதில்லை.
31 விண்ணுலகம் மகிழ்வதாக! மண்ணுலகம் களிகூர்வதாக! 'ஆண்டவர் ஆள்கின்றார்' என்று பிற இனத்தார்க்கு அறிவிப்பராக!
32 கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்; வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்!
33 அப்பொழுது காட்டு மரங்கள் ஆண்டவர் திருமுன் மகிழ்ந்து பாடட்டும்! ஏனெனில், அவர் மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க
வருகின்றார்.
34 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு! [4]
35 எங்கள் மீட்பராகிய கடவுளே! எங்களை விடுவித்தருளும்! வேற்று நாடுகளினின்று எங்களை விடுவித்து ஒன்று சேர்த்தருளும்! அப்பொழுது, நாங்கள் உமது திருப்பெயருக்கு நன்றி செலுத்துவோம்; உம்மைப் புகழ்வதில் பெருமை கொள்வோம்;
36 'இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் ஊழி ஊழியாகப் புகழப் பெறுவாராக' என்று சொல்லுங்கள்".
அப்பொழுது, மக்கள் அனைவரும் 'ஆமென்' என்று சொல்லி, ஆண்டவரைப் போற்றினர்.
எருசலேம், கிபயோனில் வழிபாடு
[தொகு]
37 பின்பு, தாவீது ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின்முன் தொடர்ந்து எந்நாளும் பணிவிடை செய்வதற்காக, பேழைக்கு முன்பாக இருக்குமாறு ஆசாபையும் அவரின் உறவின் முறையாரையும் பணித்தார்.
38 ஓபேது ஏதோமும் அவரின் உறவின் முறையாளர்களான அறுபத்து எட்டுப்பேரும் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும். எதுத்தூணின் மகனான ஓபேது ஏதோமும், கோசாவும் வாயில் காவலராக நியமிக்கப்பட்டனர்.
39 குரு சாதோக்கும் அவர் உறவின் முறைக் குருக்களும் கிபயோன் தொழுகைமேட்டில் ஆண்டவரின் திருக்கூடாரத்தின்முன் பணிசெய்ய வேண்டும்.
40 இஸ்ரயேலுக்கு ஆண்டவர் கட்டளையாகத் தந்த திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, காலையிலும் மாலையிலும் தவறாமல் எரி பலிபீடத்தின் மேல் அவர்கள் எரிபலிகளைச் செலுத்த வேண்டும்.
41 இவர்களோடு ஏமானையும் எதுத்தூனையும் பெயர் சொல்லித் தேர்ந்து கொள்ளப்பட்ட சிலரையும் 'ஆண்டவரின் பேரன்பு என்றென்றும் உள்ளது' என்றுரைத்து அவருக்கு நன்றி செலுத்துமாறு கட்டளையிட்டார்;
42 இவர்களோடு ஏமான், எதுத்தூன் ஆகியோரை எக்காளங்களையும், கைத்தாளங்களையும், இறைப்பாடலுக்குரிய இசைக் கருவிகளையும் இசைக்க ஏற்படுத்தினார்; எதுத்தூனின் புதல்வரை வாயில் காவலராக நியமித்தார்.
43 பின்னர் மக்கள் அனைவரும் தம் வீடு திரும்பினர்; தாவீதும் தம் வீட்டாருக்கு ஆசி வழங்க, வீடு திரும்பினார். [5]
- குறிப்புகள்
[1] 16:16 = தொநூ 12:7; 26:3.
[2] 16:17-18 = தொநூ 28:13.
[3] 16:21-22 = தொநூ 20:3-7.
[4] 16:34 = 2 குறி 5:13; எஸ்ரா 3:11; திபா 100:5; 106:1; 107:1; 118:1; 136:1; எரே 33:11.
[5] 16:43 = 2 சாமு 6:19-20.
(தொடர்ச்சி): குறிப்பேடு - முதல் நூல்: அதிகாரங்கள் 17 முதல் 18 வரை