திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சபை உரையாளர் (சங்கத் திருவுரை ஆகமம்)/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
"தமக்குத் துன்பவேளை எப்போது வருமென்று ஒருவருக்குத் தெரியாது. வலையில் அகப்படும் மீன்களைப்போல... அவர் சிக்கிக்கொள்வார்." - சபை உரையாளர் 9:12.


சபை உரையாளர் (The Book of Ecclesiastes)[தொகு]

அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

அதிகாரம் 9[தொகு]


1 இவையனைத்தையும் ஆழ்ந்து எண்ணிப்பார்த்தேன்.
நல்லாரும் ஞானமுள்ளவர்களும் செய்வதெல்லாம்,
அவர்கள் அன்புகொள்வதும் பகைப்பதும்கூட,
கடவுளின் கையிலேதான் இருக்கிறது.
இனி வரப்போவது என்ன என்பது யாருக்கும் தெரியாது.
2 விதித்துள்ளபடிதான் எல்லாருக்கும் எல்லாம் நேரிடும்.
நேர்மையானவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும்,
நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும்,
மாசற்றவர்களுக்கும் மாசுள்ளவர்களுக்கும்,
பலி செலுத்துகிறவர்களுக்கும் பலி செலுத்தாவர்களுக்கும்
விதித்துள்ளபடிதான் நேரிடும்.
பொல்லார்க்கு நேரிடும் விதிப்படியே நல்லார்க்கும் நேரிடும்.
நேர்ந்து கொள்ளத் தயங்குகிறவருக்கு நேரிடும் விதிப்படியே
நேர்ந்து கொள்ளுகிறவருக்கும் நேரிடும்.
3 விதித்துள்ளபடிதான் எல்லாருக்கும் நேரிடும்.
இதுவே உலகில் நடக்கிற அனைத்திலும் காணப்படுகிற தீமை.
மேலும், மக்கள் உள்ளங்களில் தீமை நிறைந்திருக்கிறது.
அவர்கள் உயிரோடிருக்கும் வரையில்
அவர்கள் மனத்தில் மூடத்தனம் இருக்கிறது.
திடீரென்று அவர்கள் இறந்து போகிறார்கள்.
4 ஆயினும், ஒருவன் உயிரோடிருக்கும் வரையில்
நம்பிக்கைக்கு இடமுண்டு.
செத்துப்போன சிங்கத்தைவிட உயிருள்ள நாயே மேல்.
5 ஆம், உயிருள்ளோர் தாம் இறப்பது திண்ணம்
என்பதையாவது அறிவர்;
ஆனால், இறந்தோரோ எதையும் அறியார்.
அவர்களுக்கு இனிமேல் பயன் எதுவும் கிடையாது;
அவர்கள் அறவே மறக்கப்படுவார்கள்.
6 அவர்களுக்கு அன்பு, பகைமை,
பொறாமை எதுவும் இல்லை.
இப்பரந்த உலகில் நடக்கும் எதிலும்
அவர்கள் பங்கெடுக்கப்போவதில்லை.


7 ஆகவே, நீ நன்றாய்ச் சாப்பிடு; களிப்புடனிரு;
திராட்சை இரசம் அருந்தி மகிழ்ச்சியுடனிரு; தயங்காதே.
இவை கடவுளுக்கு உடன்பாடு.
8 எப்போதும் நல்லாடை உடுத்து.
தலலையில் நறுமணத் தைலம் தடவிக்கொள்.
9 இவ்வுலக வாழ்க்கை வீணெனினும்,
உனக்குக் கிடைத்துள்ள வாழ்நாள் முழுதும்
நீ உன் அன்பு மனைவியோடு இன்புற்றிரு.
ஏனெனில், உன் வாழ்நாளில் உலகில் நீ படும்பாட்டிற்கு
ஈடாகக் கிடைப்பது இதுவே.
10 நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்;
அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்.
ஏனெனில், நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில்
எவரும் செயல் புரிவதுமில்லை;
சிந்தனை செய்வதுமில்லை;
அறிவு பெறுவதுமில்லை;
அங்கே ஞானமுமில்லை.


11 உலகில் வேறொன்றையும் கண்டேன்:
ஓட்டப் பந்தயத்தில் விரைவாக ஓடுபவரே
வெற்றி பெறுவார் என்பதில்லை.
வலிமை வாய்ந்தவரே போரில்
வெற்றி அடைவார் என்பதில்லை.
ஞானமுள்ளவருக்கு வேலை கிடைக்கும் என்பதில்லை.
அறிவுள்ளவரே செல்வம் சேர்ப்பார் என்பதில்லை.
திறமையுடையரே பதவியில் உயர்வார் என்பதில்லை.
எவருக்கும் வேளையும் வாய்ப்பும் செம்மையாய் அமையவேண்டும்.
12 தமக்குத் துன்பவேளை எப்போது வருமென்று ஒருவருக்குத் தெரியாது.
வலையில் அகப்படும் மீன்களைப்போலவும்
கண்ணியில் சிக்கும் பறவைகளைப் போலவும் அவர் சிக்கிக்கொள்வார்.
எதிர்பாராத வகையில் அவருக்குக் கேடு காலம் வரும்.

ஞானத்தைப் பற்றிய சிந்தனைகள்[தொகு]


13 நான் கண்ட வேறொன்றும் உண்டு:
இவ்வுலகில் ஞானம் எவ்வாறு மதிக்கப்படுகிறது
என்பதை அது நன்கு எடுத்துக்காட்டுகிறது.
14 சிறிய நகர் ஒன்று இருந்தது.
அதில் இருந்த மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.
வலிமை வாய்ந்த மன்னன் ஒருவன் அதன்மேல் படையெடுத்து வந்தான்;
அதை முற்றுகையிட்டுத் தாக்கினான்.
15 அந்நகரில் ஞானமுள்ளவன் ஒருவன் இருந்தான்.
ஆனால் அவன் ஓர் ஏழை.
அவன் தன் ஞானத்தால் நகரைக் காப்பாற்றியிருக்கக்கூடும்.
ஆயினும், அவனைப் பற்றி எவரும் நினைக்கவில்லை.
16 வலிமையைவிட ஞானமே சிறந்தது என்பதே என் கருத்து.
அந்த ஏழையின் ஞானம் புறக்கணிக்கப்பட்டது;
அவன் சொல்லை எவரும் கவனிக்கவில்லை.


17 மூடர்கள் கூட்டத்தில் அதன் தலைவன்
முழக்கம் செய்வதைக் கேட்பதைவிட,
ஞானமுள்ளவர் அடக்கமுடன் கூறுவதைக் கேட்பதே நன்று.


18 போர்க் கருவிகளைவிட ஞானமே சிறந்தது.
ஆனால் ஒரே ஒரு தவறு நன்மைகள் பலவற்றைக் கெடுத்துவிடும்.


அதிகாரம் 10[தொகு]

மதிகேட்டைப் பற்றிய சில குறிப்புகள்[தொகு]


1 கலத்திலிருக்கும் நறுமணத் தைலம் முழுவதையும்
செத்த ஈக்கள் முடைநாற்றம் வீசும்படி செய்துவிடும்.
அதுபோல சிறிய மதிகேடும்
மேன்மையான ஞானத்தைக் கெடுத்து விடும்.


2 தக்கன செய்வதையே ஞானியரின் உள்ளம் நாடும்;
தகாதன செய்வதையே மூடரின் உள்ளம் நாடும்.


3 மூடர் தெருவில் நடந்தாலே போதும்;
அவரது மடமை வெளியாகிவிடும்.
தாம் மூடர் என்பதை அவரே அனைவருக்கும் காட்டிடுவார்.


4 மேலதிகாரி உன்னைச் சினந்து கொண்டால்,
வேலையை விட்டு விடாதே.
நீ அடக்கமாயிருந்தால்,
பெருங்குற்றமும் மன்னிக்கப்படலாம்.


5 உலகில் நான் கண்ட தீமை ஒன்று உண்டு.
அது உயர் அலுவலரின் தவற்றால் விளைவது.
6 மூடர்களுக்கு உயர்ந்த பதவி அளிக்கப்படுகிறது;
செல்வர்கள் தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறார்கள்.
7 அடிமைகள் குதிரைமீதேறிச் செல்வதையும்,
உயர்குடிப் பிறந்தோர் அடிமைகளைப்போலத்
தரையில் நடந்து செல்வதையும் நான் கண்டிருக்கிறேன்.


8 குழியை வெட்டுவார் அதில் தாமே வீழ்வார்.
கன்னமிடுவோரைக் கட்டு விரியன் கடிக்கும். [*]


9 கற்களை வெட்டி எடுப்பவர் கற்களால் காயமடைவார்.
மரத்தை வெட்டுபவர் காயத்திற்கு ஆளாவார்.


10 மழுங்கிய கோடரியைத் தீட்டாமல் பயன்படுத்தினால்
வேலைசெய்வது மிகக் கடினமாயிருக்கும்.
ஞானமே வெற்றிக்கு வழிகோலும்.


11 பாம்பை மயக்குமுன் அது கடித்து விட்டால்
அதை மயக்கும் வித்தை தெரிந்திருந்தும் பயனில்லை.


12 ஞானியரின் வாய்மொழி அவருக்குப் பெருமை தேடித்தரும்.
மூடரோ தம் வாயால் கெடுவார்.


13 அவரது பேச்சு மடமையில் தொடங்கும்;
முழு பைத்தியத்தில் போய் முடியும்.


14 மூடர் வளவளவென்று பேச்சை வளர்ப்பார்;
என்ன பேசப்போகின்றார் என்பது எவருக்கும் தெரியாது.
அதற்குப்பின் என்ன நடக்கும் என்பதை எவராலும் சொல்ல இயலாது.


15 மூடர் அளவுமீறி உழைத்துத் தளர்ந்து போவார்.
ஊருக்குத் திரும்பிப்போகவும் வகை அறியார்.


16 சிறு பிள்ளையை அரசனாகவும்
விடிய விடிய விருந்துண்டு களிப்பவர்களைத்
தலைவர்களாகவும் கொண்ட நாடே!
நீ கெட்டழிவாய்.


17 உயர்குடிப் பிறந்தவனை அரசனாகவும்
உரிய நேரத்தில் உண்பவர்களை,
குடித்து வெறிக்காது தன்னடக்கத்தோடு இருப்பவர்களைத்
தலைவர்களாகவும் கொண்ட நாடே!
நீ நீடு வாழ்வாய்.


18 சோம்பேறியின் வீட்டுக்கூரை ஒழுகும்;
பழுதுபார்க்காதவரின் வீடு இடிந்து விழும்.


19 விருந்து மனிதருக்கு மகிழ்ச்சிதரும்;
திராட்சை மது வாழ்க்கையில் களிப்புத்தரும்;
பணம் இருந்தால் தான் எல்லாம் கிடைக்கும்.


20 தனிமைமயிலுங்கூட அரசனை இகழாதே;
படுக்கையறையிலுங்கூடச் செல்வர்களை இகழ்ந்து பேசாதே.
வானத்துப் பறவைகள் நீ கூறியதை எடுத்துச்செல்லும்;
பறந்து சென்று நீ சொன்னதைத் திரும்பச் சொல்லும்.


குறிப்பு

[*] 10:8 = திபா 7:15; நீமொ 26:7.


(தொடர்ச்சி):சபை உரையாளர்:அதிகாரங்கள் 11 முதல் 12 வரை