திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சபை உரையாளர் (சங்கத் திருவுரை ஆகமம்)/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
"விலையுயர்ந்த நறுமணத் தைலத்தைவிட நற்புகழே மேல்." - சபை உரையாளர் 7:1.


சபை உரையாளர் (The Book of Ecclesiastes)[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7[தொகு]

வாழ்க்கையைப் பற்றிய எண்ணங்கள்[தொகு]


1 விலையுயர்ந்த நறுமணத் தைலத்தைவிட நற்புகழே மேல்.
பிறந்த நாளைவிட இறக்கும் நாளே சிறந்தது.


2 விருந்து நடக்கும் வீட்டிற்குச் செல்வதைவிடத்
துக்க வீட்டிற்குச் செல்வதே நல்லது.
ஏனெனில், அனைவருக்கும் இதுவே முடிவு என்பதை
உயிருடன் இருப்போர் அங்கே உணர்ந்துகொள்வர்.


3 சிரிப்பைவிடத் துயரமே நல்லது.
துயரத்தால் முகத்தில் வருத்தம் தோன்றலாம்;
ஆனால், அது உள்ளத்தைப் பண்படுத்தும்.


4 ஞானமுள்ளவரின் உள்ளத்தில்
துக்க வீட்டின் நினைவே இருக்கும்;
மூடரின் உள்ளத்திலோ
சிற்றின்ப வீட்டின் நினைவே இருக்கும்.


5 மூடர் புகழ்ந்துரைப்பதைக் கேட்பதினும்
ஞானி இடித்துரைப்பதைக் கேட்பதே நன்று.


6 மூடரின் சிரிப்பு, பானையின்கீழ் எரியும் முட்செடி
படபடவென்று வெடிப்பதைப் போன்றது;
அதனால் பயன் ஒன்றுமில்லை.


7 இடுக்கண் ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்;
கைக்கூலி உள்ளத்தைக் கறைப்படுத்தும்.


8 ஒன்றின் தொடக்கமல்ல, அதன் முடிவே கவனிக்கத் தக்கது;
உள்ளத்தில் பெருமைகொள்வதைவிடப்
பொறுமையோடு இருப்பதே மேல்.


9 உள்ளத்தில் வன்மத்திற்கு இடங் கொடாதே;
மூடரின் நெஞ்சமே வன்மத்திற்கு உறைவிடம்.


10 "இக்காலத்தைவிட முற்காலம் நற்காலமாயிருந்ததேன்?" என்று கேட்காதே;
இது அறிவுடையோர் கேட்கும் கேள்வியல்ல.


11 மரபுரிமைச் சொத்தோடு ஞானம் சேர்ந்திருத்தல் வேண்டும்;
இதுவே உலகில் வாழும் மக்களுக்கு நல்லது.


12 பணம் நிழல் தருவதுபோல் ஞானமும் நிழல் தரும்;
ஞானம் உள்ளவருக்கு அதனால் வாழ்வு கிடைக்கும்;
அறிவினால் கிடைக்கும் பயன் இதுவே.


13 கடவுளின் செயலைச் சிந்தித்துப்பார்.
அவர் கோணலாக்கினதை நேராக்க யாரால் இயலும்?


14 வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது மகிழ்ச்சியோடிரு;
துன்பம் வரும்போது நீ நினைவில் கொள்ள வேண்டியது:
'அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள்,
இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகிறார்'.


15 என் பயனற்ற வாழ்க்கையில் நான் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன்.
நேர்மையானவர் நேர்மையுள்ளவராய் இருந்தும் மாண்டழிகிறார்.
தீயவரோ தீமை செய்கிறவராய் இருந்தும் நெடுங்காலம் வாழ்கிறார்.
16 நேர்மையாய் நடப்பதிலும் ஞானத்தைப் பெறுவதிலும்
வெறி கொண்டவராய் இராதீர்.
அந்த வெறியால் உம்மையே அழித்துக் கொள்வானேன்?
17 தீமை செய்வதிலும் மூடராயிருப்பதிலும்
வெறி கொண்டவராய் இராதீர்.
காலம் வருமுன் நீவிர் ஏன் சாகவேண்டும்?
18 ஒன்றைப் பற்றிக்கொண்டிருக்கும்போது,
அதற்கு மாறானதைக் கைவிட்டுவிடாதீர்.
நீவிர் கடவுளுக்கு அஞ்சி நடப்பீரானால்
அனைத்திலும் வெற்றி பெறுவீர்.


19 ஒரு நகருக்குப் பத்து ஆட்சியாளர் தரும் வலிமையைவிட,
ஞானமுள்ளவருக்கு ஞானம் மிகுதியான வலிமை தரும்.


20 குற்றமே செய்யாமல் நல்லதையே செய்யும் நேர்மையானவர்
உலகில் இல்லை.


21 பிறர் கூறுவதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்காதீர்.
அவ்வாறு செய்தால் உம் வேலைக்காரர் உம்மை இகழ்ந்ததையும்
நீவிர் கேட்க நேரிடும்.


22 நீவிர் எத்தனைமுறை பிறரை இகழ்ந்தீர் என்பது
உமக்கே நன்றாய்த் தெரியும்.


23 இவற்றையெல்லாம் என் ஞானத்தால் சீர்தூக்கிப் பார்த்தேன்.
நான் ஞானியாகிவிடுவேன் என்று நினைத்தேன்.


24 ஆனால், என்னால் இயலாமற் போயிற்று.
ஞானம் நெடுந் தொலையில் உள்ளது;
மிக மிக ஆழமானது.
அதை யாரால் கண்டுபிடிக்க முடியும்?
25 நான் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்;
ஞானத்தையும் காரண காரியத்தையும் பற்றிய விபரத்தை
ஆராய்ந்து காண்பதில் சிந்தனையைச் செலுத்தினேன்.
கொடியவராயிருத்தல் மூடத்தனம் என்பதையும்,
மதிகேடரைப்போலச் செயல்புரிதல் அறிவுகெட்ட நடத்தை
என்பதையும் தெரிந்துகொண்டேன்.
26 சாவைவிடக் கசப்பானதொன்றைக் கண்டேன். அதுதான் பெண்.
அவள் உனக்குக் காட்டும் அன்பு ஒரு கண்ணியைப் போல
அல்லது ஒரு வலையைப் போல உன்னைச் சிக்க வைக்கும்;
உன்னைச் சுற்றிப் பிடிக்கும்.
அவளின் கைகள் சங்கிலியைப்போல உன்னை இறுக்கும்.
கடவுளுக்கு உகந்தவனே அவளிடமிருந்து தப்புவான்.
பாவியோ அவளின் கையில் அகப்படுவான்.
27 "ஆம், நான் ஒன்றன்பின் ஒன்றாய் ஆராய்ந்து
இதைக் கண்டுபிடித்தேன்" என்கிறார் சபை உரையாளர்.
வேறு ஆராய்ச்சிகளும் செய்தேன்;
அவற்றால் மிகுந்த பயன் அடையவில்லை.
28 ஆனால் ஒன்று தெரிந்தது.
மனிதன் எனத் தக்கவன் ஆயிரத்தில் ஒருவனே என்று கண்டேன்.
பெண் எனத் தக்கவள் யாரையுமே நான் கண்டதில்லை.
29 நான் தெரிந்துகொண்டதெல்லாம் இதுவே.
கடவுள் மனிதரை நேர்மையுள்ளவராகவே படைத்தார்.
ஆனால் வாழ்க்கைச் சிக்கல்கள் அனைத்தும்
மனிதர் தேடிக்கொண்டவையே.


குறிப்புகள்

[1] 7:1 = நீமொ 22:1.
[2] 7:9 = யாக் 1:19.


அதிகாரம் 8[தொகு]


1 ஞானமுள்ளவருக்கு யார் நிகர்?
உலகில் காண்பவற்றின் உட்பொருளை
வேறு யாரால் அறிய இயலும்?
ஞானம் ஒருவன் முகத்தை ஒளிமயமாக்கும்;
அதிலுள்ள கடுகடுப்பை நீக்கும். [1]

அரசனுக்கு அடங்கி நட[தொகு]


2 கடவுளின் பெயரால் நீ ஆணையிட்டுக் கூறியபடி
அரசனுக்கு அடங்கி நட.
அரசன் தான் விரும்புகிறபடியெல்லாம் செய்பவன்.
3 எனவே, அவன் முன்னிலையிலிருந்து
பதற்றப்பட்டுப் போய்விடாதே.
அவனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யாதே.
4 மன்னன் சொல்லுக்கு மறுசொல் இல்லை.
எனவே, "ஏன் இப்படிச் செய்கிறீர்?" என்று அவனை யார் கேட்க முடியும்?
5 அவனது கட்டளைக்குக் கீழ்ப்படியும்வரை உனக்குத் தீங்கு வராது.
அவன் சொல்வதைச் செய்வதற்குரிய காலத்தையும்
வழியையும் ஞானமுள்ளவன் அறிவான்.
6 ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காலமுண்டு;
செய்யவேண்டிய முறையும் உண்டு.
ஆனால் அவல நிலையிலுள்ள மனிதனால் என்ன செய்யமுடியும்?
7 ஏனெனில், வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெரியாது.
அது எப்படி நடக்கும் என்று அவனுக்குச் சொல்வாருமில்லை.
காற்றை அடக்க எவனாலும் இயலாது.
8 அதுபோல, தன் சாவு நாளைத் தள்ளிப்போடவும் எவனாலும் இயலாது.
சாவெனும் போரினின்று நம்மால் விலகமுடியாது;
பணம் கொடுத்தும் தப்ப முடியாது.

நல்லாரும் பொல்லாரும்[தொகு]


9 உலகில் செய்யப்படும் செயல்கள் அனைத்தையும்பற்றிச்
சிந்தனை செய்தபோது,
இவற்றையெல்லாம் கண்டேன்.
ஒருவன்மேல் ஒருவன் அதிகாரம் செலுத்துவதால் துன்பம் விளைகிறது. [2]
10 பொல்லார் மாண்டபின் அடக்கம் செய்யப்படுகின்றனர்.
அடக்கம் செய்தவர்கள் கல்லறைத் தோட்டத்திலிருந்து வீடு திரும்பி
அந்தப் பொல்லார் தீச்செயல் புரிந்த ஊரிலேயே
அவர்களைப் பாராட்டிப் பேசுகிறார்கள்.
எல்லாம் வீணான செயலே.
11 மக்கள் தீமை செய்யத் துணிவதேன்?
தீமை செய்வோருக்கு விரைவிலேயே தண்டனை
அளிக்காததுதான் இதற்குக் காரணம்.
12 பாவி நூறு முறை தீமைசெய்து நெடுங் காலம் வாழ்ந்தாலும்,
கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களே நலமுடன் வாழ்வார்கள்
என்பதை நான் அறிவேன்.
ஏனெனில், அவர்கள் அவருக்கு அஞ்சி நடக்கிறார்கள். ஆனால்,
13 தீயவர்கள் நலமுடன் வாழமாட்டார்கள்;
நிழல் நீள்வதுபோல அவர்களது வாழ்நாள் நீளாது.
ஏனெனில், அவர்கள் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை.


14 வேறொரு பொருத்தமற்ற காரியமும் உலகத்தில் காணப்படுகிறது.
சில வேளைகளில் பொல்லாருக்குரிய தண்டனை
நல்லாருக்குக் கிடைக்கிறது.
நல்லாருக்குரிய பயன் பொல்லாருக்குக் கிடைக்கிறது.
இது பொருத்தமற்றது என்கிறேன்.
15 எனவே, மனிதர் களிப்புடனிருக்க வேண்டும்
என்ற முடிவுக்கு வந்தேன்.
உண்பதும் குடிப்பதும் களிப்பதுமேயன்றி,
மனிதருக்கு உலகில் நலமானது வேறெதுவுமில்லை.
உலகில் கடவுள் அவருக்கு அருளும் வாழ்நாளில்
அவரது உழைப்புக்குக் கிடைக்கும் நிலையான பயன் இதுவே.


16-17 நான் ஞானத்தை அடையவும்
உலகில் நடப்பதை அறியவும் முயன்றபோது இதைக் கண்டதில்லை:
ஒருவர் அல்லும் பகலும் கண் விழித்திருந்து பார்த்தாலும்,
கடவுளின் செயலை அவரலால் புரிந்துகொள்ள இயலாது.
மனிதர் எத்துணை முயன்றாலும்
அவரால் அதைக் கண்டுகொள்ள இயலாது.
ஞானமுள்ளவர்கள் அது தங்களுக்குத் தெரியும்
என்று சொல்லிக் கொள்ளலாம்.
ஆனால் அவர்களுக்கும் அது தெரியாது.


(தொடர்ச்சி):சபை உரையாளர்:அதிகாரங்கள் 9 முதல் 10 வரை