உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

விக்கிமூலம் இலிருந்து
தாவீது பத்சேபா குளிப்பதைக் காண்கிறார் (2 சாமு 11:1-27). ஓவியர்: லூக்காஸ் க்ரானாக். ஆண்டு: 1526. காப்பிடம்: பெர்லின்.

2 சாமுவேல் (The Second Book of Samuel)

[தொகு]

அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

அதிகாரம் 11

[தொகு]

தாவீதும் பத்சேபாவும்

[தொகு]


1 இளவேனில் காலத்தில் அரசர்கள் போருக்குப் புறப்பட்டுச் செல்வது வழக்கம். அப்பொழுது தாவீது யோவாபைத் தம் பணியாளரோடும் இஸ்ரயேலர் அனைவரோடும் அனுப்பினார். அவர்கள் அம்மோனியரைத் தோற்கடித்து இரபாவை முற்றுகையிட்டனர். தாவீதோ எருசலேமிலேயே தங்கிவிட்டார். [*]


2 ஒரு நாள் மாலை வேளை, தாவீது தம் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்ததை தாவீது மாடியிலிருந்து கண்டார். அவள் மிகவும் அழகிய தோற்றம் கொண்டிருந்தாள்.
3 தாவீது அவள் யார் என்று கேட்க, ஆளனுப்பினார். "அவள் எலியாவின் மகளும் இத்தியர் உரியாவின் மனைவியுமான பத்சேபா" என்று கூறினர்.


4 தாவீது தூதரை அனுப்பி அவளை வரவழைத்தார். அப்பொழுதுதான் மாதவிலக்கு முடிந்து அவள் தன்னைத் தூய்மைப்படுத்தியிருந்தாள். அவள் தம்மிடம் வந்ததும் அவர் அவளோடு உடலுறவு கொண்டார். பிறகு அவள் தம் இல்லம் சென்றாள்.
5 அப்பெண் கருவுற்றுத் தாவீதிடம் ஆளனுப்பி, தான் கருவுற்றிருப்பதாக அவரிடம் தெரிவித்தாள்.


6 அப்பொழுது தாவீது "இத்தியனான உரியாவை என்னிடம் அனுப்பி வை" என்று யோபாவுக்குச் செய்தி அனுப்பினார். யோவாபு உரியாவைத் தாவீதிடம் அனுப்பிவைத்தார்.
7 உரியா தாவீதிடம் வந்ததும் அவர் யோவாபின் நலம் பற்றியும் வீரர்களின் நலம் பற்றியும் போரின் போக்குப் பற்றியும் விசாரித்தார்.
8 பிறகு தாவீது உரியாவிடம், "உன் வீட்டுக்குச் சென்று உன் பாதங்களைக் கழுவிக் கொள்" என்றார். உரியா அரண்மனையை விட்டுச் சென்றதும் அவர் பின்னாலேயே அரசர் அன்பளிப்பு அனுப்பி வைத்தார்.
9 உரியாவோ தம் தலைவரின் பணியாளர் அனைவரோடும் அரண்மனை வாயிலிலேயே படுத்துக் கொண்டார்; தம் வீட்டுக்குச் செல்லவில்லை.


10 உரியா தம் வீட்டுக்கு செல்லவில்லை என்று தாவீது அறிந்தும் தாவீது அவரிடம், "நீ நெடும் தொலையிலிருந்து வரவில்லையா? பின் ஏன் நீ வீட்டிற்குச் செல்லவில்லை? என்று கேட்டார்.
11 அதற்கு உரியா தாவீதிடம், "பேழையும் இஸ்ரயேலரும் யூதாவினரும் கூடாரங்களில் தங்கியிருக்கின்றனர். என் தலைவர் யோவாபும் என் தலைவரின் பணியாளரும் திறந்த வெளிகளில் தங்கியிருக்கின்றனர். நான் மட்டும் வீட்டிற்குச் சென்று உண்டு குடித்தும் என் மனைவியோடு உறவுகொண்டும் இருப்பேனா? உம்மேலும் உம் உயிர்மேலும் ஆணை! நான் அப்படிச் செய்யவே மாட்டேன" என்று சொன்னார்.


12 தாவீது உரியாவிடம், "இன்றும் இங்கேயே தங்கு. நாளை உன்னை அனுப்பிவைக்கிறேன்" என்றார். அன்றும் மறுநாளும் உரியா எருசலேமிலேயே தங்கினார்.
13 தாவீது அவரை அழைத்து அவரோடு உண்டு குடித்து, அவருக்குக் குடிபோதையூட்டினார். மாலையில் அவர் தம் தலைவரின் பணியாளரோடு தம் படுக்கையில் தூங்கச் சென்றார்; தம் வீட்டுக்கு அவர் செல்லவே இல்லை.


14 காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு மடல் எழுதி, அதை உரியாவின் கையில் கொடுத்தனுப்பினார்.
15 அம்மடலில் அவர், "உரியாவைப் போர் கடுமையாக நடக்கும் முன்னிலையில் நிறுத்தி, அவனைவிட்டுப் பின்வாங்கு. அவன் வெட்டுண்டு மடியட்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
16 யோவாபு நகரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தபொழுது வலிமைமிகு எதிர்வீரர்கள் இருந்த இடத்தை அறிந்து அங்கே உரியாவை நிறுத்தினார்.
17 நகரின் ஆள்கள் புறப்பட்டு வந்து யோவாபைத் தாக்கினர். அப்பொழுது போரில் வீழ்ந்தவர்களுள் தாவீதின் வீரர்களும் சிலர், இத்தியர் உரியாவும் மாண்டார்.


18 பிறகு யோவாபு போரைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் தாவீதுக்குச் சொல்லி அனுப்பினார்.
19 மேலும் அவர் தூதனுக்கு இவ்வாறு கட்டளையிட்டிருந்தார்: 'போரைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் அரசருக்குச் சொல்லி முடிப்பதற்குள்
20 அரசர் ஒருவேளை வெகுண்டெழுந்து, உன்னிடம், 'நீங்கள் ஏன் நகரை அணுகிப் போரிட்டீர்கள்? அவர்கள் மதில்களினின்று தாக்குவார்கள் என அறியீரோ?
21 எருபசத்தின் மகன் அபிமெலக்கைக் கொன்றது யார்? மதில் சுவரினின்று ஒரு எந்திரக்கல்லை எறிந்தவள் ஒரு பெண்ணல்லவா? அவன் தேபேசில் இறந்துவிட்டானே! நீங்கள் ஏன் மதில்களை நெருங்கினீர்கள்?' என்று கேட்டால், நீ 'உம் பணியாளன் இறந்து விட்டான்' என்று சொல்."


22 தூதன் புறப்பட்டுச் சென்று யோவாபு சொல்லியனுப்பிய அனைத்தையும் தாவீதிடம் கூறினான்.
23 தூதன் தாவீதிடம் கூறியது: "அந்த ஆள்கள் எங்களை மேற்கொண்டு எங்களுக்கு எதிராகத் திறந்த வெளிக்கு வந்தார்கள். நாங்களோ நுழைவாயில்வரை அவர்களைத் துரத்தினோம்.
24 அப்போது மதில்மேலிருந்து வில்வீரர் உம் பணியாளர்களைத் தாக்கினர்; அரசரின் பணியாளருள் சிலர் இறந்தனர்; இத்தியரான உம் பணியாளர் உரியாவும் இறந்துவிட்டார்."


25 அப்பொழுது தாவீது தூதனிடம், "நீ யோவாபிடம் சென்று 'இதைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம். இங்கொருவனும் அங்கொருவனும் வாளுக்கு இரையாகின்றனர். நகருக்கு எதிராக இன்னும் கடுமையாகப் போர்புரிந்து அதை அழித்து விடு' என்று சொல்லி அவனை உற்சாகப்படுத்து" என்றார்.


26 உரியானின் மனைவி தன் கணவன் இறந்துவிட்டதைக் கேள்வியுற்று அவருக்காகப் புலம்பி அழுதாள்.
27 துக்ககாலம் முடிந்ததும் தாவீது ஆளனுப்பி அவளைத் தம் வீட்டிற்குக் கொண்டு வந்தார். அவள் அவருக்கு மனைவியாகி ஆண்குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். தாவீது செய்த இச்செயல் ஆண்டவரின் பார்வையில் தீயதாக இருந்தது.

குறிப்பு

[*] 11:1 = 1 குறி 20:1.

அதிகாரம் 12

[தொகு]

நாத்தானின் அறிவுரை - தாவீது மனமாறுதல்

[தொகு]


1 ஆண்டவர் நாத்தானைத் தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் அவரிடம் வந்து, பின்வருமாறு கூறினார்: "ஒரு நகரில் இரு மனிதர்கள் இருந்தனர்; ஒருவன் செல்வன். மற்றவனோ ஏழை. [1]
2 செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன.
3 ஏழையிடம் ஓர் ஆட்டுக் குட்டி தவிர வேறு ஒன்றுமே இல்லை. அவன் அதை விலைக்கு வாங்கியிருந்தான். அது அவனோடும் அவன் குழந்தைகளோடும் இருந்து வளர்ந்து பெரியதாகியது. அவனது உணவை உண்டு, அவனது கிண்ணத்திலிருந்து நீர்குடித்து அவனது மடியில் உறங்கி, அவனுக்கு ஒரு மகளைப் போலவே அது இருந்தது.
4 வழிப்போக்கன் ஒருவன் செல்வனிடம் வந்தான். தன்னிடம் வந்த வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்ய தன் ஆடுமாடுகளினின்று ஒன்றை எடுப்பதை விட்டு, அந்த ஏழையின் ஆட்டுக் குட்டியை எடுத்து வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்தான்".


5 உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம் கொண்டு, "ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும்.
6 இரக்கமின்றி அவன் இதைச் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும்" என்று நாத்தானிடம் கூறினார்.
7 அப்போது நாத்தான் தாவீதிடம், "நீயே அம்மனிதன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "நான் இஸ்ரயேலின் அரசனாய் உன்னைத் திருப்பொழிவு செய்தேன்; நான் உன்னைச் சவுலின் கையினின்று விடுவித்தேன்.
8 உன் தலைவரிடம் வீட்டை உன்னிடம் ஒப்படைத்தேன்; அவன் மனைவியரையும் உனக்கு மனைவியர் ஆக்கினேன்; இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் உனக்கு அளித்தேன்; இது போதாதென்றால் உனக்கு மேலும் மிகுதியாய் கொடுத்திருப்பேன்.
9 பின் ஏன் நீ ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்து அவர்தம் பார்வையில் தீயது செய்தாய்? இத்தியன் உரியாவை நீ வாளுக்கு இரையாக்கி, அவன் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய்; அம்மோனியரின் வாளால் அவனை மாய்த்துவிட்டாய்!
10 இனி உன் குடும்பத்தினின்று வாள் என்றுமே விலகாது; ஏனெனில் நீ என்னைப் புறக்கணித்து இத்தியன் உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய்.'
11 இதோ! ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: 'உன் குடும்பத்தினின்றே நான் உனக்குத் தீங்கை வரவழைப்பேன்; உன் கண்கள் காண, உன் மனைவியரை உனக்கு அடுத்திருப்பவனிடம் ஒப்புவிப்பேன். அவன் பட்டப் பகலில் உன் மனைவியரோடு படுத்திருப்பான்.
12 நீ மறைவில் செய்ததை, இஸ்ரயேலும் காணுமாறு நான் பட்டப்பகலில் நிகழச் செய்வேன்" என்று கூறினார். [2]


13 அப்போது தாவீது நாத்தானிடம், "நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்" என்று சொன்னார். நாத்தான் தாவீதிடம், "ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார். நீ சாகமாட்டாய்.
14 ஆயினும், ஆண்டவர் எதிரிகள் அவரை இழிவாக எண்ணும்படி நீ இவ்வாறு செய்தால் உனக்குப் பிறக்கும் மகன் உறுதியாகவே சாவான்" என்று சொன்னார்.
15 பின்பு நாத்தான் தம் வீட்டுக்குச் சென்றார். உரியாவின் மனைவி தாவீதிற்கு பெற்றெடுத்த குழந்தையை ஆண்டவர் தாக்க, அது நோயுற்றுச் சாகக் கிடந்தது.

தாவீதின் மகன் இறத்தல்

[தொகு]


16 தாவீது அக்குழந்தைக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். உண்ணா நோன்பு மேற்கொண்டு உள்ளே சென்று இரவெல்லாம் தரையில் படுத்துக்கிடந்தார்.
17 அவர்தம் வீட்டின் பெரியோர்கள் தரையினின்று அவரை எழுப்பச் சென்றனர்; அவருக்கோ விருப்பமில்லை. அவர்களோடு அவர் உண்ணவுமில்லை.
18 பின் ஏழாவது நாள் குழந்தை இறந்தது. குழந்தை இறந்ததைத் தாவீதின் பணியாளர் அவரிடம் சொல்ல அஞ்சினர். "குழந்தை உயிரோடு இருந்தும் நாம் அவரிடம் பேசியபோது அவர் நம் குரலுக்குச் செவிகொடுக்கவில்லையே! குழந்தை இறந்துவிட்டது என்று நாம் அவரிடம் சொன்னால் அவர் தமக்கு என்ன தீங்கு இழைத்துக் கொள்வாரோ!" என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள்.


19 பணியாளர் தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக்கொண்டதைத் தாவீது கண்டு, குழந்தை இறந்து விட்டதை உணர்ந்து, தம் பணியாளரிடம், "குழந்தை இறந்து விட்டதா?" என்று கேட்க, அவர்களும், "ஆம், இறந்துவிட்டது" என்று பதில் கூறினர்.
20 உடனே தாவீது தரையினின்று எழுந்தார். குளித்து, நறுநெய் பூசி, உடைகளை மாற்றிக் கொண்டார்; கடவுளின் இல்லம் சென்று அவரைத் தொழுதார்; பிறகு அவர்தம் இல்லம் வந்தார். அவரே கேட்க, உணவு பரிமாறப்பட்டது. அவர் அதை உண்டார்.


21 "நீவிர் செய்ததை என்னென்போம்! உயிரோடிருந்த குழந்தைக்காக நீர் உண்ணாமல் அழுதீர்; ஆனால் குழந்தை இறந்ததும் எழுந்து உணவு கொண்டீரே!" என்று அவருடைய பணியாளர் அவரிடம் கூறினார்.
22 "குழந்தை உயிரோடிருந்தபோது ஒருவேளை ஆண்டவர் இரங்குவார்; அவனும் பிழைப்பான் என்று நினைத்து நான் உண்ணா நோன்பிருந்து அழுதேன்.
23 இப்போது அவன் இறந்துவிட்டான். இனி நான் ஏன் உண்ணா நோன்பு இருக்கவேண்டும்? என்னால் அவனைத் திருப்பிக் கொண்டுவர முடியுமா? நான்தான் அவனிடம் செல்ல முடியுமோ ஒழிய, அவன் என்னிடம் திரும்பி வர மாட்டான்" என்று கூறினார்.

சாலமோனின் பிறப்பு

[தொகு]


24 தாவீது தம் மனைவி பத்சேபாவுக்கு ஆறுதல் கூறினார். பிறகு அவளுடன் உடலுறவு கொண்டார். அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க அவனைச் சாலமோன் என்று அழைத்தார். ஆண்டவர் அவன்மீது அன்பு கொண்டிருந்தார்.
25 ஆண்டவர் இறைவாக்கினர் நாத்தானை அனுப்பினார். அவர் ஆண்டவரை முன்னிட்டு அவனை எதிதியா [3] என்று அழைத்தார்.

தாவீது இரபா நகரைக் கைப்பற்றல்

[தொகு]

(1 குறி 20:1-3)


26 யோவாபு அம்மோனியரின் நகரான இரபாவுக்கு எதிராகப் போரிட்டு அதன் கோட்டையைக் கைப்பற்றினார்.
27 யோவாபு தாவீதிடம் தூதரை அனுப்பி, "இராபாவுக்கு எதிராகப் போரிட்டு அதன் நீருற்றுகளை கைப்பற்றிவிட்டேன்.
28 இப்போது எஞ்சியுள்ள மக்களை நீர் ஒன்றுதிரட்டி, நகருக்கு எதிரே கூடாரமிட்டு அதைக் கைப்பற்றிக்கொள்ளும். ஏனெனில் நான் இந்நகரைக் கைப்பற்றிக் கொண்டால், அதை என் பெயரால் அழைக்க நேரிடும் அல்லவா?" என்று கூறினார்.
29 தாவீது மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி இரபாவுக்குச் சென்று அதற்கு எதிராகப் போரிட்டு அதைக் கைப்பற்றினார்.
30 அதன் மன்னனின் தலையிலிருந்த மகுடத்தை எடுத்தார். பொன்னாலும் விலையுயர்ந்த கற்களாலுமான அம் மகுடம் ஒரு தாலந்து எடை கொண்டதாய் இருந்தது. அதைக் கொண்டு தாவீது முடிசூட்டினார். அந்நகரிலிருந்து கொள்ளைப் பொருளையும் அவர் மிகுதியாகக் கொண்டு வந்தார்.
31 அங்கிருந்த மக்களையும் அவர் கொண்டுவந்து இரம்பம், கடப்பாரை, கோடரி வேலைகளுக்கும் செங்கல் சூளை வேலைகளுக்கும் அவர்களை அமர்த்தினார். இவ்வாறே அனைத்து அம்மோனிய நகர்களுக்கும் செய்தார். பிறகு தாவீதும் மக்கள் அனைவரும் எருசலேம் திரும்பினர்.

குறிப்புகள்

[1] 12:1 = திபா 51 தலைப்பு.
[2] 12:11-12 = 2 சாமு 16:22.
[3] 12:25 எபிரேயத்தில் 'ஆண்டவரின் அன்பன்' என்பது பொருள்.


(தொடர்ச்சி):சாமுவேல் - இரண்டாம் நூல்:அதிகாரங்கள் 13 முதல் 14 வரை