திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை
2 சாமுவேல் (The Second Book of Samuel)
[தொகு]அதிகாரங்கள் 15 முதல் 16 வரை
அதிகாரம் 15
[தொகு]அப்சலோம் கலகம் செய்தல்
[தொகு]
1 அதற்குப் பின்னர், அப்சலோம் தனக்கென ஒரு தேரையும் குதிரைகளையும் தனக்கு முன்பாக ஓட ஐம்பது ஆள்களையும் அமர்த்திக்கொண்டான்.
2 அப்சலோம் அதிகாலையில் எழுந்து நகர வயலின் பாதை அருகே நிற்பான்; யாரேனும் தனக்கிருந்த வழக்கை முன்னிட்டு அரசரிடம் தீர்ப்புக் கேட்க வந்தால், அவனை அப்சலோம் தன்னிடம் அழைத்து, "நீ எந்நகரிலிருந்து வருகிறாய்?" என்று கேட்பான். அவன், "உம் அடியான் இந்த நகரிலிருந்தும் இஸ்ரயேலின் இந்தக் குலத்தினின்றும் வருகிறேன்" என்று பதில் சொல்லுவான்.
3 அப்போது அப்சலோம், "உன் வழக்கு சரியானது, நியாயமானது. ஆனால், அரசரின் சார்பாக உன்னை விசாரிக்க எவரும் இல்லை.
4 நான் மட்டும் இந்நாட்டில் நீதிபதியாக இருந்தால், வழக்குள்ளவர்கள் அனைவரும் என்னிடம் வருவார்கள். நானும் அவர்களுக்கு நீதி வழங்குவேன்" என்பான்.
5 யாரேனும் அவனை வணங்குவதற்காக நெருங்கினால், தன் கையை நீட்டி அவனைத் தழுவி முத்தமிடுவான்.
6 அரசரிடம் வழக்கை முன்னிட்டு வந்த இஸ்ரயேலர் அனைவரிடமும் அப்சலோம் இவ்வாறு செய்து இஸ்ரயேலரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டான்.
7 நான்கு [*] ஆண்டுகள் கழிந்தபின் ஒருநாள் அப்சலோம் அரசரிடம்," நான் ஆண்டவருக்குச் செய்துள்ள நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும். எபிரோன் செல்ல தயைகூர்ந்து அனுமதிதாரும்.
8 உமது அடியான், சிரியாவிலுள்ள கெசூரில் வாழ்ந்த போது, 'ஆண்டவர் என்னை எருசலேமுக்குத் திரும்பிக் கொண்டு சென்றால், நான் ஆண்டவரைத் தொழுவேன்' என்று ஒரு நேர்ச்சை செய்தேன்" என்றான்.
9 "நலமாய்ச் சென்று வா" என்று அரசர் அவனிடம் கூற, அவனும் புறப்பட்டு எபிரோனுக்குச் சென்றான்.
10 பின் அப்சலோம் இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களுக்கும் இரகசியத் தூதர் மூலம் "நீங்கள் எக்காள முழக்கம் கேட்டவுடன் 'அப்சலோம் எபிரோனில் அரசர் ஆகிவிட்டார்' என்று முழங்குங்கள்" என்று சொல்லியனுப்பினான்.
11 எருசலேமிலிருந்து அழைக்கப்பட்ட இருநூறு பேர் சென்றனர்; வஞ்சகமின்றி, இதுபற்றி ஏதும் அறியாதவராய் அப்சலோமுடன் சென்றனர்.
12 அப்சலோம் பலி செலுத்தியபோது, தாவீதின் ஆலோசகனான கீலோவியன் அகிதோபலை அவனது நகர் கீலோவிலிருந்து வருமாறு சொல்லியனுப்பினான். சதி வலுவடைந்தது; அப்சலோமின் ஆதரவாளருடைய எண்ணிக்கையும் மிகுதியானது.
தாவீது எருசலேமினின்று தப்பியோடல்
[தொகு]
13 அப்போது தூதன் ஒருவன் தாவீதிடம் வந்து, "அப்சலோம் இஸ்ரயேலரின் உள்ளங்களைக் கவர்ந்து கொண்டார்" என்று கூறினான்.
14 தாவீது தம்மோடு எருசலேமிலிருந்த அலுவலர் அனைவரிடமும், "வாருங்கள், நாம் தப்பியோடுவோம்; ஏனெனில் அப்சலோமிற்கு முன்பாக நாம் தப்ப முடியாது. விரைவில் வெளியேறுங்கள், இல்லையேல் அவன் விரைவில் நம்மை மேற்கொண்டு, நமக்குத் தீங்கு விளைவிப்பான்; நகரையும் வாள்முனையால் தாக்குவான்" என்றார்.
15 அதற்கு அரச அலுவலர், "எம் தலைவராம் அரசரின் ஏவல்களுக்காகவே உம் அடியார்கள் காத்திருக்கிறோம்" என்று அரசரிடம் கூறினர்.
16 அரசரும் அவருடன் அவர் வீட்டார் அனைவரும் வெளியேறினர். ஆனால் வீட்டைக் காக்கும்படி தம் வைப்பாட்டியர் பத்துப் பேரை அரசர் விட்டுச் சென்றார்.
17 அரசரும் அவர் மக்கள் அனைவரும் வெளியேறி சிறிது தூரம் சென்று ஓரிடத்தில் நின்றார்கள்.
18 அவர்தம் அனைத்து அலுவலர்களும் அவர்முன் அணிவகுத்துச் சென்றனர். காத்திலிருந்து அவர் பின் வந்த அறுநூறு பேர் - கெரேத்தியர், பெலேத்தியர், கித்தியர் ஆகியோர் அனைவரும் - அரசருக்கு முன்பாக அணிவகுத்துச் சென்றனர்.
19 அப்போது அரசர் கித்தியன் இத்தாயிடம், "நீ ஏன் எங்களோடு வருகிறாய்? திரும்பிச் சென்று அரசனோடு தங்கு. ஏனெனில் நீர் ஓர் அன்னியன்; நாடு கடத்தப்பட்டவன்.
20 நீ நேற்று வந்தவன்; இன்று நான் உன்னை எங்களோடு அலையச் செய்யலாமா? கால்போன போக்கிலே நான் போகின்றேன், திரும்பிச் செல். உன் சகோதரர்களையும் கூட்டிச் செல். உண்மையுள்ளவரின் பேரன்பு உன்னோடு இருப்பதாக" என்று கூறினார்.
21 இத்தாய் அதற்கு மறுமொழியாக, "வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என் தலைவராம் அரசர்மேல் ஆணை! வாழ்வாகட்டும், சாவாகட்டும். என் தலைவராம் அரசர் எங்கிருப்பாரோ, அங்கே உம் அடியானும் இருப்பான்" என்று அரசரிடம் கூறினான்.
22 தாவீது இத்தாயிடம், 'சரி, முன்னே செல்' என்று சொல்ல, கித்தியனான இத்தாயும் அவனோடு அவன் ஆள்களும் சிறுவர் சிறுமியர் அனைவரும் முன்சென்றனர்.
23 மக்கள் யாவரும் கடந்து சென்றதைக் கண்டு, நாடு முழுவதும் புலம்பிற்று. அரசர் கிதரோன் அருவியைக் கடந்தார். மக்கள் அனைவரும் பாலை நிலத்தை நோக்கிச் சென்றனர்.
24 இதோ! சாதோக்கும் அவரோடு லேவியர் அனைவரும் கடவுளின் உடன்படிக்கைப் பேழையைச் சுமந்து கொண்டு வந்தனர். மக்கள் அனைவரும் நகரைக் கடக்கும் வரை கீழே வைத்திருந்தனர். அபியத்தார் அங்கே வந்தார்.
25 அரசர் சாதோக்கை நோக்கி, "கடவுளின் பேழையை நகருக்குத் திருப்பி எடுத்துச் செல். ஆண்டவரின் பார்வையில் எனக்குக் கருணைக் கிடைத்தால், அவர் என்னைத் திருப்பிக் கொணர்ந்து அதனையும் அதன் உறைவிடத்தையும் நான் காணச் செய்வார்.
26 'உன் மீது எனக்கு விருப்பமில்லை' என்று அவர் கூறினால், இதோ நான் இருக்கிறேன்! அவர் விருப்படியே எனக்குச் செய்யட்டும்" என்று கூறினார்.
27 மேலும் அரசர் குருவாகிய சாதோக்கை நோக்கி, "நீரும், திருக்காட்சியாளர்தாமே. நீரும் உம்மோடு இருக்கும் இரு புதல்வரும், உம் மகன் அகிமாசும், அபியத்தாரின் மகன் யோனத்தானும் நலத்துடன் நகருக்குத் திரும்புங்கள்.
28 நான் பாலைநிலத்தில் எல்லைப் பகுதிகளில், உன்னிடமிருந்து எனக்குச் செய்தி வரும்வரை காத்திருப்பேன்" என்றார்.
29 அவ்வாறே சாதோக்கும் அபியத்தாரும் கடவுளின் பேழையோடு எருசலேம் திரும்பி, அங்கேயே தங்கிவிட்டார்கள்.
30 தாவீது அழுதுகொண்டே ஒலிவமலை ஏறிச்சென்றார். தலையை மூடிக்கொண்டு வெறுங்காலோடு அவர் நடந்தார். அவரோடிருந்த மக்கள் அனைவரும் தன் தலையை மூடிக் கொண்டு அழுதுகொண்டே ஏறிச் சென்றனர்.
31 அப்சலோமுடன் இருக்கும் சதிகாரருள் அகிதோபலும் ஒருவன் என்று கூறப்பட்ட போது, தாவீது, "ஆண்டவரே! உம்மை வேண்டுகிறேன், அகிதோபல் மூடத்தனமான ஆலோசனையை அளிப்பானாக!" என்றார்.
32 மக்கள் கடவுளைத் தொழுத மலையுச்சிக்குத் தாவீது வந்து சேர்ந்தார். அப்போது அர்க்கியனான ஊசாய் கிழிந்த ஆடையோடும் புழுதிபடிந்த தலையோடும் அவரைச் சந்தித்தான்.
33 தாவீது அவனிடம், "நீ என்னோடு வந்தால் எனக்குச் சுமையாக இருப்பாய்.
34 ஆனால் நீ நகருக்குத் திரும்பினால், அப்சலோமிடம், 'அரசே, உம் அடியான் யான் முன்பு உம் தந்தைக்கு பணியாளாக இருந்தது போல இனி உமக்கும் பணியானாக இருப்பேன்' எனச் சொல்லி எனக்காக அகிதோபலின் ஆலோசனையை முறியடிக்க முடியும்.
35 அங்குக் குரு சாதோக்கும் அபியத்தாரும் உன்னோடு இருக்கின்றனர் அல்லவா? அரச மாளிகையிலிருந்து நீ கேட்கின்ற அனைத்தையும் குரு சாதோக்கிடமும் அபியத்தாரிடமும் எடுத்துச் சொல்.
36 அவர்களோடு அவர்களின் இரு புதல்வர்களும், அதாவது சாதோக்கின் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானும் இருக்கின்றனர். நீ கேட்ட அனைத்தையும் அவர்கள் வழியாக எனக்கு சொல்லியனுப்பு" என்று கூறினார்.
37 தாவீதின் நண்பன் ஊசாய் நகருக்குள் சென்றுகொண்டிருந்த போது, அப்சலோம் எருசலேமுக்குள் நுழைந்தான்.
- குறிப்பு
[*] 15:7 'நாற்பது' என்பது எபிரேய பாடம்.
அதிகாரம் 16
[தொகு]தாவீது-சீபா
[தொகு]
1 தாவீது மலை உச்சியைக் கடந்து சிறிது தொலை சென்றதும், மெபிபொசேத்தின் பணியாளன் சீபா அவரைச் சந்திக்க வந்தான். அவன் இருநூறு அப்பங்கள், நூறு உலர்ந்த திராட்சை அடைகள், நூறு அத்திப் பழ அடைகள், ஒரு தோற்பை திராட்சை இரசம் ஆகியவற்றைக் கழுதைகளின் மேல் ஏற்றிக் கொண்டு வந்தான். [1]
2 "இதெல்லாம் என்ன?" என்று சீபாவை அரசர் கேட்க, "கழுதைகள் அரச வீட்டார் சவாரி செய்யவும், அப்பமும் அத்திப்பழமும் இளைஞர்கள் உண்ணவும், திராட்சை இரசம் பாலைநிலத்தில் களைப்புறுவோர் குடிக்கவும் தான்" என்று சீபா பதிலளித்தான்.
3 "உன் தலைவர் சவுலின் பேரன் எங்கே?" என்று மீண்டும் தாவீது வினவ, "அவர் எருசலேமிலேயே தங்கியிருக்கிறார். ஏனெனில் அவர் 'இன்று இஸ்ரயேல் வீட்டார் என் பாட்டனாரின் அரசை எனக்குத் திருப்பித் தருவர்' என எண்ணுகிறார்" என்று சீபா, அரசரிடம் கூறினான். [2]
4 "இதோ! மெபிபொசேத்தின் உடைமையெல்லாம் உன்னுடையதே" என்று அரசர் சீபாவிடம் கூற, "நான் பணிவோடு வணங்குகிறேன்; என் தலைவராம் அரசே! உம் கண்முன் நான் கருணை பெறுவேனாக" என்று சீபா அரசருக்கு மறுமொழி கூறினான்.
தாவீது-சிமயி
[தொகு]
5 தாவீது பகூரிம் வந்தபோது, சவுலின் குடும்பத்தையும் வீட்டையும் சார்ந்த ஒருவன் அவரை எதிர்கொண்டான். அவன் கேராவின் மகனான சிமயி. அவன் பழித்துக் கொண்டே எதிரே வந்தான்.
6 அவன் தாவீது மீதும், தாவீது அரசரின் எல்லாப் பணியாளர் மீதும், எல்லா மக்கள் மீதும், அவர்தம் வலமும் இடமும் இருந்த வீரர்கள்மீதும் கல்லெறிந்தான்.
7 சிமயி பழித்துக் கூறியது: "இரத்த வெறியனே! பரத்தை மகனே! போ! போ!
8 நீ சிந்திய சவுல் வீட்டாரின் இரத்தப் பழி அனைத்தையும் ஆண்டவர் உன்மீது வரச்செய்துள்ளார். சவுலுக்குப் பதிலாக நீ ஆட்சி செய்தாய் அன்றோ! ஆண்டவர் உன் மகன் அப்சலோமின் கையில் அரசைத் தருவார்! இரத்த வெறியனான நீ உன் தீமையிலேயே அழிவாய்".
9 அப்போது செரூயாவின் மகன் அபிசாய் அரசரிடம் வந்து, "இச்செத்த நாய் என் தலைவராம் அரசரைப் பழிப்பதா? இதோ நான் சென்று அவனது தலையைக் கொய்து எறிய எனக்கு அனுமதி தாரும்" என்றான்.
10 அதற்கு அரசர், "செரூயாவின் மக்களே! இதைப்பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். அவன் பழிக்கட்டும்! ஒரு வேளை 'தாவீதைப் பழி!' என்று ஆண்டவரே அவனுக்குச் சொல்லியிருந்தால், 'இவ்வாறு நீ ஏன் செய்தாய்?' என்று யார் சொல்ல முடியும்" என்றார்.
11 மீண்டும் தாவீது அபிசாயிடமும் தம் பணியாளர் அனைவரிடமும் கூறியது: "இதோ! எனக்கு பிறந்த என் மகனே என் உயிரைப் பறிக்கத் தேடுகிறான். பென்யமின் குலத்தைச் சார்ந்த இவன் செய்யலாகாதோ? அவனை விட்டுவிடு! அவன் பழிக்கட்டும்! ஏனெனில் ஆண்டவரே அவனைத் தூண்டியுள்ளார்.
12 ஒருவேளை ஆண்டவர் என் துயரத்தை காண்பார். இன்று அவன் பழித்துப் பேசியதற்காக எனக்கு அவர் நன்மை செய்வார்".
13 தாவீது தன் ஆள்களோடு பயணத்தை தொடர்ந்தார். சிமயி அவருக்கு எதிராகப் பழித்துரைத்து, கல்லெறிந்து, புழுதியை வாரித் தூற்றிக் கொண்டு மலையோரமாகச் சென்றான்.
14 அரசரும் அவரோடிருந்த மக்கள் அனைவரும் யோர்தானை வந்தடைந்தனர். அங்கே அவர் இளைப்பாறினார்.
எருசலேமில் அப்சலோம்
[தொகு]
15 இதற்கிடையில், அப்சலோமும் இஸ்ரயேலர் அனைவரும் எருசலேம் வந்தடைந்தனர். அகிதோபலும் அவனோடு இருந்தான்.
16 தாவீதின் நண்பனான அர்க்கியன் ஊசாய் அப்சலோமிடம் சென்று, "வாழ்க அரசர்! வாழ்க அரசர்!" என்று வாழ்த்தினான்.
17 அப்சலோம் ஊசாயை நோக்கி, "உன் நண்பருக்கு நீ காட்டும் விசுவாசம் இதுதானா? நீ ஏன் உன் நண்பரோடு செல்லவில்லை?" என்று கேட்டான்.
18 அதற்கு ஊசாய் அப்சலோமிடம் கூறியது: "இல்லை! ஆண்டவரும் இந்த இஸ்ரயேல் மக்கள் அனைவரும் யாரைத் தேர்ந்தெடுத்துள்ளார்களோ அவருக்காகவே நான் இருப்பேன்; அவரோடுதான் நான் தங்குவேன்;
19 நான் யாருக்குப் பணிபுரிய வேண்டும்? அவருடைய மகனுக்கு அல்லவா? உன் தந்தைக்கு நான் பணிபுரிந்தது போலவே உனக்கும் பணிபுரிவேன்".
20 அப்சலோம் அகிதோபலிடம், "நான் என்ன செய்யலாம் என்பது பற்றி அறிவுரை கூறு" என்று கேட்டான்.
21 அகிதோபல் அப்சலோமிடம், "உன் தந்தை தன் வீட்டைக் காக்க இங்கு விட்டுச் சென்றுள்ள வைப்பாட்டியரிடம் சென்று அவர்களோடு உறவு கொள். நீ உன் தந்தையின் வெறுப்புக்கு ஆளாகிவிட்டாய் என்று இஸ்ரயேலர் அனைவரும் கேள்விப்படுவர். உன்னோடு இருப்பவர் அனைவரின் கை ஓங்கும்" என்றான்.
22 அப்சலோமுக்காக மாடியில் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டது. இஸ்ரயேலர் அனைவரும் அறிய, அப்சலோம் தன் தந்தையின் வைப்பாட்டியரோடு உறவு கொண்டான். [3]
23 அந்நாள்களில் அகிதோபலின் ஆலோசனை கடவுளின் வாக்காகக் கருதப்பட்டது. இவ்வாறுதான் தாவீதும் அப்சலோமும் அகதோபலின் அனைத்து ஆலோசனைகளையும் கருதினர்.
- குறிப்புகள்
[1] 16:1 = 2 சாமு 9:9-10.
[2] 16:3 = 2 சாமு 19:26-27.
[3] 16:22 = 2 சாமு 12:11-12.
(தொடர்ச்சி): சாமுவேல் - இரண்டாம் நூல்:அதிகாரங்கள் 17 முதல் 18 வரை