திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

விக்கிமூலம் இலிருந்து
பலி பீடத்தின் முன் முழந்தாட்படியிடும் மன்னர் தாவீது. ஓவியப் பாணி: யான் தெ ப்ரே. ஆண்டு: 1658.

2 சாமுவேல் (The Second Book of Samuel)[தொகு]

அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

அதிகாரம் 19[தொகு]

யோவாபு தாவீதைக் கண்டித்தல்[தொகு]


1 அரசர் தம் மகனுக்காக அழுது புலம்புவதாக யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
2 "அரசர் தம் மகனுக்காக வருந்துகிறார்" என்று வீரர்கள் அனைவரும் கேள்விப்பட்டதால், அன்றைய வெற்றி அனைவருக்குமே ஒரு துக்கமாயிற்று.
3 போரிலிருந்து புறமுதுகுகாட்டி வெட்கத்தோடு ஓடுபவர்களைப்போன்று அன்று வீரர்கள் நகருக்குள் யாருமறியாமல் நுழைந்தார்கள்.
4 அரசர் தம் முகத்தை முடிக் கொண்டு, "என் மகன் அப்சலோமே! அப்சலோமே!, என் மகனே! என் மகனே!" என்று குரலெப்பி அழுதுகொண்டிருந்தார்.


5 அப்போது யோவாபு அரசர் இருந்த வீட்டிற்குள் வந்து அவரை நோக்கி, "உம் உயிரையும் உம் புதல்வர் புதல்வியின் உயிரையும், உம் மனைவியர், வைப்பாட்டியரின் உயிரையும் காத்த உம் பணியாளர் அனைவரையும் இன்று தாழ்வடையச் செய்துவிட்டீர்.
6 உம்மை வெறுப்பவருக்கு அன்பு செலுத்தி, உமக்கு அன்பு செலுத்துபவர்களை நீர் வெறுப்பதால், படைத் தலைவர்களோ பணியாளர்களோ உமக்கு ஒரு பொருட்டில்லை என்பதை இன்று எடுத்துக்காட்டிவிட்டீர். இன்று அப்சலோம் உயிரோடு இருந்து, நாங்கள் அனைவருமே மடிந்திருந்தால் உமக்கு அது பிடித்திருக்கும் என்பதையும் நான் இன்று புரிந்து கொண்டேன்.
7 இப்போது எழுந்திரும். வெளியே சென்று உம் பணியாளர் மகிழ்ச்சியுறுமாறு பேசும். ஏனெனில் ஆண்டவர்மேல் ஆணை! நீர் வெளியே வராவிட்டால் ஒரு மனிதனும் இன்றிரவு உம்மோடு தங்கமாட்டான். உம் இளமை முதல் இன்றுவரை உமக்கு ஏற்பட்ட அனைத்துத் தீமைகளைவிடவும் இந்தத் தீமை கடுமையாக இருக்கும்" என்று கூறினார்.

தாவீது எருசலேமுக்குத் திரும்புதல்[தொகு]


8 அரசர் எழுந்து வாயிலில் அமர, "இதோ அரசர் வாயிலில் அமர்ந்துள்ளார்" என்று அனைவருக்கும் சொல்லப்பட்டது. வீரர்கள் அனைவரும் அவர்முன் வந்தனர். இதற்கிடையில் இஸ்ரயேலர் தம் வீடுகளுக்குத் தப்பியோடினர்.
9 அப்போது இஸ்ரயேலின் குலங்களின் மக்கள் அனைவரிடையே இவ்வாறு வாக்குவாதம் ஏற்பட்டது: "நம் எதிரிகளின் கையினின்று அரசர் நம்மை விடுவித்தார். பெலிஸ்தியரின் கையினின்று நம்மை விடுவித்தவரும் அவரே. அப்சலோமின் பொருட்டு அவர் இப்போது நாட்டினின்று வெளியேறியுள்ளார்.
10 நம்மை ஆளுமாறு நாம் திருப்பொழிவு செய்த அப்சலோமோ போரில் இறந்துவிட்டான். இனி நீங்கள் அரசரைத் திருப்பியழைத்து வராமல் வாளாயிருப்பதேன்?


11 அரசர் தாவீது குரு சாதோக்குக்கும் அபியத்தாருக்கும் ஆளனுப்பிக் கூறியது: "யூதாவின் பெரியோர்களிடம் இவ்வாறு கேளுங்கள்: அரசரைத் தம் அரண்மனைக்குத் திருப்பியழைப்பதில் நீங்கள் ஏன் பின்வாங்கவேண்டும்? ஏனெனில் இஸ்ரயேலர் அனைவரின் பேச்சும் அரசரின் வீட்டை எட்டிவிட்டது.
12 நீங்கள் என் சகோதரர்கள்; நீங்கள் என் எலும்பும் சதையும் ஆனவர்கள்; அரசரைத் திருப்பி அழைப்பதில் நீங்கள் ஏன் பின்தங்க வேண்டும்?
13 அமாசாவிடம் இவ்வாறு கூறுங்கள்: "நீ என் எலும்பும் சதையும் அல்லவா? யோவாபுக்குப் பதிலாக என்முன்பாக எந்நாளும் படைத்தலைவனாய் இராவிட்டால், கடவுள் என்னைத் தக்கவாறும், அதற்கு மேலும் தண்டிக்கட்டும்.'"
14 யூதா வீரர்கள் அனைவரின் உள்ளங்களையும் அவன் இவ்வாறு இணங்கச் செய்து அவர்களை ஒருமனப்படுத்தினான். அவர்கள் அரசரிடம் ஆளனுப்பி, "நீரும் உம் பணியாளர் அனைவரும் திரும்பி வாருங்கள்" என்று கூறினர்.


15 அரசர் திரும்பி யோர்தான்வரை வந்தார். யூதாவினர் கில்கால்வரை சென்று அரசரைச் சந்தித்து அவர் யோர்தானைக் கடக்கச் செய்தனர்.
16 பகூரிமைச் சார்ந்த பென்யமினியனான கேராவின் மகன் சிமயி யூதாவினரோடு அரசர் தாவீதைச் சந்திக்க விரைந்தான்.
17 அவனோடு பென்யமினியர் ஆயிரம்பேர் இருந்தனர். சவுல் வீட்டுப் பணியாள் சீபா தன் பதினைந்து புதல்வரோடும் இருபது பணியாளரோடும் அங்கே இருந்தான். அவர்கள் அரசர் வருமுன் யோர்தானுக்கு விரைந்தனர்.

சிமயிக்குத் தாவீது இரக்கம் காட்டல்[தொகு]


18 அரச குடும்பத்தினரைக் கொண்டு வரவும், அரசரின் ஏவல்களைச் செய்யவும் அவர்கள் துறைவழி ஆற்றைக் கடந்தனர். அரசர் யோர்தானைக் கடக்கவிருக்கையில் கேராவின் மகன் சிமயி அவர்முன் விழுந்தான். [1]
19 "தலைவரே! என் குற்றத்தைப் பொருட்படுத்தாதீர்! என் தலைவராம் அரசர் எருசலேமை விட்டுச் சென்ற போது உம் பணியாளன் செய்த தீமையை நினைவுகூராதேயும்! அரசர் அதை மனத்தில் கொள்ளாமல் இருப்பாராக!
20 தான் பாவம் செய்துள்ளதைத் தங்கள் பணியாளன் அறிவான். இதோ இன்று யோசேப்பின் வீட்டார் அனைவரிலும் முதல் ஆளாக, என் தலைவராம் அரசரைச் சந்திக்க நான் வந்திருக்கிறேன்" என்று அவன் அரசரிடம் கூறினான்.


21 அப்போது செரூயாவின் மகன் அபிசாய், "ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரைப் பழித்ததற்காக சிமயி கொல்லப்பட வேண்டாமா?" என்று கேட்டான்.
22 அதற்கு தாவீது "செரூயாவின் புதல்வர்களே! இது பற்றி உங்களுக்கு என்ன? இன்று நீங்கள் எனக்கு எதிரிகள் போல் நடந்து கொள்வது ஏன்? இன்று இஸ்ரயேலில் யாராவது கொல்லப்பட வேண்டுமோ? இன்று நான் இஸ்ரயேலின் அரசர் என்பது எனக்குத் தெரியாதா?" என்று கூறினார்.
23 பிறகு அரசர் சிமயியை நோக்கி, "நீ சாக மாட்டாய்" என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்.

மெபிபொசேத்துக்குத் தாவீது இரக்கம் காட்டல்[தொகு]


24 சவுலின் பேரன் மெபிபொசேத்து அரசரைச் சந்திக்கச் சென்றான். அரசர் புறப்பட்டுச் சென்ற நாளிலிருந்து அவர் நலத்துடன் திரும்பிய நாள்வரை அவள் தன் பாதங்களைக் கழுவவில்லை; தாடியைத் திருத்தவில்லை; தன் ஆடைகளையும் வெளுக்கவுமில்லை. [2]
25 அவன் எருசலேமில் அரசரைச் சந்திக்க வந்தபோது, அரசர் அவனை நோக்கி, "மெபிபொசேத்து! என்னோடு நீ ஏன் வரவில்லை?" என்று வினவினார்.
26 அதற்கு ஆவன், "என் தலைவராம் அரசரே! என் பணியாளன் என்னை ஏமாற்றி விட்டான். உம் அடியான் கால் ஊனமுற்றிருப்பதால், 'நானே என் கழுதைக்குச் சேணமிட்டு அதன்மீது சவாரி செய்து அரசரோடு செல்வேன்' என்று உம் அடியானாகிய நான் கூறினேன்.
27 அவனோ உம் அடியானைப் பற்றி என் தலைவராம் அரசரிடம் அவதூறு பேசினான். ஆனால் என் தலைவராம் அரசர் கடவுளின் தூதரைப் போன்றவர். உமக்குச் சரியெனப்படுவதையே செய்யும்.
28 என் தலைவராம் அரசரின் பார்வையில் என் தந்தையின் குடும்பத்தார் அனைவரும் சாவதைத் தவிர வேறு எதற்கும் உரியவர் அல்லர்! இருப்பினும் உம் அடியானை உம்மோடு உணவருந்துபவர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டீர்! இனி அரசரிடம் மன்றாட எனக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்று சொன்னான்.
29 அதற்கு அரசர், "உன்னைப்பற்றி இன்னும் பேசுவானேன்? நீயும் சீபாவும் நிலத்தைப் பகிர்ந்துகொள்ளுமாறு நான் சொல்லிவிட்டேனே!" என்று அவனிடம் சொன்னார்.
30 மெபிபொசேத்து மறுமொழியாக, "இல்லை, அவனே அனைத்தையும் எடுத்துக் கொள்ளட்டும். என் தலைவராம் அரசர் நலமே தம் வீடு திரும்பியதே எனக்கு போதும்!" என்று அரசரிடம் கூறினான்.

பர்சில்லாய்க்கு இரக்கம் காட்டல்[தொகு]


31 கிலயாதைச் சார்ந்த பர்சில்லாய் அவரை அங்கிருந்து வழியனுப்புவதற்காக ரோகலிமிலிருந்து அரசரோடு யோர்தானைக் கடந்து வந்தார். [3]
32 பர்சில்லாய் வயது முதிர்ந்தவர்; எண்பது வயதினர்; பெரும் பணக்காரர். அரசர் மகனயிமில் தங்கியிருந்த போது அவரின் தேவைகளைக் கவனித்துக் கொண்டவர்.
33 அரசர் பர்சில்லாயிடம் "இப்பொழுது ஆற்றைக் கடந்து என்னோடு எருசலேமுக்கு வந்து தங்கியிரும். நான் உம் தேவைகளைக் கவனித்துக் கொள்வேன்" என்றார்.


34 அப்பொழுது பர்சில்லாய் மறுமொழியாகக் கூறியது: "அரசரோடு வந்திருப்பதற்கேற்றவாறு நான் இன்னும் எத்தனை நாள் உயிரோடு இருக்கப்போகிறேன்?
35 இப்பொழுதே எனக்கு வயது எண்பது ஆகிவிட்டது. நல்லதையும் கெட்டதையும் என்னால் வேறுபடுத்திச் சொல்ல முடியுமா? உம் அடியானால் உண்பதையும் குடிப்பதையும் அனுபவிக்க முடியுமா? பாடகர் பாடகியரின் குரலைக் கேட்டு மகிழ என்னால் முடியுமா? என் தலைவராம் அரசருக்கு உம் அடியான் இன்னும் ஏன் சுமையாக இருக்க வேண்டும்?
36 உம் பணியாளன் அரசரோடு சற்றுத் தொலைவே யோர்தான்மீது கடந்து வருவேன். அதற்காக அரசர் எனக்கு இத்தகைய கைம்மாறு செய்வானேன்?
37 உம் பணியாளனைப் போகவிடும். நான் என் நகரில் என் தாய் தந்தையரின் கல்லறைக்கு அருகே இறப்பேன். இதோ! உம் பணியாளன் கிம்காம்! என் தலைவராம் அரசரோடு அவன் செல்லட்டும். உம் விருப்பம்போல் அவனுக்குச் செய்யும்."
38 அப்பொழுது அரசர், "கிம்காம் என்னோடு கடந்து வரட்டும். உம் விருப்பம்போல் நான் அவனுக்குச் செய்வேன். நீர் என்னிடமிருந்து எதை விருப்பினாலும் நான் உமக்குச் செய்வேன்" என்று கூறினார்.
39 பிறகு, மக்கள் அனைவரும் யோர்தானைக் கடந்தனர். அரசரும் யோர்தானைக் கடந்தார். பர்சில்லாயை அரசர் முத்தமிட்டு வாழ்த்தினார். அவரும் தம் இடத்திற்குத் திரும்பினார்.

அரசரைப் பற்றி யூதாவும் இஸ்ரயேலும் வாதிடல்[தொகு]


40 அரசர் கில்காலுக்குக் கடந்து சென்றார். கிம்காமும் அவரோடு கடந்து சென்றான். யூதாவினர் அனைவரும் இஸ்ரயேலில் பாதிப்பேரும் அரசரைக் கொண்டுவந்து விட்டனர்.
41 உடனே இஸ்ரயேலர் அனைவரும் அரசரிடம் வந்து, "எங்கள் சகோதர்களான யூதாவினர் அரசரையும் அவர் வீட்டாரையும் அவர் ஆள்கள் அனைவரையும் திருட்டுத்தனமாய்க் கொண்டு வந்து யோர்தானைக் கடக்கச் செய்தது ஏன்?" என்று கேட்டார்கள்.
42 யூதாவினர் அனைவரும் இஸ்ரயேலருக்கு மறுமொழியாக, "அரசர் எங்களுக்கு நெருங்கியவர். இக்காரியத்தைப்பற்றி நீங்கள் சினமுறுவது ஏன்? நாங்கள் அரசரிடம் ஏதாவது உண்டோமா? அவரிடமிருந்து நாங்கள் ஏதாவது பெற்றுக்கொண்டோமா?" என்றார்கள்.


43 இஸ்ரயேலர் யூதாவினரை நோக்கி, "எங்களுக்கு அரசரிடம் பத்து பங்குகள் உண்டு. மேலும் தாவீதிடம் உங்களைவிட எங்களுக்கு அதிக உரிமை உண்டு. பின் ஏன் எங்களை அற்பமாக நடத்துகிறீர்கள்? எங்கள் அரசரை திருப்பியழைத்து வர வேண்டுமென்று முதலில் சொன்னவர்கள் நாங்கள் அல்லவா?" என்று பதில் சொன்னார்கள். இஸ்ரயேலின் பேச்சைவிட யூதாவினரின் பேச்சு கடுமையாக இருந்தது.

குறிப்புகள்

[1] 19:16 = 2 சாமு 16:5-13.
[2] 19:24 = 2 சாமு 9:1-13; 16:1-4.
[3] 19:31 = 2 சாமு 17:27-29.

அதிகாரம் 20[தொகு]

சேபாவின் கலகம்[தொகு]


1 அப்போது, பென்யமின் குலத்தைச் சார்ந்த, பிக்ரியின் மகன் சேபா என்ற இழிமகன் அங்கு இருந்தான். அவன் எக்காளம் ஊதி, "எங்களுக்குத் தாவீதிடம் பங்கு இல்லை; ஈசாயின் மகனிடம் மரபுரிமையும் இல்லை; இஸ்ரயேலரே! ஒவ்வொருவரும் உங்கள் கூடாரங்களுக்குச் செல்லுங்கள்" என்றான். [1]
2 இஸ்ரயேலர் அனைவரும் தாவீதைப் பின்பற்றுவதை விட்டுவிட்டுப் பிக்ரியின் மகன் சேபாவின் பின் சென்றனர்.ஆனால் யூதாவினரோ யோர்தான் முதல் எருசலேம் வரை, தங்கள் அரசரைச் சார்ந்திருந்தனர்.
3 தாவீது எருசலேமிலுள்ள தம் வீட்டுக்கு வந்தார். தம் வீட்டைப் பாதுக்காக்க தாம் விட்டு வந்த பத்து வைப்பாட்டியரையும் அழைத்து, பாதுகாப்புள்ள ஒரு வீட்டில் அவர்களை வைத்துத் தேவையானவற்றைக் கொடுத்து வந்தார். ஆனால் அவர்களோடு உறவு கொள்ளவில்லை. அவர்கள் இறக்கும் வரை காவலில் வைக்கப்பட்டுக் கைம் பெண்களைப் போல் வாழ்ந்தனர். [2]


4 பிறகு அரசர் அமாசாவை நோக்கி, "மூன்று நாள்களுக்குள் யூதாவினரை என்னிடம் வரச்சொல்; அப்போது நீயும் இங்கே இரு" என்றார்.
5 அமாசா யூதா மக்களை அழைக்கச் சென்றான். ஆனால் தனக்குக் குறித்த காலத்தை மீறிக் காலம் தாழ்த்தினான்.
6 தாவீது அபிசாயை நோக்கி, "பிக்ரியின் மகன் சேபா அப்சலோமைவிட மிகுதியாக நமக்குத் தீங்கிழைப்பான். உன் தலைவரின் பணியாளரை அழைத்துக் கொண்டு, அவனைத் துரத்திச் செல்லுங்கள். இல்லையேல் அரண்சூழ் நகர்களைக் கண்டு நம் கண்ணிலிருந்து தப்பிவிடுவான்" என்று சொன்னார்.
7 யோவாபின் ஆள்களும், கெரேத்தியர், பெலேத்தியரும், வலிமைமிகு வீரர்கள் அனைவரும் அபிசாயின் தலைமையில் சென்றனர். அவர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டுப் பிக்ரியின் மகன் சேபாவைப் பின்தொடர்ந்தனர்.
8 அவர்கள் கிபயோனிலுள்ள பெருங்கல் அருகே வந்தனர். அமாசா அவர்கள் முன்பாக வந்தான். யோவாபு தாம் உடுத்தியிருந்த போருடைமீது ஒரு கச்சை கட்டியிருந்தார். அதிலே உறையோடு கூடிய ஒரு குறுவாள் செருகப்பட்டிருந்தது. அவர் முன்னால் சென்றபோது அது கீழே வீழ்ந்தது.
9 யோவாபு அமாசாவை நோக்கி, "சகோதரனே நலமா? என்று கேட்டு அவனை முத்தமிடுவதற்காக வலக்கையால் அவனது தாடியைப் பற்றினார்.
10 யோவாபின் இடக் கையிலிருந்த குறுவாளைப் பற்றி அமாசா எச்சரிக்கையாக இல்லை. யோவாபு அதை அவன் வயிற்றில் குத்த, அவனது குடல் தரையில் சரிந்தது. மீண்டும் குத்துவதற்கு அவசியமில்லாமல் அமாசா இறந்தான். அதன் பின் யோவாபும் அவருடைய சகோதரன் அபிசாயும் பிக்ரியின் மகன் சேபாவைப் பின்தொடர்ந்தனர்.


11 யோவாபின் ஆள்களுள் ஒருவன் அவர் அருகே நின்று கொண்டு, "யோவாபை விரும்புகிறவர்களும், தாவீதின் பக்கமுள்ளவர்களும், யோவாபின் பின்செல்லட்டும்" என்றான்.
12 சாலை நடுவே அமாசா தன் இரத்தத்தில் மூழ்கிக் கிடக்கவே, வீரர்கள் அனைவரும் அங்கேயே நின்றுவிட்டதை அவன் கண்டான். அமாசாவின் அருகே வந்தவர்கள் அனைவரும் நின்றுவிட்டதைக் கண்டு, அவனைச் சாலையிலிருந்து வயலுக்கு இழுத்து ஒரு துணியால் மூடினான்.
13 அமாசா சாலையிலிருந்து விலக்கப்பட்டதும் அனைவரும் யோவாபின் பின்சென்று, பிக்ரியின் மகன் சேபாவைப் பின்தொடர்ந்தனர்.


14 சேபா அனைத்து இஸ்ரயேல் குலங்களின் நிலப்பகுதி வழியாக பெத்மாக்காவின் ஆபேல் வரை சென்றான். பெரியோர் அனைவரும் ஒன்று திரண்டு அவன் பின்சென்றனர்.
15 யோவாபும் அவர் படையினரும் பெத்மாக்காவின் ஆபேலில் முற்றுகையிட்டு சேபாவை வளைத்தனர். நகருக்கு எதிராக முற்றுகைக் கோட்டை எழுப்பினர். அது மதிலுக்கு அருகில் இருந்தது. அதனின்று யோவாபோடு இருந்த வீரர்கள் அனைவரும் அம்மதிலைத் தகர்த்துக் கொண்டிருந்தனர்.
16 அப்போது அறிவுக்கூர்மையுள்ள ஒரு பெண் நகரிலிருந்து குரல் கொடுத்து, "கேளுங்கள்; கேளுங்கள். தயைகூர்ந்து யோவாபை இங்கே வரச் சொல்லுங்கள். நான் அவரிடம் பேச வேண்டும்" என்றாள்.
17 அவரும் அவளருகே வந்தார். அப்பெண் அவரை நோக்கி, "யோவாபு நீர்தாமா?" என்றாள். "நானேதான்" என்றார் யோவாபு. "உம் அடியவளின் வார்த்தைகளைக் கேளும்" என்றாள் அப்பெண். "கேட்கிறேன்" என்றார் யோவாபு.
18 அவள் தொடர்ந்து கூறியது: "முற்காலத்தில் அடிக்கடி சொல்வார்கள்: 'ஆபேலுக்குச் சென்று ஆலோசனை கேட்பார்களாக!' அதன்படியே பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
19 இஸ்ரயேலில் நாங்கள் அமைதியும் நாணயமும் உடையவர்கள். இஸ்ரயேலின் தாயென விளங்கும் இந்நகரை நீர் அழிக்கத் தேடுவதேன்? ஆண்டவரின் உரிமைச் சொத்தை நீர் விழுங்குவானேன்?" என்று அப்பெண் கேட்டாள்.
20 அதற்கு யோவாபு, "இல்லை, விழுங்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அறவே இல்லை.
21 காரியம் அதுவல்ல. எப்ராயிம் மலைப்பகுதியைச் சார்ந்த, பிக்ரியின் மகன் சேபா என்பவன் அரசர் தாவீதுக்கு எதிராகக் கையோங்கியுள்ளான். அவனை மட்டும் தாருங்கள். நான் நகரிலிருந்து விலகிச் செல்வேன்" என்று பதில் கூறினார். அப்பொழுது அப்பெண், "இதோ! அவன் தலை மதிலுக்கு அப்பால் உம்மிடம் தூக்கி எறியப்படும்" என்றாள்.
22 மக்கள் அனைவரையும் அவள் அணுகி அறிவார்த்த ஆலோசனை கூறினாள். அவர்களும் பிக்ரியின் மகன் சேபாவின் தலையை வெட்டி யோவாபிடம் எறிந்தார்கள். யோவாபு எக்காளம் ஊத, அவர்கள் நகரை விட்டு நீங்கித் தம் வீடுகளுக்குச் சென்றனர். யோவாபு எருசலேமுக்குத் திரும்பி அரசரிடம் சென்றார்.

தாவீதின் அலுவலர்[தொகு]


23 யோவாபு அனைத்து இஸ்ரயேலின் படைத்தலைவராகவும், பெனாயாவின் மகன் யோயாதா கெரேத்தியர், பெலேத்தியரின் தலைவனாகவும் இருந்தனர்.
24 அதோராம் கொத்தடிமைகளுக்குப் பொறுப்பாளனாகவும், அகிலுதின் மகன் யோசபாத்து பதிலாளனாகவும் இருக்க,
25 சேவா செயலராகவும், சாதோக்கும் அபியத்தாரும் குருக்களாகவும் பணியாற்றினர்.
26 யாயிரைச் சார்ந்த ஈராவும் தாவீதின் குருக்களில் ஒருவனாக இருந்தான்.

குறிப்புகள்

[1] 20:1 = 1 அர 12:16; 2 குறி 10:16.
[2] 20:3 = 2 சாமு 16:22.


(தொடர்ச்சி):சாமுவேல் - இரண்டாம் நூல்:அதிகாரங்கள் 21 முதல் 22 வரை