திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

விக்கிமூலம் இலிருந்து
தாவீது - கலைத்திறன் வாய்ந்த பளிங்குச் சிலை. சிற்பி: மைக்கிலாஞ்சலோ போனறோட்டி (1475-1564). காப்பகம்: புளோரன்சு, இத்தாலியா.

2 சாமுவேல் (The Second Book of Samuel)[தொகு]

அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

அதிகாரம் 21[தொகு]

தாவீதின் வழிமரபினர் கொல்லப்படல்[தொகு]


1 தாவீதின் காலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பஞ்சம் ஏற்பட்டது. தாவீது ஆண்டவரின் திருவுளத்தை நாடினார். "கிபயோனியரைச் சவுல் கொலை செய்ததன் காரணத்திற்காக அவன்மீதும் அவன் வீட்டார் மீதும் இரத்தப்பழி உள்ளது" என்றார் ஆண்டவர்.


2 அரசர் கிபயோனியரை அழைத்துப் பேசினார். கிபயோனியர் இஸ்ரயேலரை சார்ந்தவர் அல்ல; அவர்கள் எமோரியருள் எஞ்சியவர். இஸ்ரயேலர் அவர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தும், இஸ்ரயேல் மீதும் யூதாவின் மீதும் தாம் கொண்டிருந்த பேரார்வத்தின் காரணமாகச் சவுல் அவர்களை அழிக்க முயன்றார். [1]


3 தாவீது கிபயோனியரிடம், "உங்களுக்காக நான் செய்ய வேண்டியது என்ன? நீங்கள் ஆண்டவரின் உரிமைச் சொத்துக்கு ஆசிவழங்குமாறு நான் என்ன கழுவாய் செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.


4 கிபயோனியர் தாவீதிடம், "சவுலிடமிருந்தோ அவன் வீட்டாரிடமிருந்தோ நாங்கள் பொன்னையோ வெள்ளியையோ எதிர்பாக்கவில்லை; இஸ்ரயேலருள் ஒருவனைக் கொல்ல வேண்டும் என்றும் நாங்கள் விருப்பவில்லை" என்று கூறினர். தாவீது, "நீங்கள் விரும்புவதை நான் செய்வேன்" என்றார்.


5 கிபயோனியர் அரசரிடம், "நாங்கள் இஸ்ரயேல் எல்லையில் எங்குமே இல்லாமல் ஒழிந்து போகச் சதிசெய்தவன், எங்களை அழித்தவன் ஒருவன் உண்டு.
6 அவன் புதல்வருள் ஏழு பேர் எங்களிடம் ஒப்புவிக்கப்படட்டும். ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சவுலின் நகரான கிபயோனில் அவர்களை ஆண்டவருக்காகக் கழுவிலேற்றுவோம்" என்று கூறினர். அரசரும் "அவர்களை ஒப்புவிக்கிறேன் "என்றார்.


7 ஆனால் தாவீதும் சவுலின் மகன் யோனத்தானும் ஆண்டவர் முன்னிலையில் செய்துகொண்ட வாக்குறுதியின் பொருட்டுச் சவுலின் மகன் யோனத்தானுக்குப் பிறந்த மெபிபொசேத்தை அரசர் தப்பவிட்டார். [2]
8 அய்யாவின் மகள் இரிசபா சவுலுக்குப் பெற்றெடுத்த புதல்வர்களான அர்மோனி, மெபிபொசேத்து ஆகிய இருவரையும் சவுலின் மகள் மேராபு [3] மெகொலாத்தியன் பர்சில்லாயின் மகன் அத்ரியேலுக்குப் பெற்றெடுத்த புதல்வர்கள் ஐவரையும் பிடித்து, [4]
9 கிபயோனியர் கையில் அரசர் ஒப்படைத்தார். இவர்களை ஆண்டவர் முன்னிலையில் மலையில் கழுவேற்றினர். அந்த ஏழுபேரும் ஒன்றாக மடிந்தார்கள். அவர்கள் வாற்கோதுமை அறுவடை தொடங்கிய முதல் நாள்களிலே கொலையுண்டார்கள்.


10 அப்போழுது அய்யாவின் மகள் இரிசபா சாக்குத் துணியை எடுத்துக் கொண்டுபோய் அதைப் பாறைமீது தனக்காக விரித்துக் கொண்டு, அறுவடை தொடங்கிய நாள் முதல் வானத்தினின்று அவர்கள் மீது மழை பொழியுமட்டும் இருந்தாள்; பகலில் வானத்துப் பறவைகளையோ, இரவில் காட்டு விலங்குகளையோ அவர்களைத் தொட அனுமதிக்கவில்லை.


11 சவுலின் வைப்பாட்டியான அய்யாவின் மகள் இரிசபா செய்தது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.
12 எனவே, தாவீது சவுலின் எலும்புகளையும் அவர் மகன் யோனத்தானின் எலும்புகளையும் யாபேசு கிலயாதின் மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டு வந்தார். பெலிஸ்தியர் அவர்களைக் கில்போவாவில் வெட்டி வீழ்த்தி, பெத்சான் நகர முற்றத்தில் கழுவிலேற்றினர். அந்த முற்றத்திலிருந்துதான் யாபேசு கியாதின் ஆள்கள் எலும்புகளை திருடிச் சென்றிருந்தனர். [5]
13 சவுலின் எலும்புகளையும் அவரின் மகன் யோனத்தானின் எலும்புகளையும் அங்கிருந்து கொண்டுவந்து கழுவிலேற்றப்பட்ட இவர்களின் எலும்புகளையும் ஒன்று சேர்த்தனர்.
14 சவுலின் எலும்புகளையும் அவர் மகன் யோனத்தானின் எலும்புகளையும் பென்யமின் நிலப்பகுதியான செலாவில் அவர்தம் தந்தை கீசின் கல்லறையில் அடக்கம் செய்தனர். அரசர் கட்டளையிட்டவாறே அனைத்தையும் செய்தனர். அதன் பின் நாட்டுக்காகச் செய்யப்பபட்ட வேண்டுதலைக் கடவுள் கேட்டார்.

பெலிஸ்தியரோடு போர்[தொகு]

(1 குறி 20:4-8)


15 பெலிஸ்தியர் இஸ்ரயேலரோடு மீண்டும் போரிட வந்தனர். தாவீதும் அவரோடு அவருடைய பணியாளரும் இறங்கிச் சென்று பெலிஸ்தியரோடு போரிட்டனர். தாவீது களைப்புற்றிருந்தார்.
16 அப்போது மூன்றரை கிலோ கிராம் எடையுள்ள ஈட்டியைக் கையில் ஏந்தி, புதிய வாளை இடையில் கட்டியிருந்த, இஸ்பிபெனோபு என்னும் அரக்கர் இனத்தவன் ஒருவன், தாவீதைத் தாக்கவிருந்தான்.
17 செரூயாவின் மகன் அபிசாய் அவருடைய உதவிக்கு வந்து அப்பெலிஸ்தியனைக் வெட்டிக் கொன்றான். எனவே தாவீதின் ஆள்கள், "இஸ்ரயேலின் விளக்கு அணைந்து போகாதவண்ணம் நீர் இனி எங்களோடு போருக்கு வரக்கூடாது" என்று அவரிடம் ஆணையிட்டுச் சொன்னார்கள். [6]


18 இது நடந்தபின் மீண்டும் பெலிஸ்தியரோடு கோபி என்னுமிடத்தில் போர் மூண்டது. அரக்கர் இனத்தவன் ஒருவனான சாபை ஊசாத்தியனான சிபெக்காய் கொன்றான்.


19 மீண்டும் ஒருமுறை கோபில் பெலிஸ்தியரோடு போர் நடந்தது. பெத்லகேமைச் சார்ந்த யாகரே ஓர்கிமின் மகன் எல்கானான் கித்தியனான கோலியாத்தைக் கொன்றான். அவனது ஈட்டியின் கோல் நெசவாளரின் படைமரம் போன்றிருந்தது.


20 மீண்டும் காத்தில் போர் மூண்டது. கைகளிலும் கால்களிலும் ஆறு விரல்களுடன், இருபத்து நான்கு விரல்களைக் கொண்ட நெட்டையன் ஒருவன் இருந்தான். அவனும் அரக்கர் இனத்தவன்.
21 அவன் இஸ்ரயேலைப் பழித்தான். தாவீதின் சகோதரர் சிமயியின் மகன் யோனத்தான் அவனைக் கொன்றான்.


22 தாவீதின் கையாலும் அவரது பணியாளரின் கையாலும் வீழ்த்தப்பட்ட இந்த நால்வரும் காத்து நாட்டில் அரக்கர் வழிமரபினரே.

குறிப்புகள்

[1] 21:2 = யோசு 9:3-15.
[2] 21:7 = 1 சாமு 20:15-17; 2 சாமு 9:1-7.
[3] 21:8 'மீக்கால்' என்பது எபிரேய பாடம்.
[4] 21:8 = 1 சாமு 18:19.
[5] 21:12 = 1 சாமு 31:18-31.

அதிகாரம் 22[தொகு]

தாவீதின் வெற்றிப் பாடல்[தொகு]

(திபா 18)


1 ஆண்டவர் தாவீதை அவருடைய எதிரிகள் கையினின்றும் சவுலின் கையினின்றும் விடுவித்தபோது அவர் ஆண்டவருக்கு பண்ணிசைத்துப் பாடியது:


2 "ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்;


3 என் கடவுள்; நான் புகலிடம் தேடும் மலை அவரே;
என் கேடயம்; எனக்கு மீட்பளிக்கும் வல்லமை; என் அரண்; என் தஞ்சம்;
என் மீட்பர்; கொடுமையினின்று என்னை விடுவிப்பவரும் அவரே.


4 போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்.
என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன்.


5 ஏனெனில், சாவின் அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.


6 பாதாளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின; சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன.


7 என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்;
என் கடவுளை நோக்கி கதறினேன்.
தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது.


8 அப்பொழுது, மண்ணுலகம் அசைந்து அதிர்ந்தது; வானத்தின் கீழ்த்தளங்கள் நடுங்கிக் கிடுகிடுத்தன;
அவர்தம கடுஞ்சினத்தால் அவை நடுங்கின.


9 அவரது நாசியினின்று புகை கிளம்பிற்று; அவரது வாயினின்று எரித்தழிக்கும் தீ மூண்டது;
அவரிடமிருந்து நெருப்புக் கனல் வெளிப்பட்டது.


10 வானைத் தாழ்த்தி அவர் கீழிறங்கினார்; கார் முகில் அவரது காலடியில் இருந்தது.


11 கெருபுமீது அவர் ஏறிப் பறந்து வந்தார்; காற்றை இறக்கைகளாகக் கொண்டு விரைந்து வந்தார்.


12 காரிருளை அவர் மூடுதிரை ஆக்கிக் கொண்டார்; நீர் கொண்ட முகிலைக் கூடாரமாக்கிக் கொண்டார்.


13 அவர் தம் திருமுன்னின் பேரொளியினின்று நெருப்புக் கனல் தெறித்தது.


14 ஆண்டவர் வானங்களில் இடியென முழங்கினார்; உன்னதர் தம் குரலை அதிரச் செய்தார்.


15 தம் அம்புகளை எய்து அவர் அவர்களைச் சிதறடித்தார்;
மின்னல்களால் அவர்களை கலங்கடித்தார்.


16 ஆண்டவரின் கடிந்துரையாலும் அவரது மூச்சுக் காற்றின் வலிமையாலும் கடலின் அடிப்பரப்பு தென்பட்டது;
நிலவுலகின் அடித்தளம் காணப்பட்டது.


17 உயரத்தினின்று அவர் என்னை எட்டிப் பிடித்துக்கொண்டார்;
வெள்ளப் பெருக்கினின்று அவர் என்னை காப்பாற்றினார். [1]


18 வலிமைமிகு எதிரியிடமிருந்து அவர் என்னை விடுவித்தார்.
என்னை விட வலிமைமிகு பகைவரிடமிருந்து என்னைப் பாதுகாத்தார்.


19 எனக்கு இடுக்கண் வந்த நாளில் அவர்கள் என்னை எதிர்த்தார்கள்;
ஆண்வரோ எனக்கு ஊண்று கோலாய் இருந்தார்.


20 நெருக்கடியற்ற இடத்திற்கு அவர் என்னைக் கொணர்ந்தார்;
நான் அவர் மனதிற்கு உகந்தவனாய் இருந்ததால் அவர் என்னை விடுவித்தார்.


21 ஆண்டவர் எனது நேர்மைக்கு உரிய பயனை எனக்களித்தார்;
என் மாசற்ற செயலுக்கு ஏற்பக் கைம்மாறு செய்தார்.


22 ஏனெனில் நான் ஆண்டவர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்தேன்;
பொல்லாங்கு செய்து என் கடவுளை விட்டு அகலவில்லை.


23 அவர்தம் நீதி நெறிகளை எல்லாம் என் கண்முன் வைத்திருந்தேன்;
அவர்தம் விதிமுறைகளை நான் ஒதுக்கித் தள்ளவில்லை.


24 அவர் முன்னிலையில் நான் மாசற்றவனாய் இருந்தேன்;
தீங்கு செய்யா வண்ணம் என்னைக் காத்துக்கொண்டேன்.


25 ஆண்டவர் என் நேர்மைக்கு உரிய பயனை அளித்தார்;
அவர்தம் பார்வையில் நான் குற்றமற்றவனாய் இருந்தேன்.


26 மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும்
மாசற்றோர்க்கு மாசற்றவராகவும் நீர் விளங்குகின்றீர்!


27 தூயோர்க்குத் தூயோராகவும் வஞ்சகர்க்கு விவேகியாகவும் உம்மை நீர் காட்டுகின்றீர்.


28 எளியோர்க்கு நீர் மீட்பளிக்கின்றீர்; செருக்குற்றோரை ஏளனத்துடன் நீர் பார்க்கின்றீர்.


29 ஆண்டவரே! நீரே என் ஒளி விளக்கு!
ஆண்டவர் என் இருளை ஒளிமயமாக்குகின்றார்.


30 உம் துணையுடன் நான் எப்படையையும் நசுக்குவேன்;
என் கடவுளின் துணையால் எம்மதிலையும் நான் தாண்டுவேன்.


31 இந்த இறைவனின் வழி நிறைவானது; ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது;
அவரிடம் அடைக்கலம்புகும் அனைவர்க்கும் அவரே கேடயமாய் இருக்கின்றார்.


32 ஏனெனில், ஆண்டவரைத் தவிர வேறு இறைவன் யார்?
நம் கடவுளைத் தவிர நமக்கு வேறு கற்பாறை ஏது?


33 இந்த இறைவன் எனக்கு வலிமைமிகு கோட்டையாய் உள்ளார்; என் வழியைப் பாதுகாப்பானதாய்ச் செய்தவரும் அவரே.


34 அவர் என் கால்களை மான்களின் கால்களைப் போல் ஆக்குகின்றார்;
உயர்ந்த இடத்தில் என்னை நிலைநிறுத்துகின்றார். [2]


35 போருக்கு என்னை அவர் பழக்குகின்றார்;
எனவே வெண்கல வில்லையும் என் புயங்கள் வளைக்கும்!


36 பாதுகாக்கும் உம் கேடயத்தை நீர் எனக்கு வழங்கினீர்; உமது துணையால் என்னைப் பெருமைப்படுத்தினீர்.


37 நான் நடக்கும் வழியை அகலமாக்கினீர்; என் கால்கள் தடுமாறவில்லை.


38 எதிரிகளைத் துரத்திச் சென்று அழித்தேன்;
அவர்களை அழித்தொழிக்கும் வரை நான் திரும்பவில்லை.


39 நான்அவர்களை கொன்று அழித்தேன்; அவர்கள் எழுந்திருக்கவில்லை;
அவர்கள் என் காலடியில் வீழ்ந்துகிடந்தார்கள்.


40 போரிடும் ஆற்றலை எனக்கு அரைக் கச்சையாக அளித்தீர்;
என்னை எதிர்த்தவர்களை எனக்கு அடிப்பணியச் செய்தீர்.


41 என் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தீர்;
என்னை வெறுத்தோரை நான் அழித்துவிட்டேன்.


42 உதவி வேண்டி அவர்கள் கதறினார்கள்; ஆனால் அவர்களுக்கு உதவுவார் யாருமில்லை; அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள்; ஆனால் அவர்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை.


43 எனவே நான் அவர்களை மண்ணின் பழுதியென நசுக்கினேன்;
அவர்களைத் தெருச்சேறென மிதித்துத் தெறிக்கச் செய்தேன்.


44 மக்களின் கலகத்தினின்று என்னை விடுவித்தீர்; பிற இனங்களுக்கு என்னைத் தலைவனாக்கினீர்;
முன்பின் அறியாத மக்கள் எனக்கும் பணிவிடை செய்தனர்.


45 வேற்று நாட்டவர் என்னிடம் கூனிக்குறுகி வந்தனர்;
அவர்கள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் எனக்குக் கீழ்படிந்தனர்.


46 வேற்று நாட்டவர் உள்ளம் தளர்ந்தனர்;
தம் அரண்களிலிருந்து நடுங்கிக் கொண்டு [3] வெளியே வந்தனர்.


47 ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்;
என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவாராக!
என் மீட்பின் கற்பாறையாம் கடவுள் மாட்சியுறுவாராக!


48 எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவர்;
மக்களினங்களை எனக்குக் கீழ்ப்படுத்தியவரும் அவரே!


49 என் பகைவரிடமிருந்து என்னை அழைத்து வந்தவர் அவரே!
என் எதிரிகளுக்கு மேலாக என்னை உயர்த்தினீர்!
என்னைக் கொடுமைப்படுத்தியவரிடமிருந்து நீர் என்னைக் காத்தீர்!


50 ஆகவே ஆண்டவரே! பிற இனத்தவரிடையே உம்மைப் போற்றுவேன்;
உம் பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன். [4]


51 தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அவளிப்பவர் அவர்!
தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே!"

குறிப்புகள்

[1] 22:17 = 1 அர 11:36; திபா 132:17.
[2] 22:34 = அப 3:19.
[3] 22:46 'போர்க்கோலம் பூண்டு' என்பது எபிரேய பாடம்.
[4] 22:50 = உரோ 15:9.


(தொடர்ச்சி):சாமுவேல் - இரண்டாம் நூல்:அதிகாரங்கள் 23 முதல் 24 வரை