உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - முதல் நூல்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
அன்னா சாமுவேலை குரு ஏலியிடம் ஒப்படைத்தல் (1 சாமு 1:1-28). ஓவியர்: யான் விக்டர்சு (1619-1676). காப்பகம்: அரசு கலைக்கூடம், பெர்லீன், செருமனி.


1 சாமுவேல் (The First Book of Samuel) [1]

[தொகு]

முன்னுரை

'1 & 2 சாமுவேல்' என்னும் நூல்களில் இஸ்ரயேல் அரசுரிமையின் தொடக்க வரலாறு காணப்படுகிறது. நீதித் தலைவர்களின் காலம் அரசுரிமையின் காலமாக மாறியது குறித்த நிகழ்ச்சிகள் '1 சாமுவேல்' என்னும் இந்நூலில் இடம் பெறுகின்றன. மேலும், நீதித் தலைவர்களின் வரிசையில் இறுதியாக வந்தவரான சாமுவேல், இஸ்ரயேலின் முதல் அரசரான சவுல், சிறுபருவத்தே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு இஸ்ரயேலின் பேரரசராக உயர்த்தப்பட்ட தாவீது ஆகிய மூவரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட சமுதாய மாற்றமும் இந்நூலில் இடம்பெறுகிறது.

கடவுளுக்கு உண்மை உள்ளவர்களாய் இருந்தபோது வெற்றியும், அவருக்கு உண்மையற்றவர்களாய் நடக்கும்போது அழிவும் ஏற்படும் என்னும் கருத்து இந்நூலில் தெளிவாக்கப்படுகிறது. ஆண்டவரே இஸ்ரயேலின் உண்மையான அரசர் என்று கருதப்பட்டார். ஆனால், மக்களின் விருப்பத்திற்கு இணங்கி அவர் அவர்களுக்கு ஓர் அரசரைத் தேர்ந்தெடுக்கிறார். ஆயினும் அரசரும் இஸ்ரயேல் மக்களும் கடவுளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் என்பதும், செல்வர் வறியோர் ஆகிய எல்லா மக்களின் உரிமைகளும் கடவுளின் திருச்சட்டத்தின் கீழ் சமமாகக் காக்கப்பட வேண்டும் என்பதும் இந்நூலில் வலியுறுத்தப்படுகின்றன.

1 சாமுவேல்

[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. இஸ்ரயேலின் தலைவர் சாமுவேல் 1:1 - 7:17 411 - 422
2. சவுல் அரசராதல் 8:1 - 10:27 422 - 426
3. சவுல் ஆட்சியின் முற்பகுதி 11:1 - 15:35 426 - 435
4. தாவீதும் சவுலும் 16:1 - 30:11 436 - 462
5. சவுல், அவர்தம் புதல்வர்கள் ஆகியோரின் இறப்பு 31:1-13 462

1 சாமுவேல்

[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1

[தொகு]

சீலோவில் எல்கானா

[தொகு]


1 எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த இராமாத்தயிம் சோப்பிமில் எல்கானா என்ற ஒருவர் இருந்தார். இவர் எப்ராயிமைச் சார்ந்த சூப்பின் மகனான தோகூவின் மைந்தனான எலிகூபின் புதல்வனான எரொகாமின் மகன்.
2 அவருக்கு அன்னா, பெனின்னா என்ற இரு மனைவியர் இருந்தனர்; பெனின்னாவுக்குக் குழந்தைகள் இருந்தனர். அன்னாவுக்கோ குழந்தைகள் இல்லை.


3 எல்கானா ஆண்டுதோறும் சீலோவில் படைகளின் ஆண்டவரை வழிபடவும் அவருக்குப் பலி செலுத்தவும் தம் நகரிலிருந்து சென்று வருவார். அங்கே ஆண்டவரின் குருவான ஏலியின் இரு புதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் இருந்தனர்.
4 எல்கானா, தாம் பலி செலுத்திய நாளில், தம் மனைவி பெனின்னாவுக்கும் அவளுடைய புதல்வர் புதல்வியர் அனைவருக்கும் பங்கு கொடுப்பதுண்டு.
5 அன்னாவின் மீது அவர் அன்புகொண்டிருந்தும் அவருக்கு ஒரே [1] பங்கைத்தான் அளித்தார். ஏனெனில் ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்தார்.
6 ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்ததால், அவருடைய சக்களத்தி அவரைத் துன்புறுத்தி வதைத்தாள்.
7 இவ்வாறு ஆண்டுதோறும் நடந்தது; அவர் ஆண்டவரின் இல்லம் வந்த போதெல்லாம் அவள் அவரைத் துன்புறுத்துவாள். அன்னா உண்ணாமல் அழுவார்.
8 அப்போது அவர் கணவர் எல்கானா அவரை நோக்கி, "அன்னா நீ ஏன் அழுகிறாய்? நீ ஏன் உண்ணவில்லை? நீ ஏன் மனவருத்தம் அடைகிறாய்? நான் உனக்குப் பத்துப் புதல்வரை விட மேலானவன் அன்றோ?" என்பார்.

அன்னாவும் ஏலியும்

[தொகு]


9 ஒருநாள் அவர்கள் சீலோவில் உண்டு குடித்தபின், அன்னா எழுந்தார். குரு ஏலி, ஆண்டவரின் கோவில் முற்றத்தில் ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
10 அன்னா மனம் கசந்து அழுது புலம்பி, ஆண்டவரிடம் மன்றாடினார்.
11 அவர் பொருத்தனை செய்து வேண்டிக்கொண்டது: "படைகளின் ஆண்டவரே! நீர் உம் அடியாளாகிய என் துயரத்தைக் கண்ணோக்கி, என்னை மறவாமல் நினைவு கூர்ந்து எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன். அவனது தலைமேல் சவரக் கத்தியே படாது". [2]


12 அவர் இவ்வாறு ஆண்டவர் திருமுன் தொடர்ந்து மன்றாடிக் கொண்டிருந்தபோது, ஏலி அவருடைய வாயைக் கவனித்தார்.
13 அன்னா தம் உள்ளத்தினுள் பேசிக்கொண்டிருந்தார்; அவருடைய உதடுகள் மட்டும் அசைந்தன; குரல் கேட்கவில்லை. ஆகவே ஏலி அவரை ஒரு குடிகாரி என்று கருதினார்.
14 ஏலி அவரை நோக்கி, "எவ்வளவு காலம் நீ குடிகாரியாய் இருப்பாய்? மது அருந்துவதை நிறுத்து" என்றார்.
15 அதற்கு அன்னா மறுமொழியாக, "இல்லை என் தலைவரே! நான் உள்ளம் நொந்த ஒரு பெண். திராட்சை இரசத்தையோ வேறு எந்த மதுவையோ நான் அருந்தவில்லை. மாறாக, ஆண்டவர் திருமுன் என் உள்ளத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன்.
16 உம் அடியாளை ஒரு கீழ்த்தரப்பெண்ணாகக் கருதவேண்டாம். ஏனெனில், என் துன்ப துயரங்களின் மிகுதியால் நான் இதுவரை பேசிக்கொண்டிருந்தேன்" என்று கூறினார்.


17 பிறகு ஏலி, "மனநிறைவோடு செல். இஸ்ரயேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது வேண்டுகோளைக் கேட்டருள்வார்" என்று பதிலளித்தார்.
18 அதற்கு அன்னா, "உம் அடியாள் உம் கண்முன்னே அருள்பெறுவாளாக!" என்று கூறித் தம் வழியே சென்று உணவு அருந்தினார். இதன்பின் அவர் முகம் வாடியிருக்கவிலலை.

சாமுவேலின் பிறப்பு

[தொகு]


19 அவர்கள் காலையில் எழுந்து ஆண்டவர் திருமுன் வழிபட்டுவிட்டுத் திரும்பிச்சென்று இராமாவில் இருந்த தங்கள் இல்லம் அடைந்தனர். எல்கானா தம் மனைவி அன்னாவோடு கூடி வாழ்ந்தார். ஆண்டவரும் அவரை நினைவு கூர்ந்தார்.
20 உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார். "நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்" என்று சொல்லி, அவர் அவனுக்குச் 'சாமுவேல்' என்று பெயரிட்டார்.


21 எல்கானாவும் அவர் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்குத் தங்கள் ஆண்டுப் பலியையும் பொருத்தனையையும் செலுத்தச் சென்றார்கள்.
22 ஆனால், அன்னா செல்லவில்லை. அவர் தம் கணவரிடம், "பையன் பால் குடி மறந்ததும் அவனை எடுத்துச் செல்வேன். அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான்" என்று சொன்னார்.
23 அவர் கணவர் எல்கானா, "உனக்குச் சிறந்தது எனப்படுவதைச் செய். பையன் பால் குடி மறக்கும் வரை இரு. ஆண்டவர் தம் வார்த்தையை உறுதிப்படுத்துவாராக! என்று அவரிடம் கூறினார். ஆகவே அவர் தங்கியிருந்து பால்குடி மறக்கும் வரை தம் மகனுக்குப் பாலூட்டி வந்தார்.


24 அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக் கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான்.
25 அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள்.
26 பின் அவர் கூறியது: "என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டிருந்த பெண் நானே.
27 இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார்.
28 ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்." அங்கே அவர்கள் [3] ஆண்டவரைத் தொழுதார்கள்.

குறிப்புகள்

[1] 1:5 எபிரேயத்தில் 'அன்புகொண்டிருந்தால்...இரண்டு பங்கை' எனவும் பொருள்படும்.
[2] 1:11 = எண் 6:5.
[3] 1:28 'அவர்' என்பது எபிரேய பாடம்.

அதிகாரம் 2

[தொகு]

அன்னாவின் வேண்டுதல்

[தொகு]


1 அப்பொழுது அன்னா மன்றாடிக் கூறியது:


"ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது!
ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது!
என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது!
ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன்.


2 ஆண்டவரைப் போன்ற தூயவர் வேறு எவரும் இலர்!
உம்மையன்றி வேறு எவரும் இலர்!
நம் கடவுளைப் போன்ற வேறு பாறை இல்லை.


3 இறுமாப்புடன் இனிப்பேச வேண்டாம்! உங்கள் வாயில் வீம்பு வெளிப்பட வேண்டாம்!
ஏனெனில், ஆண்டவர் அறிவின் இறைவன்!
செயல்களின் அளவை எடை போடுபவர் அவரே!


4 வலியோரின் வில்கள் உடைபடுகின்றன!
தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்!


5 நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர்;
பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார் ஆகியுள்ளனர்!
மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல புதல்வரைப் பெற்றவளோ தனியள் ஆகின்றாள்!


6 ஆண்டவர் கொல்கிறார்; உயிரும் தருகின்றார்;
பாதாளத்தில் தள்ளுகிறார்; உயர்த்துகின்றார்;


7 ஆண்டவர் ஏழையாக்குகிறார்; செல்வராக்குகின்றார்;
தாழ்த்துகின்றார்; மேன்மைப்படுத்துகின்றார்!


8 புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்!
குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்!
உயர்குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்!
மாண்புறு அரியணையை அவர்களுக்கு உரிமையாக்குகின்றார்!
உலகின் அடித்தளங்கள் ஆண்டவருக்கு உரியவை!
அவற்றின் மேல் அவர் உலகை நிறுவினார்!


9 தம்மில் பற்றுக்கொண்டோர் காலடிகளை அவர் காப்பார்!
தீயோர், இருளுக்கு இரையாவார்!
ஏனெனில் ஆற்றலால் எவரும் வலியவர் ஆவதில்லை!


10 ஆண்டவரை எதிர்ப்போர் நொறுக்கப்படுவர்!
அவர் அவர்களுக்கு எதிராக வானில் இடிமுழங்கச் செய்வார்!
ஆண்டவர் உலகின் எல்லை வரை தீர்ப்பிடுவார்!
தம் அரசருக்கு வலிமை தருவார்!
தாம் திருப்பொழிவு செய்தவரின் ஆற்றலை உயர்த்துவார்". [1]


11 எல்கானா இராமாவிலுள்ள தம் வீட்டிற்குச் சென்றார். சிறுவனோ குரு ஏலியின் முன்பாக ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான்.

ஏலியின் மக்கள்

[தொகு]


12 அப்போது ஏலியின் புதல்வர்கள் கீழ்த்தரமானவராக இருந்தனர். அவர்கள் ஆண்டவர்மீது அக்கறை கொள்ளவில்லை.
13 அந்தக் குருக்களின் மக்களிடம் பின் வருமாறு நடந்து கொண்டனர்: யாராவது பலி செலுத்தினால், இறைச்சி வேகும்போதே கையில் மூன்று பல் கொக்கியுடன் குருவின் பணியாள் வருவான்.
14 அவன் அதைக் கொப்பறையிலோ, அண்டாவிலோ, சட்டியிலோ, பானையிலோ விடுவான். கொக்கியில் அகப்படுவதை எல்லாம் குருவுக்கென்று எடுத்துக்கொள்வான். சீலோவுக்கு வந்த இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அவர்கள் இவ்வாறு செய்தனர்.
15 அதோடு கொழுப்பு எரிவதற்கு முன்பே குருவின் பணியாள் பலி செலுத்தபவரிடம் வந்து, "குருவுக்குச் சமைக்க இறைச்சி கொடும். வெந்த இறைச்சியன்று, பச்சையானதே அவர் உம்மிடமிருந்து பெறுவார்" என்பான்.
16 யாராவது அவனிடம் "தற்போது கொழுப்பு எரியட்டும்; பிறகு நீ விரும்பியதை எடுத்துக்கொள்" என்று சொன்னால் அதற்கு அவன், "இல்லை. நீர் இப்பொழுதே கொடும். இல்லையேல், நான் வலிந்து எடுத்துக் கொள்வேன்" என்று சொல்வான்.
17 ஆகவே அந்த இளைஞரின் பாவம் ஆண்டவரின் திருமுன் மிகப் பெரியதாகவே இருந்தது. ஏனெனில் அவர்கள் ஆண்டவருக்குச் செலுத்தப்பட்ட படையல்களைத் துச்சமாகக் கருதினார்கள்.

சீலோவில் சாமுவேல்

[தொகு]


18 ஆண்டவர்முன் ஊழியம் செய்த சிறுவன் சாமுவேல் நார்ப்பட்டாலான ஏபோது அணிந்திருந்தான்,
19 சாமுவேலின் தாய் அவனுக்காக ஆண்டுதோறும் ஒரு சிற்றாடை தைத்து தம் கணவரோடு ஆண்டுப்பலி செலுத்தச் சென்றபோது அவனிடம் கொடுப்பார்.
20 எல்கானாவுக்கும் அவர் மனைவிக்கும் ஏலி ஆசி வழங்கி எல்கானாவை நோக்கி, "ஆண்டவர் இப்பெண் வழியாக, இவள் அவருக்கு நேர்ந்தளித்தவனுக்குப் பதிலாக, உனக்கு வழிமரபை அருள்வாராக" என்று கூறுவார். பிறகு அவர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்வர்.
21 ஆண்டவர் அன்னாவைக் கடைக்கண் நோக்கினார். அவர் கருவுற்று மூன்று ஆண்களையும் இரண்டு பெண்களையும் பெற்றெடுத்தார். சிறுவன் சாமுவேலோ ஆண்டவர் திருமுன் வளரலானான்.

ஏலியும் அவர்தம் புதல்வர்களும்

[தொகு]


22 ஏலி முதிர்ந்த வயதடைந்தார். தம் பிள்ளைகள் இஸ்யேலருக்கு எதிராகச் செய்த அனைத்தையும், சந்திப்புக் கூடார வாயிலில் ஊழியம் செய்து வந்த பெண்களோடு தகாத உறவு கொண்டிருந்ததையும் கேட்டறிந்தார்.
23 அவர் அவர்களை நோக்கிக் கூறியது: "நீங்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? இவ்வனைத்து மக்களிடமிருந்தும் உங்கள் தீய நடவடிக்கைகளைப் பற்றிக் கேள்விப்படுகிறேனே!
24 வேண்டாம் பிள்ளைகளே! ஆண்டவரின் மக்களிடையே பரவி இருப்பதாக நான் கேள்விப்படும் இச்செய்தி நல்லதல்ல.
25 ஒருவர் மனிதருக்கு எதிராகப் பாவம் செய்தால் வேறெவராவது கடவுளிடம் அவருக்காகப் பரிந்து பேசலாம். ஆனால் ஒருவர் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தால் அவருக்காகப் பரிந்து பேசுவோர் யார்?" இருப்பினும் அவர்கள் தங்கள் தந்தையின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் கொல்லப்பட வேண்டுமென்பது ஆண்டவரின் திருவுளமாக இருந்தது.
26 சிறுவன் சாமுவேல் வளர்ந்து ஆண்டவருக்கும் மனிதருக்கும் உகந்தவனாய் இருந்து வந்தான். [2]

ஏலியின் குடும்பத்திற்கு எதிரான இறைவாக்கு

[தொகு]


27 அப்போது இறையடியார் ஒருவர் ஏலியிடம் வந்து கூறியது: "ஆண்டவர், இவ்வாறு கூறுகிறார்: 'எகிப்து நாட்டில் பார்வோன் வீட்டாருக்கு உன் மூதாதை வீட்டார் அடிமைகளாக இருந்தபோது அவர்களுக்கு நான் என்னையே வெளிப்படுத்தினேன்.
28 என் பீடத்தில் திருப்பணி புரியவும், தூபம் காட்டவும், என்முன் ஏபோது அணியவும், அவர்களை நான் இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களினின்றும் தேர்ந்தெடுத்தேன். இஸ்ரயேல் மக்கள் எனக்குச் செலுத்திய நெருப்புப் பலிகள் அனைத்தையும் நான் உன் மூதாதை வீட்டாருக்கே கொடுத்தேன். [3]
29 பின் நானே கட்டளையிட்ட பலிகளையும், படையல்களையும் துச்சமாய் மதிப்பது ஏன்? உன் புதல்வர்களை எனக்கு மேலாக உயர்த்தி, என் மக்கள் இஸ்ரயேல் செலுத்தும் ஒவ்வொரு படையலிலும் சிறந்தவற்றை எடுத்துக்கொண்டு உங்களையே கொழுக்க வைப்பதேன்?'


30 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது: 'உன் வீடும் உன் மூதாதை வீடும் என்முன்பாக என்றென்றும் ஊழியம் புரிவீர்' என வாக்களித்திருந்தேன். ஆனால் தற்போது ஆண்டவர் கூறுவது: 'இவ்வாக்கு என்னைவிட்டு அகல்வதாக! ஏனெனில், என்னை மதிப்போரை நான் மதிப்பேன்; என்னை இகழ்வோர் இகழ்ச்சி அடைவர்.
31 இதோ! நாள்கள் நெருங்குகின்றன. அப்பொழுது, உன் ஆற்றலையும் உன் மூதாதை வீட்டாரின் ஆற்றலையும் நான் அழிப்பேன். உன் வீட்டில் ஒரு முதியவர்கூட இருக்கமாட்டார்.
32 அப்போது ஏனைய இஸ்ரயேலருக்கு அருளப்படும் அனைத்து நலனையும் நீ பொறாமையோடு மனம் வெதும்பிப் பார்ப்பாய். உனது வீட்டிலோ என்றென்றும் ஒரு முதியவர் கூட இருக்கமாட்டார்.
33 என் பீடப்பணியினின்று விலக்கி விடாமல் நான் வைத்துக் கொள்ளவிருக்கும் உங்களுள் ஒருவன் கண்கள் மங்கி, மனம் தளர்வடையுமட்டும் இருப்பான். ஆனால் உன் வீட்டில் வளரும் தலைமுறையினர் இளம் வயதில் சாவர்.
34 உன் இரு புதல்வராக ஒப்னிக்கும் பினகாசுக்கும் ஏற்படவிருப்பது உனக்கு ஓர் அடையாளமாக இருக்கட்டும். ஒரே நாளில் அவர்கள் இருவரும் மடிவர். [4]
35 என் திட்டத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்பச் செயல்படும் நம்பிக்கைக்குரிய ஒரு குருவை நான் எழுப்புவேன். அவனுக்கு ஒரு நிலையான வீட்டைக் கட்டி எழுப்புவேன். அவன் எந்நாளும் என்னிடம் திருப்பொழிவு பெறுபவனுக்குப் பணி செய்வான்.
36 எஞ்சியுள்ள உன் வீட்டார் அனைவரும் ஒரு வெள்ளிக் காசுக்கோ ஓர் அப்பத்துக்கோ அவனிடம் வந்து கையேந்தி நின்று 'தயைகூர்ந்து எனக்கு ஓர் அப்பம் கிடைக்குமாறு குருத்துவ ஊழியத்தில் என்னைச் சேர்த்தருளும்' என்பார்கள்.

குறிப்புகள்

[1] 2:1-10 = லூக் 1:46-55.
[2] 2:26 = லூக் 2:52.
[3] 2:28 = விப 28:1-4; லேவி 7:35-36.
[4] 2:34 = 1 சாமு 4:11.


(தொடர்ச்சி): சாமுவேல் - முதல் நூல்:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை