திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - முதல் நூல்/அதிகாரங்கள் 29 முதல் 31 வரை
1 சாமுவேல் (The First Book of Samuel)
[தொகு]அதிகாரங்கள் 29 முதல் 31 வரை
அதிகாரம் 29
[தொகு]பெலிஸ்தியர் தாவீதைப் புறக்கணித்தல்
[தொகு]
1 பெலிஸ்தியர் தங்கள் படைகளை எல்லாம் அபேக்கில் ஒன்றுதிரட்டினர்; இஸ்ரயேலர் இஸ்ரயேலில் உள்ள நீருற்றின் அருகே பாளையம் இறங்கினர்.
2 பெலிஸ்தியரின் தலைவர்கள் நூற்றுவர் படைகளுடனும், ஆயிரத்தவர் படைகளுடனும் அணிவகுத்துச் சென்றனர்; தாவீதும் அவருடைய ஆள்களும் ஆக்கிசோடு கடைக்கோடியில் சென்றனர்.
3 அப்பொழுது பெலிஸ்தியப் படைத்தலைவர்கள், "இந்த எபிரேயர் இங்கு என்ன செய்கின்றனர்?" என்று கேட்க, அதற்கு ஆக்கிசு அவர்களை நோக்கி, "இஸ்ரயேலின் அரசர் சவுலின் பணியாளராய் இருந்த இந்தத் தாவீது பல நாள்களாக, ஆண்டுகளாக என்னோடு இருக்கவில்லையா? அவர் என்னிடம் வந்ததுமுதல் இந்நாள் வரை அவரிடம் ஒரு குற்றமும் நான் காணவில்லை" என்றார்.
4 ஆனால் பெலிஸ்திய படைத்தலைவர்கள் அவர்மீது சினமுற்று அவரை நோக்கி, "நீர் குறித்துக் கொடுத்துள்ள இடத்திற்கே இந்தத் தாவீதைத் திருப்பி அனுப்பும்; நம்மோடு அவன் போருக்கு வரலாகாது. போரில் அவன் நமக்கு எதிராக எழலாம் அன்றோ? இவன் எதனால் தன் தலைவனோடு நல்லுறவு கொள்வான்? இங்கிருக்கும் ஆள்களின் தலைகளை வெட்டுவதால் அல்லவா?
5 'சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான்; ஆனால் தாவீது பதினாயிரம் பேரைக் கொன்றான்' என்று சொல்லிப் பெண்கள் தங்களுக்குள் பாடி ஆடியது இந்த தாவீதைக் குறித்து அன்றோ?" என்றனர். [*]
6 அப்பொழுது ஆக்கிசு தாவீதை அழைத்து அவரிடம், "வாழும் ஆண்டவர் மேல் ஆணை! நீர் நேர்மை மிக்கவர்; நீர் போருக்கு என்னோடு செல்வது சரியாகவே தோன்றுகிறது; ஏனெனில், நீர் என்னிடம் வந்தநாள் முதல் இன்று வரை உம்மிடம் ஒரு குற்றமும் நான் காணவில்லை. இருப்பினும் நீர் வருவதைத் தலைவர்கள் விரும்பவில்லை.
7 ஆதலால் இப்பொழுது திரும்பிச் செல்லும்; பெலிஸ்தியரின் தலைவர்கள் மனம் வருந்துமாறு எதையும் செய்யாதீர். சமாதானமாய்ச் செல்லும்" என்றார்.
8 ஆனால் தாவீது அவரிடம், "நான் செய்தது என்ன? நான் மன்னராகிய என் தலைவரின் எதிரிகளுடன் போரிடச் செல்லாதவாறு, நான் உம்மிடம் வந்த நாள் முதல் இன்று வரை, அடியேனிடம் நீர் கண்டது என்ன?" என்று கேட்டார்.
9 அதற்கு ஆக்கிசு தாவீதை நோக்கி, "கடவுளின் தூதரைப் போல் நீர் என் பார்வையில் குற்றமற்றவர் என்பது எனக்குத் தெரியும்; இருப்பினும், 'இவன் எங்களோடு போருக்கு வரலாகாது' என்று பெலிஸ்தியப் படைத்தலைவர்கள் சொல்கிறார்கள்.
10 ஆதலால் உம்முடன் பிரிந்துவந்த உம் தலைவர் சவுலின் பணியாளர்களுடன் நீர் அதிகாலையில் எழுந்து விடிவதற்குள் புறப்பட்டுச் செல்லும்" என்றார்.
11 ஆதலால் தாவீது தம் ஆள்களுடன் அதிகாலையில் புறப்பட்டுப் பெலிஸ்திய நாட்டிற்குத் திரும்பினார்; ஆனால் பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்குச் சென்றனர்.
- குறிப்பு
[*] 29:5 = 1 சாமு 18:7; 21:11.
அதிகாரம் 30
[தொகு]அமலேக்கியரோடு போர்
[தொகு]
1 மூன்றாம் நாள் தாவீதும் அவர்தம் ஆள்களும் சிக்லாகை அடைவதற்குள் அமலேக்கியர் நெகேபு, சிக்லாகு ஆகிய பகுதிகளைக் கொள்ளையடித்தனர்; சிக்லாவைத் தாக்கித் தீக்கிரையாக்கினர்.
2 அங்கிருந்த பெண்கள், மற்றும் சிறியோர் பெரியோர் அனைவரையும் சிறைப்பிடித்து, ஒருவரையும் கொன்றுவிடாமல், அவர்களைக் கூட்டிக் கொண்டு தங்கள் வழியே சென்றனர்.
3 தாவீதும் அவர்தம் ஆள்களும் நகருக்கு வந்த போது அது நெருப்பினால் அழிக்கப்பட்டிருப்பதையும், தங்கள் மனைவியர், புதல்வர் மற்றும் புதல்வியர் சிறைப்பட்டிருப்பதையும் கண்டார்கள்.
4 அப்பொழுது தாவீதும் அவருடன் வந்த மக்களும் வலிமை உள்ள மட்டும் ஓலமிட்டு அழுதனர்.
5 தாவீதின் இரு மனைவியராகிய இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமும், கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம் பெண்ணான அபிகாயிலும்கூடச் சிறைபிடிக்கப்பட்டிருந்தனர். [1]
6 தாவீது மிகவும் மன வருத்தமடைந்தார்; வீரர் அனைவரும் தங்கள் புதல்வர் புதல்வியர் பொருட்டு மிகவும் துயருற்றதால் அவரைக் கல்லால் எறிய வேண்டும் எனப் பேசிக் கொண்டனர். ஆனால் தாவீது கடவுளாகிய ஆண்டவரின் வலிமை பெற்றிருந்தார்.
7 பின்பு தாவீது, அகிமலக்கின் மகன் குரு அபியத்தாரிடம், "ஏபோதை என்னிடம் கொண்டுவாரும்!" என்று கூறவே, அபியத்தார் ஏபோதைத் தாவீதிடம் கொண்டு வந்தார். [2]
8 அப்பொழுது தாவீது, "நான் கொள்ளைக் கூட்டத்தாரைப் பின்தொடரட்டுமா? நான் வெற்றி கொள்வேனா?" என்று ஆண்டவரிடம் வினவினார். அதற்கு அவர், "பின்தொடர்! நீ வெற்றியடைவது உறுதி! சிறைப்பட்டோரை மீட்பதும் உறுதி!" என்று பதிலளித்தார்.
9 ஆதலால் தாவீதும் அவருடன் இருந்த அறுநூறு பேரும் புறப்பட்டு, பெசோர் என்ற ஓடைக்கு வந்தனர்; களைப்படைந்தோர் அங்கேயே தங்கிவிட்டனர்.
10 எனவே தாவீது நானூறு பேரோடு அவர்களைப் பின்தொடர்ந்தார்; களைப்படைந்த இருநூறு பேர் பெசோர் ஓடையைக் கடக்க இயலாமல், அங்கேயே தங்கிவிட்டனர்.
11 வயல் வெளியில் ஓர் எகிப்தியனை கண்டு, அவனைத் தாவீதிடம் அழைத்து வந்தனர்; உண்பதற்கு அப்பமும் குடிப்பதற்குத் தண்ணீரும் கொடுத்தனர்.
12 மேலும் அவர்கள் அத்திப்பழ அடையின் ஒருத் துண்டையும், வற்றலான திராட்சைப்பழ அடைகள் இரண்டையும் அவனுக்கு கொடுத்தனர்; அவன் இவற்றைச் சாப்பிட்டபின் புத்துயிர் பெற்றான்; ஏனெனில் அவன் இரவு பகல் மூன்று நாளாய் அப்பம் உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தான்.
13 தாவீது அவனை நோக்கி, "நீ யாரைச் சேர்ந்தவன்? எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டார். அதற்கு அவன், "நான் ஒர் எகிப்திய இளைஞன்; ஓர் அமலேக்கிய மனிதரின் பணியாள்; நான் நோயுற்றதால் மூன்று நாள்களுக்கு முன் என் தலைவர் என்னை விட்டுவிட்டுச் சென்றார்.
14 நாங்கள் கிரேத்தியரின் தென்பகுதியையும், யூதாவின் தென்பகுதியையும் காலேபின் தென்பகுதியையும் கொள்ளையடித்து, சிக்லாவைத் தீக்கிரையாக்கியிருந்தோம்" என்று பதிலளித்தான்.
15 தாவீது அவனிடம் "அக்கொள்ளைக் கூட்டத்தாரிடம் என்னை அழைத்துச் செல்வாயா?" என்று கேட்க அவன் "என்னைக் கொல்லவோ அல்லது என் தலைவனிடம் என்னை ஒப்புவிக்கவோ மாட்டீர் என்று ஆண்டவர் பெயரால் என்னிடம் ஆணையிட்டுக் கூறுங்கள்; அப்பொழுது நான் அக்கூட்டத்தாரிடம் உங்களை அழைத்துச் செல்வேன்" என்றான்.
16 அவ்வாறே அவன் தாவீதை அழைத்துச் சென்றபோது, இதோ, தாங்கள் பெலிஸ்தியர் நாட்டினின்றும், யூதா நாட்டினின்றும் கொண்டு வந்த மாபெரும் கொள்ளைப் பொருள்களை முன்னிட்டு, அவர்கள் வெளியில் கும்பல் கும்பலாய் உண்டு குடித்து, நடனமாடிக் கொண்டிருந்தனர்.
17 தாவீது அன்று மாலை தொடங்கி மறுநாள் மாலை வரை அவர்களோடு போரிட்டார்; ஒட்டகங்கள்மீது ஏறி ஓடிய நானூறு வீரர்களைத் தவிர, அவர்களுள் ஒருவனும் தப்பவில்லை.
18 அமலேக்கியர் கொண்டு சென்ற எல்லாவற்றையும் தாவீது மீட்டதுடன், தம் மனைவியர் இருவரையும் விடுவித்தார்.
19 அவர்கள் சிறைப்பிடித்தவருள் சிறுவரோ முதியவரோ, புதல்வரோ, புதல்வியரோ எவரும் விடுபடாமல் அவர் மீட்டார். கொள்ளைப் பொருள்களில் அனைத்தையும் தாவீது மீட்டுக் கொண்டு வந்தார்.
20 ஆடுமாடுகள் எல்லாவற்றையும் தாவீது கைப்பற்றினார்; அந்தக் கால்நடைகளைத் தாவீதுக்குமுன் ஓட்டிவந்த மக்கள், "இது தாவீதின் கொள்ளைப் பொருள்" என்றனர்.
21 பின்பு களைப்பு மிகுதியினால் தாவீதைப் பின்தொடராமல் பெசோர் ஓடை அருகே தங்கிவிட்ட இருநூறு பேரிடம் தாவீது வந்தார்; அப்போது அவர்கள் தாவீதையும் அவரோடு இருந்த மக்களையும் சந்திக்க எதிர் கொண்டு சென்றனர்; தாவீது அம்மக்களை நெருங்கிபோது அவர்களுக்கு நல்வாழ்த்துக் கூறினார்.
22 ஆனால் தாவீதோடு சென்றவர்களில் இருந்த தீயவர் மற்றும் கயவர் எல்லாரும், "அவர்கள் நம்முடன் வராததால் நாம் மீட்டுக் கொண்டு வந்த கொள்ளைப் பொருள்களில் ஒன்றும் அளிக்க மாட்டோம்; அவர்களுள் ஒவ்வொருவரும் தன் மனைவியையும் பிள்ளைகளையும் மட்டும் அழைத்துச் செல்லட்டும் "என்றனர்.
23 அதற்கு தாவீது, "என் சகோதரர்களே, ஆண்டவர் நமக்கு அளித்துள்ளவற்றிலிருந்து இப்படியெல்லாம் நீங்கள் செய்யக்கூடாது; அவரே நம்மைக் காப்பாற்றி, நமக்கெதிராக வந்த கொள்ளைக் கூட்டத்தினரை நம் கையில் ஒப்படைத்தார்.
24 இதன் பொருட்டு நீங்கள் சொல்வதை யார் கேட்பார்கள்? ஏனெனில் போரிடச் செல்வோரின் பங்கு எவ்வளவோ அதே அளவுதான் நான் போர் பொருள்களைக் காத்தவரின் பங்கும் இருக்கும்; இருவரின் பங்கும் சமமாகவே இருக்கும்" என்றார்.
25 இந்த முறையை, இன்று வரை உள்ளதுபோல், இஸ்ரயேலர் பின்பற்றும்படி தாவீது நியமமும் கட்டளையுமாக ஏற்படுத்தினார்.
26 தாவீது சிக்லாகுக்கு வந்தபோது கொள்ளைப்பொருள்களின் ஒரு பகுதியை யூதாவின் பெரியோர்களான தம் நண்பர்களுக்கு அனுப்பிவைத்துக் கூறியது: "இதோஆண்டவரின் எதிரிகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களுள் ஒரு பகுதியை உங்களுக்கு என் அன்பளிப்பாய் அனுப்புகிறேன்" என்றார்.
27 பின்வரும் தம் நண்பர்களுக்கு அவர் அனுப்பினார்: பெத்தேல், இராமோத்தின் தென்பகுதி, யாத்திர் ஆகியவற்றில் இருந்தோர்;
28 அரோயேர், சிப்மோத்து, எசுத்தமோகு ஆகியவற்றில் இருந்தோர்;
29 இராக்கால், எரகுமவேலரின் நகர்கள், கேனியரின் நகர்கள் ஆகியவற்றில் இருந்தோர்;
30 ஓர்மா, பொராசான், அத்தாகு ஆகியவற்றில் இருந்தோர்;
31 எபிரோனில் தாவீதும் அவர் தம் ஆள்களும் நடமாடிய எல்லா இடங்களில் இருந்தோர்.
- குறிப்புகள்
[1] 30:5 = 1 சாமு 25:42-43.
[2] 30:7 = 1 சாமு 22:22-25.
அதிகாரம் 31
[தொகு]சவுலின் இறப்பு
[தொகு](1குறி 10:1-12)
1 பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டனர்; பெலிஸ்தியருக்கு முன் இஸ்ரயேலர் புறமுதுகிட்டு ஓடினர்; பலர் கில்போவா மலையில் வெட்டுண்டு வீழ்ந்ததனர்.
2 பெலிஸ்தியர் சவுலையும் அவர் புதல்வர்களையும் பின் தொடர்ந்து, அவர்தம் புதல்வர்களான யோனத்தான், அபினதாபு, மல்கிசுவா ஆகியோரை வெட்டிக் கொன்றனர்.
3 சவுல் இருந்த இடத்தில் போர் மிகவும் வலுத்தது; வில்வீரர் அவர் மீது குறி வைத்துத் தாக்க, அவரும் அந்த வில்வீரர்களால் பெரிதும் காயமுற்றார்.
4 அப்பொழுது சவுல் தம் படைக்கலன் தாங்குவோனை நோக்கி, "இந்த விருத்தசேதனமற்றோர் என்னைக் குத்திக் கொன்று எனக்கு அவமானத்தை வருவிக்காவண்ணம் நீ உன் வாளை உருவி என்னைக் குத்திக் கொன்று விடு" என்றார். ஆனால் அவருடைய படைக்கலன் தாங்குவோன் மிகவும் அஞ்சியதால் அதற்கு அவன் இசையவில்லை. ஆதலால் சவுல் தம் வாளை எடுத்து, தாமே அதன்மீது வீழ்ந்து மடிந்தார்.
5 சவுல் இறந்துவிட்டதைக் கண்ட அவருடைய படைக்கலன் தாங்குவோனும் தன் வாள்மீது விழுந்து அவரோடு மடிந்தான்.
6 இவ்வாறு சவுலும், அவரின் மூன்று புதல்வரும், அவருடைய படைக்கலன் தாங்குவோனும் மற்றும் அவர் ஆள்கள் எல்லாரும் அதே நாளில் ஒன்றாக இறந்தனர்.
7 இஸ்ரயேலர் புறமுதுகிட்டு ஓடிவிட்டனர் என்றும் சவுலும் அவர்தம் புதல்வர்களும் மடிந்தனர் என்றும் பள்ளத்தாக்குக்கு அப்பாலும் யோர்தானுக்குக் கிழக்கேயும் இருந்த இஸ்ரயேலர் கண்டபோது, அவர்கள் தங்கள் நகர்களை விட்டுவிட்டு ஓடிவிட்டனர்; அதனால் பெலிஸ்தியர் வந்து அங்கே குடியேறினர்.
8 வெட்டுண்டவர்களைக் கொள்ளையிடப் பெலிஸ்தியர் மறுநாள் சென்ற போது, சவுலும் அவரின் மூன்று புதல்வர்களும் கில்போவா மலைமேல் இறந்துகிடப்பதை அவர்கள் கண்டார்கள்.
9 அவர்கள் சவுலின் தலையைக் கொய்து அவர் படைக்கலன்களை எடுத்துக் கொண்டபின், தங்கள் சிலைகளின் கோவில்களிலும் மக்களிடையிலும் இந்தச் செய்தியை அறிவிக்கும் பொருட்டுப் பெலிஸ்திய நாடெங்கும் தூதர்களை அனுப்பினர்.
10 அவர்கள் அவர்தம் படைகலன்களை அஸ்தரோத்துக் கோவிலில் வைத்தனர்; அவரது சடலத்தைப் பெத்சான் சுவரில் தொங்கவிட்டனர்.
11 பெலிஸ்தியர் சவுலக்குச் செய்ததைக் கிலயாது நாட்டு யாபேசு நகர மக்கள் கேள்விப்பட்டபோது,
12 அவர்களுள் வலிமை மிகு வீரர்கள் அனைவரும் இரவில் புறப்பட்டுச் சென்று, சவுலின் சடலத்தையும், அவர்தம் புதல்வர்களின் சடலங்களையும் பெத்சான் சுவரிலிருந்து இறக்கி யோபேசுக்குக் கொண்டுவந்து, அங்கே அவற்றை எரித்தனர்.
13 பின்பு அவர்களுடைய எலும்புகளை எடுத்து யோபேசில் தமரிஸ்கு மரத்தின் அடியில் புதைத்துவிட்டு, ஏழு நாள்கள் நோன்பு இருந்தனர்.
(சாமுவேல் - முதல் நூல் நிறைவுற்றது)
(தொடர்ச்சி): சாமுவேல் - இரண்டாம் நூல்:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை