திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 103 முதல் 104 வரை
திருப்பாடல்கள்
[தொகு]நான்காம் பகுதி (90-106)
திருப்பாடல்கள் 103 முதல் 104 வரை
திருப்பாடல் 103
[தொகு]கடவுளின் அன்பு
[தொகு](தாவீதுக்கு உரியது)
1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே!
3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்;
உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்;
அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும்
மணிமுடியாகச் சூட்டுகின்றார்.
5 அவர் உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார்;
உன் இளமை கழுகின் இளமையெனப் புதிதாய்ப் பொலிவுறும்.
6 ஆண்டவரின் செயல்கள் நீதியானவை;
ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர்
உரிமைகளை வழங்குகின்றார்.
7 அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்;
அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார்.
8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்;
நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். [*]
9 அவர் எப்பொழுதும் கடிந்து கொள்பவரல்லர்;
என்றென்றும் சினங்கொள்பவரல்லர்.
10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை;
நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை.
11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு
மண்ணினின்று விண்ணளவுபோன்று உயர்ந்தது.
12 மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ,
அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை
நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார்.
13 தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல்
ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார்.
14 அவர் நமது உருவத்தை அறிவார்;
நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது.
15 மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது;
வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள்.
16 அதன்மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது;
அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது.
17 ஆண்டவரது பேரன்போ
அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்;
அவரது நீதியோ
அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள்மீதும் இருக்கும்.
18 அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து
அவரது கட்டளையின்படி நடப்பதில்
கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும்.
19 ஆண்டவர் தமது அரியணையை
விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்;
அவரது அரசு அனைத்தின்மீதும் பரவியுள்ளது.
20 அவர்தம் சொற்கேட்டு நடக்கும் வலிமைமிக்கோரே!
ஆண்டவரின் தூதர்களே! அவரைப் போற்றுங்கள்.
21 ஆண்டவரின் படைகளே!
அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே!
அவரைப் போற்றுங்கள்.
22 ஆண்டவரின் ஆட்சித் தலத்தில் வாழும்
அனைத்துப் படைப்புகளே!
ஆண்டவரைப் போற்றுங்கள்!
என்னுயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
- குறிப்பு
[*] 103:8 = யாக் 5:11.
திருப்பாடல் 104
[தொகு]படைப்பின் மேன்மை
[தொகு]
1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
என் கடவுளாகிய ஆண்டவரே!
நீர் எத்துணை மேன்மைமிக்கவர்!
நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்.
2 பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்;
வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர்;
3 நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின்
அடித்தளத்தை அமைத்துள்ளவர்;
கார் முகில்களைத் தேராகக் கொண்டுள்ளவர்;
காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றனவர்!
4 காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவர்;
தீப்பிழம்புகளை உம் பணியாளராய்க் கொண்டுள்ளவர். [1]
5 நீவீர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்;
அது என்றென்றும் அசைவுறாது.
6 அதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது;
மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள் நின்றது;
7 நீவீர் கண்டிக்கவே அது விலகி ஓடியது;
நீவீர் இடியென முழங்க, அது திகைப்புற்று ஓடியது;
8 அது மலைகள்மேல் ஏறி,
பள்ளத்தாக்குகளில் இறங்கி,
அதற்கெனக் குறித்த இடத்தை அடைந்தது;
9 அது மீறிச்செல்லாதவாறு அதற்கு எல்லை வகுத்தீர்;
பூவுலகை அது மீண்டும் மூடிவிடாதபடி செய்தீர்;
10 பள்ளத்தாக்குகளில் நீருற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்;
அவை மலைகளிடையே பாய்ந்தோடும்;
11 அவை காட்டு விலங்குகள் அனைத்திற்கும் குடிக்கத் தரும்;
காட்டுக் கழுதைகள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்;
12 நீருற்றுகளின் அருகில்
வானத்துப் பறவைகள் கூடுகட்டிக்கொள்கின்றன;
அவை மரக்கிளைகளினின்று இன்னிசை இசைக்கின்றன;
13 உம் மேலறைகளினின்று மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர்;
உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது.
14 கால்நடைகளுக்கெனப் புல்லை முளைக்கச் செய்கின்றீர்;
மானிடருக்கெனப் பயிர்வகைகளை வளரச் செய்கின்றர்;
இதனால் பூவுலகினின்று அவர்களுக்கு
உணவு கிடைக்கச் செய்கின்றீர்;
15 மனித உளத்திற்கு மகிழ்ச்சியூட்டத் திராட்சை இரசமும்,
முகத்திற்குக் களையூட்ட எண்ணெயும்
மனித உள்ளத்திற்குப் புத்துணர்வூட்ட அப்பமும் அளிக்கின்றீர்.
16 ஆண்டவரின் மரங்களுக்கு -
லெபனோனில் அவர் நட்ட கேதுரு மரங்களுக்கு -
நிறைய நீர் கிடைக்கின்றது.
17 அங்கே பறவைகள் கூடுகள் கட்டுகின்றன;
தேவதாரு மரங்களில் கொக்குகள் குடியிருக்கின்றன.
18 உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்குத் தங்குமிடமாகும்;
கற்பாறைகள் குழிமுயல்களுக்குப் புகலிடமாகும்.
19 காலங்களைக் கணிக்க நிலவை நீர் அமைத்தீர்;
ஆதவன் தான் மறையும் நேரத்தை அறிவான்.
20 இருளை நீர் தோன்றச் செய்யவே, இரவு வருகின்றது;
அப்போது, காட்டு விலங்குகள் அனைத்தும் நடமாடும்.
21 இளஞ்சிங்கங்கள் இரைக்காகக் கர்ச்சிக்கின்றன;
அவை இறைவனிடமிருந்து தங்கள் உணவைத் தேடுகின்றன.
22 கதிரவன் எழவே அவை திரும்பிச் சென்று
தம் குகைகளுக்குள் படுத்துக்கொள்கின்றன.
23 அப்பொழுது மானிடர் வேலைக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்;
அவர்கள் மாலைவரை உழைக்கின்றனர்.
24 ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை!
நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்!
பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.
25 இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்;
அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக
வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன.
26 அங்கே கப்பல்கள் செல்கின்றன;
அங்கே துள்ளிவிளையாட லிவியத்தானைப் படைத்தீர்! [2]
27 தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று
இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன.
28 நீர் கொடுக்க, அவை சேகரித்துக் கொள்கின்றன;
நீர் உமது கையைத் திறக்க,
அவை நலன்களால் நிறைவுறுகின்றன.
29 நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகிலடையும்;
நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால்,
அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்.
30 உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;
மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
31 ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக!
அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக!
32 மண்ணுலகின்மீது அவர் தம் பார்வையைத் திருப்ப,
அது நடுங்கும்;
மலைகளை அவர் தொட, அவை புகை கக்கும்.
33 நான் வாழும் நாளெல்லாம்
ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்;
என்னுயிர் உள்ளவரையிலும்
என் கடவுளுக்குப் புகழ் சாற்றிடுவேன்.
34 என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக!
நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.
35 பாவிகள் பூவுலகினின்று ஒழிந்து போவார்களாக!
தீயோர்கள் இனி இல்லாது போவார்களாக!
என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு!
அல்லேலூயா!
- குறிப்புகள்
[1] 104:4 = எபி 1:7.
[2] 104:26 = யோபு 41:1; திபா 74:14; எசா 27:1.
(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 105 முதல் 106 வரை