உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 113 முதல் 114 வரை

விக்கிமூலம் இலிருந்து
"நான் அகமகிழ்ந்தேன்" (திருப்பாடல்கள் 122:1). எருசலேம் கட்டப்படுதல். மூலம்: "தெ பெர்ரி திருப்பாடல்கள் ஓவிய நூல்". 15ஆம் நூற்றாண்டு. பிரான்சு.

திருப்பாடல்கள்

[தொகு]

ஐந்தாம் பகுதி (107-150)
திருப்பாடல்கள் 113 முதல் 114 வரை

திருப்பாடல் 113

[தொகு]

ஆண்டவரின் கருணை

[தொகு]


1 அல்லேலூயா!
ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள்.
அவரது பெயரைப் போற்றுங்கள்.


2 ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக!
இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக!


3 கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை
ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக!


4 மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்;
வானங்களையும்விட உயர்ந்து அவரது மாட்சி.


5 நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்?
அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்?


6 அவர் வானத்தையும் வையகத்தையும்
குனிந்து பார்க்கின்றார்;


7 ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்;
வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்;


8 உயர்குடி மக்களிடையே -
தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே -
அவர்களை அமரச் செய்கின்றார்.


9 மலடியை அவள் இல்லத்தில் வாழ வைக்கின்றார்;
தாய்மைப்பேறு பெற்று மகிழுமாறு அவளுக்கு அருள்கின்றார்.
அல்லேலூயா!


திருப்பாடல் 114

[தொகு]

பாஸ்காப் பாடல்

[தொகு]


1 எகிப்து நாட்டைவிட்டு இஸ்ரயேலர் வெளியேறியபொழுது,
வேற்று மொழி பேசிய மக்களை விட்டு
யாக்கோபின் குடும்பம் புறப்பட்டபொழுது,[1]


2 யூதா அவருக்குத் தூயகம் ஆயிற்று;
இஸ்ரயேல் அவரது ஆட்சித்தளம் ஆனது.


3 செங்கடல் கண்டது; ஓட்டம் பிடித்தது;
யோர்தான் பின்னோக்கிச் சென்றது.[2]


4 மலைகள் செம்மறிக் கிடாய்கள் போலும்
குன்றுகள் ஆட்டுக்குட்டிகள் போலும் துள்ளிக் குதித்தன.


5 கடலே! நீ விலகி ஓடும்படி உனக்கு நேர்ந்தது என்ன?
யோர்தானே! நீ பின்னோக்கிச் சென்றது ஏன்?


6 மலைகளே! நீங்கள் செம்மறிக் கிடாய்கள்போல் குதித்தது ஏன்?
குன்றுகளே! நீங்கள் ஆட்டுக் குட்டிகள் போல் துள்ளியது ஏன்?


7 பூவுலகே! தலைவர் முன்னிலையில் நடுநடுங்கு!
யாக்கோபின் கடவுள் முன்னிலையில் நடுக்கமுறு!


8 அவர் பாறையைத் தண்ணீர்த் தடாகம் ஆக்குகின்றார்;
கற்பாறையை வற்றாத நீர்ச்சுனை ஆக்குகின்றார்.[3]


குறிப்புகள்

[1] 114:1 = விப 12:51.
[2] 114:3 = விப 14:21; யோசு 3:16.
[3] 114:8 = விப 17:1-7; எண் 20:13.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 115 முதல் 116 வரை