திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 119 முதல் 120 வரை

விக்கிமூலம் இலிருந்து


"என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!" (திருப்பாடல்கள் 119:105)

திருப்பாடல்கள்[தொகு]

ஐந்தாம் பகுதி (107-150)
திருப்பாடல்கள் 119 முதல் 120 வரை

திருப்பாடல் 119[தொகு]

ஆண்டவரின் திருச்சட்டம்[தொகு]


1 [*] மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்;
ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.


2 அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்;
முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர்.


3 அநீதி செய்யாமல் அவரது வழியில் நடப்போர் பேறுபெற்றோர்.


4 ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்;
அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்.


5 உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க,
என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்!


6 உம் கட்டளைகளை எல்லாம் கருத்தில் கொண்டிருந்தால்,
இகழ்ச்சியுறேன்;


7 உம் நீதிநெறிகளை நான் கற்றுக்கொண்டு
நேரிய உள்ளத்தோடு உம்மைப் புகழ்வேன்.


8 உம் விதிமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்;
என்னை ஒருபோதும் கைவிட்டுவிடாதேயும்.

திருச்சட்டப்படி நடத்தல்[தொகு]


9 இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க்
காத்துக் கொள்வது எவ்வாறு?
உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ?


10 முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்;
உம் கட்டளைகளைவிட்டு என்னை விலகவிடாதேயும்.


11 உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு
உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.


12 ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்;
எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்.


13 உம் வாயினின்று வரும் நீதித்தீர்ப்புகளை எல்லாம்
என் இதழால் எடுத்துரைக்கின்றேன்.


14 பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவதுபோல்,
நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.


15 உம் நியமங்களைக் குறித்து நான் சிந்திப்பேன்;
உம் நெறிகளில் என் சிந்தையைச் செலுத்துவேன்;


16 உம் விதிமுறைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்;
உம் வாக்குகளை நான் மறக்கமாட்டேன்.

திருச்சட்டம் தரும் இன்பம்[தொகு]


17 உம் அடியானுக்கு நன்மை செய்யும்;
அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன்.


18 உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை
நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும்.


19 இவ்வுலகில் நான் அன்னியனாய் உள்ளேன்;
உம் கட்டளைகளை என்னிடமிருந்து மறைக்காதேயும்.


20 எந்நேரமும் உம் நீதிநெறிகளை முன்னிட்டு
என் உள்ளம் ஏங்கி உருகுகின்றது.


21 செருக்குற்றோரைக் கண்டிக்கின்றீர்;
உம் கட்டளைகளைப் புறக்கணிப்போர் சபிக்கப்பட்டவரே.


22 பழிச்சொல்லையும், இழிவையும் என்னிடமிருந்து அகற்றியருளும்;
ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளை நான் கடைப்பிடித்துள்ளேன்.


23 தலைவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும்,
உம் ஊழியன் உம்முடைய விதிமுறைகளைக் குறித்தே சிந்திக்கின்றேன்.


24 ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன;
அவையே எனக்கு அறிவுரையாளர்.

திருச்சட்டத்தின்படி நடக்க உறுதிகொள்ளல்[தொகு]


25 நான் புழுதியில் வீழ்ந்து கிடக்கின்றேன்;
உம் வாக்கின்படி எனக்கு வாழ்வளித்தருளும்.


26 என் வழிமுறைகளை உமக்கு எடுத்துச் சொன்னேன்;
நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்;
உம் விதிமுறைகளை எனக்குக் கற்றுத்தாரும்.


27 உம் நியமங்கள் காட்டும் வழியை
என்றும் உணர்த்தியருளும்;
உம் வியத்தகு செயல்கள்பற்றி
நான் சிந்தனை செய்வேன்.


28 துயரத்தால் என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது;
உமது வாக்கின்படி என்னைத் திடப்படுத்தும்.


29 பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்;
உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும்.


30 உண்மையின் பாதையை நான் தேர்ந்துகோண்டேன்;
உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன்.


31 உம் ஒழுங்குமுறைகளை நான்
உறுதியாய்ப் பற்றிக்கொண்டுள்ளேன்;
ஆண்டவரே! என்னை வெட்கமடையவிடாதேயும்.


32 நீர் என் அறிவை விரிவாக்கும்போது,
உம் கட்டளைகள் காட்டும் வழியில் நான் விரைந்து செல்வேன்.

நுண்ணறிவுக்காக வேண்டல்[தொகு]


33 ஆண்டவரே!
உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்;
நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன்.


34 உம் திருச்சட்டத்தின்படி நடக்க
எனக்கு மெய்யுணர்வுதாரும்.
அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன்.


35 உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்;
ஏனெனில், அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.


36 உம் ஒழுங்குமுறைகளில்
என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும்;
தன்னலத்தை நாடவிடாதேயும்.


37 வீணானவற்றை நான் பாராதபடி
என் கண்களைத் திருப்பிவிடும்;
உம் வழிகளின் வாயிலாய் எனக்கு வாழ்வளித்தருளும்.


38 உமக்கு அஞ்சி நடப்போர்க்கு அளித்த வாக்குறுதியை
உம் ஊழியனுக்கும் நிறைவேற்றியருளும்.


39 என்னை அச்சுறுத்தும் பழிச்சொல் எதற்கும்
என்னை உள்ளாக்காதேயும்;
ஏனெனில், உம் நீதிநெறிகள் நலமார்ந்தவை.


40 உம் நியமங்களைப் பெரிதும் விரும்பினேன்;
நீர் நீதியுள்ளவராய் இருப்பதால் எனக்கு வாழ்வளியும்.

திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை[தொகு]


41 ஆண்டவரே!
உமது பேரன்பு எனக்குக் கிடைக்கச் செய்யும்;
உமது வாக்குறுதியின்படி நீர் என்னை மீட்பீராக!


42 அப்போது, என்னைப் பழிப்போர்க்கு நான் ஏற்ற பதில் கூறுவேன்;
ஏனெனில், உமது வாக்கில் எனக்கு நம்பிக்கை உண்டு.


43 என் வாயினின்று உண்மையின் சொற்கள் நீங்கவிடாதேயும்;
ஏனெனில், உம் நீதிநெறிகள்மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.


44 உமது திருச்சட்டத்தை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்;
என்றென்றும் எக்காலமும் அதைப் பின்பற்றுவேன்.


45 உம் நியமங்களை நான் நாடியுள்ளதால்
பரந்த பாதையில் தடையின்றி நான் நடப்பேன்.


46 உம் ஒழுங்குமுறைகளைப் பற்றி
நான் அரசர் முன்னிலையிலும் பேசுவேன்;
வெட்கமுறமாட்டேன்.


47 உம் கட்டளைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்;
அவற்றைப் பெரிதும் விரும்புகின்றேன்.


48 நான் விரும்பும் உம் கட்டளைகளை நோக்கி
என் கைகளை உயர்த்துகின்றேன்;
உம் விதிமுறைகளைப் பற்றி நான் சிந்திப்பேன்.

திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை[தொகு]


49 உம் ஊழியனுக்கு நீர் தந்த வாக்கை நினைவுகூரும்;
அதனால் எனக்கு நம்பிக்கை அளித்தீர்.


50 உம் வாக்கு என் துன்பத்தில் எனக்கு ஆறுதல் அளிக்கின்றது;
ஏனெனில், அது எனக்கு வாழ்வளிக்கின்றது.


51 செருக்குற்றோர் என்னை அளவின்றி ஏளனம் செய்கின்றனர்;
ஆனால், உம் திருச்சட்டத்தினின்று நான் விலகவில்லை.


52 ஆண்டவரே! முற்காலத்தில் நீர் அளித்த நீதித் தீர்ப்புகளை
நான் நினைவு கூர்கின்றேன்;
அவற்றால் நான் ஆறுதல் அடைகின்றேன்.


53 உம் திருச்சட்டத்தை கைவிடும் தீயோரைப் பார்க்கும்போது
சீற்றம் என்னைக் கவ்விக்கொள்கின்றது.


54 என் வாழ்க்கைப் பயணத்தில்
உம் விதிமுறைகள் எனக்குப் புகழ்ப் பாக்களாய் உள்ளன.


55 ஆண்டவரே!
இரவிலும் நான் உமது பெயரை நினைவு கூர்கின்றேன்;
உமது திருச்சட்டத்தை கடைப்பிடிப்பேன்.


56 நான் இந்நிலையை அடைந்துள்ளது
உமது நியமங்களைக் கடைப்பிடிப்பதால்தான்.

திருச்சட்டத்தின் மீது ஆர்வம்[தொகு]


57 ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு;
உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக நான் வாக்களித்துள்ளேன்.


58 என் முழுமனத்தோடு உம் திருமுகத்தை நாடினேன்;
உமது வாக்குறுதிக்கேற்ப எனக்கு அருள்கூரும்.


59 நான் நடக்கும் வழிகளை நன்கு ஆய்ந்தேன்;
உம் ஒழுங்குமுறைகளின் பக்கமாய் அடியெடுத்து வைத்தேன்.


60 உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்க நான் விரைகின்றேன்;
காலம் தாழ்த்தவில்லை.


61 தீயோரின் கட்டுகள் என்னை இறுக்குகின்றன;
ஆயினும், உம் திருச்சட்டத்தை நான் மறவேன்.


62 நீதிநிறை உம் தீர்ப்புகளைக் குறித்து,
உம்மைப் புகழ்ந்துபாட நள்ளிரவில் எழுகின்றேன்.


63 உமக்கு அஞ்சி நடப்போர் யாவர்க்கும்
உம் நியமங்களைக் கடைப்பிடிப்போர்க்கும் நான் நண்பன்.


64 ஆண்டவரே! உமது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது;
உம் விதிமுறைகளை எனக்குக் கற்பியும்!

திருச்சட்டத்தின் பயன்[தொகு]


65 ஆண்டவரே! உமது வாக்குறுதிக்கேற்ப,
உம் ஊழியனுக்கு நன்மையை செய்துள்ளீர்!


66 நன்மதியையும் அறிவாற்றலையும் எனக்குப் புகட்டும்;
ஏனெனில், உம் கட்டளைகள் மீது நம்பிக்கை வைக்கின்றேன்.


67 நீர் என்னைத் தண்டிக்குமுன்பு நான் தவறிழைத்தேன்;
ஆனால், இப்போது உம் வாக்கைக் கடைப்பிடிக்கின்றேன்.


68 நீர் நல்லவர்! நன்மையே செய்பவர்;
எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும்.


69 செருக்குற்றோர் என்னைப்பற்றிப் பொய்களைப் புனைகின்றார்கள்;
நானோ முழுமனத்துடன் உம் நியமங்களைக் கடைப்பிடிக்கின்றேன்.


70 அவர்கள் இதயம் கொழுப்பேறிப் போயிற்று.
நானோ உம் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுகின்றேன்.


71 எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே;
அதனால், உம் விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன்.


72 நீர் திருவாய் மலர்ந்த சட்டம்,
ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளைவிட
எனக்கு மேலானது.

திருச்சட்டத்தின் ஒழுங்குமுறை[தொகு]


73 உம் கைகளே என்னை உருவாக்கின; என்னை வடிவமைத்தன;
உம் கட்டளைகளை நான் கற்றுக்கொள்ள எனக்கு மெய்யுணர்வு தாரும்.


74 உமக்கு அஞ்சுவோர், உமது வாக்கை நான் நம்பினதற்காக
என்னைக் கண்டு மகிழ்ச்சியுறுவர்.


75 ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகள் நேரியவை என அறிவேன்;
நீர் என்னைச் சிறுமைப்படுத்தியது சரியே.


76 எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்;
உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ!


77 நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்;
ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம்.


78 செருக்குற்றோர் வெட்கிப்போவார்களாக!
அவர்கள் பொய்யுரை கூறி என்னை ஒடுக்கினார்கள்;
நானோ உம் நியமங்கள்பற்றிச் சிந்தனை செய்வேன்.


79 உமக்கு அஞ்சிநடப்போர்,
உம் ஒழுங்குமுறைகளைப் பற்றிய அறிவுடையோர் என் பக்கம் திரும்புவராக!


80 உம் நியமங்களைப் பொறுத்தமட்டில்
என் உள்ளம் மாசற்றதாய் இருப்பதாக!
அதனால், நான் வெட்கமுறேன்.

விடுதலைக்காக மன்றாடல்[தொகு]


81 நீர் அளிக்கும் மீட்புக்காக என் நெஞ்சம் ஏங்குகின்றது;
உம் வாக்கை நான் நம்புகின்றேன்.


82 உம் வாக்குறுதியை எதிர்நோக்கி என் கண்கள் பூத்துப்போயின;
'எப்போது எனக்கு ஆறுதல் தருவீர்?' என்று வினவினேன்.


83 புகைபடிந்த தோற்பைபோல் ஆனேன்;
உம் விதிமுறைகளை நான் மறக்கவில்லை.


84 உம் ஊழியன் எத்தனை நாள் காத்திருக்கவேண்டும்?
என்னைக் கொடுமைப்படுத்துவோரை என்று தண்டிப்பீர்?


85 உமது திருச்சட்டப்படி நடக்காமல்,
செருக்குற்றோர் எனக்குக் குழிவெட்டினர்;


86 உம் கட்டளைகள் எல்லாம் நம்பத்தக்கவை;
அவர்கள் பொய்யுரை கூறி என்னை ஒடுக்குகின்றனர்;
எனக்குத் துணை செய்யும்.


87 அவர்கள் பூவுலகினின்று என் வாழ்வை ஏறக்குறைய அழித்துவிட்டனர்;
நானோ உம் நியமங்களைக் கைவிடவில்லை.


88 உமது பேரன்புக்கேற்ப என்னை உயிரோடு வைத்திரும்,
நீர் திருவாய்மலர்ந்த ஒழுங்குமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்.

திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை[தொகு]


89 ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு;
விண்ணுலகைப்போல் அது நிலைத்துள்ளது.


90 தலைமுறை தலைமுறையாய் உள்ளது உமது வாக்குப் பிறழாமை;
நீர் பூவுலகை உறுதியாய் இருக்கச் செய்தீர்,
அது நிலைபெற்றுள்ளது.


91 உம் ஒழுங்குமுறைகளின் படியே
அனைத்தும் இன்றுவரை நிலைத்துள்ளன;
ஏனெனில், அவை உமக்கு ஊழியம் செய்கின்றன.


92 உமது திருச்சட்டம் எனக்கு இன்பம் தருவதாய் இல்லாதிருந்தால்
என் துன்பத்தில் நான் மடிந்து போயிருப்பேன்.


93 உம் நியமங்களை நான் எந்நாளும் மறவேன்;
ஏனெனில், அவற்றைக்கொண்டு என்னைப் பிழைக்க வைத்தீர்.


94 உமக்கே நான் உரிமை; என்னைக் காத்தருளும்;
ஏனெனில், உம் நியமங்களையே நான் நாடியுள்ளேன்.


95 தீயோர் என்னை அழிக்கக் காத்திருக்கின்றனர்;
நானோ உம் ஒழுங்குமுறைகளை ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.


96 நிறைவான அனைத்தின் எல்லையையும் நான் பார்த்துவிட்டேன்;
உமது கட்டளையின் நிறைவோ எல்லை அற்றது.

திருச்சட்டத்தின் மீது அன்பு[தொகு]


97 ஆண்டவரே!
நான் உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!
நாள் முழுவதும் அதைப்பற்றியே சிந்திக்கின்றேன்.


98 என் எதிரிகளைவிட என்னை ஞானியாக்கியது உமது கட்டளை;
ஏனெனில், என்றென்றும் அது என்னோடு உள்ளது.


99 எனக்கு அறிவு புகட்டுவோர் அனைவரினும்
நான் விவேகமுள்ளனவாய் இருக்கின்றேன்;
ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளையே நான் சிந்திக்கின்றேன்;


100 முதியோர்களைவிட நான் நுண்ணறிவு பெற்றுள்ளேன்.
ஏனெனில், உம் நியமங்களைக் கடைப்பிடிக்கின்றேன்.


101 உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு தீயவழி எதிலும்
நான் கால்வைக்காது பார்த்துக் கொள்கின்றேன்.


102 உம் நீதிநெறிகளைவிட்டு நான் விலகவில்லை;
ஏனெனில், நீர்தாமே எனக்குக் கற்றுத் தந்தீர்.


103 உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை!
என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை.


104 உம் நியமங்களால் நான் நுண்ணறிவு பெறுகின்றேன்.
ஆகவேதான் பொய்வழிகள் அனைத்தையும் நான் வெறுக்கின்றேன்.

திருச்சட்டத்தின் ஒளி[தொகு]


105 என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு!
என் பாதைக்கு ஒளியும் அதுவே!


106 நீதியான உம் நெறிமுறைகளை நான் கடைப்பிடிப்பதாக
ஆணையிட்டு உறுதிமொழி தந்துள்ளேன்.


107 ஆண்டவரே! மிக மிகத் துன்புறுத்தப்படுகின்றேன்;
உம் வாக்குறுதியின்படி என்னை உயிரோடு வைத்தருளும்.


108 நான் மனமுவந்து வாயார உம்மைப் புகழ்வதை
ஆண்டவரே! தயைகூர்ந்து ஏற்றுக்கொள்ளும்;
உம் நீதிநெறிகளை எனக்குக் கற்பியும்.


109 நான் என்னுயிரைக் கையில்வைத்துள்ளேன்;
ஆயினும், உம் திருச்சட்டத்தை நான் மறவேன்.


110 தீயோர் எனக்குக் கண்ணிவைத்தனர்;
ஆனால், உம் நியமங்களினின்று நான் பிறழவில்லை.


111 உம் ஒழுங்குமுறைகளை என்றும்
என் உரிமைச் சொத்தாய்க் கொண்டுள்ளேன்.
ஆகவே, அவை என் இதயத்தை மகிழ்விக்கின்றன.


112 உம் விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் என் உள்ளம்,
என்றென்றும், இறுதிவரை நாட்டம் கொண்டிருக்கும்.

திருச்சட்டம் தரும் பாதுகாப்பு[தொகு]


113 இருமனத்தோரை நான் வெறுக்கின்றேன்;
உமது திருச்சட்டத்தின்மீது பற்றுக்கொண்டுள்ளேன்.


114 நீரே என் புகலிடம்; நீரே என் கேடயம்;
உமது வாக்கில் நான் நம்பிக்கை வைக்கின்றேன்.


115 தீயன செய்வோரே! என்னைவிட்டு விலகுங்கள்;
என் கடவுளின் கட்டளைகளை நான் கடைப்பிடிப்பேன்;


116 நான் பிழைக்குமாறு,
உமது வாக்குறுதிக்கேற்ப என்னைத் தாங்கியருளும்;
எனது நம்பிக்கை வீண்போகவிடாதேயும்.


117 என்னைத் தாங்கிக்கொள்ளும்; நான் மீட்புப் பெறுவேன்;
எந்நாளும் உம் விதிமுறைகளைக் கருத்தில் கொண்டிருப்பேன்.


118 உம் விதிமுறைகளைவிட்டு விலகுவோர் அனைவரையும்
நீர் ஒதுக்கித் தள்ளுகின்றீர்;
அவர்களின் சூழ்ச்சிகள் வீணாய்ப் போகும்.


119 பூவுலகின் பொல்லார் அனைவரையம் நீர் களிம்பெனக் கருதுகின்றீர்;
ஆகவே, நான் உம் ஒழுங்குமுறைகள் மீது பற்றுக்கொண்டுள்ளேன்.


120 உம்மீது கொண்டுள்ள அச்சத்தால் என் உடல் சிலிர்க்கின்றது;
உம் நீதித்தீர்ப்புகளை முன்னிட்டு நான் அஞ்சி நடுங்குகின்றேன்.

திருச்சட்டத்தின்படி நடத்தல்[தொகு]


121 நீதியும் நேர்மையும் ஆனவற்றையே செய்துள்ளேன்;
என்னை ஒடுக்குவோர் கையில் என்னை விட்டுவிடாதேயும்.


122 உம் ஊழியனின் நலத்தை உறுதிப்படுத்தும்;
செருக்குற்றோர் என்னை ஒடுக்கவிடாதேயும்.


123 நீர் தரும் விடுதலையையும்
உமது நீதியான வாக்குறுதிகளையும் எதிர்பார்த்து,
என் கண்கள் பூத்துப்போயின.


124 உம் பேரன்பிற்கேற்ப உம் ஊழியனுக்குச் செய்தருளும்;
உம் விதிமுறைகளை எனக்குக் கற்பியும்.


125 உம் ஊழியன் நான், எனக்கு நுண்ணறிவு புகட்டும்;
அப்போது உம் ஒழுங்குமுறைகளை அறிந்துகொள்வேன்.


126 ஆண்டவரே! நீர் செயலாற்றும் நேரம் வந்துவிட்டது;
உம் திருச்சட்டம் மீறப்பட்டுவிட்டது.


127 ஆகவே, பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக
உம் கட்டளைகளை விரும்புகின்றேன்.


128 உம் நியமங்களை எல்லாம் நீதியானவை என்று ஏற்றுக்கொண்டேன்;
பொய்யான வழி அனைத்தையும் வெறுக்கின்றேன்.

திருச்சட்டத்தின்மீது ஆவல்[தொகு]


129 உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை;
ஆகவே, நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன்.


130 உம் சொற்களைப்பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது;
அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது.


131 வாயை 'ஆ'வெனத் திறக்கின்றேன்; பெருமூச்சு விடுகின்றேன்;
ஏனெனில், உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன்.


132 உம் பெயரின்மீது பற்றுக்கொண்டோருக்கு நீர் வழக்கமாய்ச் செய்வதுபோல்,
என் பக்கம் திரும்பி எனக்கும் இரங்கும்!


133 உமது வாக்கில் என் காலடிகளை நிலைப்படுத்தும்!
தீயது எதுவும் என்னை மேற்கொள்ளவிடாதேயும்!


134 மனிதர் செய்யும் கொடுமையினின்று என்னை விடுவியும்!
உம் நியமங்களை நான் கடைப்பிடிப்பேன்.


135 உம் ஊழியன்மீது உமது முகஒளி வீசச் செய்யும்!
உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும்.


136 உமது திருச்சட்டத்தைப் பலர் கடைப்பிடிக்காததைக் கண்டு,
என் கண்களினின்று நீர் அருவியாய் வழிந்தது.

திருச்சட்டத்தின் ஒழுங்குமுறை[தொகு]


137 ஆண்டவரே! நீர் நீதி உள்ளவர்;
உம் நீதிநெறிகள் நேர்மையானவை.


138 நீர் தந்த ஒழுங்குமுறைகள் நீதியானவை;
அவை முற்றிலும் நம்பத்தக்கவை.


139 என் பகைவர் உம் வார்த்தைகளை மறந்துவிட்டதால்,
அவற்றின்மீது நான் கொண்டுள்ள தணியாத ஆர்வம்
என்னை எரித்துவிடுகின்றது.


140 உம் வாக்குறுதி முற்றிலும் சரியென மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
உம் ஊழியன் அதன்மீது பற்றுக்கொண்டுள்ளான்.


141 சிறியன் அடியேன்! இழிவுக்கு உள்ளானவன்;
ஆனால், உம் நியமங்களை மறக்காதவன்.


142 உமது நீதி என்றுமுள நீதி;
உமது திருச்சட்டம் என்றும் நம்பத்தக்கது.


143 துன்பமும் கவலையும் என்னைப் பற்றிக்கொண்டன;
எனினும் உம் கட்டளைகள் என்னை மகிழ்விக்கின்றன.


144 உம் ஒழுங்குமுறைகள் எக்காலமும் நீதியுள்ளவை;
நான் வாழுமாறு எனக்கு நுண்ணறிவு புகட்டும்.

விடுதலைக்காக மன்றாடல்[தொகு]


145 முழு இதயத்தோடு உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;
ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்;
உம் விதிமுறைகளை நான் பின்பற்றுவேன்.


146 உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; என்னைக் காத்தருளும்;
உம் ஒழுங்குமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்.


147 வைகறையில் நான் உம்மிடம் வந்து
உதவிக்காக மன்றாடுகின்றேன்;
உம் சொற்களில் நம்பிக்கை வைக்கின்றேன்.


148 உம் வாக்குறுதிகளைச் சிந்திப்பதற்காக,
இரவுச் சாம நேரங்களில் நான் கண்விழித்துள்ளேன்.


149 ஆண்டவரே!
உமது பேரன்பிற்கேற்ப என் குரலைக் கேட்டருளும்;
உமது நீதியின்பபடி என்னுயிரைக் காத்தருளும்.


150 சதிசெய்து ஒடுக்குவோர் என்னை நெருங்கி வருகின்றனர்;
உம் திருச்சட்டத்துக்கும் அவர்களுக்கும் வெகு தொலைவு.


151 ஆண்டவரே! நீர் என் அருகில் இருக்கின்றீர்;
உம் கட்டளைகள் எல்லாம் நிலையானவை.


152 அவற்றை நீர் எக்காலத்திற்குமாக ஏற்படுத்தினீர் என்று
நீர் தந்த ஒழுங்குமுறைகளினின்று
முன்பே நான் அறிந்திருக்கின்றேன்.

(உதவிக்காக மன்றாடல்)[தொகு]


153 என் துன்ப நிலையைப் பார்த்து என்னை விடுவித்தருளும்;
ஏனெனில், உமது திருச்சட்டத்தை நான் மறக்கவில்லை.


154 எனக்காக வழக்காடி என்னை மீட்டருளும்;
உமது வாக்குக்கேற்றபடி என் உயிரைக் காத்தருளும்.


155 தீயோர்க்கு மீட்பு வெகு தொலைவில் உள்ளது;
ஏனெனில், அவர்கள் உம் விதிமுறைகளைத் தேடுவதில்லை.


156 ஆண்டவரே! உம் இரக்கம் மிகப்பெரியது;
உம் நீதித்தீர்ப்புகளின்படி எனக்கு வாழ்வளியும்.


157 என்னைக் கொடுமைப்படுத்துவோரும் பகைப்போரும் பலர்;
ஆனால், உம் ஒழுங்குமுறைகளை விட்டு நான் தவறுவதில்லை.


158 துரோகம் செய்வோரை அருவருப்புடன் பார்க்கின்றேன்;
ஏனெனில், அவர்கள் உம் வாக்கைக் கடைப்பிடிப்பதில்லை.


159 ஆண்டவரே! நான் உம் கட்டளைகள் மீது
எத்துணைப் பற்றுக்கொண்டுள்ளேன் என்பதைப் பாரும்;
உம் பேரன்பிற்கேற்ப எனக்கு வாழ்வளியும்.


160 உண்மையே உமது வார்த்தையின் உட்பொருள்;
நீதியான உம் நெறிமுறைகள் எல்லாம் என்றும் நிலைத்துள்ளன.

திருச்சட்டத்தின் மீது பேரன்பு[தொகு]


161 தலைவர்கள் என்னைக் காரணமின்றிக் கொடுமைப்படுத்துகின்றனர்;
ஆனால், உம் வாக்கை முன்னிட்டு என் உள்ளம் நடுங்குகின்றது.


162 திரண்ட கொள்ளைப் பொருளை அடைந்தவன் மகிழ்வது போல
உமது வாக்குறுதியில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்.


163 பொய்யை வெறுத்து ஒதுக்குகின்றேன்;
உமது திருச்சட்டத்தின்மீது பற்றுக்கொண்டுள்ளேன்.


164 நீதியான உம் நெறிமுறைகளைக் குறித்து
ஒரு நாளைக்கு ஏழுமுறை உம்மைப் புகழ்கின்றேன்.


165 உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு
மிகுதியான நல்வாழ்வு உண்டு;
அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை.


166 ஆண்டவரே! நீர் அளிக்கும் மீட்புக்காக நான் காத்திருக்கின்றேன்;
உம் கட்டளைகளைச் செயல்படுத்துகின்றேன்.


167 உம் ஒழுங்குமுறைகளை நான் கடைப்பிடித்து வருகின்றேன்;
நான் அவற்றின்மீது பற்றுக்கொண்டுள்ளேன்.


168 உம் நியமங்களையும் ஒழுங்குமுறைகளையும் நான் கடைப்பிடிக்கின்றேன்;
ஏனெனில், என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவை.

உதவிக்காக மன்றாடல்[தொகு]


169 ஆண்டவரே! என் வேண்டுதல் உம் திருமுன் வருவதாக!
உமது வாக்குறுதிக்கேற்ப எனக்கு நுண்ணறிவு புகட்டும்.


170 என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக!
உம் வாக்குறுதியின்படி என்னை விடுவியும்.


171 உம் விதிமுறைகளை எனக்கு நீர் கற்பிப்பதால்,
என் இதழ்களினின்று திருப்புகழ் பொங்கிவரும்.


172 உம் வாக்கைக் குறித்து என் நா பாடுவதாக!
ஏனெனில், உம் கட்டளைகள் எல்லாம் நீதியானவை.


173 உம் கரம் எனக்குத் துணையாய் இருப்பதாக!
ஏனெனில், உம் நியமங்களை நான் தேர்ந்தெடுத்தேன்.


174 ஆண்டவரே! உம்மிடமிருந்து வரும் மீட்பை நான் நாடுகின்றேன்;
உமது திருச்சட்டத்தில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.


175 உயிர்பிழைத்து நான் உம்மைப் புகழ்வேனாக!
உம் நீதி நெறிகள் எனக்குத் துணைபுரிவனவாக!


176 காணாமல்போன ஆட்டைப்போல் நான் அலைந்து திரிகின்றேன்;
உம் ஊழியனைத் தேடிப்பாரும்;
ஏனெனில், உம் கட்டளைகளை நான் மறக்கவில்லை.


குறிப்பு

[*] 119 - எபிரேய அகரவரிசைப் பாடல்


திருப்பாடல் 120[தொகு]

உதவிக்காக மன்றாடல்[தொகு]

(சீயோன் மலைத் திருப்பயணப் பாடல்)


1 நான் இன்னலுற்ற வேளையில் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்;
அவரும் எனக்குச் செவி சாய்த்தார்.


2 ஆண்டவரே!
பொய் பேசும் வாயினின்று என்னை விடுவித்தருளும்;
வஞ்சக நாவினின்று என்னைக் காத்தருளும்.


3 வஞ்சகம் பேசும் நாவே! உனக்கு என்ன கிடைக்கும்?
அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்?


4 வீரனின் கூரிய அம்புகளும்
தணல் வீசும் கரிகளும்தான் கிடைக்கும்!


5 ஐயோ! நான் மேசேக்கில் அன்னியனாய் வாழ்ந்தபோதும்,
கேதாரில் கூடாரங்களில் தங்க நேர்ந்தபோதும்,


6 சமாதானத்தைக் குலைப்பவர்களோடு,
நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று.


7 நான் சமாதானத்தை நாடுவேன்;
அதைப் பற்றியே பேசுவேன்;
ஆனால், அவர்களுக்கோ போர் ஒன்றில்தான் நாட்டம்!


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 121 முதல் 122 வரை