திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 121 முதல் 122 வரை

விக்கிமூலம் இலிருந்து
"மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்" - திருப்பாடல் 121:1

திருப்பாடல்கள்[தொகு]

ஐந்தாம் பகுதி (107-150)
திருப்பாடல்கள் 121 முதல் 122 வரை

திருப்பாடல் 121[தொகு]

நம்மைப் பாதுகாக்கும் ஆண்டவர்[தொகு]

(சீயோன் மலைத் திருப்பயணப் பாடல்)


1 மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்!
எங்கிருந்து எனக்கு உதவி வரும்?


2 விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய
ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும்.


3 அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்;
உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார்.


4 இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை;
உறங்குவதும் இல்லை.


5 ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்;
அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்;
அவரே உமக்கு நிழல் ஆவார்!


6 பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது;
இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது.


7 ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்;
அவர் உம் உயிரைக் காத்திடுவார்.


8 நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும்
இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.


திருப்பாடல் 122[தொகு]

எருசலேமே நீ வாழி![தொகு]

(சீயோன் மலைத் திருப்பயணப் பாடல்:
தாவீதுக்கு உரியது
)


1 "ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்",
என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.


2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து
உன் வாயில்களில் நிற்கின்றோம்.


3 எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக்
கட்டப்பட்ட நகர் ஆகும்.


4 ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்;
இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க
ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.


5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன.
அவை தாவீது வீட்டாரின் அரியணைகள்.


6 எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்;
"உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக!


7 உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக!
உன் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!


8 உன்னுள் சமாதானம் நிலவுவதாக!"
என்று நான் என் சகோதரர் சார்பிலும்
என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.


9 நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால்,
உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன்.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 123 முதல் 124 வரை