திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 123 முதல் 124 வரை

விக்கிமூலம் இலிருந்து
"வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம்; கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம்" (திருப்பாடல்கள் 124:7)

திருப்பாடல்கள்[தொகு]

ஐந்தாம் பகுதி (107-150)
திருப்பாடல்கள் 123 முதல் 124 வரை

திருப்பாடல் 123[தொகு]

இரக்கத்திற்காக மன்றாடல்[தொகு]

(சீயோன் மலைத் திருப்பயணப் பாடல்)


1 விண்ணுலகில் வீற்றிருப்பவரே!
உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


2 பணியாளனின் கண்கள்
தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல,
பணிப்பெண்ணின் கண்கள்
தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பதுபோல,
எம் கடவுளாகிய ஆண்டவரே!
நீர் எமக்கு இரங்கும்வரை,
எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும்.


3 எங்களுக்கு இரங்கும் ஆண்டவரே! எங்களுக்கு இரங்கும்;
அளவுக்கு மேலேயே நாங்கள் இகழ்ச்சி அடைந்துவிட்டோம்.


4 இன்பத்தில் திளைத்திருப்போரின் வசைமொழி போதும்.
இறுமாந்த மனிதரின் பழிச்சொல்லும் போதும்.


திருப்பாடல் 124[தொகு]

இஸ்ரயேலைப் பாதுகாப்பவர்[தொகு]

(சீயோன் மலைத் திருப்பயணப் பாடல்;
தாவீதுக்கு உரியது
)


1 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில் -
இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக!


2 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில்,
நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,


3 அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது,
அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.


4 அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்;
பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்;


5 கொந்தளிக்கும் வெள்ளம்
நம்மீது பாய்ந்தோடியிருக்கும்.


6 ஆண்டவர் போற்றி! போற்றி!
எதிரிகளின் பற்களுக்கு அவர் நம்மை இரையாக்கவில்லை.


7 வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம்;
கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம்.


8 ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!
விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே!


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 125 முதல் 126 வரை