திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 135 முதல் 136 வரை
திருப்பாடல்கள்
[தொகு]ஐந்தாம் பகுதி (107-150)
திருப்பாடல்கள் 135 முதல் 136 வரை
திருப்பாடல் 135
[தொகு]புகழ்ச்சிப் பாடல்
[தொகு]
1 அல்லேலூயா!
ஆண்டவரின் பெயரைப் புகழுங்கள்;
ஆண்டவரின் ஊழியரே! அவரைப் புகழுங்கள்.
2 ஆண்டவரின் கோவிலுள் நிற்பவர்களே!
நம் கடவுளின் கோவில் முற்றங்களில் உள்ளவர்களே!
3 ஆண்டவரைப் புகழுங்கள்!
ஏனெனில், அவர் நல்லவர்;
அவரது பெயரைப் போற்றிப் பாடுங்கள்;
ஏனெனில், அவர் இனியவர்.
4 ஆண்டவர் யாக்கோபைத் தமக்கென்று தேர்ந்துகொண்டார்;
இஸ்ரயேலைத் தமக்குரிய தனிச் சொத்தாகத் தெரிந்தெடுத்தார்.
5 ஆண்டவர் மேன்மைமிக்கவர் என்பதை அறிவேன்;
நம் ஆண்டவர் எல்லாத் தெய்வங்களுக்கும் மேலானவர்
என்பதும் எனக்குத் தெரியும்.
6 விண்ணிலும் மண்ணிலும்
கடல்களிலும் எல்லா ஆழ்பகுதிகளிலும்,
ஆண்டவர் தமக்கு விருப்பமான யாவற்றையும் செய்கின்றார்.
7 அவர் பூவுலகின் கடையெல்லைகளிலிருந்து
மேகங்களை எழச் செய்கின்றார்.
மழை பெய்யும்படி மின்னலை உண்டாக்குகின்றார்;
காற்றைத் தம் கிடங்குகளிலிருந்து வெளிவரச் செய்கின்றார்.
8 அவர் எகிப்தின் தலைப்பேறுகளைத் தாக்கினார்;
மனிதர், கால்நடைகளின் தலைப்பேறுகளை அழித்தார்.
9 எகிப்து நாடே! உன் நடுவில் பார்வோனையும்
அவனுடைய எல்லா ஊழியர்களையும் தண்டிக்குமாறு,
அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் அவர் நிகழச் செய்தார்.
10 அவர் பல்வேறு இனத்தவரைத் தாக்கினார்;
வலிமைவாய்ந்த மன்னர்களைக் கொன்றார்.
11 எமோரியரின் மன்னனாகிய சீகோனையும்
பாசானின் மன்னனாகிய ஓகையும்
கானானின் எல்லா அரசுகளையும் அழித்தார்;
12 அவர்கள் நாட்டைத் தம் மக்களாகிய
இஸ்ரயேலருக்கு உரிமைச்சொத்தாக,
சொந்த உடைமையாகக் கொடுத்தார்.
13 ஆண்டவரே! உமது பெயர் என்றுமுள்ளது;
ஆண்டவரே! உம்மைப்பற்றிய நினைவு
தலைமுறை தலைமுறையாக நீடித்திருக்கும்.
14 ஆண்டவர் தம் மக்களை நீதியுடன் தீர்ப்பிடுவார்;
தம் அடியாருக்கு இரக்கம் காட்டுவார்.
15 வேற்றினத்தார் வழிபடும் சிலைகள்
வெறும் வெள்ளியும் பொன்னுமே;
அவை மனிதரின் கையால் செய்யப்பட்டவையே!
16 அவற்றுக்கு வாய்கள் உண்டு; ஆனால் அவை பேசுவதில்லை;
கண்கள் உண்டு; அவை காண்பதில்லை;
17 காதுகள் உண்டு; ஆனால் அவை கேட்பதில்லை;
மூக்குகள் உண்டு; ஆனால் அவை மூச்சுவிடுவதில்லை.
18 அவற்றைச் செய்து வைப்பவரும்
அவற்றில் நம்பிக்கை வைக்கும் யாவரும்
அவற்றைப் போலவே இருப்பார்கள்.
19 இஸ்ரயேல் குடும்பத்தாரே! ஆண்டவரைப் போற்றுங்கள்!
ஆரோன் குடும்பத்தாரே! ஆண்டவரைப் போற்றுங்கள்!
20 லேவி குடும்பத்தாரே! ஆண்டவரைப் போற்றுங்கள்!
அவருக்கு அஞ்சி நடப்போரே! அவரைப் போற்றுங்கள்!
21 எருசலேமைத் தம் உறைவிடமாகக் கொண்டிருக்கும்
ஆண்டவர் போற்றப்படுவாராக;
சீயோனிலிருக்கும் ஆண்டவர் போற்றப்படுவாராக.
அல்லேலூயா!
திருப்பாடல் 136
[தொகு]என்றுமுள பேரன்பு வாழியவே!
[தொகு]1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;
ஏனெனில் அவர் நல்லவர்,
என்றும் உள்ளது அவரது பேரன்பு. [1]
2 தெய்வங்களின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
3 தலைவர்களின் தலைவருக்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
4 தாம் ஒருவராய் மாபெரும் அருஞ்செயல்களைப்
புரிபவர்க்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
5 வான்வெளியை மதிநுட்பத்தால் உருவாக்கியவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு. [2]
6 கடல்மீது மண்ணகத்தை விரித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு. [3]
7 பெருஞ்சுடர்களை உருவாக்கியவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
8 பகலை ஆள்வதற்கெனக் கதிரவனை
உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
9 இரவை ஆள்வதற்கென நிலாவையும் விண்மீன்களையும்
உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு. [4]
10 எகிப்தின் தலைப்பேறுகளைக் கொன்றழித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு. [5]
11 அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரயேலை
வெளிக்கொணர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு. [6]
12 தோளின் வலிமையாலும் ஓங்கிய புயத்தாலும்
அதைச் செய்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
13 செங்கடலை இரண்டாகப் பிரித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
14 அதன் நடுவே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
15 பார்வோனையும் அவன் படைகளையும்
செங்கடலில் மூழ்கடித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு. [7]
16 பாலை நிலத்தில் தம் மக்களை வழிநடத்தியவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
17 மாபெரும் மன்னர்களை வெட்டி வீழ்த்தியவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
18 வலிமைமிகு மன்னர்களைக் கொன்றழித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
19 எமோரியரின் மன்னன் சீகோனை கொன்றழித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு. [8]
20 பாசானின் மன்னன் ஓகைக் கொன்றழித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு. [9]
21 அவர்களது நாட்டைத் தம் மக்களுக்கு
உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
22 அதைத் தம் அடியார்களாகிய இஸ்ரயேலர்க்கு
உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
23 தாழ்வுற்றிருந்த நம்மை நினைவு கூர்ந்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
24 நம் எதிரிகளினின்று நம்மை விடுவித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
25 உடல்கொண்ட அனைத்திற்கும் உணவூட்டுபவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
26 விண்ணுலகின் இறைவனுக்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
- குறிப்புகள்
[1] 136:1 = 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3;
எஸ்ரா 3:11; திபா 100:5; 106:1; 118:1;
எரே 33:11.
[2] 136:5 = தொநூ 1:1.
[3] 136:6 = தொநூ 1:2.
[4] 136:7-9 = தொநூ 1:16.
[5] 136:10 = விப 12:29.
[6] 136:11 = விப 12:51.
[7] 136:13-15 = விப 14:21-29.
[8] 136:19 = எண் 21:21-30.
[9] 136:20 = எண் 21:31-35.
(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 137 முதல் 138 வரை