திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 137 முதல் 138 வரை

விக்கிமூலம் இலிருந்து
"பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம். - திருப்பாடல் 137:1. ஓவியர்: எட்வர்ட் பென்டமான் (1811-1889). "நாடுகடத்தப்பட்ட யூதரின் புலம்பல்".
பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட யூதர் (திருப்பாடல் 137). ஓவியர்: ஃபெர்டினாண்ட் ஃபோன் ஒலிவியர் (1785-1841).

திருப்பாடல்கள்[தொகு]

ஐந்தாம் பகுதி (107-150)
திருப்பாடல்கள் 137 முதல் 138 வரை

திருப்பாடல் 137[தொகு]

நாடுகடத்தப்பட்டோரின் புலம்பல்[தொகு]


1 பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து,
நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம்.


2 அங்கிருந்த அலரிச் செடிகள் மீது,
எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம்.


3 ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர்
எங்களைப் பாடும்படி கேட்டனர்;
எங்களைக் கடத்திச் சென்றோர்
எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர்.
'சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்' என்றனர்.


4 ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை
அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்?


5 எருசலேமே! நான் உன்னை மறந்தால்
என் வலக்கை சூம்பிப்போவதாக!


6 உன்னை நான் நினையாவிடில்,
எனது மகிழ்ச்சியின் மகுடமாக
நான் எருசலேமைக் கருதாவிடில்,
என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!


7 ஆண்டவரே!
ஏதோமின் புதல்வருக்கு எதிராக,
எருசலேம் வீழ்ந்த நாளை நினைத்துக் கொள்ளும்!
'அதை இடியுங்கள்; அடியோடு இடித்துத் தள்ளுங்கள்'
என்று அவர்கள் எவ்வாறெல்லாம் சொன்னார்கள்!


8 பாழாக்கும் நகர் பாபிலோனே!
நீ எங்களுக்குச் செய்தவற்றை
உனக்கே திருப்பிச் செய்வோர் பேறுபெற்றோர்! [*]


9 உன் குழந்தைகளைப் பிடித்து
பாறையின்மேல் மோதி அடிப்போர் பேறுபெற்றோர்!


குறிப்பு

[*] 137:8 = திவெ 18:6.

திருப்பாடல் 138[தொகு]

நன்றிப் பாடல்[தொகு]

(தாவீதுக்கு உரியது)


1 ஆண்டவரே!
என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்;
தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.


2 உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி
உம்மைத் தாள் பணிவேன்;
உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு
உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;
ஏனெனில், அனைத்திற்கும் மேலாக
உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.


3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்;
என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.


4 ஆண்டவரே!
நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப்
பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர்.


5 ஆண்டவரே!
உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்;
ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது!


6 ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்;
எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்;
ஆனால், செருக்குற்றோரைத்
தொலையிலிருந்தே அறிந்து கொள்கின்றீர்.


7 நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும்,
என் உயிரைக் காக்கின்றீர்;
என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக
உமது கையை நீட்டுகின்றீர்;
உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.


8 நீர் வாக்களித்த அனைத்தையும்
எனக்கெனச் செய்து முடிப்பீர்;
ஆண்டவரே!
என்றும் உள்ளது உமது பேரன்பு;
உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும்.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 139 முதல் 140 வரை