திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 25 முதல் 26 வரை
திருப்பாடல்கள்
[தொகு]முதல் பகுதி (1-41)
திருப்பாடல்கள் 25 முதல் 26 வரை
திருப்பாடல் 25
[தொகு]வழிகாட்டிப் பாதுகாக்குமாறு வேண்டல்
[தொகு](தாவீதின் புகழ்ப்பா)
1 ஆண்டவரே, உம்மை நோக்கி,
என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.
2 என் கடவுளே, உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்;
நான் வெட்கமுற விடாதேயும்;
என் பகைவர் என்னைக் கண்டு நகைக்க விடாதேயும்.
3 உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும் வெட்கமுறுவதில்லை;
காரணமின்றித் துரோகம் செய்பவரோ வெட்கத்திற்கு உள்ளாவர்.
4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்;
உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்;
ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்;
உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்;
6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும்,
உமது பேரன்பையும் நினைந்தருளும்;
ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே.
7 என் இளமைப் பருவத்தின் பாவங்களையும்,
என் குற்றங்களையும் நினையாதேயும்,
உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்;
ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர்.
8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்;
ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்;
எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார்.
10 ஆண்டவரது உடன்படிக்கையையும்
ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு,
அவருடைய பாதைகளெல்லாம்
பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்.
11 ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு
என் குற்றத்தை மன்னித்தருளும்;
ஏனெனில், என் குற்றம் மிகப் பெரியது.
12 ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் எவரோ
அவருக்குத் தாம் தேர்ந்து கொள்ளும் வழியை அவர் கற்பிப்பார்.
13 அவர் நலமுடன் வாழ்வார்;
அவருடைய மரபினர் நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வர்.
14 ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்;
அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்;
15 என் கண்கள் எப்போதும் ஆண்டவரை நோக்கியிருக்கின்றன;
அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார்.
16 என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும்;
ஏனெனில், நான் துணையற்றவன்; துயருறுபவன்.
17 என் வேதனைகள் பெருகிவிட்டன;
என் துன்பத்தினின்று என்னை விடுவித்தருளும்.
18 என் சிறுமையையும் வருத்தத்தையும் பாரும்;
என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும்.
19 என் எதிரிகள் பெருகிவிட்டதைப் பாரும்.
அவர்கள் எத்துணைக் கொடுமையாய் என்னை வெறுக்கின்றனர்!
20 என் உயிரைக் காப்பாற்றும்;
என்னை விடுவித்தருளும்;
உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ள என்னை வெட்கமுற விடாதேயும்.
21 வாய்மையும் நேர்மையும் எனக்கு அரணாய் இருக்கட்டும்;
ஏனெனில், நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்.
22 கடவுளே, இஸ்ரயேலரை
அவர்கள் படும் துன்பங்கள் அனைத்தினின்றும் மீட்டருளும்.
திருப்பாடல் 26
[தொகு]நேர்மையாளரின் விண்ணப்பம்
[தொகு](தாவீதுக்கு உரியது)
1 ஆண்டவரே, நான் குற்றமற்றவன் என்பதை அறிவியும்;
ஏனெனில், என் நடத்தை நேர்மையானது;
நான் ஆண்டவரை நம்பினேன்;
நான் தடுமாறவில்லை.
2 ஆண்டவரே, என்னைச் சோதித்து ஆராய்ந்து பாரும்;
என் மனத்தையும் உள்ளத்தையும் புடமிட்டுப் பாரும்;
3 ஏனெனில், உமது பேரன்பு என் கண்முன் இருக்கின்றது;
உமக்கு உண்மையாக நடந்து வருகிறேன்.
4 பொய்யரின் நடுவில் நான் அமர்வதில்லை;
வஞ்சகரோடு நான் சேர்வதில்லை.
5 தீயோரின் மன்றத்தை நான் வெறுக்கின்றேன்;
பொல்லாரின் நடுவில் நான் அமர்வதில்லை.
6 மாசற்றவனாய் என் கைகளைக் கழுவுகின்றேன்;
ஆண்டவரே, உம் பலிபீடத்தை வலம் வருவேன்.
7 உரத்த குரலில் உமக்கு நன்றிப்பா பாடுகின்றேன்;
வியத்தகு உம் செயல்களை எல்லாம் எடுத்துரைக்கின்றேன்;
8 ஆண்டவரே, நீர் குடிகொள்ளும் இல்லத்தை நான் விரும்புகின்றேன்;
உமது மாட்சி தங்கியுள்ள இடத்தை நான் விரும்புகின்றேன்;
9 பாவிகளுக்குச் செய்வது போல் என் உயிரைப் பறித்துவிடாதீர்!
கொலை வெறியர்களுக்குச் செய்வதுபோல் என் வாழ்வை அழித்து விடாதீர்!
10 அவர்கள் கைகளில் தீச்செயல்கள்;
அவர்கள் வலக்கையில் நிறையக் கையூட்டு.
11 நானோ மாசற்றவனாய் நடந்து கொள்கின்றேன்;
என்னை மீட்டருளும்;
எனக்கு இரங்கியருளும்.
12 என் கால்கள் சமமான தளத்தில் நிற்கின்றன;
மாபெரும் சபையில் ஆண்டவரைப் புகழ்ந்திடுவேன்.
(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 27 முதல் 28 வரை