திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 27 முதல் 28 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு" (திபா 27 [26]). விவிலிய ஓவிய நூல். இலத்தீன் அணியெழுத்து. காலம்: 15ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: ஷாந்தீயி, பிரான்சு.

திருப்பாடல்கள்[தொகு]

முதல் பகுதி (1-41)
திருப்பாடல்கள் 27 முதல் 28 வரை

திருப்பாடல் 27[தொகு]

புகழ்ச்சிப் பாடல்[தொகு]

(தாவீதுக்கு உரியது)


1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு;
யாருக்கு நான் அஞ்சவேண்டும்?
ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்;
யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?


2 தீயவர் என் உடலை விழுங்க என்னை நெருங்குகையில்,
என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே இடறி விழுந்தார்கள்.


3 எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும்,
என் உள்ளம் அஞ்சாது;
எனக்கெதிராகப் போர் எழுந்தாலும்,
நான் நம்பிக்கையோடிருப்பேன்.


4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்;
அதையே நான் நாடித் தேடுவேன்;
ஆண்டவரின் இல்லத்தில்
என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும்,
ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்;
அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும்.


5 ஏனெனில், கேடுவரும் நாளில்
அவர் என்னைத் தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்;
தம் கூடாரத்தினுள்ளே என்னை ஒளித்து வைப்பார்;
குன்றின்மேல் என்னை பாதுகாப்பாய் வைப்பார்.


6 அப்பொழுது, என்னைச் சுற்றிலுமுள்ள
என் எதிரிகளுக்கு எதிரில் நான் தலைநிமிரச் செய்வார்;
அவரது கூடாரத்தில் ஆர்ப்பரிப்புடன் பலிகளைச் செலுத்துவேன்;
ஆண்டவரைப் புகழ்ந்து பாடல் பாடுவேன்.


7 ஆண்டவரே, நான் மன்றாடும் போது என் குரலைக் கேட்டருளும்;
என் மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும்.


8 'புறப்படு, அவரது முகத்தை நாடு' என்றது என் உள்ளம்;
ஆண்டவரே உமது முகத்தையே நாடுவேன்.


9 உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்;
நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்;
நீரே எனக்குத் துணை;
என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதிரும்;
என்னைக் கைவிடாதிரும்.


10 என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும்
ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார்.


11 ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பித்தருளும்;
என் எதிரிகளை முன்னிட்டு,
என்னைச் செம்மையான பாதையில் நடத்தும்.


12 என் பகைவரின் விருப்பத்திற்கு என்னைக் கையளித்துவிடாதிரும்;
ஏனெனில், பொய்ச்சாட்சிகளும் வன்முறையை மூச்சாகக் கொண்டவர்களும்
எனக்கெதிராய்க் கிளம்பியுள்ளனர்.


13 வாழ்வோரின் நாட்டினிலே
ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று
நான் இன்னும் நம்புகின்றேன்.


14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு;
மன உறுதிகொள்;
உன் உள்ளம் வலிமை பெறட்டும்;
ஆண்டவருக்காகக் காத்திரு.


திருப்பாடல் 28[தொகு]

உதவிக்காக மன்றாடல்[தொகு]

(தாவீதுக்கு உரியது)


1 ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;
என் கற்பாறையே, என் குரலைக் கேளாதவர்போல் இராதேயும்;
நீர் மௌனமாய் இருப்பீராகில்,
படுகுழியில் இறங்குவோருள் நானும் ஒருவனாகிவிடுவேன்.


2 நான் உம்மிடம் உதவி வேண்டுகையில்,
உமது திருத்தூயகத்தை நோக்கி நான் கையுயர்த்தி வேண்டுகையில்,
பதில் அளித்தருளும்.


3 பொல்லாரோடு என்னை ஒழித்து விடாதேயும்!
தீயவரோடு என்னை அழித்து விடாதேயும்!
அவர்கள் தமக்கு அடுத்திருப்பாரோடு பேசுவதோ சமாதானம்;
அவர்களது உள்ளத்தில் உள்ளதோ நயவஞ்சகம்.


4 அவர்களின் செய்கைக்கேற்ப,
அவர்களின் தீச்செயலுக்கேற்ப,
அவர்களுக்குத் தண்டனை அளியும்;
அவர்கள் கைகள் செய்ய தீவினைகளுக்கேற்ப,
அவர்களுக்குத் தண்டனை வழங்கியருளும்,
அவர்களுக்குத் தகுந்த கைம்மாறு அளித்தருளும். [*]


5 ஏனெனில், ஆண்டவரின் செயல்களையோ
அவர் கைகள் உருவாக்கியவற்றையோ
அவர்கள் மதிக்கவில்லை;
ஆகையால் அவர் அவர்களைத் தகர்த்தெறிவார்;
ஒருபோதும் மீண்டும் கட்டி எழுப்பார்.


6 ஆண்டவர் போற்றி! போற்றி!
ஏனெனில், அவர் என் கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தார்.


7 ஆண்டவர் என் வலிமை, என் கேடயம்;
அவரை என் உள்ளம் நம்புகின்றது;
நான் உதவி பெற்றேன்;
ஆகையால் என் உள்ளம் களிகூர்கின்றது;
நான் இன்னிசை பாடி அவருக்கு நன்றி கூறுவேன்.


8 ஆண்டவர்தாமே தம் மக்களின் வலிமை;
தாம் திருப்பொழிவு செய்தவர்க்கு அவரே பாதுகாப்பான அரண்.


9 ஆண்டவரே, உம் மக்களுக்கு விடுதலை அளித்தருளும்;
உமது உரிமைச் சொத்தான அவர்களுக்கு ஆசி வழங்கும்;
அவர்களுக்கு ஆயராக இருந்து
என்றென்றும் அவர்களைத் தாங்கிக்கொள்ளும்.


குறிப்பு

[*] 28:4 = திவெ 22:12.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 29 முதல் 30 வரை