உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 29 முதல் 30 வரை

விக்கிமூலம் இலிருந்து
அரசர் தாவீது. விவிலிய நுண்ணேட்டு ஓவியம். காலம்: 13-15ஆம் நூற்றாண்டு. இடம்: ஜோர்ஜியா.

திருப்பாடல்கள்

[தொகு]

முதல் பகுதி (1-41)
திருப்பாடல்கள் 29 முதல் 30 வரை

திருப்பாடல் 29

[தொகு]

புயல் நடுவே ஆண்டவரின் குரல்

[தொகு]

(தாவீதின் புகழ்ப்பா)


1 இறைவனின் மைந்தரே!
மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள்.
ஆம்! ஆண்டவருக்கே உரித்தாக்குங்கள்!


2 ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்;
தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். [1]


3 ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது;
மாட்சிமிகு இறைவன் முழங்குகின்றார்;
ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார்.


4 ஆண்டவரின் குரல் வலிமைமிக்கது;
ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது.


5 ஆண்டவரின்குரல் கேதுருமரங்களை முறிக்கின்றது;
ஆண்டவர் லெபனோன் கேதுரு மரங்களை முறித்துவிடுகின்றார்.


6 லெபனோனின் மலையைக் கன்றுக் குட்டியெனத் துள்ளச் செய்கின்றார்;
சிரியோன் மலையைக் காட்டெருமைக் கன்றெனக் குதிக்கச் செய்கின்றார்.


7 ஆண்டவரின் குரல் மின்னலைத் தெறிக்கச் செய்கின்றது.


8 ஆண்டவரின் குரல் பாலைவனத்தை அதிரச் செய்கின்றது;
ஆண்டவர் காதேசு பாலைவனத்தை நடுங்கச் செய்கின்றார்.


9 ஆண்டவரின் குரல் கருவாலி மரங்களை முறித்து விடுகின்றது [*];
காடுகளை வெறுமை ஆக்குகின்றது;
அவரது கோவிலில் உள்ளஅனைவரும்
'இறைவனுக்கு மாட்சி' என்று ஆர்ப்பரிக்கின்றனர்.


10 ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்;
ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார்.


11 ஆண்டவர் தம் மக்களுக்கு ஆற்றல் அளிப்பாராக!
ஆண்டவர் தம் மக்களுக்கு சமாதானம் அருள்வாராக!
ஆண்டவர் தம் மக்களுக்கு ஆசி வழங்குவாராக!


குறிப்புகள்

[1] 29:1-2 = திபா 96:7-9.
[2] 29:9 'மானைக் கன்று ஈனச் செய்கின்றது' எனவும் பொருள்படும்.


திருப்பாடல் 30

[தொகு]

நன்றி செலுத்தல்

[தொகு]

(புகழ்ப்பா; திருக்கோவில் அர்ப்பணப்பா; தாவீதுக்கு உரியது)


1 ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்;
ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்;
என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.


2 என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் உதவி வேண்டினேன்;
என்னை நீர் குணப்படுத்துவீர்.


3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்;
சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர்.


4 இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;
தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.


5 அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்;
அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்;
மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு.


6 நான் வளமுடன் வாழந்தபோது,
'என்னை ஒருபோதும் அசைக்க முடியாது' என்றேன்.


7 ஆனால், ஆண்டவரே!
உமது கருணையினால்
மலையென உறுதியாக என்னை நிலைநிற்கச் செய்தீர்;
உம் முகத்தை மறைத்துக் கொண்டீர்;
நான் நிலைகலங்கிப் போனேன்.


8 ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடினேன்;
என் தலைவரிடம் எனக்கு இரங்குமாறு வேண்டினேன்.


9 நான் சாவதால், படுகுழிக்குப் போவதால் உமக்கு என்ன பயன்?
புழுதியால் உம்மைப் புகழ முடியுமா?
உமது வாக்குப் பிறழாமையை அறிவிக்க இயலுமா?


10 ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்;
என்மீது இரங்கும்;
ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.


11 நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்;
என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்.


12 ஆகவே என் உள்ளம் [*] உம்மைப் புகழ்ந்து பாடும்;
மௌனமாய் இராது;
என் கடவுளாகிய ஆண்டவரே,
உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.


குறிப்பு

[*] 30:12 'மாட்சி' எனவும் பொருள்படும்.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 31 முதல் 32 வரை