உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 43 முதல் 44 வரை

விக்கிமூலம் இலிருந்து
தாவீது அரசர். ஒரு முன்வரைவு. ஓவியர்: ஜூலியா மார்கரட் காமரோன். ஆண்டு: 1866.

திருப்பாடல்கள்

[தொகு]

இரண்டாம் பகுதி (42-72)
திருப்பாடல்கள் 43 முதல் 44 வரை

திருப்பாடல் 43 [*]

[தொகு]

நாடு கடத்தப்பட்டோர் மன்றாட்டு

[தொகு]


1 கடவுளே, என் நேர்மையை நிலைநாட்டும்;
இறைப்பற்றில்லா இனத்தோடு என் வழக்குக்காக வாதிடும்;
வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த மனிதர் கையினின்று
என்னை விடுவித்தருளும்.


2 ஏனெனில் கடவுளே! நீரே என் ஆற்றல்;
ஏன் என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்?
எதிரியால் ஒடுக்கப்பட்டு,
நான் ஏன் துயருடன் நடமாட வேண்டும்?


3 உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்;
அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும்
உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும்.


4 அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்;
என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்;
கடவுளே! என் கடவுளே!
யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன்.


5 என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்?
நீ கலக்கமுறுவது ஏன்?
கடவுளையே நம்பியிரு;
என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு
இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்.


குறிப்பு

[*] 43 = திபா 42இன் தொடர்ச்சி.


திருப்பாடல் 44

[தொகு]

பாதுகாப்புக்காக வேண்டல்

[தொகு]

(பாடகர் தலைவனுக்கு;
கோராகியரின் அறப்பாடல்)


1 கடவுளே, எங்கள் காதுகளால் நாங்களே கேட்டிருக்கின்றோம்;
எங்கள் மூதாதையர் அவர்கள் காலத்திலும் அதற்குமுன்பும்
நீர் என்னென்ன செய்துள்ளீர் என்று எங்களுக்கு எடுத்துரைத்தனர்.


2 உமது கையால் வேற்றினத்தாரை விரட்டியடித்து,
எந்தையரை நிலைநாட்டினீர்;
மக்களினங்களை நொறுக்கிவிட்டு எந்தையரைச் செழிக்கச் செய்தீர்.


3 அவர்கள் தங்கள் வாளால் நாட்டை உடைமையாக்கிக் கொள்ளவில்லை;
அவர்கள் தங்கள் புயத்தால் வெற்றி பெறவில்லை.
நீர் அவர்களில் மகிழ்ச்சியுற்றதால் உமது வலக்கையும் உமது புயமும்
உமது முகத்தின் ஒளியுமே அவர்களுக்கு வெற்றியளித்தன.


4 நீரே என் அரசர்; நீரே என் கடவுள்!
யாக்கோபுக்கு வெற்றி அளிப்பவர் நீரே.


5 எங்கள் பகைவர்களை உமது துணையால் தாக்கி வீழ்த்துவோம்;
எங்களுக்கு எதிராய் எழுந்தோரை
உமது பெயரால் மிதித்துப் போடுவோம்.


6 என் வில்லை நான் நம்புவதில்லை;
என் வாள் என்னைக் காப்பாற்றுவதுமில்லை.


7 நீரே பகைவரிடமிருந்து எங்களைக் காப்பாற்றினீர்;
எங்களை வெறுப்போரை வெட்கமுறச் செய்தீர்.


8 எந்நாளும் கடவுளாம் உம்மை நினைத்துப் பெருமை கொண்டோம்.
என்றென்றும் உமது பெயருக்கு நன்றி செலுத்திவந்தோம். (சேலா)


9 ஆயினும், இப்போது நீர் எங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்;
இழிவுபடுத்திவிட்டீர்.
எங்கள் படைகளுடன் நீர் செல்லாதிருக்கின்றீர்.


10 எங்கள் பகைவருக்கு நாங்கள் புறங்காட்டி ஓடும்படிச் செய்தீர்.
எங்களைப் பகைப்போர் எங்களைக் கொள்ளையிட்டனர்.


11 உணவுக்காக வெட்டப்படும் ஆடுகளைப்போல்
எங்களை ஆக்கிவிட்டீர்.
வேற்றினத்தாரிடையே எங்களை சிதறியோடச் செய்தீர்.


12 நீர் உம் மக்களை அற்ப விலைக்கு விற்றுவிட்டீர்;
அவர்கள் மதிப்பை மிகவும் குறைத்துவிட்டீர்.


13 எங்களை அடுத்து வாழ்வோரின் பழிப்புக்கு
எங்களை ஆளாக்கினீர்;
எங்கள் சுற்றுப்புறத்தாரின் ஏளனத்துக்கும்
இகழ்ச்சிக்கும் எங்களை உள்ளாக்கினீர்.


14 வேற்றினத்தாரிடையே எங்களை ஒரு பழிச்சொல்லாக்கினீர்;
ஏனைய மக்கள் எங்களைப் பார்த்துத் தலையசைத்து நகைக்கின்றனர்.


15 எனக்குள்ள மானக்கேடு நாள்முழுதும் என்கண்முன் நிற்கின்றது;
அவமானம் என் முகத்தை மூடியுள்ளது.


16 என்னைப் பழித்துத் தூற்றுவோரின் குரலை நான் கேட்கும்போதும்,
என் எதிரிகளையும், என்னைப் பழிவாங்கத் தேடுவோரையும்
நான் பார்க்கும்போதும் வெட்கிப்போகின்றேன்.


17 நாங்கள் உம்மை மறக்காவிடினும்,
உமது உடன்படிக்கையை மீறாவிடினும்,
இவையெல்லாம் எங்களுக்கு நேரிட்டன.


18 எங்கள் உள்ளம் பின்வாங்கவில்லை;
எங்கள் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை.


19 ஆயினும், நீர் எங்களைக் கொடிய பாம்புகள் உள்ள இடத்தில்
நொறுங்கும்படி விட்டுவிட்டீர்;
சாவின் இருள் எங்களைக் கவ்விக்கொண்டது.


20 நாங்கள் எங்கள் கடவுளின் பெயரை மறந்துவிட்டு,
வேற்றுத் தெய்வத்தைக் கைகூப்பி வணங்கியிருந்தோமானால்,


21 கடவுளாம் நீர் அதைக் கண்டுபிடித்திருப்பீர் அல்லவா?
ஏனெனில், உள்ளத்தில் புதைந்திருப்பவற்றை நீர் அறிகின்றீர்.


22 உம் பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகின்றோம்;
வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளெனக் கருதப்படுகின்றோம். [*]


23 என் தலைவா! கிளர்ந்தெழும், ஏன் உறங்குகின்றீர்?
விழித்தெழும்; எங்களை ஒருபோதும் ஒதுக்கித் தள்ளிவிடாதேயும்.


24 நீர் உமது முகத்தை ஏன் மறைத்துக் கொள்கின்றீர்?
எங்கள் சிறுமையையும் துன்பத்தையும் ஏன் மறந்து விடுகின்றீர்?


25 நாங்கள் தரைமட்டும் தாழ்ந்துவிட்டோம்;
எங்கள் உடல் மண்ணோடு ஒட்டிக்கொண்டுள்ளது.


26 எழுந்துவாரும்; எங்களுக்குத் துணை புரியும்;
உமது பேரன்பை முன்னிட்டு எங்களை மீட்டருளும்.


குறிப்பு

[*] 44:22 = உரோ 8:36.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 45 முதல் 46 வரை