திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 45 முதல் 46 வரை

விக்கிமூலம் இலிருந்து
தாவீது அரசர். கோவில் நிறப்பதிகைக் கண்ணாடி ஓவியம். ஆண்டு: 1920.

திருப்பாடல்கள்[தொகு]

இரண்டாம் பகுதி (42-72)
திருப்பாடல்கள் 45 முதல் 46 வரை

திருப்பாடல் 45[தொகு]

அரசரின் திருமணப்பாடல்[தொகு]

(பாடகர் தலைவர்க்கு;
'லீலி மலர்கள்' என்ற மெட்டு;
கோராகியரின் அறப்பாடல்;
காதல் பாடல்)


1 மன்னரைக் குறித்து யான் கவிதை புனைகின்ற போழ்து,
இனியதொரு செய்தியால் என் நெஞ்சம் ததும்பி வழிகின்றது;
திறன்மிகு கவிஞரின் எழுதுகோலென என் நாவும் ஆகிடுமே!


2 மானிட மைந்தருள் பேரழகுப் பெருமகன் நீர்;
உம் இதழினின்று அருள்வெள்ளம் பாய்ந்துவரும்;
கடவுள் உமக்கு என்றென்றும் ஆசி வழங்குகின்றார்.


3 வீரமிகு மன்ன! மாட்சியொடு உம் மாண்பும் துலங்கிடவே,
உம் இடையினிலே வீரவாள் தாங்கி வாரும்!


4 உண்மையைக் காத்திட,
நீதியை நிலைநாட்டிட,
மாண்புடன் வெற்றிவாகை சூடி வாரும்!
உம் வலக்கை அச்சமிகு செயல்களை ஆற்றுவதாக!


5 உம்முடைய கணைகள் கூரியன;
மன்னர்தம் மாற்றாரின் நெஞ்சினிலே பாய்வன;
மக்களெல்லாம் உம் காலடியில் வீழ்ந்திடுவர்.


6 இறைவனே, என்றுமுளது உமது அரியணை;
உமது ஆட்சியின் செங்கோல் வளையாத செங்கோல்.


7 நீதியே உமது விருப்பம்; [*]
அநீதி உமக்கு வெறுப்பு;
எனவே கடவுள், உமக்கே உரிய கடவுள்,
மகிழ்ச்சியின் நெய்யால் உமக்குத் திருப்பொழிவு செய்து,
உம் அரசத் தோழரினும் மேலாய் உம்மை உயர்த்தினார்.


8 நறுமணத் துகள், அகிலொடு
இலவங்கத்தின் மணங்கமழும் உம் ஆடையெலாம்;
தந்தம் இழைத்த மாளிகைதனிலே
யாழிசை உம்மை மகிழ்விக்கும்.


9 அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்;
ஓபீரின் பொன் அணிந்து
வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!


10 கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்!
உன் இனத்தாரை மறந்துவிடு;
பிறந்தகம் மறந்துவிடு.


11 உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்;
உன் தலைவர் அவரே;
அவரைப் பணிந்திடு!


12 தீர் நகர மக்கள் பரிசில் பல ஏந்தி நிற்பர்;
செல்வமிகு சீமான்கள் உன்னருள் வேண்டி நிற்பர்.


13 அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி
தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள்.


14 பலவண்ணப் பட்டுடுத்தி
மன்னரிடம் அவளை அழைத்து வருவர்;
கன்னித் தோழியர் புடைசூழ
அவள் அடியெடுத்து வந்திடுவாள்.


15 மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது
அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர்.


16 உம் தந்தையரின் அரியணையில்
உம் மைந்தரே வீற்றிருப்பர்;
அவர்களை நீர் உலகுக்கெலாம் இளவரசர் ஆக்கிடுவீர்.


17 என் பாடல் வழிவழியாய்
உம் பெயரை நிலைக்கச் செய்யும்;
ஆகையால், எல்லா இனத்தாரும் உமை வாழ்த்திடுவர்.


குறிப்பு

[*] 45:6-7 = எபி 1:8-9.


திருப்பாடல் 46[தொகு]

நம்மோடு வாழும் கடவுள்[தொகு]

(பாடகர் தலைவர்க்கு;
கோராகியரின் பாடல்;
'இளமகளிர்' என்ற மெட்டு)


1 கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்;
இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே.
2 ஆகையால், நிலவுலகம் நிலைகுலைந்தாலும்,
மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும்,
3 கடலின் அலைகள் கொந்தளித்துப் பொங்கினாலும்,
அவற்றின் பெருக்கால் குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும்
எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. (சேலா)
4 ஆறு ஒன்று உண்டு,
அதன் கால்வாய்கள்
உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப்
பேரின்பம் அளிக்கின்றன.
5 அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்;
அது ஒருபோதும் நிலைகுலையாது;
வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு.
6 வேற்றினத்தார் கலக்கமுற்றனர்;
அரசுகள் ஆட்டம் கண்டன;
கடவுளின் குரல் முழங்கிற்று;
பூவுலகம் கரைந்தது.
7 படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்;
யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். (சேலா)
8 வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்!
அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்!
9 உலகின் கடையெல்லைவரை
போர்களைத் தடுத்து நிறுத்துகின்றார்;
வில்லை ஒடிக்கின்றார்;
ஈட்டியை முறிக்கின்றார்.
தேர்களைத் தீக்கு இரையாக்குகின்றார்.
10 அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள்;
வேற்றினத்தாரிடையே நான் உயர்ந்திருப்பேன்;
பூவுலகில் நானே மாட்சியுடன் விளங்குவேன்.
11 படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்;
யாக்கோபின் கடவுளே நமக்கு அரண்.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 47 முதல் 48 வரை