திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 83 முதல் 84 வரை

விக்கிமூலம் இலிருந்து
இறைவேண்டலில் ஈடுபட்டிருக்கும் அரசர் தாவீது. ஓவியர்: டெ க்ரெப்பர் (1600-1652). காப்பிடம்: ஊட்ரெக்ட், ஓலாந்து.

திருப்பாடல்கள்[தொகு]

மூன்றாம் பகுதி (73-89)
திருப்பாடல்கள் 83 முதல் 84 வரை

திருப்பாடல் 83[தொகு]

இஸ்ரயேலின் எதிரிகளது வீழ்ச்சிக்காக மன்றாடல்[தொகு]

(ஆசாபின் புகழ்ப்பாடல்)


1 கடவுளே! மௌனமாய் இராதேயும்;
பேசாமல் இராதேயும்;
இறைவனே! அமைதியாய் இராதேயும்.


2 ஏனெனில், உம் எதிரிகள் அமளி செய்கின்றார்கள்;
உம்மை வெறுப்போர் தலைதூக்குகின்றார்கள்.


3 உம் மக்களுக்கு எதிராக
வஞ்சகமாய்ச் சதி செய்கின்றார்கள்;
உம் பாதுகாப்பில் உள்ளோர்க்கு எதிராகச்
சூழ்ச்சி செய்கின்றார்கள்.


4 அவர்கள் கூறுகின்றார்கள்:
'ஓர் இனமாக அவர்களை இல்லாதவாறு ஒழித்திடுவோம்;
இஸ்ரயேலின் பெயரை எவரும் நினையாதவாறு செய்திடுவோம்.'


5 அவர்கள் ஒருமனப்பட்டுச் சதி செய்கின்றார்கள்;
உமக்கு எதிராக உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.


6 ஏதோமின் கூடாரத்தார், இஸ்மயேலர்,
மோவாபியர், அக்ரியர்,


7 கெபாலியர், அம்மோனியர், அமலேக்கியர்,
பெலிஸ்தியர் மற்றும் தீர்வாழ் மக்களே அவர்கள்.


8 அவர்களோடு அசீரியரும் சேர்ந்துகொண்டு,
லோத்தின் மைந்தருக்கு வலக் கையாய் இருந்தனர்.


9 மிதியானுக்கும், கீசோன் ஆற்றின் அருகே
சீசராவுக்கும் யாபீனுக்கும் செய்தது போல,
அவர்களுக்கும் செய்தருளும். [1]


10 அவர்கள் ஏந்தோரில் அழிக்கப்பட்டார்கள்;
அவர்கள் மண்ணுக்கு உரமானார்கள்.


11 ஓரேபுக்கும் செயேபுக்கும் செய்தது போல்
அவர்களின் உயர்குடி மக்களுக்கும் செய்தருளும்!
செபாருக்கும் சல்முன்னாவுக்கும் செய்ததுபோல்
அவர்களின் தலைவர்களுக்கும் செய்தருளும். [2]


12 ஏனெனில், 'கடவுளின் மேய்ச்சல் நிலத்தை
நமக்கு உரிமையாக்கிக் கொள்வோம்'
என்று அவர்கள் கூறினார்கள்.


13 என் கடவுளே! சூறாவளியில் புழுதியென,
காற்றில் பதரென அவர்களை ஆக்கியருளும்.


14 நெருப்பு காட்டை எரிப்பது போலவும்,
தீக்கனல் மலைகளைச் சுட்டெரிப்பது போலவும்
அவர்களுக்குச் செய்தருளும்.


15 உமது புயலால் அவர்களைத் துரத்திவிடும்!
உமது சூறாவழியால் அவர்களைத் திகிலடையச் செய்யும்.


16 ஆண்டவரே, மானக்கேட்டினால் அவர்கள் முகத்தை மூடும்;
அப்பொழுதுதான் அவர்கள் உமது பெயரை நாடுவார்கள்.


17 அவர்கள் என்றென்றும் வெட்கிக் கலங்குவார்களாக!
நாணமுற்று அழிந்து போவார்களாக!


18 'ஆண்டவர்' என்னும் பெயர் தாங்கும் உம்மை,
உலகனைத்திலும் உன்னதரான உம்மை,
அவர்கள் அறிந்து கொள்வார்களாக!


குறிப்புகள்

[1] 83:9 = நீத 4:6-22; 7:1-23.
[2] 83:11 = நீத 7:25; 8:12.


திருப்பாடல் 84[தொகு]

திருக்கோவிலுக்காக ஏங்குதல்[தொகு]

(பாடகர் தலைவர்க்கு; 'காத்து' நகர்ப் பண்;
கோராகியரின் புகழ்ப்பா)


1 படைகளின் ஆண்டவரே!
உமது உறைவிடம் எத்துணை அருமையானது!


2 என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக
ஏங்கித் தவிக்கின்றது;
என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை
மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.


3 படைகளின் ஆண்டவரே! என் அரசரே!
என் கடவுளே!
உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது;
தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச்
சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது.


4 உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்;
அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.


5 உம்மிடருந்து வலிமை பெற்ற மானிடர் பேறு பெற்றோர்;
அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும்
நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது.


6 வறண்ட 'பாக்கா' பள்ளத்தாக்கை அவர்கள் கடந்து செல்கையில்,
அது நீருற்றுகள் உள்ள இடமாக மாறுகின்றது;
முதல் பருவமழை அதனை நீர்நிலைகள் நிறைந்த இடமாக்கும்.


7 அவர்கள் நடந்து செல்கையில்
மேலும் மேலும் வலிமை பெறுகின்றார்கள்;
பின்பு, சீயோனின் தெய்வங்களின் இறைவனைக் காண்பார்கள்.


8 படைகளின் ஆண்டவரே,
என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்!
யாக்கோபின் கடவுளே!
எனக்குச் செவிசாய்த்தருளும்! (சேலா)


9 எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்!
நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக்
கனிவுடன் பாரும்!


10 வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும்
உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒருநாளே மேலானது;
பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும்,
என் கடவுளது இல்லத்தின்
வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது.


11 ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் நமக்குக்
கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்;
ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்;
மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு
நன்மையானவற்றை வழங்குவார்.


12 படைகளின் ஆண்டவரே!
உம்மை நம்பும் மானிடர் நற்பேறு பெற்றோர்!


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 85 முதல் 86 வரை