திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 87 முதல் 88 வரை
திருப்பாடல்கள்
[தொகு]மூன்றாம் பகுதி (73-89)
திருப்பாடல்கள் 87 முதல் 88 வரை
திருப்பாடல் 87
[தொகு]பெருமைமிகு எருசலேம்
[தொகு](கோராகியின் புகழ்ப் பாடல்)
1 நகரின் அடித்தளம்
திருமலைகளின்மீது அமைந்துள்ளது.
2 யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும்விட
ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார்.
3 கடவுளின் நகரே! உன்னைப்பற்றி
மேன்மையானவை பேசப்படுகின்றன. (சேலா)
4 எகிப்தையும் பாபிலோனையும்
என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்;
பெலிஸ்தியர், தீர் மற்றும்
எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து,
'இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்' என்று கூறப்படும்.
5 'இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்;
உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!' என்று
சீயோனைப்பற்றிச் சொல்லப்படும்.
6 மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது,
'இவர் இங்கேதான் பிறந்தார்' என ஆண்டவர் எழுதுவார். (சேலா)
7 ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து
'எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது;
எல்லாரின் உறைவிடமும் உன்னிடமே உள்ளது' என்பர்.
திருப்பாடல் 88
[தொகு]உதவிக்காக வேண்டல்
[தொகு](கோராகியரின் புகழ்ப்பாடல்;
பாடகர் தலைவர்க்கு;
'நோயின் துயரில்'
என்ற மெட்டு;
எஸ்கியரான ஏமானின் அறப்பாடல்)
1 ஆண்டவரே! என் மீட்பின் கடவுளே!
பகலில் கதறுகிறேன்;
இரவில் உமது முன்னிலையில் புலம்புகின்றேன்.
2 என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக!
என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்!
3 ஏனெனில், என் உள்ளம் துன்பத்தால் நிறைந்துள்ளது;
என் உயிர் பாதாளத்தை நெருங்கிவிட்டது.
4 படுகுழிக்குள் இறங்குவோருள் ஒருவராக
நானும் கணிக்கப்படுகின்றேன்;
வலுவிழந்த மனிதரைப்போல் ஆனேன்.
5 இறந்தோருள் ஒருவராகக் கைவிடப்பட்டேன்;
கொலையுண்டு கல்லறையில் கிடப்பவர்போல் ஆனேன்;
அவர்களை ஒருபோதும் நீர் நினைப்பதில்லை;
அவர்கள் உமது பாதுகாப்பினின்று அகற்றப்பட்டார்கள்.
6 ஆழமிகு படுகுழிக்குள் என்னைத் தள்ளிவிட்டீர்!
காரிருள் பள்ளங்களுக்குள் என்னைக் கைவிட்டு விட்டீர்.
7 உமது சினம் என்னை அழுத்துகின்றது;
உம் அலைகள் அனைத்தும் என்னை வருத்துகின்றன. (சேலா)
8 எனக்கு அறிமுனமானவர்களை என்னைவிட்டு விலகச்செய்தீர்;
அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்;
நான் வெளியேற இயலாவண்ணம் அடைபட்டுள்ளேன்.
9 துயரத்தினால் என் கண் மங்கிப்போயிற்று;
ஆண்டவரே! நாள்தோறும் உம்மை மன்றாடுகின்றேன்;
உம்மை நோக்கி என் கைகளைக் கூப்புகின்றேன்.
10 இறந்தோர்க்காகவா நீர் வியத்தகு செயல்கள் செய்வீர்?
கீழுலகின் ஆவிகள் எழுந்து உம்மைப் புகழுமோ? (சேலா)
11 கல்லறையில் உமது பேரன்பு எடுத்துரைக்கப்படுமா?
அழிவின் தலத்தில் உமது உண்மை அறிவிக்கப்படுமா?
12 இருட்டினில் உம் அருஞ்செயல்கள் அறியப்படுமா?
மறதி உலகில் உம் நீதிநெறி உணரப்படுமா?
13 ஆண்டவரே! நானோ உம்மை நோக்கிக் கதறுகின்றேன்;
காலையில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்.
14 ஆண்டவரே! என்னை ஏன் தள்ளிவிடுகின்றீர்?
உமது முகத்தை என்னிடமிருந்து ஏன் மறைக்கின்றீர்?
15 என் இளமைமுதல் நான் துன்புற்று
மடியும் நிலையில் உள்ளேன்;
உம்மால் வந்த பெருந் திகிலால் தளர்ந்து போனேன்.
16 உமது வெஞ்சினம் என்னை மூழ்கடிக்கின்றது;
உம் அச்சந்தரும் தாக்குதல்கள் என்னை அழிக்கின்றன.
17 அவை நான்முழுவதும் வெள்ளப்பெருக்கென
என்னைச் சூழ்ந்து கொண்டன;
அவை எப்பக்கமும் என்னை வளைத்துக்கொண்டன.
18 என் அன்பரையும் தோழரையும் என்னைவிட்டு அகற்றினீர்;
இருளே என் நெருங்கிய நண்பன்.
(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 89 முதல் 90 வரை