உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தொடக்க நூல் (ஆதியாகமம்)/அதிகாரங்கள் 10 முதல் 12 வரை

விக்கிமூலம் இலிருந்து
பாபேல் கோபுரம் (தொநூ 11) - டேவிட் ஹம்பர்ட் ஓவியம்

தொடக்க நூல்

[தொகு]

அதிகாரங்கள் 10 முதல் 12 வரை

அதிகாரம் 10

[தொகு]
நிம்ரோது மன்னன் தூபிகளுக்கு முன்பு - ஹென்றிக் க்ளீவ் ஓவியம், 1560

(1 குறி 1:5-23)

  1. நோவாவின் புதல்வர் சேம், காம், எப்பேத்து ஆகியோரின் வழிமரபினர் இவர்களே. வெள்ளப் பெருக்குக்குப்பின் அவர்களுக்குப் புதல்வர் பிறந்தனர்.
  2. எப்பேத்தின் புதல்வர்: கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மெசேக்கு, தீராசு.
  3. கோமேரின் புதல்வர்: அஸ்கனாசு, இரிபாத்து, தோகர்மா.
  4. யாவானின் புதல்வர்: எலிசா, தர்சீசு, கித்திம், தோதானிம்.
  5. இவர்கள் வழிவந்த கடற்கரை நாட்டினர் மொழி, குடும்ப, இனவாரியாகப் பிரிந்து தம் நாடுகளில் பரவினர்.
  6. காமின் புதல்வர்: கூசு, எகிப்து, பூற்று, கானான்.
  7. கூசின் புதல்வர்: செபா, அவிலா, சப்தா, இராமா, சப்தக்கா. இராமாவின் புதல்வர்: சேபா, தெதான்.
  8. மேலும் கூசுக்கு நிம்ரோது பிறந்தான். இவன்தான் முதன்முதலாக உலகத்தில் பேராற்றல் கொண்டவனாக விளங்கியவன்.
  9. ஆண்டவர் திருமுன் இவன் ஆற்றல்மிக்க வேடனாக இருந்தான். இதனால் "ஆண்டவர் திருமுன் நிம்ரோதைப் போன்ற ஆற்றல்மிக்க வேடன்" என்ற வழக்கு ஏற்படலாயிற்று.
  10. முதன்முதலில் சினயார் நாட்டிலிருந்த பாபேல், எரேக்கு, அக்காது, கல்னே ஆகியவை அவன் ஆட்சிக்குள் வந்தன.
  11. அந்நாட்டிலிருந்து அசீரியா நாட்டுக்குச் சென்று, அங்கே நினிவே, இரகபோத்து, காலாகு ஆகிய நகரங்களை அமைத்தான்.
  12. நினிவேக்கும் காலாகிற்கும் இடையே மிகப்பெரிய நகரமாகிய இரசேனை அவன் நிறுவினான்.
  13. எகிப்தின் புதல்வர்: லூதிம், அனாமிம், இலகாபிம், நப்துகிம்,
  14. பத்ருசிம், பெலிஸ்தியரின் மூதாதையரான கஸ்லுகிம், கப்தோரிம்.
  15. கானானின் தலைமகன் சீதோன். ஏனைய புதல்வர்: ஏத்து,
  16. எபுசி, எமோரி, கிர்காசி,
  17. இவ்வி, அற்கி, சீனி,
  18. அர்வாது, செமாரி, அமாத்தி. இந்தக் கானானின் குடும்பங்கள் பின்னர் பிரிந்து பரவலாயின.
  19. கானானியர் நாட்டு எல்லை சீதோனிலிருந்து தெற்கே கெரார் செல்லும் திசையில் காஸாவரையும் கிழக்கில் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் செல்லும் திசையில் இலாசா வரையும் பரவியிருந்தது.
  20. இவை காம் புதல்வரின் குடும்ப, மொழி, நாடு, இனவாரியான பிரிவுகள்.
  21. எப்பேத்தின் மூத்த சகோதரன் சேமுக்குப் புதல்வர் பிறந்தனர். சேம் ஏபேரியரின் முதுபெருந்தந்தை.
  22. சேமின் ஏனைய புதல்வர்: ஏலாம், அசீரியா, அர்பகசாது, லூது, ஆராம்.
  23. ஆராமின் புதல்வர்: ஊசு, ஊல், கெத்தெர், மாசு.
  24. அர்பகசாதுக்குச் செலாகு பிறந்தான். செலாகிற்கு ஏபேர் பிறந்தான்.
  25. ஏபேருக்கு புதல்வர் இருவர் பிறந்தனர்; ஒருவனின் பெயர் பெலேக்கு. ஏனெனில், அவன் காலத்தில்தான் உலக மக்கள் பிரிந்தனர். அவன் சகோதரனின் பெயர் யோக்தான்.
  26. யோக்தானின் புதல்வர்: அல்மோதாது, செலேபு, அட்சர்மாவேத்து, எராகு,
  27. அதோராம், ஊசால், திக்லா,
  28. ஓபால், அபிமாவேல், சேபா,
  29. ஓபீர், அவிலா, யோபாபு.
  30. அவர்கள் வாழ்ந்த நாடு மேசாவிலிருந்து கிழக்கே செப்பார் செல்லும் திசையில் இருந்த மலைநாடுவரை பரவியிருந்தது.
  31. இவை சேம் புதல்வரின் குடும்ப, மொழி, நாட்டு, இனவாரியான பிரிவுகள்.
  32. இவை நோவா புதல்வரின் வழிவந்த குடும்பங்களின் இனவாரியான தலைமுறைகள். இவர்கள் வழிவந்த மக்களினங்களே வெள்ளப் பெருக்கிற்குப் பின் உலகின் எல்லா நாடுகளிலும் பரவின.

அதிகாரம் 11

[தொகு]
பாபேல் கோபுரம் கட்டப்படுதல் - பீட்டர் ப்ரூகல் ஓவியம், பதினாறாம் நூற்றாண்டு
  1. அப்பொழுது உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன.
  2. மக்கள் கிழக்கிலிருந்து புறப்பட்டு வந்து சினயார் நாட்டில் சமவெளி ஒன்றைக் கண்டு, அங்கே குடியேறினர்.
  3. அப்பொழுது அவர்கள், ஒருவரை ஒருவர் நோக்கி, "வாருங்கள், நாம் செங்கற்கள் அறுத்து அவற்றை நன்றாகச் சுடுவோம்" என்றனர். அவர்கள் செங்கல்லைக் கல்லாகவும் கீலைக் காரையாகவும் பயன்படுத்தினர்.
  4. பின், அவர்கள் "வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி, நமது பெயரை நிலை நாட்டுவோம்" என்றனர்.
  5. மானிடர் கட்டிக்கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார்.
  6. அப்பொழுது ஆண்டவர், "இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர். அவர்கள் செய்யவிருப்பதன் தொடக்கமே இது! அவர்கள் திட்டமிட்டுச் செய்யவிருப்பது எதையும் இனித் தடுத்து நிறுத்த முடியாது.
  7. வாருங்கள், நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்" என்றார்.
  8. ஆண்டவர் அவர்களை அங்கிருந்து உலகம் முழுவதிலும் சிதறுண்டுபோகச் செய்ததால் அவர்கள் நகரைத் தொடர்ந்து கட்டுவதைக் கைவிட்டனர்.
  9. ஆகவே அது "பாபேல்" என்று வழங்கப்பட்டது. ஏனெனில் அங்கே ஆண்டவர் உலகெங்கும் வழங்கி வந்த மொழியில் குழப்பத்தை உண்டாக்கினார். அங்கிருந்து அவர்களை ஆண்டவர் உலகம் முழுவதிலும் சிதறுண்டு போகச் செய்தார்.
  10. சேமின் தலைமுறைகள் இவையே: வெள்ளப் பெருக்கிற்கு இரண்டு ஆண்டுகளுக்குப்பின் சேம் நூறு வயதாக இருந்தபொழுது அவனுக்கு அர்பகசாது பிறந்தான்.
  11. அர்பகசாது பிறந்தபின் சேம் ஐந்நூறு ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது சேமுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
  12. அர்பகசாது முப்பத்தைந்து வயதாக இருந்தபொழுது அவனுக்குச் செலாகு பிறந்தான்.
  13. செலாகு பிறந்த பின் அர்பகசாது நானூற்று மூன்று ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது அர்பகசாதுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
  14. செலாகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு ஏபேர் பிறந்தான்.
  15. ஏபேர் பிறந்தபின் செலாகு நானூற்று மூன்று ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது செலாகிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
  16. ஏபேர் முப்பத்து நான்கு வயதாக இருந்தபொழுது அவனுக்குப் பெலேகு பிறந்தான்.
  17. பெலேகு பிறந்தபின் ஏபேர் நானூற்று முப்பது ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது ஏபேருக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
  18. பெலேகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு இரயு பிறந்தான்.
  19. இரயு பிறந்தபின் பெலேகு இருநூற்று ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது பெலேகிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
  20. இரயு முப்பத்திரண்டு வயதாக இருந்தபொழுது அவனுக்குச் செரூகு பிறந்தான்.
  21. செரூகு பிறந்தபின் இரயு இருநூற்று ஏழு ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது இரயுவுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
  22. செரூகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு நாகோர் பிறந்தான்.
  23. நாகோர் பிறந்தபின் செரூகு இருநூறு ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது செரூகுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
  24. நாகோர் இருபத்தொன்பது வயதாக இருந்தபொழுது அவனுக்குத் தெராகு பிறந்தான்.
  25. தெராகு பிறந்தபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது நாகோருக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
  26. தெராகு எழுபது வயதாக இருந்தபொழுது அவனுக்கு ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர்.#
  27. தெராகின் தலைமுறைகள் இவையே: தெராகிற்கு ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர். ஆரானுக்கு லோத்து பிறந்தான்.
  28. ஆரான் தான் பிறந்த நாட்டில் ஊர் என்ற கல்தேயர் நகரில் தன் தந்தை தெராகிற்கு முன்பே இறந்தான்.
  29. ஆபிராமும், நாகோரும் பெண் கொண்டனர். ஆபிராமின் மனைவி பெயர் சாராய். நாகோரின் மனைவி பெயர் மில்கா. மில்கா ஆரானின் மகள். மில்கா, இசுக்கா ஆகியோரின் தந்தை ஆரான்.
  30. சாராய் குழந்தைப்பேறு இல்லாமல் மலடியாய் இருந்தார்.
  31. தெராகு தம் மகன் ஆபிராமையும், தம் மகன் ஆரானின் புதல்வன் லோத்தையும், தம் மருமகளும் தம் மகன் ஆபிராமின் மனைவியுமான சாராயையும் அழைத்துக் கொண்டு ஊர் என்ற கல்தேயர் நகரை விட்டுக் கானான் நாட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். காரான் என்ற இடத்திற்கு வந்ததும் அங்கேயே அவர்கள் தங்கி வாழலாயினர்.
  32. தெராகு இருநூற்று ஐந்து வயதாக இருந்தபொழுது காரானில் இறந்தார்.

அதிகாரம் 12

[தொகு]
பார்வோன் மன்னன் சாராவை ஆபிராமுக்கு திருப்புதல் - ஐசக் ஐசக்ஸ் ஓவியம், 1640
  1. ஆண்டவர் ஆபிராமை நோக்கி, "உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். [1]
  2. உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்.
  3. உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்" என்றார். [2]
  4. ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். ஆபிராம் ஆரானைவிட்டுச் சென்றபொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து.
  5. ஆபிராம் தம் மனைவி சாராயையும் தம் சகோதரன் லோத்தையும் உடனழைத்துச் சென்றார். அவர்கள் ஆரானில் சேர்த்திருந்த செல்வத்துடனும், வைத்திருந்த ஆள்களுடனும் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அந்நாட்டைச் சென்றடைந்தனர்.
  6. ஆபிரகாம் அந்நாட்டில் நுழைந்து செக்கேமில் இருந்த மோரேயின் கருவாலி மரத்தை அடைந்தார். அப்பொழுது கானானியர் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர்.
  7. ஆண்டவர் ஆபிராமுக்குத் தோன்றி, "உன் வழிமரபினர்க்கு இந்நாட்டைக் கொடுப்பேன்" என்றார். ஆகவே தமக்குத் தோன்றிய ஆண்டவருக்கு அங்கே அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பினார். [3]
  8. ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, பெத்தேலுக்குக் கிழக்கே இருந்த மலைப்பக்கம் சென்று பெத்தேலுக்கு மேற்கே ஆயிக்குக் கிழக்கே கூடாரம் அமைத்துக் குடியிருந்தார். அங்கே ஆண்டவருக்கு அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பி ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார்.
  9. இவ்வாறு ஆபிராம் படிப்படியாக நெகேபு நோக்கிப் பயணம் செய்தார்.
  10. அப்பொழுது அந்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சம் கடுமையாக இருந்ததால், ஆபிராம் தாம் தங்கி வாழ்வதற்கு எகிப்து நாட்டிற்குச் சென்றார்.
  11. அவர் எகிப்தை நெருங்கிய பொழுது தம் மனைவி சாராயிடம், "நீ கண்ணுக்கு அழகானவள் என்பது எனக்குத் தெரியும்.
  12. எகிப்தியர் உன்னைக் காணும்பொழுது 'இவள் அவனுடைய மனைவி' எனச் சொல்லி என்னைக் கொன்று விடுவர்; உன்னையோ உயிரோடு விட்டுவிடுவர்.
  13. உன் பொருட்டு எனக்கு நல்லது நடக்கவும் உன்னால் என் உயிர் காப்பாற்றப்படவும் நீ என் சகோதரி எனச் சொல்லி விடு" என்றார். [4]
  14. ஆபிராம் எகிப்தைச் சென்றடைந்தபொழுது, சாராய் மிகவும் அழகானவராக இருப்பதை எகிப்தியர் கண்டனர்.
  15. பார்வோனின் மேலதிகாரிகள் அவரைக் கண்டு அவரைப்பற்றிப் புகழ்ந்தனர். ஆகவே, அவர் பார்வோனின் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
  16. அவர் பொருட்டு ஆபிராமுக்குப் பார்வோன் நன்மை செய்தான்: ஆடு மாடுகளையும் கழுதைகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், பெண் கழுதைகளையும் ஒட்டகங்களையும் அவருக்குக் கொடுத்தான்.
  17. ஆனால் ஆண்டவர் ஆபிராமின் மனைவி சாராய்க்கு நேரிட்டதை முன்னிட்டுப் பார்வோனையும் அவன் குடும்பத்தாரையும் கொடிய கொள்ளை நோய்களால் துன்பப்படுத்தினார்.
  18. பார்வோன் ஆபிராமை அழைத்து அவரிடம், "நீ எனக்கு இப்படிச் செய்து விட்டாயே! அவள் உன் மனைவி என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை?
  19. அவள் உன் சகோதரி என்று நீ ஏன் சொன்னாய்?அதனால்தான் நான் அவளை என் மனைவியாக எடுத்துக் கொண்டேன்! இப்பொழுதே, உன் மனைவியைக் கூட்டிக்கொண்டு புறப்படு" என்றான்.
  20. பின் பார்வோன் தன் ஆள்களுக்குக் கட்டளையிட அவர்கள் அவரை அவர் மனைவியுடனும் அவருக்குரிய எல்லாவற்றுடனும் அனுப்பிவிட்டனர்.


குறிப்புகள்

[1] 12:1 = திபா 7:2-3; எபி 11:8
[2] 12:3 = கலா 3:8.
[3] 12:7 = திபா 7:5; கலா 3:16.
[4] 12:13 தொநூ 20:2; 26:7.


(தொடர்ச்சி): தொடக்க நூல்:அதிகாரங்கள் 13 முதல் 16 வரை