திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தொடக்க நூல் (ஆதியாகமம்)/அதிகாரங்கள் 7 முதல் 9 வரை
Appearance
தொடக்க நூல்
[தொகு]அதிகாரங்கள் 7 முதல் 9 வரை
அதிகாரம் 7
[தொகு]- அப்பொழுது ஆண்டவர் நோவாவிற்குக் கூறியது: "நீ உன் குடும்பத்தார் அனைவரோடும் பேழைக்குள் செல். ஏனெனில், இத்தலைமுறையில் உன்னையே நான் நேர்மையானவனாகக் காண்கிறேன்.
- தக்க விலங்குகள் எல்லாவற்றிலிருந்தும் ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும், தகாத விலங்குகளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஒரு சோடியையும்,
- வானத்துப் பறவைகளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும் மண்ணுலகெங்கும் அவற்றின் இனங்கள் உயிர் பிழைத்துக் கொள்வதற்காக உன்னுடன் சேர்த்துக் கொள்.
- ஏனெனில் இன்னும் ஏழு நாள்களில் மண்ணுலகின்மேல் நாற்பது பகலும் நாற்பது இரவும் நான் மழை பெய்விக்கப்போகிறேன். நான் உருவாக்கிய உயிரினங்களை எல்லாம் இந்த நிலத்திலிருந்து அழித்தொழிப்பேன்."
- ஆண்டவர் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்தார்.
- மண்ணுலகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது நோவாவிற்கு வயது அறுநூறு.
- வெள்ளப்பெருக்கிலிருந்து தப்புவதற்காக நோவா தம் புதல்வர், மனைவி, புதல்வரின் மனைவியர் ஆகியோருடன் பேழைக்குள் சென்றார். [1]
- தக்க விலங்குகள், தகாத விமலங்குகள், பறவைகள், நிலத்தில் ஊர்வன அனைத்தும்
- சோடி சோடியாக, ஆணும் பெண்ணுமாக, நோவாவுடன் கடவுள் அவருக்குக் கட்டளையிட்டபடி பேழைக்குள் சென்றன.
- ஏழு நாள்களுக்குப்பின் மண்ணுலகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- நோவாவின் வாழ்க்கையின் அறுநூறாம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில் பதினேழாம் நாளன்று பேராழத்தின் ஊற்றுகள் எல்லாம் பீறிட்டெழுந்தன. வானங்களின் மதகுகள் திறக்கப்பட்டன. [2]
- நாற்பது பகலும் நாற்பது இரவும் மண்ணுலகில் பெரு மழை பெய்தது.
- நோவா தம் புதல்வர் சேம், காம், எப்பேத்து, தம் மனைவி, தம் புதல்வர் மூவரின் மனைவியர் ஆகியோருடன் அன்றே பேழைக்குள் நுழைந்தார்.
- அவர்களும் அவர்களுடன் எல்லாவகைக் காட்டு விலங்குகளும், கால்நடைகளும், நிலத்தில் ஊர்வனவும்,பறவைகளும், இறக்கைகளையுடைய யாவும்,
- உயிருள்ள அனைத்தும் சோடி சோடியாக நோவாவிடம் பேழைக்குள் சென்றன.
- கடவுள் அவருக்குக் கட்டளையிட்டபடி உள்ளே சென்றவை எல்லாம் ஒவ்வோர் உயிரினத்திலும் ஆணும் பெண்ணுமாக உள்ளே சென்றன. அதன் பின் ஆண்டவர் அவரை உள்ளே விட்டுக் கதவை மூடினார்.
- நாற்பது நாள்களாகப் பெரு வெள்ளம் மண்ணுலகில் வந்து கொண்டிருந்தது. வெள்ளம் பெருக்கெடுத்துப் பேழையைத் தூக்க, அது நிலத்திலிருந்து உயர்ந்து எழுந்தது.
- மண்ணுலகின் மேல் வெள்ளம் பாய்ந்து மிகுதியாகப் பெருக்கெடுக்க, பேழை நீரின்மேல் மிதந்தது.
- மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகப்பெருக வானத்தின்கீழ் எங்கும் இருந்த உயர்ந்த மலைகள் எல்லாம் நீரில் மூழ்கின.
- மூழ்கிய மலைகளுக்குமேல் நீர் மட்டம் பதினைந்து முழம் உயர்ந்திருந்தது.
- நிலத்தில் ஊர்வன, பறவைகள், கால்நடைகள், காட்டு விலங்குகள், நிலத்தில் தவழ்வன, மனிதர் அனைவர் - ஆகிய சதையுள்ள உயிரினங்கள் அனைத்தும் மாண்டன.
- தரையில் வாழ்ந்தவற்றில் நாசியால் மூச்சுவிடும் அனைத்தும் செத்துப் போயின.
- மனிதர் முதல் விலங்குகள், ஊர்வன, வானத்துப் பறவைகள் ஈறாக மண்ணில் உயிர் வாழ்ந்த அனைத்தும் அழிந்தன. அவை மண்ணுலகில் இராதபடி ஒழிக்கப்பட்டன. நோவாவும் அவருடன் பேழையில் இருந்தவர்களுமே எஞ்சியிருந்தனர்.
- நூற்றைம்பது நாள்களாக மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகிற்று.
- குறிப்புகள்
[1] 7:7 = மத் 24:38-39; லூக் 17:27.
[2] 7:11 = 2 பேது 3:6.
அதிகாரம் 8
[தொகு]- கடவுள் நோவாவையும் அவருடன் பேழைக்குள் இருந்த எல்லாக் காட்டு விலங்குகள், கால் நடைகள் அனைத்தையும் நினைவு கூர்ந்தார். ஆகவே மண்ணுலகின் மீது காற்று வீசச் செய்தார்; வெள்ளம் தணியத் தொடங்கியது.
- பேராழத்தின் ஊற்றுகளும், வானங்களின் மதகுகளும் மூடப்பட்டன; வானத்திலிருந்து மழை பெய்வது நின்றது.
- மண்ணுலகில் வெள்ளம் வற்றிக் குறைந்துகொண்டே வந்து, நூற்றைம்பதாம் நாள் முடிவில் வெள்ளம் வடிந்தது.
- ஏழாம் மாதத்தில் பதினேழாம் நாளன்று அரராத்து மலைத்தொடர்மேல் பேழை தங்கியது.
- பத்தாம் மாதம் வரை வெள்ளம் குறைந்து கொண்டே வந்தது. பத்தாம் மாதத்தின் முதல் நாளில் மலை உச்சிகள் தெரிந்தன.
- நாற்பது நாள்கள் முடிந்தபின் பேழையில் தாம் அமைத்திருந்த சாளரத்தை நோவா திறந்து,
- காகம் ஒன்றை வெளியே அனுப்பினார். அது மண்ணுலகில் வெள்ளம் வற்றும் வரை போவதும் வருவதுமாக இருந்தது.
- பின்னர், நிலப்பரப்பிலிருந்து வெள்ளம் வடிந்துவிட்டதா என்று பார்க்கப் புறா ஒன்றைத் தம்மிடமிருந்து வெளியே அனுப்பினார்.
- ஆனால் அதற்கு கால் வைத்து தங்குவதற்கு இடம் தென்படாததால், அது அவரிடமே பேழைக்குத் திரும்பி வந்தது. ஏனெனில் நிலப்பரப்பு முழுவதிலும் இன்னும் வெள்ளம் நின்றது. ஆகவே, அவர் தம் கையை நீட்டி அதைப் பிடித்துத் தம்மிடம் பேழைக்குள் சேர்த்துக் கொண்டார்.
- அவர் இன்னும் ஏழு நாள்கள் காத்திருந்து மீண்டும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே அனுப்பினார்.
- மாலையில் அது அவரிடம் திரும்பி வந்தபொழுது, அதன் அலகில் அது கொத்திக்கொண்டு வந்த ஒலிவ இலை இருந்தது. அப்பொழுது நோவா மண்ணுலகில் வெள்ளம் வற்றிவிட்டது என்று தெரிந்துகொண்டார்.
- இன்னும் ஏழு நாள்கள் காத்திருந்தபின், புறாவை வெளியே அனுப்பினார். அது அவரிடம் மறுபடி திரும்பி வரவில்லை.
- அவருக்கு அறுநூற்றொன்று வயதான ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளில் மண்ணுலகப் பரப்பில் இருந்த வெள்ளம் வற்றியது. அப்பொழுது நோவா பேழையின் மேற்கூரையைத் திறந்து பார்த்தார். இதோ! நிலமெல்லாம் உலர்ந்திருந்தது.
- இரண்டாம் மாதத்தின் இருபத்தேழாம் நாளில் மண்ணுலகில் நீர் வற்றியிருந்தது.
- அப்பொழுது கடவுள் நோவாவிடம் கூறியது:
- "நீயும் உன்னுடன் உன் மனைவியும் உன் புதல்வரும் உன் புதல்வரின் மனைவியரும் பேழையிலிருந்து வெளியே வாருங்கள்.
- உன்னுடன் உயிரோடு இருக்கும் பறவைகள், விலங்குகள், நிலத்தில் ஊர்வன ஆகிய உயிரினங்கள் எல்லாவற்றையும் உன்னுடன் வெளியே கொண்டு வா. மண்ணுலகில் அவை பன்மடங்காகட்டும். பூவுலகில் அவை பலுகிப் பெருகிப் பலன் தரட்டும்."
- ஆகவே நோவாவும் அவர் புதல்வரும் அவர் மனைவியும் அவர் புதல்வரின் மனைவியரும் அவருடன் வெளியே வந்தனர். #விலங்குகள், ஊர்வன, பறவைகள், மண்ணுலகில் நடமாடும் அனைத்தும் வகை வகையாகப் பேழையிலிருந்து வெளியே வந்தன.
- அப்பொழுது நோவா ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி அதன்மேல் எல்லா வகைத் தக்க விலங்குகள், தக்க பறவைகளிலிருந்து எடுக்கப்பட்டவற்றை எரி பலியாகச் செலுத்தினார்.
- ஆண்டவர் நறுமணத்தை நுகர்ந்து, தமக்குள் சொல்லிக் கொண்டது: "மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன். ஏனெனில் மனிதரின் இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகின்றது. இப்பொழுது நான் செய்ததுபோல இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன்.
- மண்ணுலகு இருக்கும் நாளளவும் விதைக்கும் காலமும் அறுவடைக் காலமும் குளிரும் வெப்பமும், கோடைக்காலமும் குளிர்க்காலமும் பகலும் இரவும் என்றும் ஓய்வதில்லை."
அதிகாரம் 9
[தொகு]- கடவுள் நோவாவிற்கும் அவர் புதல்வருக்கும் ஆசி வழங்கிக் கூறியது: "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள். [1]
- மண்ணுலகின் விலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன, கடலின் மீன்கள் அனைத்தும் உங்களுக்கு அஞ்சி நடுங்கட்டும்! அவை உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
- நடமாடி உயிர்வாழும் அனைத்தும் உங்களுக்கு உணவாகட்டும். உங்களுக்குப் பசுமையான செடிகளை உணவாகத் தந்தது போல இவை எல்லாவற்றையும் தருகிறேன்.
- இறைச்சியை அதன் உயிராகிய இரத்தத்தோடு உண்ணாதீர்கள். [2]
- உங்கள் உயிராகிய இரத்தத்திற்கு நான் ஈடு கேட்பேன். உயிரினம் ஒவ்வொன்றிடமும் மனிதர் ஒவ்வொருவரிடமும் நான் ஈடு கேட்பேன். மனிதரின் உயிருக்காக அவரவர் சகோதரரிடம் உயிரை நான் ஈடாகக் கேட்பேன்.
- ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோ அவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும். ஏனெனில், கடவுள் மனிதரைத் தம் உருவில் உண்டாக்கினார். [3]
- நீங்கள் பலுகிப் பெருகிப் பன்மடங்காகி மண்ணுலகை நிரப்புங்கள்." [4]
- கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது:
- "இதோ! நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும்
- பேழையிலிருந்து வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள்,கால்நடைகள், நிலத்தில் உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன்.
- உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்; சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது."
- அப்பொழுது கடவுள், "எனக்கும் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் உயிருள்ள எல்லாவற்றிற்குமிடையே தலைமுறைதோறும் என்றென்றும் இருக்கும்படி, நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக,
- என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன். எனக்கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும்.
- மண்ணுலகின் மேல் நான் மேகத்தை வருவிக்க, அதன்மேல் வில் தோன்றும்பொழுது,
- எனக்கும் உங்களுக்கும் சதையுள்ள உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் இடையே உள்ள என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன். உயிர்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்குத் தண்ணீர் இனி ஒருபோதும் பெருவெள்ளமாக மாறாது.
- வில் மேகத்தின்மேல் தோன்றும்பொழுது அதை நான் கண்டு, கடவுளாகிய எனக்கும் மண்ணுலகில் இருக்கும் சதையுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் இடையே என்றென்றுமுள்ள உடன்படிக்கையை நினைவுகூர்வேன்" என்றார்.
- கடவுள் நோவாவிடம், "எனக்கும் மண்ணுலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் இடையே நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளம் இதுவே" என்றார்.
- சேம், காம், எப்பேத்து, ஆகியோர் பேழையிலிருந்து வெளிவந்த நோவாவின் புதல்வர். காம் கானானின் தந்தை.
- இவர்கள் மூவரும் நோவாவின் புதல்வர். இவர்களிலிருந்துதான் மண்ணுலகு முழுவதும் மனித இனம் பரவியது.
- நோவா நிலத்தில் பயிரிடுபவராகித் திராட்சைத் தோட்டம் அமைத்தார்.
- அவர் திராட்சை இரசத்தைக் குடித்துப் போதைக்குள்ளாகித் தம் கூடாரத்தில் ஆடை விலகிக் கிடந்தார்.
- கானானின் தந்தையாகிய காம் தன் தந்தை திறந்த மேனியாராய்க் கிடப்பதைக் கண்டு, வெளியே இருந்த தன் இரு சகோதரரிடம் அதைத் தெரிவித்தான்.
- அப்பொழுது சேமும், எப்பேத்தும் ஒரு துணியை எடுத்துத் தங்கள் இருவரின் தோள்மேல் போட்டுக்கொண்டு பின்னோக்கி நடந்து தங்கள் தந்தையின் திறந்த மேனியை மூடினர். அவர்கள் முகம் எதிர்ப்பக்கம் நோக்கி இருந்ததால் தங்கள் தந்தையின் திறந்த மேனியை அவர்கள் பார்க்கவில்லை.
- நோவாவிற்குப் போதை தெளிந்ததும், தம் இளைய மகன் தமக்குச் செய்ததை அறிந்தார்.
- அப்பொழுது அவர், "கானான் சபிக்கப்பட்டவன்; தன் சகோதரருக்கு அவன் அடிமையிலும் அடிமையாக இருப்பான்.
- சேமின் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! அவனுக்குக் கானான் அடிமையாக இருப்பான்.
- கடவுள் எப்பேத்து குடும்பத்தைப் பெருகச் செய்யட்டும். அவன் சேமின் கூடாரத்தில் வாழட்டும். அவனுக்கும் கானான் அடிமையாக இருக்கட்டும்" என்றார்.
- வெள்ளப்பெருக்குக்குப் பின்னர் நோவா முந்நூற்றைம்பது ஆண்டுகள் வாழ்ந்தார்.
- இவ்வாறு, நோவா தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தார்.
- குறிப்புகள்
[1] 9:1 = தொநூ 1:28.
[2] 9:4 = தொநூ 7:26-27; 7:10-14; லேவி 19:26; இச 12:16,23; 15:23.
[3] 9:6 = தொநூ 1:26; விப 20:13.
[4] 9:7 = தொநூ 1:28.
(தொடர்ச்சி): தொடக்க நூல்:அதிகாரங்கள் 10 முதல் 12 வரை