திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தொடக்க நூல் (ஆதியாகமம்)/அதிகாரங்கள் 4 முதல் 6 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
நோவா செய்த பேழை (தொநூ 6:9-22). ஓவியர்: எட்வர்ட் ஹிக்ஸ். 1846. ஃபிலடெல்ஃபியா.

தொடக்க நூல்[தொகு]

அதிகாரங்கள் 4 முதல் 6 வரை


அதிகாரம் 4[தொகு]

காயினும் ஆபேலும்[தொகு]


1 ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான்.
அவள் கருவுற்றுக் காயினைப் பெற்றெடுத்தாள்.
அவள் "ஆண்டவர் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்" என்றாள்.
2 பின்பு அவள் அவன் சகோதரன் ஆபேலைப் பெற்றெடுத்தாள்.
ஆபேல் ஆடு மேய்ப்பவன் ஆனான்.
காயின் நிலத்தைப் பண்படுத்துபவன் ஆனான்.
3 சில நாள்கள் சென்றன.
காயின் நிலத்தின் பலனிலிருந்து ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வந்தான்.
4 ஆபேலும் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான்.
ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார். [1]
5 ஆனால் காயினையும் அவன் காணிக்கையையும்
அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை.
ஆகவே, காயின் கடுஞ்சினமுற்றான். அவன் முகம் வாடியது.
6 ஆகவே, ஆண்டவர் காயினிடம்,
"நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்?
7 நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா?
நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு
உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆளவேண்டும்" என்றார்.


8 காயின் தன் சகோதரன் ஆபேலிடம், "நாம் வயல்வெளிக்குப் போவோம்" [2] என்றான்.
அவர்கள் வெளியில் இருந்தபொழுது,
காயின் தன் சகோதரன் ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்றான். [3]
9 ஆண்டவர் காயினிடம்,
"உன் சகோதரன் ஆபேல் எங்கே?" என்று கேட்டார். அதற்கு அவன்,
எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?" என்றான்.
10 அதற்கு ஆண்டவர்,
"நீ என்ன செய்துவிட்டாய்!
உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து
என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது. [4]
11 இப்பொழுது, உன் கைகள் சிந்திய உன் சகோதரனின் இரத்தத்தைத்
தன் வாய்திறந்து குடித்த மண்ணை முன்னிட்டு, நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய்.
12 நீ மண்ணில் பயிரிடும் பொழுது அது இனிமேல் உனக்குப் பலன் தராது.
மண்ணுலகில் நீ நாடோடியாக அலைந்து திரிவாய்" என்றார்.
13 காயின் ஆண்டவரிடம்,
"எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்னால் தாங்க முடியாததாக இருக்கின்றது.
14 இன்று நீர் என்னை இம்மண்ணிலிருந்து துரத்தியிருக்கின்றீர்;
உமது முன்னிலையினின்று நான் மறைக்கப்பட்டுள்ளேன்.
மண்ணுலகில் நான் நாடோடியாக அலைந்து திரிய வேண்டியுள்ளது.
என்னைக் காண்கின்ற எவனும் என்னைக் கொல்வானே!" என்றான்.
15 ஆண்டவர் அவனிடம் "அப்படியன்று;
காயினைக் கொல்கின்ற எவனும் ஏழு முறை பழி வாங்கப்படுவான்" என்று சொல்லி,
காயினைக் கண்டுபிடிக்கும் எவனும் அவனைக் கொல்லாமல் இருக்க
ஆண்டவர் அவன் மேல் ஓர் அடையாளம் இட்டார்.
16 பின்னர் காயின் ஆண்டவர் திருமுன்னை விட்டுச் சென்று
ஏதேனுக்குக் கிழக்கே இருந்த நோது நாட்டில் குடியேறினான்.

காயினின் வழிமரபினர்[தொகு]


17 காயின் தன் மனைவியுடன் கூடி வாழ,
அவளும் கருவுற்று ஏனோக்கைப் பெற்றெடுத்தாள்.
அப்பொழுது காயின் ஒரு நகரத்தை நிறுவி,
அதற்குத் தன் மகன் ஏனோக்கின் பெயரை வைத்தான்.
18 ஏனோக்கிற்கு ஈராது பிறந்தான். ஈராதுக்கு மெகுயாவேல் பிறந்தான்.
மெகுயாவேலுக்கு மெத்துசாவேல் பிறந்தான்.
மெத்துசாவேலுக்கு இலாமேக்கு பிறந்தான்.
19 இலாமேக்கு இரு பெண்களை மணந்துகொண்டான்.
ஒருத்தியின் பெயர் ஆதா; மற்றொருத்தியின் பெயர் சில்லா.
20 ஆதா யாபாலைப் பெற்றெடுத்தாள்.
இவன்தான் ஆடுமாடு மேய்த்துக் கூடாரத்தில் வாழும் மக்களின் தந்தை.
21 அவன் சகோதரன் பெயர் யூபால்.
இவன்தான் யாழ் மீட்டுவோர், குழல் ஊதுவோர் ஆகியோர் அனைவரின் தந்தை.
22 சில்லா தூபால்காயினைப் பெற்றெடுத்தாள்.
இவன் வெண்கலத்தாலும், இரும்பாலும் எல்லாவிதமான கருவிகள் செய்யும் கொல்லன் ஆனான்.
தூபால்காயினுக்கு நாகமா என்ற சகோதரி இருந்தாள்.


23 இலாமேக்கு தன் மனைவியரிடம்,
"ஆதா, சில்லா, நான் சொல்வதைக் கவனியுங்கள்.
இலாமேக்கின் மனைவியரே, என் சொல்லுக்குச் செவிகொடுங்கள்;
என்னைக் காயப்படுத்தியதற்காக ஒருவனை நான் கொன்று விட்டேன்;
என்னை அடித்ததற்காக அந்த இளைஞனை நான் கொன்றேன்.
24 காயினுக்காக ஏழுமுறை பழிவாங்கப்பட்டால்
இலாமேக்கிற்காக எழுபது - ஏழுமுறை பழிவாங்கப்படும்" [5] என்றான்.


25 ஆதாம் மீண்டும் தன் மனைவியுடன் கூடி வாழ,
அவளும் மகன் ஒருவனைப் பெற்று அவனுக்குச் சேத்து [6] என்று பெயரிட்டாள்.
"காயின் ஆபேலைக் கொன்றதால் அவனுடைய இடத்தில்
இன்னொருவனைக் கடவுள் வைத்தருளினார்" என்றாள்.
26 சேத்துக்கும் மகன் ஒருவன் பிறந்தான்;
அவனுக்கு அவன் ஏனோசு என்று பெயரிட்டான்.
அப்பொழுதே 'ஆண்டவர்' என்னும் திருப்பெயரால் அவரை வழிபடலாயினர்.


குறிப்புகள்

[1] 4:4 = எபி 11:4.
[2] 4:8 இச்சொற்றொடர் மிகப் பழமையான பதிப்புகளில் உள்ளது.
[3] 4:8 = மத் 23:35; லூக் 11:51; 1 யோவா 3:12.
[4] 4:10 = எபி 12:24.
[5] 4:24 = மத் 18:22.
[6] 4:25 எபிரேயத்தில் வைத்தல் என்பது பொருள்.


அதிகாரம் 5[தொகு]

ஆதாமின் வழிமரபினர்[தொகு]

(1 குறி 1:1-4)


1 ஆதாமின் வழிமரபின் அட்டவணை பின்வருமாறு:
கடவுள் மனிதரைப் படைத்தபொழுது அவர்களைத் தம் சாயலில் உருவாக்கினார்.
2 ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
அவர்களைப் படைத்த நாளில் அவர்களுக்கு ஆசி வழங்கி, 'மனிதர்' என்று பெயரிட்டார். [1] [2]


3 ஆதாமுக்கு நூற்று முப்பது வயதானபோது,
அவனுக்கு அவன் சாயலிலும் உருவிலும் மகன் ஒருவன் பிறந்தான்;
அவனுக்குச் சேத்து என்று பெயரிட்டான்.
4 சேத்து பிறந்தபின் ஆதாம் எண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்தான்.
ஆதாமுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
5 மொத்தம் தொள்ளாயிரத்து முப்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் ஆதாம் இறந்தான்.


6 சேத்துக்கு நூற்றைந்து வயதானபோது அவனுக்கு ஏனோசு பிறந்தான்.
7 ஏனோசு பிறந்தபின் சேத்து எண்ணூற்று ஏழு ஆண்டுகள் வாழ்ந்தான்.
சேத்துக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
8 மொத்தம் தொள்ளாயிரத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்தபின் சேத்து இறந்தான்.


9 ஏனோசுக்குத் தொண்ணூறு வயதானபோது அவனுக்குக் கேனான் பிறந்தான்.
10 கேனான் பிறந்தபின் ஏனோசு எண்ணூற்றுப் பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்தான்.
கேனானுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
11 மொத்தம் தொள்ளாயிரத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தபின் ஏனோசு இறந்தான்.


12 கேனானுக்கு எழுபது வயதான போது, அவனுக்கு மகலலேல் பிறந்தான்.
13 மகலலேல் பிறந்த பின் கேனான் எண்ணூற்று நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தான்.
கேனானுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
14 மொத்தம் தொள்ளாயிரத்துப் பத்து ஆண்டுகள் வாழ்ந்த பின் கேனான் இறந்தான்.


15 மகலலேலுக்கு அறுபத்தைந்து வயதானபோது, அவனுக்கு எரேது பிறந்தான்.
16 எரேது பிறந்தபின் மகலலேல் எண்ணூற்று முப்பது ஆண்டுகள் வாழ்ந்தான்.
மகலலேலுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
17 மொத்தம் எண்ணூற்றுத் தொண்ணூற்றைந்து ஆண்டுகள் வாழ்ந்த பின் மகலலேல் இறந்தான்.


18 எரேதுக்கு நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, அவனுக்கு ஏனோக்கு பிறந்தான்.
19 ஏனோக்கு பிறந்தபின் எரேது எண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்தான்.
எரேதுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
20 மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்த பின் எரேது இறந்தான்.


21 ஏனோக்குக்கு அறுபத்தைந்து வயதானபோது, அவனுக்கு மெத்துசேலா பிறந்தான்.
22 மெத்துசேலா பிறந்தபின், ஏனோக்கு முந்நூறு ஆண்டுகள் கடவுளோடு நடந்தான்.
ஏனோக்கிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
23 ஏனோக்கு மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தான்.
24 ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை.
ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார். [3]


25 மெத்துசேலாவுக்கு நூற்று எண்பத்தேழு வயதானபோது அவனுக்கு இலாமேக்கு பிறந்தான்.
26 இலாமேக்கு பிறந்தபின், மெத்துசேலா எழுநூற்று எண்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்தான்.
மெத்துசேலாவுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
27 மெத்துசேலா மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தான்.


28 இலாமேக்கிற்கு நூற்று எண்பத்திரண்டு வயதானபோது, அவனுக்கு மகன் ஒருவன் பிறந்தான்.
29 அவன் "ஆண்டவரின் சாபத்திற்குள்ளான மண்ணில் நமக்கு உண்டான கடின வேலையிலும் உழைப்பிலும் நமக்கு ஆறுதல் அளிப்பான்" என்று சொல்லி
அவனுக்கு 'நோவா' [4] என்று பெயரிட்டான்.
30 நோவா பிறந்தபின் இலாமேக்கு ஐந்நூற்றுத்தொண்ணூற்றைந்து ஆண்டுகள் வாழ்ந்தான்.
இலாமேக்கிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
31 இலாமேக்கு மொத்தம் எழுநூற்று எழுபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தான்.


32 நோவாவிற்கு ஐந்நூறு வயதானபோது, அவருக்குச் சேம், காம், எப்பேத்து ஆகியோர் பிறந்தனர்.


குறிப்புகள்

[1] 5:1-2 = தொநூ 1:27-28.
[2] 5:2 = மத் 19:4; மாற் 10:6
[3] 5:24 = எபி 11:5; யூதா 14.
[4] 5:29 எபிரேயத்தில் ஆறுதல் என்பது பொருள்.


அதிகாரம் 6[தொகு]

மனிதரின் தீச்செயல்[தொகு]


1 மண்ணில் மனிதர் பெருகத் தொடங்கி,
அவர்களுக்குப் புதல்வியர் பிறந்தபொழுது,
2 மனிதரின் புதல்வியர் அழகாக இருப்பதைத் தெய்வப் புதல்வர் கண்டு,
தாங்கள் தேர்ந்து கொண்டவர்களையெல்லாம் மனைவியர் ஆக்கிக்கொண்டனர்.
3 அப்பொழுது ஆண்டவர்,
"என் ஆவி தவறிழைக்கும் மனிதனில் என்றென்றும் தங்கப் போவதில்லை.
அவன் வெறும் சதைதானே!
இனி அவன் நூற்றிருபது ஆண்டுகளே வாழ்வான்" என்றார்.
4 தெய்வப் புதல்வர் மனிதரின் புதல்வியருடன் சேர்ந்து
அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்க,
அக்காலத்திலும் அதற்குப் பின்னரும் மண்ணுலகில் அரக்கர் இருந்தனர்.
அவர்களே பெயர் பெற்ற பழங்காலப் பெருவீரர்கள் ஆவர். [1] [2]


5 மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும்
அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம்
நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார்.
6 மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார்.
அவரது உள்ளம் துயரமடைந்தது.
7 அப்பொழுது ஆண்டவர்,
"நான் படைத்த மனிதரை மண்ணிலிருந்து அழித்தொழிப்பேன்.
மனிதர்முதல் கால்நடைகள், ஊர்வன,
வானத்துப் பறவைகள்வரை அனைத்தையும் அழிப்பேன்.
ஏனெனில் இவற்றை உருவாக்கியதற்காக நான் மனம் வருந்துகிறேன்" என்றார்.
8 ஆனால் நோவாவுக்கு ஆண்டவரின் அருள் பார்வை கிடைத்தது. [3]

நோவா[தொகு]


9 நோவானின் வழி மரபினர் இவர்களே:
தம் காலத்தவருள் நோவா நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார்.
நோவா கடவுளோடு நடந்தார். [4]
10 நோவாவிற்கு சேம், காம், எப்பேத்து என்னும் மூன்று புதல்வர் பிறந்தனர்.


11 அப்பொழுது கடவுள் முன்னிலையில் மண்ணுலகு சீர்கெட்டிருந்தது,
பூவுலகு வன்முறையால் நிறைந்திருந்தது.
12 கடவுள் மண்ணுலகை உற்று நோக்கினார்.
இதோ! அது சீர்கெட்டுப் போயிருந்தது.
மண்ணுலகில் ஒவ்வொருவரும் தீய வழியில் நடந்துவந்தனர்.
13 அப்பொழுது கடவுள் நோவாவிடம் பின்வருமாறு கூறினார்:
"எனது முன்னிலையிலிருந்து மனிதர் எல்லாரையும் ஒழித்துவிடப்போகிறேன்.
ஏனெனில், அவர்களால் மண்ணுலகில் வன்முறை நிறைந்திருக்கின்றது.
இப்பொழுது நான் அவர்களை மண்ணுலகோடு அழிக்கப் போகிறேன்.
14 உனக்காகக் கோபர் மரத்தால் ஒரு பேழை செய்;
அதில் அறைகள் அமைத்து அதற்கு உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு.
15 பேழையை நீ செய்யவேண்டிய முறையாவது:
நீளம் முந்நூறு முழம்; அகலம் ஐம்பது முழம்; உயரம் முப்பது முழம்.
16 பேழைக்குமேல் கூரை அமைத்து
அந்தக் கூரை பேழைக்கு ஒரு முழம் வெளியே தாழ்வாக இருக்கும்படி கட்டி முடி;
பேழையின் கதவை ஒரு பக்கத்தில் அமை.
பேழையில் கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் என மூன்று தளங்கள் அமை.
17 நானோ, வானுலகின்கீழ் உயிருள்ள எல்லாவற்றையும் அழிப்பதற்காக
மண்ணுலகின் மேல் வெள்ளப்பெருக்கு வரச் செய்வேன்.
மண்ணுலகில் உள்ளவையெல்லாம் மடிந்துபோம்.
18 உன்னுடனோ, என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன்.
உன் புதல்வர், உன் மனைவி, உன் புதல்வரின் மனைவியர்
ஆகியோருடன் நீ பேழைக்குள் செல்.
19 உன்னுடன் உயிர் பிழைத்துக்கொள்ளுமாறு,
சதையுள்ள எல்லா உயிரினங்களிலிருந்தும்
வகைக்கு இரண்டைப் பேழைக்குள் கொண்டு வா.
அவை ஆணும் பெண்ணுமாக இருக்கட்டும்.
20 வகை வகையான பறவைகள், கால்நடைகள்,
நிலத்தில் ஊர்வன ஆகியவற்றிலிருந்து
வகைக்கு இரண்டு உயிர் பிழைத்துக்கொள்ள உன்னிடம் வரட்டும்.
21 உண்பதற்கான எல்லா வகை உணவுப் பொருள்களையும்
நீ எடுத்துச் சென்று சேர்த்து வைத்துக்கொள்.
அவை உனக்கும் அவற்றிற்கும் உணவாகட்டும்."
22 கடவுள் தமக்குக் கட்டளையிட்டபடியே
நோவா எல்லாவற்றையும் செய்து முடித்தார். [5]


குறிப்புகள்

[1] 6:1-4 = யோபு 1:6; 2:1.
[2] 6:4 = எண் 13:33.
[3] 6:5-8 = மத் 24:37; லூக் 17:26; 1 பேது 3:20.
[4] 6:9 = 2 பேது 2:5.
[5] 6:22 = எபி 11:7.


(தொடர்ச்சி): தொடக்க நூல்:அதிகாரங்கள் 7 முதல் 9 வரை