திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தொடக்க நூல் (ஆதியாகமம்)/அதிகாரங்கள் 36 முதல் 37 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
தம் மகன் யோசேப்பின் ஆடையைப் பார்க்கும் யாக்கோபு. இத்தாலிய ஓவியம். 17/18ஆம் நூற்றாண்டு.

தொடக்க நூல்[தொகு]

அதிகாரங்கள் 36 முதல் 37 வரை

அதிகாரம் 36[தொகு]

ஏசாவின் வழிமரபினர்[தொகு]

(1 குறி 1:34-37)


1 ஏதோம் என்ற ஏசாவின் தலைமுறை அட்டவணை இதுவே.
2 ஏசா கானான் நாட்டுப் பெண்களில் இத்தியன் ஏலோனின் மகள் ஆதாவையும்
இவ்வியன் சிபெயோனின் மகளான அனாவின் மகள் ஒகோலிபாமாவையும், [1]
3 இஸ்மயேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமான பாசமத்தையும் மணந்து கொண்டார். [2]
4 ஏசாவுக்கு ஆதா எலிப்பாசைப் பெற்றெடுத்தாள்.
பாசமத்து இரகுவேலைப் பெற்றெடுத்தாள்.
5 ஒகோலிபாமா எயூசு, யாலாம், கோராகு ஆகியோரைப் பெற்றெடுத்தாள்.
இவர்கள் ஏசாவுக்குக் கானான் நாட்டில் பிறந்த புதல்வர்கள்.


6 பின் ஏசா தம் மனைவியர், புதல்வர், புதல்வியர்,
தம் வீட்டைச் சேர்ந்தவர் எல்லோரையும் அழைத்துக் கொண்டு,
தம் மந்தைகள், கால்நடைகள்,
கானான் நாட்டில் சேர்த்திருந்த உடைமைகள் யாவற்றோடும்
தம் சகோதரன் யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறு நாட்டிற்குப் போனார்.
7 ஏனெனில், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியாத அளவு
அவர்களுடைய உடைமைகள் பெருகிவிட்டன.
அவர்கள் தங்கியிருந்த நிலம் அவர்களுடைய மந்தைகளுக்குப் போதாதிருந்தது.
8 ஆகையால் ஏசா என்ற ஏதோம் சேயிர்
என்ற மலைநாட்டிற்குச் சென்று குடியேறினார்.


9 சேயிர் மலைநாட்டில் வாழும் ஏதோமியரின் மூதாதையாகிய
ஏசாவின் தலைமுறை அட்டவணை இதுவே.
10 ஏசாவின் புதல்வர்கள் பெயர்களாவன:
ஏசாவின் மனைவி ஆதாவின் மகன் எலிப்பாசு,
அவருடைய இரண்டாம் மனைவியான பாசமத்தின் மகன் இரகுவேல்.
11 எலிப்பாசின் புதல்வர்கள்:
தேமான், ஓமார், செப்போ, காத்தாம், கெனாசு.
12 ஏசாவின் மகன் எலிப்பாசின் மறுமனைவி திம்னா
எலிப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றெடுத்தாள்.
இவர்களே ஏசாவின் மனைவி ஆதாவின் பேரப்பிள்ளைகள்.
13 இரகுவேலின் புதல்வர்கள்:
நகத்து, செராகு, சம்மா, மிசா.
இவர்களே ஏசாவின் மனைவி பாசமத்தின் பேரப்பிள்ளைகள்.
14 சிபயோனின் மகளான அனாவின் மகள் ஒகோலிபாமா
ஏசாவுக்குப் பெற்றெடுத்த புதல்வர்கள்:
எயுசு, யாலாம், கோராகு.


15 ஏசாவின் புதல்வர்களுள் தலைவர்களாய் இருந்தவர்கள்:
ஏசாவின் தலைமகன் எலிப்பாசின் புதல்வர்களான தேமான், ஒமார், செப்போ, கெனாசு.
16 கோராகு, காத்தாம், அமலேக்கு ஆகிய இவர்கள் அனைவரும்
எலிப்பாசுக்குப் பிறந்த ஏதோம் நாட்டுத் தலைவர்கள்.
இவர்களே ஆதாவின் பேரப்பிள்ளைகள்.
17 ஏசாவின் மகன் இரகுவேலின் புதல்வர்களுள் தலைவர்களாயிருந்தவர்கள்:
நகத்து, செராகு, சம்மா, மிசா.
இவர்களே இரகுவேலின் புதல்வர்கள்,
ஏசாவின் மனைவி பாசுமத்தின் பேரப்பிள்ளைகள்.
இவர்கள் இரகுவேலின் வழிவந்த ஏதோம் நாட்டுத் தலைவர்கள்.
18 ஏசாவின் மனைவி ஒகோலிபாமாவின் புதல்வர்களுள் தலைவர்களாய் இருந்தவர்கள்:
எயுசு, யாலாம், கோராகு.
இவர்கள் அனாவின் மகளும் ஏசாவின் மனைவியுமான
ஒகோலிபாமா வழிவந்த தலைவர்கள்.
19 இவர்களே ஏதோம் எனப்பட்ட ஏசாவின் புதல்வர்களும்,
அந்த இனத்தின் தலைவர்களும் ஆவர்.

சேயரின் வழிமரபினர்[தொகு]

(1 குறி 1:38-42)


20 அந்த நாட்டில் குடியிருந்த ஓரியனான சேயிரின் புதல்வர்கள்:
லோத்தான், சோபால், சிபயோன், அனா,
21 தீசோன், ஏட்சேர், தீசான்.
இவர்களே ஏதோம் நாட்டிலிருந்த சேயிரின் மக்களாகிய ஓரியரின் தலைவர்கள்.
22 லோத்தானின் புதல்வர்கள் இவர்களே:
ஓரி, ஏமாம், லோத்தானின் சகோதரி திம்னா.
23 சோபாலின் புதல்வர்கள் இவர்களே:
அல்வான், மானகத்து, ஏபால், செப்போ, ஓனாம்.
24 சிபயோனின் புதல்வர்கள் இவர்களே:
அய்யா, அனா.
இந்த அனா தன் தந்தை சிபயோனின் கழுதைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது
பாலை நிலத்தில் வெப்ப நீரூற்றுகளைக் கண்டுபிடித்தான்.
25 அனாவின் மகன் தீசோன்; அனாவின் மகள் ஒகோலிபாமா.
26 தீசானின் புதல்வர்கள் இவர்களே:
எம்தான், எஸ்பான், இத்ரான், கெரான்.
27 ஏட்சேரின் புதல்வர்கள் இவர்களே:
பில்கான், சகவான், ஆக்கான்.
28 தீசோனின் புதல்வர்கள் இவர்களே:
ஊசு, ஆரான்.
29 ஓரியரின் தலைவர்கள் இவர்களே:
லோத்தான், சோபால், சிபயோன், அனா,
30 தீசோன், ஏட்சேர், தீசான்.
இவர்கள் சேயிர் நாட்டின் குலப்பிரிவுகளுக்கு ஏற்ப
ஓரியரின் தலைவர்களாய் இருந்தவர்கள்.

ஏதோமின் வழிமரபினர்[தொகு]

(1 குறி 43-54)


31 இஸ்ரயேலரிடையே முடியாட்சி தொடங்குமுன்னரே
ஏதோமில் ஆட்சிபுரிந்த மன்னர்கள் இவர்களே.
32 பெகோரின் மகன் பேலா ஏதோமில் ஆட்சி புரிந்தான்.
அவனது நகரின் பெயர் தின்காபா.
33 பேலா இறந்தபின் போஸ்ராவைச் சார்ந்த
செராகின் மகன் யோபாபு ஆட்சிக்கு வந்தான்.
34 யோபாபு இறந்தபின் தேமானியரின் நாட்டைச் சேர்ந்த
ஊசாம் ஆட்சிக்கு வந்தான்.
35 ஊசாம் இறந்தபின் பெதாதின் மகன் அதாது ஆட்சிக்கு வந்தான்.
இவன் மோவாபு நாட்டில் மிதியானியரைத் தோற்கடித்தவன்.
அவனது நகரின் பெயர் அவீத்து.
36 அதாது இறந்தபின்,
மஸ்ரேக்காவைச் சார்ந்த சம்லா ஆட்சிக்கு வந்தான்.
37 சம்லா இறந்தபின் யூப்பிரத்தீசு நதிக்கருகில் இருந்த
இரகபோத்தைச் சார்ந்த சாவூல் ஆட்சிக்கு வந்தான்.
38 சாவூல் இறந்தபின்,
அக்போரின் மகன் பாகால் அனான் ஆட்சிக்கு வந்தான்.
39 பாகால் அனான் இறந்தபின், அதார் ஆட்சிக்கு வந்தான்.
அவனது நகரின் பெயர் பாகூ.
அவன் மனைவியின் பெயர் மெகேற்றபேல்.
அவள் மேசகாபின் மகளான மத்ரேத்தின் மகள்.
40 தங்கள் குலப்பிரிவின்படியும், நிலப்பகுதிகளின்படியும்
ஏசாவின் வழிவந்த தலைவர்களின் பெயர்கள் இவைகளே:
திம்னா, ஆல்வா, எத்தேத்து,
41 ஒகோலிபாமா, ஏலா, பினோன்,
42 கெனாசு, தேமா, மிபுசார்,
43 மக்தியேல், ஈராம்.
ஏதோமியர் உரிமையாகக் கொண்டு குடியேறி வாழ்ந்த
நிலப்பகுதிகளின்படி தலைவர்களாய் இருந்தவர்கள் இவர்களே.
இந்த ஏதோமியரின் மூதாதைதான் ஏசா.


குறிப்புகள்

[1] 36:2 = தொநூ 26:34.
[2] 36:3 = தொநூ 28:9.


அதிகாரம் 37[தொகு]

யோசேப்பும் அவர் சகோதரரும்[தொகு]


1 கானான் நாட்டில் தம் தந்தை தங்கியிருந்த நிலப்பகுதிகளில்
யாக்கோபும் வாழ்ந்து வந்தார்.
2 யாக்கோபின் குடும்ப வரலாறு இதுவே:
யோசேப்பு பதினேழு வயது இளைஞனாய் இருந்தபோது,
தம் தந்தையின் மறு மனைவியரான பிலகா,
சில்பா என்பவர்களுடைய புதல்வர்களான தம் சகோதரரோடு
மந்தை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அவர் தம் சகோதரர் செய்து வந்த தீச்செயலைப் பற்றித்
தம் தந்தைக்குத் தகவல் கொடுத்தார்.
3 இஸ்ரயேல் முதிர்ந்த வயதில் தமக்கு யோசேப்பு பிறந்தமையால்
அவரை மற்றெல்லாப் புதல்வரையும் விட அதிகமாக நேசித்து வந்தார்.
அவருக்கு அழகு வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் அங்கியைச் செய்து கொடுத்தார்.
4 அவருடைய சகோதரர்கள் தங்கள் தந்தை
அவரை எல்லாரிலும் அதிகமாய் நேசிக்கிறாரென்று கண்டு
அவரை வெறுத்தனர்.
அவர்களால் அவரோடு பாசத்துடன் பேச இயலவில்லை.


5 யோசேப்பு தாம் கண்ட ஒரு கனவைத்
தம் சகோதரருக்குத் தெரிவித்தார்.
இதனால் அவர்கள் அவரை மேலும் அதிகமாய் வெறுத்தனர்.
6 அவர் அவர்களை நோக்கி,
"நான் கண்ட இந்தக் கனவைக் கேளுங்கள்.
7 நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டும் பொழுது
திடீரென எனது அரிக்கட்டு எழுந்து நிற்க,
உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கின" என்றார்.
8 அப்பொழுது அவர் சகோதரர் அவரை நோக்கி,
"நீ எங்கள் மீது உண்மையிலேயே ஆட்சி செலுத்தப் போகிறாயோ?
நீ எங்கள் மீது உண்மையிலேயே அதிகாரம் செலுத்தப் போகிறாயோ?" என்று கேட்டனர்.
இவ்விதக் கனவுகளின் காரணமாகவும்
அவருடைய தகவல்களின் காரணமாகவும்
அவரை அவர்கள் இன்னும் அதிகமாய் வெறுத்தனர்.


9 மேலும் அவர் தாம் கண்ட வேறொரு கனவையும்
தம் சகோதரர்களுக்கு விவரித்தார்.
"நான் மீண்டும் ஒரு கனவு கண்டேன்;
அதில் கதிரவனும் நிலவும் பதினொரு விண்மீன்களும்
என்னை வணங்கக் கண்டேன்" என்றார்.
10 இதை அவர் தம் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் விவரித்தபோது,
அவர் தந்தை அவரைக் கண்டித்து,
"நீ கண்ட இந்தக் கனவின் பொருள் என்ன?
நானும் உன் தாயும், உன் சகோதரர்களும்
தரைமட்டும் தாழ்ந்து உன்னை வணங்க வேண்டுமா?" என்று கேட்டார்.
11 அதன் பொருட்டும் அவர் சகோதரர் அவர் மீது பொறாமை கொண்டனர்.
அவர் தந்தையோ இக்காரியத்தைத் தம் மனத்தில் கொண்டார். [1]

யோசேப்பு விற்கப்பட்டு எகிப்தை அடைதல்[தொகு]


12 அப்படி இருக்கையில் அவர் சகோதரர் செக்கேமில்
தம் தந்தையின் மந்தைகளை மேய்க்கச் சென்றனர்.
13 இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி:
"உன் சகோதரர்கள் செக்கேமில் ஆடு மேய்க்கிறர்கள் அல்லவா?
அவர்களிடம் உன்னை அனுப்பப் போகிறேன்," என்று கூற,
அவர், "இதோ நான் தயார்" என்றார்.
14 அவர் அவரிடம், "நீ போய் உன் சகோதரர்,
மந்தைகள் நலமா என்று விசாரித்து வந்து எனக்குத் தெரிவி" என்று சொல்லி,
எபிரோன் பள்ளத்தாக்கிலிருந்து அவரை அனுப்பினார்.
அவரும் செக்கேமிற்கு வந்தார்.
15 அவர் புல்வெளியில் வழி தவறி அலைவதை
ஒரு மனிதன் கண்டு,
"என்ன தேடுகிறாய்?" என்று அவரைக் கேட்டான்.
16 யோசேப்பு, "என் சகோதரர்களைத் தேடுகிறேன்.
அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள் என்று தெரியுமா? சொல்லும்" என்றார்.
17 அதற்கு அம்மனிதன், "அவர்கள் இவ்விடத்தை விட்டுக் கிளம்பி விட்டார்கள்.
தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லிக் கொண்டதை
நான் கேட்டேன்" என்று பதிலளித்தான்.
யோசேப்பு தம் சகோதரரைத் தேடிச் சென்று தோத்தானில் அவர்களைக் கண்டுபிடித்தார்.
18 தொலையில் அவர் வருவதைக் கண்ட அவர்கள்
தங்களுக்கு அருகில் அவர் வருமுன் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர்.
19 அவர் சகோதரர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி,
"இதோ, வருகிறான் கனவின் மன்னன்!
20 நாம் அவனைக் கொன்று இந்த ஆழ்குழிகளுள் ஒன்றில் தள்ளிவிட்டு,
ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்று விட்டதென்று சொல்வோம்.
அப்பொழுது அவனுடைய கனவுகள் என்ன ஆகும் என்று பார்ப்போம்" என்றனர்.
21 ரூபன் இவற்றைக் கேட்டு,
அவரை அவர்கள் கையிலிருந்து தப்புவிக்கும் எண்ணத்தில்
அவர்களை நோக்கி,
"நாம் அவனைச் சாகடிக்க வேண்டாம்" என்றார்.
22 ரூபன் அவர்கள் நோக்கி,
"அவன் இரத்தத்தைச் சிந்தாதீர்கள்.
அவனைப் பாலை நிலத்திலுள்ள இந்த ஆழ்குழிக்குள் தள்ளிவிடுங்கள்.
அவன் மீது கை வைக்காதீர்கள்" என்று சொன்னார்.
ஏனெனில் அவர் அவர்கள் கையிலிருந்து அவரைத் தப்புவித்துத்
தம் தந்தையிடம் சேர்ப்பிக்கும் நோக்கம் கொண்டிருந்தார்.
23 யோசேப்பு தம் சகோதரரிடம் வந்து சேர்ந்தவுடன்
அவர் அணிந்திருந்த அழகு வேலைப்பாடுகள் நிறைந்த அங்கியை உரிந்துவிட்டு,
24 அவரை ஆழ்குழியில் தூக்கிப் போட்டனர்.
அது தண்ணீரில்லாத வெறும் குழி.


25 பின்பு, அவர்கள் உணவு அருந்தும்படி அமர்ந்தனர்.
அப்பொழுது அவர்கள் கண்களை உயர்த்தி,
கிலயாதிலிருந்து வந்துகொண்டிருந்த இஸ்மயேலரின் வணிகக் குழுவைப் பார்த்தனர்.
நறுமணப் பொருள்களையும், தைல வகைகளையும் வெள்ளைப் போளத்தையும்,
அவர்கள் ஒட்டகங்களின் மேல் ஏற்றி எகிப்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.
26 அப்பொழுது யூதா தம் சகோதரர்களை நோக்கி,
"நாம் நம் சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதனால்
நமக்கு என்ன பயன்?
27 வாருங்கள்;"இஸ்மயேலருக்கு அவனை விற்றுவிடுவோம்.
அவன் மேல் நாம் கைவைக்க வேண்டாம்.
ஏனெனில் அவன் நம் சகோதரனும் நம் சொந்தச் சதையுமாய் இருக்கிறான்" என்று சொல்ல, அவர்கள் சம்மதித்தனர்.
28 ஆகையால் மிதியான் நாட்டு வணிகர் அவர்களைக் கடந்து செல்கையில்,
குழியிலிருந்து யோசேப்பை வெளியே தூக்கி
அந்த இஸ்மயேலரிடம் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றனர்.
அவர்களும் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு சென்றனர்.[2]


29 பின்னர் ரூபன் ஆழ்குழி அருகில் திரும்ப வந்தார்.
இதோ! யோசேப்பு அங்கே இல்லை.
உடனே அவர், தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு,
30 தம் சகோதரரிடம் திரும்பி வந்து,
"பையனைக் காணோமே! நான் எங்குச் சென்று தேடுவேன்" என்றார்.
31 அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்துக் கொண்டனர்.
ஒரு வெள்ளாட்டுக் கிடாயை அடித்து
அதன் இரத்தத்தில் அந்த அங்கியைத் தோய்த்தனர்.
32 அழகு வேலைப்பாடு நிறைந்த அந்த அங்கியைத்
தம் தந்தையிடம் எடுத்துச் சென்று,
"இதை வழியில் கண்டோம்.
இது உங்கள் மகனது அங்கியா என்று பாருங்கள்" என்றனர்.
33 தந்தை அதை அடையாளம் கண்டு,
"இது என் மகனது அங்கியே!
ஏதோ ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்று விட்டது!
ஐயோ, யோசேப்பு ஒரு கொடிய விலங்கால்
பீறிக் கிழிக்கப்பட்டுப் போனானே!" என்று நினைத்து,
34 தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு,
இடுப்பில் சாக்கு உடையைக் கட்டிக் கொண்டு
பல நாள்களாய்த் தம் மகனுக்காகத் துக்கம் கொண்டாடினர்.
35 அவர் புதல்வர், புதல்வியர் அனைவரும்
அவருக்கு ஆறுதல் சொல்ல வந்தனர்.
அவரோ எந்த ஆறுதலான வார்த்தைக்கும் செவிகொடாமல்,
"நான் துயருற்றுப் பாதாளத்தில் இறங்கி என் மகனிடம் செல்வேன்"
என்று அவருக்காக அழுது புலம்பினார்.
36 இதற்கிடையில் மிதியானியர் எகிப்தை அடைந்து
பார்வோனின் அதிகாரிகளுள் ஒருவனும் மெய்க்காப்பாளர் தலைவனுமான
போத்திபாரிடம் யோசேப்பை விற்றனர்.


குறிப்புகள்

[1] 37:11 = திபா 7:9.
[2] 3:28 = திபா 7:9.


(தொடர்ச்சி): தொடக்க நூல்:அதிகாரங்கள் 38 முதல் 39 வரை