உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)/அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

விக்கிமூலம் இலிருந்து
"சோம்பேறி பருவத்தில் உழுது பயிர் செய்யமாட்டார்; அவர் அறுவடைக் காலத்தில் விளைவை எதிர்பார்த்து ஏமாறுவார்." - நீதிமொழிகள் 20:4.

நீதிமொழிகள் (The Book of Proverbs)

[தொகு]

அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

அதிகாரம் 19

[தொகு]


1 முறைகேடாய் நடக்கும் செல்வரைவிட
மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்.


2 எண்ணிப் பாராமல் செயலில் இறங்குவதால் பயனில்லை;
பொறுமையின்றி நடப்பவர் இடறிவிழுவார்.


3 மனிதர் தம் மடமையாலேயே வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்வர்;
ஆனால் அவர்கள் ஆண்டவர்மீது சினங்கொண்டு குமுறுவர்.


4 பணம் உடையவருக்கு நண்பர் பலர் இருப்பர்;
ஏழைக்கு இருக்கும் ஒரே நண்பரும் அவரை விட்டுப் பிரிவார்.


5 பொய்ச் சான்று சொல்பவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்;
பொய்யுரையே கூறுபவர் தப்பித்துக் கொள்ளமாட்டார்.


6 வள்ளலின் தயவை நாடி வருவோர் பலர்;
நன்கொடையாளருக்கு எல்லாருமே நண்பர்.


7 வறியவரை அவருடைய உடன்பிறந்தாரே வெறுப்பர்;
அவருடைய நண்பர் அவரைவிட்டு அகலாதிருப்பரோ?
அவர் கெஞ்சி வேண்டினாலும் அவர்கள் ஓடிவிடுவார்கள்.


8 ஞானத்தைப் பெறுதலே உண்மையான தன்னலமாகும்;
மெய்யறிவைப் பேணிக்காப்பவர் நன்மை அடைவார்.


9 பொய்ச் சான்று சொல்பவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்;
பொய்யுரை கூறுபவர் அழிந்து போவார்.


10 அரண்மனை வாழ்வு அறிவிலிக்கு அடுத்ததல்ல;
மேலானோரை ஆளும் பதவி அடிமைக்குச் சற்றும் ஏற்றதல்ல.


11 விவேகமுடையோர் எளிதில் சினமடையார்;
குற்றம் பாராதிருத்தல் நன்மதிப்பைத் தரும்.


12 அரசரின் சீற்றம் சிங்கத்தின் முழக்கம் போன்றது;
அவர் காட்டும் கருணை
பயிர்மீது பெய்யும் பருவ மழைக்கு ஒப்பாகும்.


13 மதிகெட்ட மகனால் அவன் தந்தைக்குக் கேடு வரும்;
மனைவியின் நச்சரிப்பு ஓட்டைக் கூரையினின்று
ஓயாது ஒழுகும் நீர் போன்றது.


14 வீடும் சொத்தும் ஒருவனுக்கு வழிவழிச் சொத்தாய் வரலாம்;
ஆனால், விவேகமுள்ள மனைவியோ ஆண்டவர் அளிக்கும் கொடை.


15 சோம்பல் ஒருவரை தூங்கிக் கொண்டே இருக்கச் செய்யும்;
சோம்பேறி பசியால் வருந்துவார்.


16 திருக்கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவர் தம்மைப் பாதுகாத்துக் கொள்கிறார்;
ஆண்டவருடைய வழிகளைக் கவனியாது நடப்பவர் அழிந்து போவார்.


17 ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்;
அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்துவிடுவார்.


18 மகன் திருந்துவான் என்கிற நம்பிக்கை இருக்கும்போதே
அவனைக் கண்டித்துத் திருத்து;
இல்லாவிடில், அவன் கெட்டழிந்து போவதற்கு
நீ காரணமாயிருப்பாய்.


19 கடுஞ்சினங்கொள்பவர் அதற்குரிய தண்டனையைப் பெறவேண்டும்.
இக்கட்டினின்று அவரை விடுவிப்பாயானால்,
மீண்டும் அவ்வாறே செய்ய வேண்டியிருக்கும்.


20 அறிவுரைக்குச் செவிகொடு, கண்டிப்பை ஏற்றுக்கொள்;
பின்வரும் காலமெல்லாம் ஞானமுள்ளவனாய் வாழ்வாய்.


21 மனிதர் மனத்தில் எழும் எண்ணங்கள் ஏராளம்;
ஆனால் ஆண்டவரது திட்டமே நிலைத்துநிற்கும்.


22 நற்பண்பாளர் வாக்குப் பிறழாமையை நாடுவர்.
பொய்யராயிருப்பதைவிட ஏழையாயிருப்பதே மேல்.


23 ஆண்டவருக்கு அஞ்சி நடந்தால் ஆயுள் நீடிக்கும்;
அவ்வாறு நடப்பவருக்கு மனநிறைவு கிட்டும்;
தீங்கும் அவரை அணுகாது.


24 சோம்பேறி உண்கலத்தில் கையை இடுவார்;
ஆனால் அதை வாய்க்குக் கொண்டுபோகச் சோம்பலடைவார்.


25 ஏளனம் செய்வோரை அடி;
அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்;
உணர்வுள்ளவரைக் கடிந்துகொள்,
அவர் மேலும் அறிவுடையவராவார்.


26 தந்தையைக் கொடுமைப்படுத்தித் தாயைத் துரத்திவிடும் மகன்,
வெட்கக்கேட்டையும் இழிவையும் வருவித்துக்கொள்வான்.


27 பிள்ளாய், நல்லுரை கேட்பதை நிறுத்தாதே;
நிறுத்தினால் அறிவுதரும் நன்மொழிகளைப் பறக்கணிக்கிறவன் ஆவாய்.


28 தீக்குணமுள்ள சாட்சி நியாயத்தை மதிக்காதவர்.
பொல்லாரின் சான்று குற்றத்தைப் பெருகச் செய்யும்.


29 இகழ்வாருக்குத் தண்டனை காத்திருக்கிறது;
முட்டாளின் முதுகுக்குப் பிரம்பு காத்திருக்கிறது.


அதிகாரம் 20

[தொகு]


1 திராட்சை இரசம் ஒழுங்கீனத்தைத் தோற்றுவிக்கும்;
போதை தரும் குடி அமளியைத் தோற்றுவிக்கும்;
அவற்றில் நாட்டங்கொள்பவர் மடையரே.


2 அரசரின் சினம் சிங்கத்தின் முழக்கத்திற்கு நிகர்;
அரசருக்குச் சினமூட்டுகிறவர் தம் உயிரை இழப்பார்.


3 விவாதத்தில் ஈடுபடாதிருத்தல் மனிதருக்கு அழகு;
ஏனெனில் மூடராயிருக்கும் எவரும் விவாதத்தை விரும்புகின்றனர்.


4 சோம்பேறி பருவத்தில் உழுது பயிர் செய்யமாட்டார்;
அவர் அறுவடைக் காலத்தில் விளைவை எதிர்பார்த்து ஏமாறுவார்.


5 மனிதர் மனத்தில் மறைந்திருக்கும் எண்ணம் ஆழமான நீர்நிலை போன்றது;
மெய்யறிவுள்ளவரே அதை வெளிவரச் செய்வார்?


6 பலர் தம்மை வாக்குப் பிறழாதவரெனக் கூறிக்கொள்வர்;
ஆனால், நம்பிக்கைக்குரியவரைக் கண்டுபிடிக்க யாரால் இயலும்?


7 எவர் களங்கமற்ற நேர்மையான வாழ்க்கை நடத்துகிறாரோ,
அவருடைய பிள்ளைகள் அவரின் காலத்திற்குப்பின் நற்பேறு பெறுவார்கள்.


8 மன்னன் நீதிவழங்கும் இருக்கையில் வீற்றிருக்கும்போது,
தன் பார்வையாலேயே தீமையான யாவற்றையும் சலித்துப் பிரித்துவிடுவான்.


9 "என் இதயத்தைக் தூயதாக்கி விட்டேன்;
நான் பாவம் நீக்கப்பெற்றுத் தூய்மையாயிருப்பவன்"
என்று யாரால் சொல்லக்கூடும்?


10 பொய்யான எடைக் கற்களையும்
பொய்யான அளவைகளையும் பயன்படுத்துகிறவரை
ஆண்டவர் அருவருக்கின்றார்.


11 சிறுவரையும் அவருடைய செயல்களைக் கொண்டே அறியலாம்;
அவர் உண்மையும் நேர்மையானவரா என்று சொல்லிவிடலாம்.


12 கேட்கும் காது, காணும் கண்;
இவ்விரண்டையும் ஆண்டவரே படைத்தார்.


13 தூங்கிக்கொண்டேயிருப்பதை நாடாதே; நாடினால் ஏழையாவாய்.
கண் விழித்திரு; உனக்கு வயிறார உணவு கிடைக்கும்.


14 ஒரு பொருளை வாங்கும் போது, தரம் குறைவு,
விலை மிகுதி என்று ஒருவர் சொல்வார்;
வாங்கிச் சென்றபின், தாம் திறம்படச் செய்ததாக நினைத்துத்
தம்மையே மெச்சிக் கொள்வார்.


15 பொன்னையும் முத்துகளையும் விட,
அறிவுள்ள பேச்சே விலையுயர்ந்த அணிகலன்.


16 அன்னியருடைய கடனுக்காகப் பிணை நிற்கிறவருடைய
ஆடையை எடுத்துக்கொள்;
அதை அந்தக் கடனுக்காகப் பிணையப் பொருளாக வைத்திரு.


17 வஞ்சித்துப் பெறும் உணவு சுவையாயிருக்கும்;
ஆனால் பின்னர் அது வாய் நிறைய மணல் கொட்டியது போலாகும்.


18 நல்ல அறிவுரை கேட்டுத் திட்டமிட்டால் வெற்றி பெறுவாய்;
சூழ்ச்சி முறையை வகுக்குமுன் போரைத் தொடங்காதே.


19 வம்பளப்போன் மறைசெய்திகளை வெளிப்படுத்திவிடுவான்;
வாயாடியோடு உறவாடாதே.


20 தாயையும் தந்தையையும் சபிக்கிறவனின் விளக்கு,
காரிருள் வேளையில் அணைந்துபோகும்.


21 தொடக்கத்திலே விரைவில் கிடைத்த உரிமைச் சொத்து,
இறுதியிலே ஆசி பெற்றதாய் இராது.


22 "தீமைக்குத் தீமை செய்வேன்" என்று சொல்லாதே;
ஆண்டவரையே நம்பியிரு; அவர் உன்னைக் காப்பார்.


23 பொய்யான எடைக் கற்களைப் பயன்படுத்துகிறவரை
ஆண்டவர் அருவருக்கிறார்;
போலித் துலாக்கோலைப் பயன்படுத்துவது முறையற்றது.


24 மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை ஆண்டவர் அமைக்கின்றார்;
அப்படியிருக்க, தன் வழியை மனிதனால் எப்படி அறிய இயலும்?


25 எண்ணாமல் ஒன்றைக் கடவுளுக்குப் படையல் என நேர்ந்துவிட்டு,
அப்பொருத்தனையைப்பற்றிப் பிறகு எண்ணுவது
கண்ணியில் கால் வைப்பதாகும்.


26 ஞானமுள்ள அரசன் பொல்லாரைப் பிரித்தெடுப்பான்;
அவர்கள் மீது சக்கரத்தை ஏற்றி நசுக்குவான்.


27 ஆண்டவர் மனிதருக்குத் தந்துள்ள ஆவி ஒரு விளக்கு;
அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் ஆய்ந்தறியும்.


28 அன்பும் உண்மையும் மன்னவனை ஆட்சியில் நீடித்திருக்கச் செய்யும்;
அன்பாகிய அடிப்படையிலேதான் அவனது அரியணை நிலைத்து நிற்கும்.


29 இளைஞருக்கு உயர்வளிப்பது அவர்களது வலிமை;
முதியோருக்குப் பெருமை தருவது அவர்களது நரைமுடி.


30 நையப் புடைத்தலே மனத்தின் மாசகற்றும்;
கசையடி கொடுத்தலே உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும்.


(தொடர்ச்சி):நீதிமொழிகள்:அதிகாரங்கள் 21 முதல் 22 வரை