திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)/அதிகாரங்கள் 25 முதல் 26 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
உன் எதிரி பசியோடிருந்தால் அவனுக்கு உணவு கொடு; அவன் தாகத்தோடிருந்தால் குடிக்கத் தண்ணீர் கொடு. இவ்வாறு செய்வதால் அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய்; ஆண்டவரும் உனக்குக் கைம்மாறு அளிப்பார். - நீதிமொழிகள் 25:21-22.

நீதிமொழிகள் (The Book of Proverbs)[தொகு]

அதிகாரங்கள் 25 முதல் 26 வரை

அதிகாரம் 25[தொகு]

சாலமோனின் வேறு சில நீதிமொழிகள்[தொகு]


1 இவையும் சாலமோனின் நீதி மொழிகளே.
இவை யூதாவின் அரசராகிய எசேக்கியாவின்
அவையினர் தொகுத்து எழுதியவை.


2 மறைபொருள் கடவுளுக்கு மாட்சியாம்;
ஆய்ந்தறிதல் அரசருக்குப் பெருமையாம்.


3 அரசரின் உள்ளக் கிடக்கையை ஆராய்ந்தறிய
மனிதரால் இயலாது;
அது வானத்தின் உயரத்தையும்
கடலின் ஆழத்தையும் போன்றது.


4 வெள்ளியினின்று மாசை நீக்கி விடு;
அப்பொழுது தட்டார் அதிலிருந்து
அழகிய பொருளொன்றை உருவாக்குவார்.


5 அரசரின் அவையினின்று
கெடுமதி உரைக்கும் பொல்லாரை அகற்றி விடு;
அப்பொழுது அவரது ஆட்சி நீதிவழுவா நெறியில் நிலைக்கும்.


6 அரசர் முன்னிலையில் உன்னைப் பெரியவரென்று
காட்டிக் கொள்ளாதே;
பெரியோருக்குரிய இடத்தில் நில்லாதே.


7 பெரியவர் ஒருவருக்கு இடமுண்டாகும்படி
நீ கீழிடத்திற்கு அனுப்பப்படுவதைவிட,
"நீ மேலிடத்திற்கு வா" என்று அழைக்கப்படுவதே உனக்கு மேன்மை. [1]


8 ஏதோ ஒன்றைப் பார்த்தவுடன் உடனே வழக்கு மன்றத்திற்குப் போகாதே;
நீ கூறுவது தவறென்று வேறொருவர் காட்டிவிட்டால்
அப்பொழுது நீ என்ன செய்வாய்?


9 அடுத்திருப்பாரோடு உனக்குள்ள வழக்கை
அவருடனேயே பேசித் தீர்த்துக்கொள்;
வேறொருவரைப் பற்றிய மறைசெய்தியை வெளிப்படுத்தாதே.


10 வெளிப்படுத்தினால் அதைக் கேட்பவர் உன்னை இகழுவார்;
உனக்கு வரும் மானக்கேடு நீங்காது.


11 தக்க வேளையில் சொன்ன சொல்
வெள்ளித் தட்டில் வைத்த பொற்கனிக்குச் சமம்.


12 தங்கச் சங்கிலியும் பொற்கடுக்கனும்
ஓர் இணையாக அமைவது போல,
எச்சரிக்கை கூறும் ஞானியும்
அதை விருப்புடன் கேட்பவரும் ஓர் இணையாக அமைவர்.


13 குளிர்ந்த பானம் கோடைக் காலத்தில் எப்படி இருக்குமோ
அப்படியே உண்மையான தூதர் தம்மை அனுப்பினவருக்கு இருப்பார்;
அவர் தம் தலைவருக்குப் புத்துயிரளிப்பார்.


14 கருமுகிலும் காற்றும் உண்டு; ஆனால் மழை இல்லை;
கொடாமலே தன்னைக் கொடைவள்ளல் என்பவனும் இவ்வாறே.


15 பொறுமை ஆட்சியாளரையும் இணங்கச் செய்யும்;
இனிய நா எலும்பையும் நொறுக்கும்.


16 தேன் கிடைத்தால் அளவோடு சாப்பிடு;
அளவை மீறினால் தெவிட்டிப்போகும்; நீ வாந்தியெடுப்பாய்.


17 அடுத்திருப்பார் வீட்டுக்கு அடிக்கடி போகாதே;
போனால் சலிப்பு ஏற்பட்டு, அவர் உன்னை வெறுப்பார்.


18 அடுத்திருப்பாருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்பவர்,
குறுந்தடியையும் வாளையும் கூரிய அம்பையும் ஒத்தவர்.


19 இக்கட்டுக் காலத்தில் ஒரு துரோகியை நம்புவது,
சொத்தைப் பல்லையும் நொண்டிக் காலையும் நம்புவதற்குச் சமம்.


20 மனத்துயரமுள்ளவரைப் பாட்டுப் பாடச் செய்தல்,
குளிரில் உடைகளைக் களைவதுபோலவும்,
புண்ணில் காடியை வார்ப்பதுபோலவும் இருக்கும்.


21 உன் எதிரி பசியோடிருந்தால் அவனுக்கு உணவு கொடு;
அவன் தாகத்தோடிருந்தால் குடிக்கத் தண்ணீர் கொடு.


22 இவ்வாறு செய்வதால் அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய்;
ஆண்டவரும் உனக்குக் கைம்மாறு அளிப்பார். [2]


23 வட காற்று மழையைத் தோற்றுவிக்கும்;
புறங்கூறுதல் சீற்றப் பார்வையைத் தோற்றுவிக்கும்.


24 மாடி வீட்டில் நச்சரிக்கும் மனைவியோடு வாழ்வதைவிட
குடிசை வாழ்க்கையே மேல்.


25 தொலைவிடத்திலிருந்து வரும் நற்செய்தி,
வறண்ட தொண்டைக்குக் கிடைக்கும் குளிர்ந்த நீரை ஒக்கும்.


26 பொல்லாருக்கு இணங்கிவிடும் நேர்மையானவர்
கலங்கிய ஊற்றை அல்லது பாழடைந்த கிணற்றை ஒத்திருக்கிறார்.


27 தேனை மிகுதியாகச் சாப்பிடுவது நன்றன்று;
புகழ்ச்சியை மிகுதியாக விரும்பவதும் நன்றன்று.


28 தன்னடக்கமில்லா மனிதர்
அரண் அழிந்த காவல் இல்லாப் பட்டணம்.


குறிப்புகள்

[1] 25:6-7 = லூக் 14:8-10.
[2] 25:21-22 = உரோ 12:20.


அதிகாரம் 26[தொகு]


1 வேனிற் காலத்தில் பனி இருக்குமா?
அறுவடைக் காலத்திற்கு மழை பொருத்துமா?
அவ்வாறே மதிகேடருக்குப் புகழ் ஒவ்வாது.


2 சிட்டுக் குருவியும் அடைக்கலான் குருவியும் பறந்து திரிவது போல,
காரணமின்றி இட்ட சாபமும் காற்றாய்ப் பறந்துபோகும்.


3 குதிரைக்குச் சவுக்கடி, கழுதைக்குக் கடிவாளம்;
முட்டாளின் முதுகுக்குப் பிரம்பு.


4 மடையரின் கேள்விக்கு முட்டாள்தனமாகப் பதிலுரைக்காதே;
உரைத்தால் நீயும் அவரை போல ஒரு மடையனே.


5 மடையரின் கேள்விக்கு அவரது மடமையை உணர்த்தும் வகையில் பதிலுரை;
இல்லாவிடில், அவர் தம்மை ஞானி என்று எண்ணிக் கொள்வார்;


6 மூடரைத் தூதாக அனுப்புதல்,
தன் காலையே வெட்டிக் கேடு உண்டாக்கிக்கொள்வதற்குச் சமம்.


7 ஊனக் கால்கள் தடுமாறி நடக்கும்;
அவ்வாறே மூடர் வாயில் முதுமொழியும் வரும்.


8 மூடருக்கு உயர் மதிப்புக்கொடுப்பவர்
கவணில் கல்லை இறுகக் கட்டி வைத்தவருக்குச் சமம்.


9 மூடன் வாயில் முதுமொழி,
குடிகாரன் கையிலுள்ள முட்செடிக்குச் சமம்.


10 மூடனையோ குடிகாரனையோ வேலைக்கு அமர்த்துபவர்
வழிப்போக்கர் எவராயிருப்பினும்
அவர் மீது அம்பு எய்கிறவரை ஒத்திருக்கிறார்.


11 நாய் தான் கக்கினதைத் தின்னத் திரும்பிவரும்;
அதுபோல மூடர் தாம் செய்த மடச்செயலையே மீண்டும் செய்வார்.


12 தம்மை ஞானமுள்ளவரென்று சொல்லிக்கொள்ளும்
யாரையாவது நீ பார்த்திருக்கிறாயா?
மூடராவது ஒருவேளை திருந்துவார்; ஆனால் இவர் திருந்தவேமாட்டார்.


13 "வீதியில் சிங்கம் இருக்கிறது; வெளியே சிங்கம் அலைகிறது"
என்று சொல்லிக்கொண்டிருப்பவர் சோம்பேறி.


14 கீல்பட்டையில் கதவு ஆடிக்கொண்டிருப்பதுபோல,
சோம்பேறி தம் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பார்.


15 சோம்பேறி உண்கலத்தில் கையை இடுவார்;
ஆனால் அதை வாய்க்குக் கொண்டுபோகச் சோம்பலடைவார்.


16 விவேகமான விடையளிக்கும் ஏழு அறிவாளிகளைவிட,
தாம் மிகுந்த ஞானமுள்ளவர் என்று நினைக்கிறார் சோம்பேறி.


17 பிறருடைய சச்சரவுகளில் தலையிடுகிறவர்,
தெருவில் செல்லும் வெறிநாயின் வாலைப்
பிடித்து இழுப்பவருக்கு ஒப்பாவார்.


18 கொல்லும் தீக்கொள்ளியையும் அம்பையும் எறியும்
பைத்தியக்காரனுக்கு ஒப்பானவர் யாரெனில்,


19 பிறனை வஞ்சித்துவிட்டு,
"நான் விளையாட்டுக்குச் செய்தேன்" என்று சொல்பவரே.


20 விறகு இல்லாவிடில் நெருப்பு அணையும்;
புறங்கூறுபவர் இல்லாவிடில் சண்டை அடங்கும்.


21 கரியால் தழல் உண்டாகும், விறகால் நெருப்பு எரியும்;
சண்டை பிடிக்கிறவரால் கலகம் மூளும்.


22 புறணி கேட்பது பலருக்கு அறுசுவை உண்டி உண்பது போலாம்.
அதை அவர்கள் பேராவலோடு விழுங்குவார்கள்.


23 தீய நெஞ்சத்தை மறைக்க நயமாகப் பேசுவது,
மட்பாண்டத்திற்கு மெருகூட்டிப் பளபளக்கச் செய்வது போலாகும்.


24 பகையுணர்ச்சி உள்ளவர் நாவினால் கபடத்தை நயம்படப் பேசுவார்;
உள்ளத்திலோ கபடம் மறைந்திருக்கும்.


25 அவர் நயமாகப் பேசினாலும் அவரை நம்பாதே;
அவர் உள்ளத்தில் அருவருக்கத்தக்கவை ஏழு இருக்கும்.


26 அவர் தம் பகையை வஞ்சகமாக மறைத்து வைத்திருப்பினும்,
அவரது தீயகுணம் மக்களிடையே அம்பலமாகிவிடும்.


27 தான் வெட்டின குழியில் தானே விழுவார்;
தான் புரட்டின கல் தன் மேலேயே விழும்.


28 பொய் பேசம் நா உண்மையை வெறுக்கும்;
இச்சகம் பேசம் வாய் அழிவை உண்டாக்கும்.


(தொடர்ச்சி):நீதிமொழிகள்:அதிகாரங்கள் 27 முதல் 28 வரை