திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)/அதிகாரங்கள் 27 முதல் 28 வரை

விக்கிமூலம் இலிருந்து
"நீரில் ஒருவர் தம் முகத்தைக் காண்பார்; அதுபோல, தம் உள்ளத்தில் ஒருவர் தம்மைக் காண்பார்". - நீதிமொழிகள் 27:19.

நீதிமொழிகள் (The Book of Proverbs)[தொகு]

அதிகாரங்கள் 27 முதல் 28 வரை

அதிகாரம் 27[தொகு]


1 இன்று நடக்கப்போவதே தெரியாது;
நாளை நடக்கப் போவதை அறிந்தவன்போலப்
பெருமையாகப் பேசாதே. [*]


2 உன்னை உன்னுடைய வாயல்ல;
மற்றவர்களுடைய வாய் புகழட்டும்;
உன் நாவல்ல, வேறொருவர் நா போற்றட்டும்.


3 கல்லும் மணலும் பளுவானவை;
மூடர் தரும் தொல்லையோ
இவ்விரண்டையும்விடப் பளுவானது.


4 சினம் கொடியது; சீற்றம் பெருவெள்ளம் போன்றது;
ஆனால் பொறாமையின் கொடுமையை
எதிர்த்து நிற்க யாரால் இயலும்?


5 வெளிப்படுத்தப்படாத அன்பை விட,
குற்றத்தை வெளிப்படையாகக் கண்டிக்கும் கடிந்துரையே மேல்.


6 நண்பர் கொடுக்கும் அடிகள் நல்நோக்கம் கொண்டவை;
பகைவர் தரும் முத்தங்களோ வெறும் முத்தப்பொழிவே.


7 வயிறார உண்டவர் தேனையும் உதறித் தள்ளுவார்;
பசியுள்ளவருக்கோ கசப்பும் இனிக்கும்.


8 தம் வீட்டை விட்டு வெளியேறி அலைந்து திரிபவர்,
தன் கூட்டை விட்டு வெளியேறி
அலைந்து திரியும் குருவிக்கு ஒப்பானவர்.


9 நறுமணத் தைலம் உள்ளத்தை மகிழ்விக்கும்;
கனிவான அறிவுரை மனத்திற்குத் திடமளிக்கும்.


10 உன் நண்பரையும் உன் தந்தையின் நண்பரையும் கைவிடாதே;
உனக்கு இடுக்கண் வரும்காலத்தில்
உடன்பிறந்தான் வீட்டிற்குச் செல்லாதே;
தொலையிலிருக்கும் உடன்பிறந்தாரைவிட
அண்மையிலிருக்கும் நண்பரே மேல்.


11 பிள்ளாய், நீ ஞானமுள்ளவனாகி என் மனத்தை மகிழச்செய்;
அப்பொழுது நான் என்னைப் பழிக்கிறவருக்குத் தக்க பதிலளிப்பேன்.


12 எதிரில் வரும் இடரைக் கண்டதும்
விவேகமுள்ளவர் மறைந்து கொள்வார்;
அறிவற்றோர் அதன் எதிரே சென்று கேட்டுக்கு ஆளாவர்.


13 அன்னியருடைய கடனுக்காகப் பிணையாக நிற்கிறவனுடைய
ஆடையை எடுத்துக்கொள்;
அதை அந்தக் கடனுக்காகப் பிணையப் பொருளாக வைத்திரு.


14 ஒரு நண்பரிடம் விடியுமுன் போய் உரக்கக் கத்தி அவரை வாழ்த்துவது,
அவரைச் சபிப்பதற்குச் சமமெனக் கருதப்படும்.


15 ஓயாது சண்டைபிடிக்கும் மனைவி,
அடைமழை நாளில் இடைவிடாத் தூறல் போன்றவள்.


16 அவளை அடக்குவதைவிடக் காற்றை அடக்குவதே எளிது எனலாம்;
கையால் எண்ணெயை இறுகப் பிடிப்பதே எளிது எனலாம்.


17 இரும்பை இரும்பு கூர்மையாக்குவது போல,
ஒருவர்தம் அறிவால் மற்றவரைக் கூர்மதியாளராக்கலாம்.


18 அத்திமரத்தைக் காத்துப் பேணுகிறவருக்கு
அதன் கனி கிடைக்கும்;
தம் தலைவரைக் காத்துப் பேணுகிறவருக்கு
மேன்மை கிடைக்கும்.


19 நீரில் ஒருவர் தம் முகத்தைக் காண்பார்;
அதுபோல, தம் உள்ளத்தில் ஒருவர் தம்மைக் காண்பார்.


20 பாதாளமும் படுகுழியும் நிறைவு பெறுவதேயில்லை;
ஒருவர் கண்களின் விருப்பமும் நிறைவு பெறுவதில்லை.


21 வெள்ளியை உலைக்களமும் பொன்னைப் புடைக்குகையும்
சோதித்துப் பார்க்கும்;
ஒருவரை அவர் பெறுகின்ற புகழைக்கொண்டு சோதித்துப் பார்க்கலாம்.


22 மூடனை உரலில் போட்டு உலக்கையால்
நொய்யோடு நொய்யாகக் குத்தினாலும்,
அவனது மடமை அவனை விட்டு நீங்காது.


23 உன் ஆடுகளை நன்றாகப் பார்த்துக் கொள்;
உன் மந்தையின்மேல் கண்ணும் கருத்துமாயிரு.


24 ஏனெனில், செல்வம் எப்போதும் நிலைத்திராது;
சொத்து தலைமுறை தலைமுறையாக நீடித்திருப்பதில்லை.


25 புல்லை அறுத்தபின் இளம்புல் முளைக்கும்;
மலையில் முளைத்துள்ள புல்லைச் சேர்த்துவை.


26 ஆடுகள் உனக்கு ஆடை தரும்;
வெள்ளாட்டுக் கிடாயை விற்று விளைநிலம் வாங்க இயலும்.


27 எஞ்சிய ஆடுகள் உனக்கும் உன் குடும்பத்தாருக்கும்
தேவைப்படும் பாலைக் கொடுக்கும்;
உன் வேலைக்காரருக்கும் பால் கிடைக்கும்.


குறிப்பு

[*] 27:1 = யாக் 4:13-16.


அதிகாரம் 28[தொகு]


1 பொல்லாங்கு செய்தோரை எவரும் பின்தொடர்ந்து செல்லாதிருந்தும்,
அவர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள்;
நேர்மையானவர்களோ அச்சமின்றிச் சிங்கம் போல் இருப்பார்கள்.


2 ஒரு நாட்டில் அறிவும் விவேகமுமுள்ள தலைவர்கள் இருந்தால்,
அதன் ஆட்சி வலிமைவாய்ந்ததாய் நிலைத்திருக்கும்;
ஆனால் ஒரு நாட்டினர் தீவினை புரிவார்களாயின்,
ஆளுகை அடுத்தடுத்துக் கைமாறிக் கொண்டே இருக்கும்.


3 ஏழைகளை ஒடுக்கும் கொடிய அதிகாரி,
விளைச்சலை அழிக்கும் பெருமழைக்கு ஒப்பானவன்.


4 நீதிபோதனையைப் புறக்கணிப்போரே, பொல்லாரைப் புகழ்வர்;
அதைக் கடைப்பிடித்து நடப்போர் அவர்களை எதிர்ப்பர்.


5 தீயோருக்கு நியாயம் என்றால் என்ன என்பதே தெரியாது;
ஆண்டவரை வழிபடுபவரோ எல்லாவற்றையும் நன்குணர்பவர்.


6 முறைகேடாய் நடக்கும் செல்வரைவிட,
மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்.


7 அறிவுக்கூர்மையுள்ள மகன் நீதிச் சட்டத்தைக் கடைபிடித்து நடப்பான்;
ஊதாரிகளோடு சேர்ந்துகொண்டு திரிபவன்
தன் தந்தைக்கு இழிவு வரச் செய்வான்.


8 அநியாய வட்டி வாங்கிச் செல்வத்தைப் பெருக்குகிறவரது சொத்து,
ஏழைகளுக்கு இரங்குகிறவரைச் சென்றடையும்.


9 ஒருவர் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படியாதிருப்பாரானால்,
கடவுளும் அவர் வேண்டுதலை அருவருத்துத் தள்ளுவார்.


10 நேர்மையானவர்களைத் தீயவழியில் செல்லத் தூண்டுபவர்,
தாம் வெட்டின குழியில் தாமே விழுவார்;
தீது செய்யாதவர்கள் வளம்பட வாழ்வார்கள்.


11 செல்வர் தம்மை ஞானமுள்ளவர் என்று எண்ணிக்கொள்வார்;
உணர்வுள்ள ஏழையோ அவரது உண்மையான தன்மையை நன்கறிவார்.


12 நேர்மையானவர்கள் ஆட்சியுரிமை பெற்றால் மக்கள் பெருமிதம் கொள்வர்;
பொல்லார் தலைமையிடத்தற்கு வந்தால், மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள்.


13 தம் குற்றப் பழிகளை மூடிமறைப்பவரின் வாழ்க்கை வளம் பெறாது;
அவற்றை ஒப்புக்கொண்டு விட்டுவிடுகிறவர் கடவளின் இரக்கம் பெறுவார்.


14 எப்போதும் கடவுளுக்கு அஞ்சி வாழ்பவர் நற்பேறுபெறுவார்;
பிடிவாதமுள்ளவரோ தீங்கிற்கு உள்ளாவார்.


15 கொடுங்கோல் மன்னன் ஏழைக்குடிமக்களுக்கு முழக்கமிடும் சிங்கமும்
இரைதேடி அலையும் கரடியும் போலாவான்.


16 அறிவில்லாத ஆட்சியாளர் குடி மக்களை வதைத்துக் கொடுமைப்படுத்துவார்;
நேர்மையற்ற முறையில் கிடைக்கும் வருவாயை வெறுப்பவர் நீண்டகாலம் வாழ்வார்.


17 கொலை செய்தவன் தப்பியோடுவதாக எண்ணிப்
படுகுழியை நோக்கி விரைகிறான்;
அவனை எவரும் தடுக்க வேண்டாம்.


18 நேர்மையாக நடப்பவருக்குத் தீங்கு வராது;
தவறான வழியில் நடப்பவர் தீங்கிற்கு உள்ளாவார்.


19 உழுது பயிரிடுகிறவர் நிரம்ப உணவு பெறுவார்;
வீணானவற்றில் காலத்தைக் கழிப்பவர்
எப்போதும் வறுமை நிறைந்தவராய் இருப்பார்.


20 உண்மையுள்ள மனிதர் நலன்கள் பல பெறுவார்;
விரைவிலேயே செல்வராகப் பார்க்கிறவர்
தண்டனைக்குத் தப்பமாட்டார்.


21 ஓரவஞ்சனை காட்டுவது நன்றல்ல;
ஆனால் ஒரு வாய்ச் சோற்றுக்காகச் சட்டத்தை மீறுவோருமுண்டு.


22 பிறரைப் பொறாமைக் கண்ணோடு பார்ப்பவர்
தாமும் செல்வராக வேண்டுமென்று துடிக்கிறார்;
ஆனால் தாம் வறியவராகப்போவதை அவர் அறியார்.


23 முகப்புகழ்ச்சி செய்கிறவரைப் பார்க்கிலும்
கடிந்துகொள்ளுகிறவரே முடிவில் பெரிதும் பாராட்டப்படுவார்.


24 பெற்றோரின் பொருளைத் திருடிவிட்டு,
"அது குற்றமில்லை" என்று சொல்கிறவன்,
கொள்ளைக்காரரை விடக் கேடுகெட்டவன்.


25 பேராசைகொண்டவன் சண்டை மூளச் செய்வான்;
ஆண்டவரையே நம்பியிருப்பவர் நலமுடன் வாழ்வார்.


26 தன் சொந்தக் கருத்தையே நம்பி வாழ்பவன் முட்டாள்;
ஞானிகளின் நெறியில் நடப்பவரோ
தீங்கினின்று விடுவிக்கப்படுவர்.


27 ஏழைகளுக்குக் கொடுப்பவருக்குக் குறைவு எதுவும் ஏற்படாது;
அவர்களைக் கண்டும் காணாததுபோல் இருப்பவர்
பல சாபங்களுக்கு ஆளாவார்.


28 பொல்லார் தலைமையிடத்திற்கு வந்தால்,
மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள்;
அவர்கள் வீழ்ச்சியுற்றபின்
நேர்மையானவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள்.


(தொடர்ச்சி):நீதிமொழிகள்:அதிகாரங்கள் 29 முதல் 31 வரை