திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோசுவா/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
மோசேயும் யோசுவாவும் கடவுளின் கட்டளைகளைக் கொண்டுவருதல். விவிலிய வரைவோவியம். ஆண்டு: 1890.

யோசுவா[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

இஸ்ரயேலர் யோர்தானைக் கடத்தல்[தொகு]


1 யோசுவா அதிகாலையில் விழித்தெழுந்தார். அவரும் இஸ்ரயேல் மக்களனைவரும் சித்திமிலிருந்து புறப்பட்டு யோர்தான் வந்தடைந்தனர். அதைக் கடக்குமுன் அங்கே தங்கினர்.
2 மூன்று நாள்கள் கழிந்தபின் மேற்பார்வையாளர் பாளையமெங்கும் போய்,
3 மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: "உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை லேவியக் குருக்கள் தூக்குவதை நீங்கள் பார்க்கும்போது, உங்கள் இடங்களிலிருந்து புறப்பட்டு அதன் பின்னால் செல்லவேண்டும்.
4 ஆயினும் உங்களுக்கும் அதற்கும் இரண்டாயிரம் அடி இடைவெளி இருக்கட்டும். யாரும் அதன் அருகில் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் வழி உங்களுக்குத் தெரியவேண்டும். ஏனெனில் நீங்கள் அவ்வழியில் இதுவரை சென்றதில்லை."
5 யோசுவா மக்களிடம், "உங்களைத் தூய்மையாக்கிக்கொள்ளுங்கள். நாளை ஆண்டவர் உங்களிடையே வியத்தகு செயல்கள் புரிவார்" என்றார்.
6 யோசுவா குருக்களிடம், "உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிப் பிடியுங்கள். மக்கள்முன் கடந்து செல்லுங்கள்" என்றார். அவ்வாறே அவர்களும் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள்முன் சென்றனர்.


7 ஆண்டவர் யோசுவாவிடம், "இன்று இஸ்ரயேலர் அனைவரின் பார்வையில் உன்னை உயர்த்தத் தொடங்குகிறேன். அதனால் நான் மோசேயுடன் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன் என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
8 உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிவரும் குருக்கள் யோர்தான் ஆற்றங்கரைக்கு வந்தவுடன் அங்கேயே நிற்குமாறு அவர்களுக்குக் கட்டளையிடு" என்றார்.
9 யோசுவா இஸ்ரயேல் மக்களிடம், "இங்கே வாருங்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் வார்த்தைகளைக் கேளுங்கள்.
10 வாழும் இறைவன் உங்களிடையே இருக்கின்றார் என்று இதனால் அறிவீர்கள். அவர் உங்கள் முன்னிருந்து கானானியர், இத்தியர், இவ்வியர், பெரிசியர், கிர்காசியர், எமோரியர், எபூசியர் ஆகியோரை விரட்டிவிடுவார்.
11 இதோ, உலகனைத்தின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை உங்கள்முன் யோர்தானைக் கடக்கின்றது.
12 இப்போது இஸ்ரயேலின் பன்னிரு குலங்களிலிருந்தும் குலத்திற்கு ஒருவராக நீங்கள் தேர்ந்தெடுங்கள்.
13 உலகனைத்தின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் செல்லும் குருக்களின் காலடிகள் யோர்தான் நீரில் பட்டவுடன் அத்தண்ணீர் பிரிந்து போகும். மேற்பகுதியிலிருந்து ஓடிவரும் தண்ணீர் குவியலாக நிற்கும்" என்றார்.


14 மக்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து யோர்தானைக் கடக்கப் புறப்படும்போது குருக்கள் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள் முன்னே சென்றனர்.
15 உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானை அடைந்தனர். அவர்கள் காலடிகள் யோர்தான் நீரின் விளிம்பில் நனைந்தவுடன், மேற்பகுதியிலிருந்து ஓடிவந்த யோர்தான் நீர் வெகுதொலையில் நின்றது. அறுவடை நாள்களில் இந்நதி கரைபுரண்டு ஓடும்.


16 மேற்பகுதியிலிருந்து வந்த நீர், சாரத்தானின் அருகில் இருந்து ஆதாம் நகருக்கு எதிரில் வெகு தொலையில் மேலெழும்பி நின்றது. கீழே ஓடிய நீர் பாலைநிலக் கடலாகிய சாக்கடல் [*] வரை ஓடிமறைந்தது. மக்களும் எரிகோவுக்கு நேர்எதிராகக் கடந்து சென்றனர்.
17 இஸ்ரயேலர் அனைவரும் கடந்து முடிக்கும்வரை, ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தான் நடுவே வறண்ட தரையில் நின்றனர். எல்லா இஸ்ரயேல் மக்களும் அவ்வறண்ட தரை வழியாக நடந்தனர்.

குறிப்பு

[*] 3:16 'உப்புக் கடல்' என்பது மறுபெயர்.

அதிகாரம் 4[தொகு]

பன்னிரு நினைவுக் கற்கள்[தொகு]


1 மக்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்து முடிந்தபின் ஆண்டவர் யோசுவாவை நோக்கி,
2 "மக்களிலிருந்து குலத்திற்கு ஒருவராகப் பன்னிருவரை நீங்கள் தேர்ந்தெடுங்கள். அவர்களுக்குப் பின்வருமாறு கட்டளையிடுங்கள்.
3 "குருக்களின் பாதங்கள் இருக்கும் இடத்திலிருந்து பன்னிரு கற்களை எடுத்து உங்களுடன் கொண்டு வாருங்கள். அவற்றை நீங்கள் இவ்விரவு தங்குமிடத்தில் வையுங்கள்" என்றார்.
4 யோசுவா இஸ்ரயேல் மக்களிலிருந்து குலத்திற்கு ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிருவரை அழைத்தார்.
5 யோசுவா அவர்களிடம், "உங்கள் கடவுளாகிய ஆண்டவரது பேழைக்கு முன்பாக யோர்தான் நடுவில் கடந்து செல்லுங்கள். இஸ்ரயேல் குலங்களின் எண்ணிக்கைக்கேற்ப உங்களில் ஒவ்வொருவனும் ஒரு கல்லைத் தோளில் சுமந்து செல்லட்டும்.
6 இவை உங்களிடையே ஓர் அடையாளமாக இருக்கும். இக்கற்கள் உங்களுக்கு எதைக் குறிக்கும் என்று பிற்காலத்தில் உங்கள் பிள்ளைகள் கேட்பார்கள்.
7 அப்பொழுது நீங்கள் அவர்களுக்கு இவ்வாறு சொல்லுங்கள்: 'யோர்தான் நீர் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையின்முன் பிரிந்து நின்றது. அப்பேழை யோர்தானைக் கடக்கும்பொழுது யோர்தானின் தண்ணீர் பிரிந்து நின்றது. இக்கற்கள் இஸ்ரயேல் மக்களுக்கு என்றும் இந்நிகழ்ச்சியை நினைவூட்டுவதற்காக உள்ளன' என்று சொல்லுங்கள்" என்றார்.


8 யோசுவா கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்கள் செய்தனர். ஆண்டவர் யோசுவாவிடம் சொல்லியபடி யோர்தான் நதியின் நடுவிலிருந்து இஸ்ரயேல் மக்களின் குலங்களின் எண்ணிக்கைக்கேற்ப பன்னிரு கற்களை எடுத்துக் கொண்டு தாங்கள் தங்கிய இடத்திற்குச் சென்று அங்கே வைத்தனர்.
9 யோசுவா பன்னிரு கற்களையும் யோர்தான் நடுவில் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்களின் பாதங்கள் நின்ற இடத்தில் வைத்தார். அவை அங்கே இந்நாள்வரை உள்ளன.


10 இவ்வாறு மக்களுக்குக் கூறும்படி ஆண்டவர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டார். இவை அனைத்தும் முடியும் வரை பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தான் நடுவிலேயே நின்று கொண்டிருந்தனர். மக்களும் விரைவாகக் கடந்தனர். இதுவே மோசே யோசுவாவுக்கு அளித்திருந்த கட்டளை.
11 மக்கள் அனைவரும் கடந்த பின், ஆண்டவரது பேழையோடு குருக்களும், மக்கள் காணக் கடந்து வந்தனர்.
12 மோசே அவர்களுக்குக் கூறியபடி ரூபன், காத்தின் மக்களும் மனாசேயின் அரைக் குலமும் படைக்கலன்கள் தாங்கியவராய், இஸ்ரயேல் மக்கள் காணக் கடந்து வந்தனர்.
13 ஏறக்குறைய நாற்பதாயிரம் பேர் போருக்குத் தயாராக ஆண்டவரின் முன்னால் எரிகோ சமவெளிக்குச் சென்றனர்.
14 அன்று ஆண்டவர் யோசுவாவை இஸ்ரயேலர் அனைவரின் பார்வையில் உயர்த்தினார். அவர்கள் மோசேயை மதித்தது போல் இவரையும் வாழ்நாள் முழுவதும் மதித்தனர்.


15 ஆண்டவர் யோசுவாவிடம் கூறியது:
16 "உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிநிற்கும் குருக்களை யோர்தானிலிருந்து வெளியேறுமாறு கட்டயிடு!"
17 அவ்வாறே யோசுவா குருக்களுக்கு "யோர்தானிலிருந்து வெளியேறுங்கள்" என்று கட்டளையிட்டார்.
18 ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானின் நடுவிலிருந்து வெளியேறி, தங்கள் பாதங்களைக் கரையில் வைத்தவுடன் யோர்தான் நீர் தன்னிடத்திற்குத் திரும்பியது. முன்புபோல் கரைகளைத் தொட்டு ஓடியது.


19 முதல் மாதத்தின் பத்தாம் நாளன்று மக்கள் யோர்தானிலிருந்து வெளியேறினர். அவர்கள் எரிகோவில் கிழக்குப் பகுதியில் இருந்த கில்காலில் தங்கினர்.
20 யோர்தானிலிருந்து எடுத்து வந்த பன்னிரு கற்களையும் யோசுவா கில்காலில் நாட்டினார்.
21 அவர் இஸ்ரயேலரிடம், "எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் உங்களிடம் 'ஏன் இந்தக் கற்கள்?' என்று வினவினால்,
22 அவர்களிடம், இவ்வாறு தெரிவியுங்கள்: 'உலர்ந்த தரை வழியாக இஸ்ரயேலர் இந்த யோர்தானைக் கடந்தனர்.'
23 உங்கள் கடவுளாகிய ஆண்டவர், நாங்கள் கடக்கும் வரை செங்கடலின் நீரை எங்கள் கண்முன் வற்றச் செய்ததுபோல, நீங்கள் கடக்கும் வரையிலும் யோர்தான் நீரை உங்கள் கண்முன் வற்றச் செய்துள்ளார்.
24 அதனால் உலகின் எல்லா மக்களும் ஆண்டவரின் கை வலிமையுள்ளது என்று அறிவர். நீங்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வாழ்நாள் முழுவதும் அஞ்சுவீர்கள்" என்றார்.

(தொடர்ச்சி): யோசுவா: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை