திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோசுவா/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
யோசுவா எரிகோ நகரைக் கைப்பற்றுதல். விவிலியத் தோற்சுவடி. காலம்: 15ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: பாரிசு, பிரான்சு.

யோசுவா[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5[தொகு]


1 மேலை யோர்தானில் இருந்த எமோரிய நாட்டு அரசர்களும் கடலுக்கு அருகிலிருந்த கானானிய மன்னர்களும் ஆண்டவர் யோர்தான் நீரை இஸ்ரயேலர் கண்முன் அவர்கள் கடக்கும் வரையில் வற்றச்செய்தார் என்று கேள்வியுற்றபொழுது, அவர்களின் இதயங்கள் கலக்கமுற்றன. இஸ்ரயேலர்முன் அவர்கள் மனந்தளர்ந்தனர்.

கில்காலில் விருத்தசேதனம்[தொகு]


2 அப்பொழுது ஆண்டவர் யோசுவாவிடம், "கற்களால் கத்திகள் செய்துகொள். இஸ்ரயேலருக்கு மீண்டும் விருத்தசேதனம் செய்" என்றார்.
3 அவ்வாறே யோசுவா கற்களால் கத்திகள் செய்து கொண்டார். கிபயத்துகாரலோத்து என்னுமிடத்தில் அவர் இஸ்ரயேலருக்கு விருத்தசேதனம் செய்தார்.
4 விருத்தசேதனம் செய்ததன் காரணம்: எகிப்திலிருந்து வெளியேறிய மக்கள் அனைவரிலும் போர்வீரர்களான ஆண்கள் எல்லாரும் வழியில் பாலைநிலத்தில் இறந்துவிட்டனர்.
5 வெளியேறிய மக்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டிருந்தனர். எகிப்திலிருந்து வெளியேறியபின் வழியில் பாலைநிலத்தில் பிறந்தவர் எவருக்கும் விருத்தசேதனம் செய்யப்படவில்லை.
6 எகிப்திலிருந்து வெளியேறிய மக்கள் அனைவரிலும் போர்வீரர்களான ஆண்கள் எல்லாரும் அழியும்வரை, இஸ்ரயேலர் நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் அலைந்தனர். ஏனெனில் அவர்கள் ஆண்டவரின் குரலைக் கேட்கவில்லை. ஆகவே, ஆண்டவர் அவர்களுக்குக் கொடுப்பதாக ஏற்கெனவே அவர்கள் மூதாதையருக்கு உறுதியளித்திருந்த அந்தப் பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை அவர்கள் காணக் கூடாதென ஆணையிட்டுக் கூறினார். [1]
7 அழிந்தவர்களுக்குப் பதிலாக அவர்களின் பிள்ளைகளுக்கு யோசுவா விருத்தசேதனம் செய்தார். ஏனெனில் வழியில் அவர்களுக்கு விருத்தசேதனம் செய்யப்படவில்லை.


8 எல்லா மக்களும் விருத்தசேதனம் செய்யப்பெற்று முடிந்ததும், அவர்கள் குணமாகும் வரையில் அங்கேயே பாளையத்தில் தங்கினர்.
9 ஆண்டவர் யோசுவாவிடம், "இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்" என்றார். ஆகவே அந்த இடம் இந்நாள்வரை 'கில்கால்' [2] என்று அழைக்கப்படுகின்றது.


10 இஸ்ரயேலர் கில்காலில் தங்கினர். மாதத்தின் பதினான்காம் நாள் மாலை எரிகோ சமவெளியில் பாஸ்கா கொண்டாடினர். [3]
11 பாஸ்காவின் மறுநாள் நிலத்தின் விளைச்சலையும் புளிப்பற்ற அப்பத்தையும் வறுத்த தானியத்தையும் உண்டனர்.
12 நிலத்தின் விளைச்சலை உண்ட மறுநாளிலிருந்து மன்னா நின்றது.இஸ்ராயேலருக்கு மன்னா மீண்டும் கிடைக்கவில்லை. கானான் நிலத்தின் விளைச்சலை அந்த ஆண்டு உண்டனர். [4]

யோசுவா கண்ட காட்சி[தொகு]


13 அச்சமயத்தில் யோசுவா எரிகோவில் இருந்தார். அப்போது அவர் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ! ஓர் ஆடவர் அவர் எதிரில் தோன்றினார். கையில் உருவிய கத்தியுடன் அவர் நின்று கொண்டிருந்தார். யோசுவா அவரிடம் சென்று, "நீர் எங்கள் பக்கமா? அல்லது எதிரிகள் பக்கமா?" என்று கேட்டார்.
14 அவரோ, "இல்லை, நான் ஆண்டவரின் படைத்தலைவன் என்ற முறையில் இப்பொழுது வந்துள்ளேன்" என்றார். யோசுவா முகம் தரையில்பட வீழ்ந்து வணங்கி அவரிடம், "என் ஆண்டவர் தம் அடியானுக்கு என்ன கூறியுள்ளார்?" என்று கேட்டார்.
15 ஆண்டவரின் படைத்தலைவர் யோசுவாவிடம், "உன் காலணியை உன் காலிலிருந்து அகற்று. ஏனெனில் நீ நிற்கும் இடம் புனிதமானது" என்றார். யோசுவாவும் அப்படியே செய்தார்.

குறிப்புகள்

[1] 5:6 = எண் 14:28-35.
[2] 5:9 எபிரேயத்தில், 'நீக்குதல்' என்பது பொருள்.
[3] 5:10 = விப 12:1-13.
[4] 5:12 = விப 16:35.

அதிகாரம் 6[தொகு]

எரிகோவைக் கைப்பற்றல்[தொகு]


1 இஸ்ரயேல் மக்களுக்கு அஞ்சி, எரிகோ இறுக்கமாக அடைக்கப்பட்டது. ஒருவரும் வெளியே வரவுமில்லை; உள்ளே போகவுமில்லை.
2 கடவுள் யோசுவாவிடம், "பார்! எரிகோவையும், அதன் மன்னனையும், அதன் வலிமை மிக்க போர்வீரர்களையும் உன் கையில் ஒப்படைத்துவிட்டேன்.
3 போர்வீரர்களாகிய நீங்கள் அனைவரும் நகரை வளைத்துக் கொண்டு அதை ஒருமுறை சுற்றி வாருங்கள். இவ்வாறு ஆறு நாள்கள் செய்யுங்கள்.
4 ஏழு குருக்கள் கொம்புகளால் ஆகிய எக்காளங்களைப் பேழைக்கு முன் ஏந்திச் செல்லட்டும். ஏழாம் நாளில் நீங்கள் நகரை ஏழுமுறை சுற்றி வாருங்கள். அப்பொழுது குருக்கள் எக்காளங்களை முழங்கட்டும்.
5 அவர்களுடைய எக்காளத்தின் நீண்ட முழக்கத்தை நீங்கள் கேட்டவுடன், நிங்கள் அனைவரும் பேரொலி எழுப்புங்கள். அப்பொழுது நகரின் மதில்கள் இடிந்துவிழும். உடனே மக்கள் அவரவர்களுக்கு முன்னே உள்ள பகுதிக்கு ஏறிச்செல்ல வேண்டும்" என்றார்.
6 நூனின் மகனாகிய யோசுவா குருக்களை அழைத்து அவர்களிடம், "உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொள்ளுங்கள். ஏழு குருக்களும் ஏழு எக்காளங்களை ஆண்டவரது பேழைக்குமுன் ஏந்திக்கொண்டு போகட்டும்" என்று உரைத்துவிட்டு,
7 மக்களை நோக்கி, "முன்னால் போங்கள்; நகரைச் சுற்றி வாருங்கள். போர்வீரர்கள் ஆண்டவரது பேழைக்குமுன் செல்லட்டும்" என்றார்.


8 இவ்வாறு யோசுவா மக்களுக்குக் கூறியவுடன் கொம்புகளால் ஆகிய ஏழு எக்காளங்களை ஏந்திய ஏழு குருக்கள் ஆண்டவரின் முன் எக்காளம் முழங்கிக்கொண்டே நடந்து சென்றனர். உடன்படிக்கைப் பேழை அவர்களுக்குப் பின் சென்றது.
9 முன்னணி வீரர் எக்காளங்களை ஊதிய குருக்களுக்குமுன் நடந்து சென்றனர். பின்னணி வீரர் பேழைக்குப்பின் நடந்து சென்றனர். எக்காளங்கள் தொடர்ந்து முழங்கின.
10 யோசுவா மக்களை நோக்கி, "நான் சொல்லும் நாள்வரை நீங்கள் ஆரவாரம் செய்யாமலும், யாதோர் ஓசை எழுப்பாமலும் இருங்கள். உங்கள் வாயினின்று ஒரு வார்த்தையும் புறப்படலாகாது. நான் கூறும்பொழுது ஆர்ப்பரியுங்கள்" என்று கட்டளையிட்டார்.
11 ஆண்டவரின் பேழை நகரை ஒருமுறை சுற்றி வந்தது. பின்னர் அவர்கள் பாளையத்திற்கு வந்து அங்கே இரவைக் கழித்தார்கள்.


12 யோசுவா அதிகாலையில் எழுந்தார். குருக்கள் ஆண்டவரின் பேழையைச் சுமந்து சென்றார்கள்.
13 கொம்புகளாலான ஏழு எக்காளங்களை ஏந்திய ஏழு குருக்கள் ஆண்டவரின் பேழைக்குமுன் அவற்றை முழங்கிக்கொண்டே நடந்து சென்றனர். முன்னணி வீரர் அவர்களுக்கு முன் நடந்து சென்றனர். பின்னணி வீரர் ஆண்டவரின் பேழைக்குப்பின் நடந்து சென்றனர். எக்காளங்கள் தொடர்ந்து முழங்கின.
14 இரண்டாம் நாளிலும் அவர்கள் நகரை ஒருமுறை சுற்றி வந்தனர். பின்னர் பாளையத்திற்குத் திரும்பினர். இவ்வாறு ஆறுநாள்கள் செய்தனர்.


15 ஏழாம் நாள் வைகறையில் அவர்கள் எழுந்து முன்போலவே நகரை ஏழுமுறை சுற்றி வந்தனர். அன்று மட்டும் நகரை ஏழுமுறை சுற்றி வந்தனர்.
16 ஏழாவது முறை குருக்கள் எக்காளங்களை முழங்குகையில் யோசுவா மக்களிடம், "இப்பொழுது ஆரவாரம் செய்யுங்கள். ஏனெனில் ஆண்டவர் உங்களிடம் நகரை ஒப்படைத்துவிட்டார்.
17 நகரும் அதனுள் இருக்கும் அனைத்தும் ஆண்டவருக்குரியன. ஆகவே அவை அழிவுக்குரியன. விலைமாது இராகாபும் அவருடன் வீட்டில் உள்ள அனைவரும் உயிருடன் இருப்பர். ஏனெனில் நாம் அனுப்பிய போர்வீரர்களை அவர் ஒளித்துவைத்தார்.
18 நீங்கள் அழிந்து போகாதபடி கைப்பற்றிய பொருள்களிலிருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் அழிவுக்குரியவற்றிலிருந்து எதையாவது கவர்ந்தால், இஸ்ரயேலின் பாளையத்தையும் அழிவுக்குரியதாக்கிக் கலங்கச் செய்வீர்கள்.
19 எல்லா வெள்ளியும் பொன்னும் வெண்கல இரும்புப் பாத்திரங்களும் ஆண்டவருக்குப் புனிதமானவை. எனவே ஆண்டவரின் கருவூலத்தைச் சேரும்" என்றார்.
20 மக்கள் ஆரவாரம் செய்தனர். எக்காளங்கள் முழங்கின. எக்காளத்தின் ஓசையைக் கேட்ட மக்கள் பேரொலி எழுப்பினர். மதில் இடிந்து விழுந்தது. மக்கள் நகரினுள் நுழைந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு முன்னிருந்த பகுதியைத் தாக்கி நகரைக் கைப்பற்றினர்.
21 நகரில் இருந்த அனைத்தையும் அழித்தனர். ஆண் பெண், இளைஞர் முதியோர், ஆடு, மாடு கழுதை அனைத்தையும் வாள் முனையால் அழித்தனர். < br>22 நாட்டை உளவு பார்த்த இரண்டுபேரிடம் யோசுவா, "விலைமாதின் வீட்டுக்குச் செல்லுங்கள். அவருக்கு வாக்களித்தபடி அங்கிருந்து அப்பெண்ணையும், அவருக்குரிய அனைத்தையும் வெளியே கொண்டுவாருங்கள்" என்றார்.
23 உளவு பார்த்த இளைஞர்கள் சென்றனர். இராகாபையும் அவர் தந்தையையும் தாயையும் அவர் சகோதரர்களையும் அவருக்கிருந்த அனைத்தையும் வெளியே கொண்டுவந்தனர். அவருடைய உறவினர்களையும் அழைத்து வந்தனர். அவர்களை இஸ்ரயேலின் பாளையத்திற்கு வெளியே தங்கச் செய்தனர்.
24 நகரையும் அதனுள் இருந்த அனைத்தையும் நெருப்பிலிட்டு எரித்தனர். வெள்ளியையும், பொன்னையும், வெண்கல இரும்புப் பாத்திரங்களையும் மட்டுமே ஆண்டவரது வீட்டின் கருவூலத்தில் சேர்த்தனர்.
25 விலைமாது இராகாபையும் அவர் தந்தையின் வீட்டாரையும் அவரைச் சார்ந்த அனைவரையும் யோசுவா உயிருடன் காப்பாற்றினார். அவர் இஸ்ரயேல் நடுவில் இன்றுவரை வாழ்கின்றார். ஏனெனில் எரிகோவை உளவு பார்க்க அனுப்பப்பட்ட தூதர்களை அவர் ஒளித்துவைத்தார். [1]
26 அச்சமயம் யோசுவா எழுந்து, "எரிகோ என்னும் இந்நகரை மீண்டும் கட்டும் மனிதன் சபிக்கப்பட்டவன். அவன் கடைக்கால் இடுகையில் தன் முதல் மகனையும், அதன் வாயிற்கால்களை இடுகையில் தன் கடைசி மகனையும் இழப்பான்" என்றார். [2]
27 ஆண்டவர் யோசுவாவுடன் இருந்தார். அவரது புகழ் நாடு முழுவதும் பரவிற்று.

குறிப்புகள்

[1] 6:25 = எபி 11:31.
[2] 6:26 = 1 அர 16:34.

(தொடர்ச்சி): யோசுவா: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை