திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோபு/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

விக்கிமூலம் இலிருந்து
யோபின் மனைவியும் நண்பர்களும் அவரைச் சூழ்ந்து நிற்கின்றனர். விவிலிய ஓவியம். காலம்: 15ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: பிரான்சு.

யோபு (The Book of Job)[தொகு]

அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

அதிகாரம் 11[தொகு]

கடவுளின் ஞானத்தை ஏற்றுக்கொள்ள யோபு தூண்டப்படல்[தொகு]


1 அதற்கு நாமாவியனான சோப்பார் சொன்ன மறுமொழி:


2 திரளான சொற்கள் பதிலின்றிப் போகலாமா?
மிகுதியாகப் பேசுவதால்,
ஒருவர் நேர்மையாளர் ஆகிவிடுவாரோ?


3 உம் வீண் வார்த்தைகள் மனிதரை வாயடைத்திடுமோ?
நீர் நகையாடும் போது உம்மை யாரும் நையாண்டி செய்யாரோ?


4'என் அறிவுரை தூயது;
நானும் என் கண்களுக்கு மாசற்றவன்' என்கின்றீர்.


5ஆனால், 'கடவுளே பேசட்டும்;
தம் இதழ்களை உமக்கெதிராய்த் திறக்கட்டும்' என
யாரேனும் அவரை வேண்டாரோ!


6 அவரே ஞானத்தின் மறைபொருளை உமக்கு அறிவிக்கட்டும்;
அவர் இரட்டிப்பான அறிவும் திறனுமுடையவர்;
கடவுள் உம் தீமைகளில் சிலவற்றை மறந்தார் என்பதை அறிக!


7 கடவுளின் ஆழ்ந்த உண்மைகளை நீர் அறிய முடியுமா?
எல்லாம் வல்லவரின் எல்லையைக் கண்டுணர முடியுமா?


8 அவை வானங்களை விட உயர்ந்தவை; நீர் என்ன செய்வீர்?
அவை பாதாளத்தைவிட ஆழமானவை; நீர் என்ன அறிவீர்?


9 அதன் அளவு பாருலகைவிடப் பரந்தது;
ஆழ்கடலைவிட அகலமானது.


10 அவர் இழுத்து வந்து அடைத்துப் போட்டாலும்,
அவைமுன் நிறுத்தினாலும் அவரைத் தடுப்பார் யார்?


11 ஏனெனில், அவர் மனிதரின் ஒன்றுமில்லாமையை அறிவார்;
தீமையைக் காண்கின்றார்;
ஆனால், அதை ஒருபொருட்டாகக் கருதுவதில்லை.


12 காட்டுக் கழுதைக்குட்டி மனிதனாகப் பிறந்தால்,
அறிவிலியும் அறிவு பெறுவான்.


13 உம்முடைய உள்ளத்தை நீர் ஒழுங்குபடுத்தினால்,
உம்முடைய கைகளை அவரை நோக்கி நீட்டுவீராக!


14 உம் கையில் கறையிருக்குமாயின் அப்புறப்படுத்தும்;
உம் கூடாரத்தில் தீமை குடிகொள்ளாதிருக்கட்டும்.


15 அப்போது உண்மையாகவே நாணமின்றி உம் முகத்தை ஏறெடுப்பீர்;
நிலைநிறுத்தப்படுவீர்; அஞ்சமாட்டீர்.


16 உம் துயரை நீர் மறந்துபோவீர்;
கடந்துபோன வெள்ளம்போல் அதை நினைகூர்வீர்.


17 உம் வாழ்வுக்காலம் நண்பகலைவிட ஒளிரும்;
காரிருளால் மூடப்பட்டிருந்தாலும் காலைபோல் ஆவீர்;


18 நம்பிக்கை இருப்பதனால் உறுதிகொள்வீர்;
சுற்றிலும் நோக்கிப் பாதுகாப்பில் ஓய்வீர்;


19 ஓய்ந்து படுப்பீர்;
ஒருவரும் உம்மை அச்சுறுத்தார்;
உம் முகம்தேடிப் பலர் உம் தயவை நாடுவர்;


20 தீயோரின் கண்கள் மங்கிப்போம்;
அனைத்துப் புகலிடமும் அவர்க்கு அழிந்துபோம்;
உயிர்பிரிதலே அவர்தம் நம்பிக்கை!


அதிகாரம் 12[தொகு]

வலிமைமிகு செயல்களில் தெரியும் கடவுளின் ஞானம்[தொகு]


1 அதற்கு யோபு உரைத்த மறுமொழி:
2 உண்மையிலும் உண்மை; நீங்கள்தாம் எல்லாம் தெரிந்தவர்கள்.
உங்களோடு ஞானமும் ஒழிந்துவிடும்!


3 உங்களைப்போல அறிவு எனக்கும் உண்டு;
உங்களுக்கு நான் தாழ்ந்தவன் அல்லன்;
இத்தகையவற்றை யார்தான் அறியார்?


4 கடவுளை மன்றாடி மறுமொழி பெற்ற நான்,
என் நண்பர்க்கு நகைப்புப் பொருள் ஆனேன்.
குற்றமற்ற நேர்மையாளனாகிய நான் நகைப்புப் பொருள் ஆனேன்.


5 இன்பத்தில் திளைத்திருக்கும் நீங்கள் என்னை ஏளனம் செய்கின்றீர்கள்;
அடிசறுக்கிய என்னைத் தாக்குகின்றீர்கள்.


6 கொள்ளையரின் கூடாரங்கள் கொழிக்கின்றன!
இறைவனைச் சினந்தெழச் செய்வோரும்
கடவுளுக்குச் சவால் விடுப்போரும் பாதுகாப்பாய் உள்ளனர்!


7 இருப்பினும், விலங்கிடம் வினவுக; உமக்கு அது கற்றுக்கொடுக்கும்;
வானத்துப் பறவை உமக்கு அறிவுறுத்தும்.


8 அல்லது மண்ணில் ஊர்வனவற்றிடம் பேசுக; அவை உமக்குக் கற்பிக்கும்.
ஆழியின் மீன்கள் உமக்கு அறிவிக்கும்.


9 இவற்றில் ஆண்டவரை அறியாதது எது?
அவரது கைதான் இதைச் செய்தது என எது அறியாது?


10 அவர் கையில்தான் அனைத்துப் படைப்புகளின் உயிரும்
மனித இனத்தின் மூச்சும் உள்ளன.


11 செவி, சொற்களைப் பிரித்து உணர்வதில்லையா?
நாக்கு, உணவைச் சுவைத்து அறிவதில்லையா?


12 முதியோரிடம் ஞானமுண்டு;
ஆயுள் நீண்டோரிடம் அறிவுண்டு.


13 ஞானமும் வலிமையும் அவரிடமே உள்ளன!
ஆலோசனையும் அறிவும் அவர்க்கே உரியன!


14 இதோ! அவர் இடித்திடுவதை எழுப்பிட இயலாது;
அவர் அடைத்திடுபவரை விடுவித்திட முடியாது.


15 இதோ: அவர் மழையைத் தடுப்பாரெனில், அனைத்தும் வறண்டுபோம்;
வெளியே அதை வரவிடுவாரெனில், நிலத்தையே மூழ்கடிக்கும்.


16 வல்லமையும் மதிநுட்பமும் அவருக்கே உரியன;
ஏமாற்றுவோரும் ஏமாறுவோரும் அவருடையோரே!


17 அமைச்சர்களை அறிவிழக்கச் செய்கின்றார்;
நடுவர்களை மடையர்கள் ஆக்குகின்றார்.


18 அரசர்களின் அரைக்கச்சையை அவிழ்க்கின்றார்;
அவர்களின் இடையில் கந்தையைக் கட்டுகின்றார்;


19 குருக்களைத் தம் நிலையிலிருந்து விழச் செய்கின்றார்;
நிலைபெற்ற வலியோரைக் கவிழ்த்து வீழ்த்துகின்றார்;


20 வாய்மையாளரின் வாயை அடைக்கின்றார்;
முதியோரின் பகுத்துணர் மதியைப் பறிக்கின்றார்;


21 உயர்குடி மக்கள் மீது வெறுப்பினைப் பொழிகின்றார்;
வலியோரின் கச்சை கழன்றுபோகச் செய்கின்றார்;


22 புரியாப் புதிர்களை இருளினின்று இலங்கச் செய்கின்றார்.
காரிருளை ஒளிக்குக் கடத்திவருகின்றார்.


23 மக்களினங்களைப் பெருகச் செய்கின்றார்; பின்பு அழிக்கின்றார்;
மக்களினங்களைப் பரவச் செய்கின்றார்; பின், குறையச் செய்கின்றார்.


24 மண்ணக மக்களின் தலைவர்தம் அறிவாற்றலை அழிக்கின்றார்.
வழியிலாப் பாழ்வெளியில் அவர்களை அலையச் செய்கின்றார்.


25 இருளில் ஒளியிலாது தடவுகின்றார்கள்;
குடித்தவர்போல் அவர்களைத் தடுமாற வைக்கின்றார்.


(தொடர்ச்சி): யோபு:அதிகாரங்கள் 13 முதல் 14 வரை