உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோபு/அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

விக்கிமூலம் இலிருந்து
துன்பத்தில் உழலும் யோபு. ஓவியர்: லியோன் போன்னா (1833-1922). காப்பிடம்: லூவ்ர், பாரிசு.

யோபு (The Book of Job)

[தொகு]

அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

அதிகாரம் 19

[தொகு]

பற்றுறுதியின் வெற்றி

[தொகு]


1 பின் யோபு உரைத்த மறுமொழி:


2 என் உள்ளத்தை எவ்வளவு காலத்திற்குப் புண்படுத்துவீர்?
என்னை வார்த்தையால் நொறுக்குவீர்?


3 பன்முறை என்னைப் பழித்துரைத்தீர்;
வெட்கமின்றி என்னைத் தாக்கிப் பேசினீர்.


4 உண்மையாகவே நான் பிழை செய்திருந்தாலும்
என்னுடன் அன்றோ அந்தப் பிழை இருக்கும்?


5 எனக்கு எதிராய் நீங்களே உங்களைப் பெருமைப்படுத்திக் கொள்வீர்களாகில்,
என் இழிநிலையை எனக்கு விரோதமாய்க் காட்டுவீராகில்,


6 கடவுள்தான் என்னை நெருக்கடிக்குள் செலுத்தினார் என்றும்,
வலைவீசி என்னை வளைத்தார் என்றும் அறிந்துகொள்க!


7 இதோ: 'கொடுமை' எனக் கூக்குரலிட்டாலும் கேட்பாரில்லை;
நான் ஓலமிட்டாலும் தீர்ப்பாரில்லை.


8 நான் கடந்துபோகாவண்ணம், கடவுள் என் வழியை அடைத்தார்;
என் பாதையை இருளாக்கினார்.


9 என் மாண்பினை அவர் களைந்தார்;
மணிமுடியை என் தலையினின்று அகற்றினார்.


10 எல்லாப் பக்கமும் என்னை இடித்துக் தகர்த்தார்;
நான் தொலைந்தேன்;
மரம்போலும் என் நம்பிக்கையை வேரோடு பிடுங்கினார்.


11 அவர்தம் கோபக்கனல் எனக்கெதிராய்த் தெறித்தது;
அவர் எதிரிகளில் ஒருவனாய் என்னையும் எண்ணுகின்றார்.


12 அவர்தம் படைகள் ஒன்றாக எழுந்தன;
அவர்கள் எனக்கெதிராய் முற்றுகை இட்டனர்;
என் கூடாரத்தைச் சுற்றிப் பாசறை அமைத்தனர்.


13 என் உடன் பிறந்தவரை என்னிடமிருந்து அகற்றினார்;
எனக்கு அறிமுகமானவரை முற்றிலும் விலக்கினார்;


14 என் உற்றார் என்னை ஒதுக்கினர்;
என் நண்பர்கள் என்னை மறந்தனர்.


15 என் வீட்டு விருந்தினரும் என் பணிப்பெண்களும்
என்னை அன்னியனாகக் கருதினர்;
அவர்கள் கண்களுக்குமுன் நான் அயலானானேன்.


16 என் அடிமையை அழைப்பேன்; மறுமொழி கொடான்;
என் வாயால் அவனைக் கெஞ்ச வேண்டியிருக்கிறது.


17 என் மனைவிக்கு என் மூச்சு வீச்சம் ஆயிற்று;
என் தாயின் பிள்ளைகளுக்கு நாற்றம் ஆனேன்.


18 குழந்தைகளும் என்னைக் கேலி செய்கின்றனர்;
நான் எழுந்தால் கூட ஏளனம் செய்கின்றனர்.


19 என் உயிர் நண்பர் எல்லாரும் என்னை வெறுத்தனர்;
என் அன்புக்குரியவராய் இருந்தோரும் எனக்கெதிராக மாறினர்.


20 நான் வெறும் எலும்பும் தோலும் ஆனேன்;
நான் பற்களின் ஈறோடு தப்பினேன்.


21 என் மேல் இரங்குங்கள்; என் நண்பர்காள்!
என் மேல் இரக்கம் கொள்ளுங்கள்;
ஏனெனில் கடவுளின் கை என்னைத் தண்டித்தது.


22 இறைவனைப் போல் நீங்களும் என்னை விரட்டுவது ஏன்?
என் சதையை நீங்கள் குதறியது போதாதா?


23 ஓ! என் வார்த்தைகள் இப்பொழுது வரையப்படலாகாதா?
ஓ! அவை ஏட்டுச் சுருளில் எழுதப்படலாகாதா?


24 இரும்புக்கருவியாலும் ஈயத்தாலும்
என்றென்றும் அவை பாறையில் பொறிக்கப்பட வேண்டும்.


25 ஏனெனில், என் மீட்பர் வாழ்கின்றார் என்றும்
இறுதியில் மண்மேல் எழுவார் என்றும் நான் அறிவேன்.


26 என் தோல் இவ்வாறு அழிக்கப்பட்ட பின்,
நான் சதையோடு இருக்கும் போதே கடவுளைக் காண்பேன்.


27 நானே, அவர் என் பக்கத்தில் நிற்கக் காண்பேன்;
என் கண்களே காணும்; வேறு கண்கள் அல்ல;
என் நெஞ்சம் அதற்காக ஏங்குகின்றது.


28 ஆனால், நீங்கள் பேசிக்கொள்கின்றீர்கள்: 'அவனை எப்படி நாம் வதைப்பது?
அவனிடம் அடிப்படைக் காரணத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?'


29 மாறாக - வாளுக்கு நீங்களே அஞ்சவேண்டும்;
ஏனெனில், சீற்றம் வாளின் தண்டனையைக் கொணரும்;
அப்போது, நீதித் தீர்ப்பு உண்டு என்பதை அறிந்துகொள்வீர்கள்.


அதிகாரம் 20

[தொகு]

நீதிக்கு விதிவிலக்கு இல்லை

[தொகு]


1 அதற்கு நாமாயனான சோப்பார் கூறின பதில்:


2 என்னுள் இருக்கும் துடிப்பின் பொருட்டு,
என் எண்ணங்கள் பதில் சொல்ல வைக்கின்றன.


3 என்னை வெட்கமடையச் செய்யும் குத்தல்மொழி கேட்டேன்;
நான் புரிந்து கொண்டதிலிருந்து விடை அளிக்க மனம் என்னை உந்துகிறது.


4 மாந்தர் மண்ணில் தோன்றியதிலிருந்து,
தொன்றுதொட்டு நடக்குமிது உமக்குத் தெரியாதா?


5 கொடியவரின் மகிழ்ச்சி நொடிப் பொழுதே!
கடவுளுக்கு அஞ்சாதவரின் களிப்பு கணப்பொழுதே!


6 அவர்களின் பெருமை விசும்பு மட்டும் உயர்ந்தாலும்,
அவர்களின் தலை முகிலை முட்டுமளவு இருந்தாலும்,


7 அவர்கள் தங்களின் சொந்த மலம் போன்று என்றைக்கும் ஒழிந்திடுவர்;
அவர்களைக் கண்டவர், எங்கே அவர்கள்? என்பர்.


8 கனவுபோல் கலைந்திடுவர்; காணப்படார்;
இரவு நேரக் காட்சிபோல் மறைந்திடுவர்.


9 பார்த்த கண் இனி அவர்களைப் பார்க்காது;
வாழ்ந்த இடம், அவர்களை என்றும் காணாது.


10 ஏழைகளின் தயவை அவர்களின் குழந்தைகள் நாடுவர்;
அவர்களின் கைகளே அவர்களின் செல்வத்தைத் திரும்ப அளிக்கும்.


11 எலும்புகளை நிரப்பிய அவர்களின் இளமைத் துடிப்பு,
மண்ணில் அவர்களோடு மறைந்துவிடும்.


12 தீங்கு அவர்களின் வாயில் இனிப்பாய் இருப்பினும்,
நாவின் அடியில் அதை அவர்கள் மறைத்து வைப்பினும்,


13 இழந்து போகாமல் அதை அவர்கள் இருத்தி வைத்தாலும்,
அண்ணத்தின் நடுவே அதை அடைத்து வைத்தாலும்,


14 வயிற்றிலே அவர்களின் உணவு மாற்றமடைந்து,
அவர்களுக்கு விரியன் பாம்பின் நஞ்சாகிவிடுமே;


15 செல்வத்தை விழுங்கினர்; அதை அவர்களே கக்குவர்;
இறைவன் அவர்களின் வயிற்றிலிருந்து அதை வெளியேற்றுவார்.


16 விரியன் பாம்பின் நஞ்சை அவர்கள் உறிஞ்சுவர்;
கட்டு விரியனின் நாக்கு அவர்களைக் கொன்றுபோடும்.


17 ஓலிவ எண்ணெய்க் கால்வாய்களிலும்,
தேன், வெண்ணெய் ஆறுகளிலும் அவர்கள் இன்பம் காணார்.


18 தங்களின் உழைப்பின் பயனை அவர்கள் திரும்ப அளிப்பர்;
அதை அவர்கள் உண்ணமாட்டார்;
வணிகத்தின் வருவாயில் இன்புறார்.


19 ஏனெனில், அவர்கள் ஏழைகளை ஒடுக்கி, இல்லாதவராக்கினர்;
தாங்கள் கட்டாத வீட்டை அவர்கள் அபகரித்துக் கொண்டனர்.


20 அவர்களின் ஆசைக்கோர் அளவேயில்லை;
ஆதலால், அவர்கள் இச்சித்த செல்வத்தில் மிச்சத்தைக் காணார்.


21 அவர்கள் தின்றபின் எஞ்சியது எதுவும் இல்லை;
எனவே அவர்களது செழுமை நின்று நிலைக்காது.


22 நிறைந்த செல்வத்திடை அவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்;
அவலத்தின் பளுவெல்லாம் அவர்கள்மேல் விழும்.


23 அவர்கள் வயிறு புடைக்க உண்ணும்போது,
இறைவன் தம் கோபக்கனலை அவர்கள்மேல் கொட்டுவார்;
அதையே அவர்களுக்கு உணவாகப் பொழிவார்.


24 அவர்கள் இரும்பு ஆயுதத்திற்கு அஞ்சி ஓடுவர்;
ஆனால், வெண்கல வில் அவர்களை வீழ்த்திடுமே!


25 அவர்கள் அதைப் பின்புறமாக இழுப்பர்;
மின்னும் அம்பு முனை பிச்சியிலிருந்து வெளிவரும்;
அச்சம் அவர்கள் மேல் விழும்.


26 காரிருள் அவர்களது கருவூலத்திற்குக் காத்திருக்கும்;
மூட்டாத தீ அதனைச் சுட்டெரிக்கும்;
அவர்களின் கூடாரத்தில் எஞ்சியதை விழுங்கும்.


27 விண்ணகம் அவர்களின் பழியை வெளியாக்கும்;
மண்ணகம் அவர்களை மறுத்திட எழுந்து நிற்கும்.


28 அவர்களது இல்லத்தின் செல்வம் சூறையாடப்படும்;
இறைவனின் வெஞ்சின நாளில் அது அடித்துப்போகப்படும்.


29 இதுவே பொல்லார்க்குக் கடவுள் அளிக்கும் பங்கு;
அவர்களுக்கு இறைவன் குறிக்கும் உரிமைச் சொத்து.


(தொடர்ச்சி): யோபு:அதிகாரங்கள் 21 முதல் 22 வரை