திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோபு/அதிகாரங்கள் 21 முதல் 22 வரை
யோபு (The Book of Job)
[தொகு]அதிகாரங்கள் 21 முதல் 22 வரை
அதிகாரம் 21
[தொகு]நிகழ்வன எதிர்மாயாய் இருத்தல்
[தொகு]
1 அதற்கு யோபு கூறிய மறுமொழி:
2 நான் கூறுவதைக் கவனமாய்க் கேளுங்கள்;
இதுவே நீங்கள் எனக்கு அளிக்கும் ஆறுதலாயிருக்கும்.
3 பொறுங்கள்! என்னைப் பேசவிடுங்கள்;
நான் பேசிய பிறகு கேலி செய்யுங்கள்.
4 என்னைப் பொறுத்த மட்டில், நான் முறையிடுவது மனிதரை எதிர்த்தா?
இல்லையேல் நான் ஏன் பொறுமை இழக்கக்கூடாது?
5 என்னை உற்றுப்பாருங்கள்; பதறுங்கள்;
கையால் வாயில் அடித்துக்கொள்ளுங்கள்.
6 இதை நான் நினைக்கும்பொழுது திகிலடைகின்றேன்;
நடுக்கம் என் சதையை ஆட்டுகிறது.
7 தீயோர் வாழ்வதேன்? நீண்ட ஆயுள் பெறுவதேன்?
வலியோராய் வளர்வதேன்?
8 அவர்களின் வழிமரபினர் அவர்கள்முன் நிலைபெறுகின்றனர்;
அவர்களின் வழித்தோன்றல்கள் அவர்கள் கண்முன் நிலைத்திருக்கின்றனர்.
9 அவர்களின் இல்லங்களில் அச்சமற்ற அமைதி நிலவுகின்றது.
கடவுளின் தண்டனை அவர்கள்மேல் விழவில்லை.
10 அவர்களின் காளைகள் பொலிகின்றன; ஆனால் பிசகுவதில்லை.
அவர்களின் பசுக்கள் கருவுறும்; ஆனால் கரு கலைவதில்லை.
11 மந்தைபோல அவர்கள் தம் மழலைகளை வெளியனுப்புகின்றனர்;
அவர்களின் குழந்தைகள் குதித்தாடுகின்றனர்.
12 அவர்கள் தம்புரு, சுரமண்டலம் இசைத்துப் பாடுகின்றனர்;
குழல் ஊதி மகிழ்ந்திடுகின்றனர்.
13 அவர்கள் மகிழ்வில் தம் நாள்களைக் கழிக்கின்றனர்;
அமைதியில் பாதாளம் இறங்குகின்றனர்.
14 அவர்கள் இறைவனிடம் இயம்புகின்றனர்:
'எம்மை விட்டு அகலும்;
ஏனெனில், உமது வழிகளை அறிந்து கொள்ள நாங்கள் விரும்பவில்லை;
15 எல்லாம் வல்லவர் யார் நாங்கள் பணி புரிய?
அவரை நோக்கி நாங்கள் மன்றாடுவதால் என்ன பயன்?'
16 இதோ! அவர்களின் வளமை அவர்களின் கையில் இல்லை.
எனவே தீயோரின் ஆலோசனை எனக்குத் தொலையிலிருப்பதாக!
17 எத்தனைமுறை தீயோரின் ஒளி அணைகின்றது?
அழிவு அவர்கள்மேல் வருகின்றது?
கடவுள் தம் சீற்றத்தில் வேதனையைப் பங்கிட்டு அளிக்கின்றார்.
18 அவர்கள் காற்றுக்குமுன் துரும்பு போன்றோர்;
சூறாவளி அடித்துப் போகும் பதர் போன்றோர்.
19 அவர்களின் தீங்கைக் கடவுள் அவர்களின் பிள்ளைகளுக்கா சேர்த்து வைக்கின்றார்?
அவர்களுக்கே அவர் திரும்பக் கொடுக்கின்றார்;
அவர்களும் அதை உணர்வர்.
20 அவர்களின் அழிவை அவர்களின் கண்களே காணட்டும்;
எல்லாம் வல்லவரின் வெஞ்சினத்தை அவர்கள் குடிக்கட்டும்.
21 அவர்களுடைய நாள்கள் எண்ணப்பட்டபின்,
அவர்களது இல்லத்தில் அவர்கள் கொள்ளும் அக்கறை என்ன?
22 இறைவனுக்கு அறிவைக் கற்பிப்போர் யார்?
ஏனெனில், அவரே உயர்ந்தோரைத் தீர்ப்பிடுகின்றார்.
23 சிலர் வளமையோடும் வலிமையோடும் நிறைவோடும்
முழு அமைதியோடும் சாகின்றனர்;
24 அவர்களின் தொடைகள் கொழுப்பேறி உள்ளன;
அவர்களின் எலும்புகளின் சோறு உலரவில்லை.
25 வேறு சிலர், கசந்த உள்ளத்துடன்
இனிமையைச் சுவைக்காதவராய்ச் சாகின்றனர்;
26 புழுதியில் இருசாராரும் ஒன்றாய்த் துஞ்சுவர்;
புழுக்கள் அவர்களைப் போர்த்தி நிற்குமே.
27 இதோ! உம் எண்ணங்களையும்
எனக்கெதிராய்த் தீட்டும் திட்டங்களையும் நான் அறிவேன்.
28 ஏனெனில், நீங்கள் கூறுகின்றீர்கள்:
'கொடுங்கோலனின் இல்லம் எங்கே?
கொடியவன் குடியிருக்கும் கூடாரம் எங்கே?'
29 வழிப்போக்கர்களை நீங்கள் வினவவில்லையா?
அவர்கள் அறிவித்ததை நீங்கள் கேட்கவில்லையா?
30 தீயோர் அழிவின் நாளுக்கென விடப்பட்டுள்ளனர்;
வெஞ்சின நாளில் அவர்கள் விடுவிக்கப்படுவாரா?
31 யார் அவர்களின் முகத்துக்கு எதிரே அவர்களின் போக்கை உரைப்பார்?
யார் அவர்களின் செயலுக்கேற்பக் கொடுப்பார்?
32 இருப்பினும், கல்லறைக்கு அவர்கள் கொண்டுவரப்படுவர்;
அவர்களின் சமாதிக்குக் காவல் வைக்கப்படும்.
33 பள்ளத்தாக்கின் மண் அவர்களுக்கு இனிமையாய் இருக்கும்;
மாந்தர் அனைவரும் அவர்களைப் பின்தொடர்வர்;
அவர்களின் முன் செல்வோர்க்குக் கணக்கில்லை.
34 அப்படியிருக்க, வெற்றுமொழியால் நீர் என்னைத் தேற்றுவதெப்படி?
உமது மறுமொழி முற்றிலும் பொய்யே!
அதிகாரம் 22
[தொகு]கடவுளோடு ஒப்புரவாகும் வழி
[தொகு]
1 பின்னர் தேமானியனான எலிப்பாசு பேசத் தொடங்கினான்:
2 மனிதரால் இறைவனுக்குப் பயன் உண்டா?
மதிநுட்பம் உடையவரால் அவருக்குப் பயன் உண்டா?
3 நீர் நேர்மையாக இருப்பது எல்லாம் வல்லவர்க்கு இன்பம் பயக்குமா?
நீர் உமது வழியைச் செம்மைப்படுத்துவது அவர்க்கு நன்மை பயக்குமா? [1]
4 நீர் அவரை அஞ்சி மதிப்பதாலா அவர் உம்மைக் கண்டிக்கிறார்?
அதனை முன்னிட்டா உம்மைத் தீர்ப்பிடுகிறார்?
5 உமது தீமை பெரிதல்லவா?
உமது கொடுமைக்கு முடிவில்லையா?
6 ஏனெனில், அற்பமானவற்றுக்கும் உம் உறவின்முறையாரிடம் அடகு வாங்கினீர்;
ஏழைகளின் உடையை உரிந்து விட்டீர்!
7 தாகமுள்ளோர்க்குக் குடிக்கத் தண்ணீர் தரவில்லை;
பசித்தோர்க்கு உணவு கொடுக்க முன்வரவில்லை.
8 வலிய மனிதராகிய உமக்கு வையகம் சொந்தமாயிற்று;
உம் தயவு பெற்றவர்க்கே அது குடியிருப்பாயிற்று.
9 விதவைகளை நீர் வெறுங்கையராய் விரட்டினீர்;
அனாதைகளின் கைகளை முறித்துப் போட்டீர்.
10 ஆகையால், கண்ணிகள் உம்மைச் சூழ்ந்துள்ளன;
கிலி உம்மைத் திடீரென ஆட்கொள்ளும்.
11 நீர் காணாவண்ணம் காரிருள் சூழ்ந்தது;
நீர்ப்பெருக்கு உம்மை மூழ்கடித்தது.
12 உயரத்தே விண்ணகத்தில் கடவுள் இல்லையா?
வானிலிருக்கும் விண்மீன்களைப் பாரும்! அவை எவ்வளவு உயரத்திலுள்ளன!
13 ஆனால், நீர் சொல்கின்றீர்:
'இறைவனுக்கு என்ன தெரியும்?
கார்முகிலை ஊடுருவிப் பார்த்து அவரால் தீர்ப்பிட முடியுமா?
14 அவர் பார்க்காவண்ணம் முகில் மறைக்கின்றது;
அவர் வான்தளத்தில் உலவுகின்றனார்'.
15 பாதகர் சென்ற பழைய நெறியில்
நீரும் செல்ல விழைகின்றீரோ!
16 நேரம் வருமுன்பே அவர்கள் பிடிப்பட்டனர்;
அவர்கள் அடித்தளத்தை வெள்ளம் அடித்துச் சென்றது.
17 அவர்கள் இறைவனிடம்,
'எங்களைவிட்டு அகலும்; எல்லாம் வல்லவர் எங்களுக்கு என்ன செய்ய முடியும்?' என்பர்.
18 இருப்பினும், அவரே அவர்களின் இல்லத்தை நன்மையினால் நிரப்பினார்;
எனினும், தீயவரின் திட்டம் எனக்குத் தொலைவாயிருப்பதாக!
19 நேர்மையுள்ளோர் அதைக் கண்டு மனம் மகிழ்கின்றனர்;
மாசற்றோர் அவர்களை எள்ளி நகையாடுகின்றனர்:
20 'இதோ! நம் பகைவர் வீழ்த்தப்பட்டனர்;
அவர்களின் சேமிப்பு தீயால் விழுங்கப்பட்டது' என்கின்றனர்.
21 இணங்குக இறைவனுக்கு; எய்துக அமைதி;
அதனால் உமக்கு நன்மை வந்தடையும்.
22 அவர் வாயினின்று அறிவுரை பெறுக;
அவர்தம் மொழிகளை உம் நெஞ்சில் பொறித்திடுக;
23 நீர் எல்லாம் வல்லவரிடம் திரும்பி வருவீராகில், நீர் கட்டியெழுப்பப்படுவீர்;
தீயவற்றை உம் கூடாரத்திலிருந்து அகற்றி விடும்!
24 பொன்னைப் புழுதியிலே எறிந்து,
ஓபீர்த் தங்கத்தை ஓடைக் கற்களிடை வீசிவிடும்!
25 எல்லாம் வல்லவரே உமக்குப் பொன்னாகவும், வெள்ளியாகவும்,
வலிமையாகவும் திகழ்வார்.
26 அப்போது எல்லாம் வல்லவரில் நீர் நம்பிக்கை கொள்வீர்.
கடவுளைப் பார்த்து உம் முகத்தை நிமிர்த்திடுவீர்.
27 நீர் அவரிடம் மன்றாடுவீர்;
அவரும் உமக்குச் செவி கொடுப்பார்.
28 நீர் நினைப்பது கைகூடும்;
உம் வழிகள் ஒளிமயமாகும்.
29 ஏனெனில், அவர் செருக்குற்றோரின் ஆணவத்தை அழிக்கின்றார்;
தாழ்வாகக் கருதப்பட்டோரை மீட்கின்றார். [2]
30 குற்றவாளிகளையும் அவர் விடுவிப்பார்;
அவர்கள் உம் கைகளின் தூய்மையால் மீட்கப்படுவர்.
- குறிப்பு
[1] 22:2-3 = யோபு 35:6-8.
[2] 22:29 'ஏனெனில் அவர்கள் தாழ்த்தப்படும்போது,அவர்களை உயர்த்தும், என்பீர்; அவரும் அவர்களைத் தாழ்நிலையினின்று விடுவிப்பார்' என்பது எபிரேய பாடம்.
(தொடர்ச்சி): யோபு:அதிகாரங்கள் 23 முதல் 24 வரை