திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோபு/அதிகாரங்கள் 29 முதல் 30 வரை

விக்கிமூலம் இலிருந்து
துன்பத்தில் உழலும் யோபு. கலைஞர்: கெரார்டு மார்க்சு. ஆண்டு: 1557. காப்பிடம்: புனித கிளாரா கோவில், நூரன்பெர்க், செருமனி.

யோபு (The Book of Job)[தொகு]

அதிகாரங்கள் 29 முதல் 30 வரை

அதிகாரம் 29[தொகு]

யோபின் முன்னைய இன்பநிலை[தொகு]


1 யோபு இன்னும் தொடர்ந்து பேசிய உரை:


2 காண்பேனா முன்னைய திங்கள்களை;
கடவுள் என்னைக் கண்காணித்த நாள்களை!


3 அப்போது அவர் விளக்கு என் தலைமீது ஒளிவீசிற்று;
அவரது ஒளியால் இருளில் நான் நடந்தேன்.


4 அப்போது என் இளமையின் நாள்களில் நான் இருந்தேன்;
கடவுளின் கருணை என் குடிசை மீது இருந்தது.


5 அன்று வல்லவர் என்னோடு இருந்தார்;
என் மக்கள் என்னைச் சூழ்ந்திருந்தனர்.


6 அப்போது என் காலடிகள் நெய்யில் குளித்தன;
பாறையிலிருந்து எனக்கு எண்ணெய் ஆறாய்ப் பாய்ந்தது.


7 நகர வாயிலுக்கு நான் செல்கையிலும்,
பொது மன்றத்தில் என் இருக்கையில் அமர்கையிலும்,


8 என்னைக் கண்டதும் இளைஞர் ஒதுங்கிக்கொள்வர்;
முதிர்ந்த வயதினர் எழுந்து நிற்பர்.


9 உயர்குடி மக்கள் தம் பேச்சை நிறுத்துவர்;
கைகட்டி, வாய்பொத்தி வாளாவிருப்பர்.


10 தலைவர்தம் குரல் அடங்கிப்போம்;
அவர் நா அண்ணத்தோடு ஒட்டிக்கொள்ளும்.


11 என்னைக் கேட்ட செவி, என்னை வாழ்த்தியது;
என்னைப் பார்த்த கண் எனக்குச் சான்று பகர்ந்தது.


12 ஏனெனில், கதறிய ஏழைகளை நான் காப்பாற்றினேன்;
தந்தை இல்லார்க்கு உதவினேன்.


13 அழிய இருந்தோர் எனக்கு ஆசி வழங்கினர்;
கைம்பெண்டிர்தம் உள்ளத்தைக் களிப்பால் பாடச் செய்தேன்.


14 அறத்தை அணிந்தேன்; அது என் ஆடையாயிற்று.
நீதி எனக்கு மேலாடையும் பாகையும் ஆயிற்று.


15 பார்வையற்றோர்க்குக் கண் ஆனேன்;
காலூனமுற்றோர்க்குக் கால் ஆனேன்.


16 ஏழைகளுக்கு நான் தந்தையாக இருந்தேன்;
அறிமுகமற்றோரின் வழக்குகளுக்காக வாதிட்டேன்.


17 கொடியவரின் பற்களை உடைத்தேன்;
அவரின் பற்களுக்கு இரையானவரை விடுவித்தேன்.


18 நான் எண்ணினேன்:
'மணல் மணியைப்போல் நிறைந்த நாள் உடையவனாய்
என் இல்லத்தில் சாவேன்.


19 என் வேர் நீர்வரை ஓடிப் பரவும்;
இரவெல்லாம் என் கிளையில் பனி இறங்கும்.


20 என் புகழ் என்றும் ஓங்கும்;
என் வில் வளைதிறன் கொண்டது.'


21 எனக்குச் செவிகொடுக்க மக்கள் காத்திருந்தனர்;
என் அறிவுரைக்காக அமைதி காத்தனர்.


22 என் சொல்லுக்கு மறுசொல் அவர்கள் கூறவில்லை;
என் மொழிகள் அவர்களில் தங்கின.


23 மழைக்கென அவர்கள் எனக்காய்க் காத்திருந்தனர்;
மாரிக்கெனத் தங்கள் வாயைத் திறந்தனர்.


24 நம்பிக்கை இழந்தோரை என் புன்முறுவல் தேற்றியது;
என் முகப்பொலிவு உரமூட்டியது.


25 நானே அவர்களுக்கு வழியைக் காட்டினேன்;
தலைவனாய்த் திகழ்ந்தேன்;
வீரர் நடுவே வேந்தனைப்போல் வாழ்ந்தேன்;
அழுகின்றவர்க்கு ஆறுதல் அளிப்பவன் போல் இருந்தேன்.


அதிகாரம் 30[தொகு]

யோபின் தற்போதைய துன்பநிலை[தொகு]


1 ஆனால், இன்று என்னை, என்னைவிட இளையோர்
ஏளனம் செய்கின்றனர்;
அவர்களின் தந்தையரை
என் மந்தையின் நாய்களோடு இருத்தவும் உடன்பட்டிரேன்.


2 எனக்கு அவர்களின் கைவன்மையால் என்ன பயன்?
அவர்கள்தாம் ஆற்றல் இழந்து போயினரே?


3 அவர்கள் பட்டினியாலும் பசியாலும் மெலிந்தனர்;
வறண்டு, இருண்டு அழிந்த பாலைக்கு ஓடினர்.


4 அவர்கள் உப்புக்கீரையைப் புதரிடையே பறித்தார்கள்;
காட்டுப் பூண்டின் வேரே அவர்களின் உணவு.


5 மக்கள் அவர்களைத் தம்மிடமிருந்து விரட்டினர்;
கள்வரைப் பிடிக்கக் கத்துவதுபோல் அவர்களுக்குச் செய்தனர்.


6 ஓடைகளின் உடைப்புகளிலும் நிலவெடிப்புகளிலும்
பாறைப்பிளவுகளிலும் அவர்கள் வாழ்ந்தனர்.


7 புதர்களின் நடுவில் அவர்கள் கத்துவர்;
முட்செடியின் அடியில் முடங்கிக் கிடப்பர்.


8 மடையனின் மக்கள் பெயரில்லாப் பிள்ளைகள்;
அவர்கள் நாட்டிலிருந்து விரட்டப்பட்டனர்.


9 இப்பொழுதோ, அவர்களுக்கு நான் வசைப்பாட்டு ஆனேன்;
அவர்களுக்கு நான் பழமொழியானேன்.


10 என்னை அவர்கள் அருவருக்கின்றனர்;
என்னைவிட்டு விலகிப் போகின்றனர்;
என்முன் காறித் துப்பவும் அவர்கள் தயங்கவில்லை.


11 என் வில்லின் நாணைக் கடவுள் தளர்த்தி, என்னைத் தாழ்த்தியதால்,
என்முன் அவர்கள் கடிவாளம் அற்றவராயினர்.


12 என் வலப்பக்கம் கும்பல் கூடுகின்றது;
என்னை நெட்டித் தள்ளுகின்றது;
அழிவுக்கான வழிகளை எனக்கெதிராய் வகுத்தது.


13 எனக்கு அவர்கள் குழி தோண்டுகின்றனர்;
என் அழிவை விரைவுபடுத்துகின்றனர்;
அவர்களைத் தடுப்பார் யாருமில்லை.


14 அகன்ற உடைப்பில் நுழைவது போலப் பாய்கின்றனர்;
இடிபாடுகளுக்கு இடையில் அலைபோல் வருகின்றனர்.


15 பெருந்திகில் மீண்டும் என்னைப் பிடித்தது;
என் பெருமை காற்றோடு போயிற்று;
முகிலென மறைந்தது என் சொத்து.


16 இப்பொழுதோ? என் உயிர் போய்க்கொண்டே இருக்கின்றது;
இன்னலின் நாள்கள் என்னை இறுக்குகின்றன.


17 இரவு என் எலும்புகளை உருக்குகின்றது;
என்னை வாட்டும் வேதனை ஓய்வதில்லை.


18 நோயின் கொடுமை என்னை உருக்குலைத்தது;
கழுத்துப்பட்டை போல் என்னை ஒட்டிக்கொண்டது.


19 கடவுள் சேற்றில் என்னை அமிழ்த்தி விட்டார்;
புழுதியும் சாம்பலும்போல் ஆனேன்.


20 நான் உம்மை நோக்கி மன்றாடினேன்,
ஆனால், நீர் எனக்குப் பதில் அளிக்கவில்லை;
நான் உம்முன் நின்றேன்; நீர் என்னைக் கண்ணோக்கவில்லை.


21 கொடுமையுள்ளவராய் என்மட்டில் மாறினீர்;
உம் கை வல்லமையால் என்னைத் துன்புறுத்துகின்றீர்;


22 என்னைத் தூக்கிக் காற்றில் பறக்கவிட்டீர்;
புயலின் சீற்றத்தால் என்னை அலைக்கழித்தீர்.


23 ஏனெனில், சாவுக்கும், வாழ்வோர் அனைவரும் கூடுமிடத்திற்கும்
என்னைக் கொணர்வீர் என அறிவேன்.


24 இருப்பினும், அழிவின் நடுவில் ஒருவர் உதவிக்கு அலறும்பொழுது,
அவல நிலையில் அவர் இருக்கும்பொழுது,
எவர் அவருக்கு எதிராகக் கையை உயர்த்துவார்?


25 அவதிப்பட்டவருக்காக நான் அழவில்லையா?
ஏழைக்காக என் உள்ளம் இளகவில்லையா?


26 நன்மையை எதிர்பார்த்தேன்; தீமை வந்தது.
ஒளிக்குக் காத்திருந்தேன்; இருளே வந்தது.


27 என் குலை நடுங்குகிறது, அடங்கவில்லை;
இன்னலின் நாள்கள் எனை எதிர்கொண்டு வருகின்றன.


28 கதிரோன் இன்றியும் நான் கருகித் திரிகிறேன்;
எழுகிறேன்; மன்றத்தில் அழுகிறேன் உதவிக்கு.


29 குள்ள நரிக்கு உடன்பிறப்பானேன்;
நெருப்புக் கோழிக்குத் தோழனும் ஆனேன்.


30 என் தோல் கருகி உரிகின்றது;
என் எலும்புகள் வெப்பத்தால் தீய்கின்றன.


31 என் யாழின் ஓசை புலம்பலாயிற்று;
என் குழலின் ஒலி அழுகையாயிற்று.


(தொடர்ச்சி): யோபு:அதிகாரங்கள் 31 முதல் 32 வரை