திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோபு/அதிகாரங்கள் 39 முதல் 40 வரை

விக்கிமூலம் இலிருந்து
யோபுவின் உருவச் சிலை. ஆண்டு: 1867-1869. காப்பிடம்: சாலிசுபரி பேராலயம், இங்கிலாந்து.

யோபு (The Book of Job)[தொகு]

அதிகாரங்கள் 39 முதல் 40 வரை

அதிகாரம் 39[தொகு]


1 வரையாடு ஈனும் பருவம் தெரியுமோ?
மான் குட்டியை ஈனுதலைப் பார்த்தது உண்டா?


2 எண்ணமுடியுமா அவை சினையாயிருக்கும் மாதத்தை?
கணிக்க முடியுமா அவை ஈனுகின்ற காலத்தை?


3 குனிந்து குட்டிகளை அவை தள்ளும்;
வேதனையில் அவற்றை வெளியேற்றும்.


4 வெட்ட வெளியில் குட்டிகள் வளர்ந்து வலிமைபெறும்;
விட்டுப் பிரியும்; அவைகளிடம் மீண்டும் வராது.


5 காட்டுக் கழுதையைக் கட்டற்று திரியச் செய்தவர் யார்?
கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?


6 பாலைநிலத்தை அதற்கு வீடாக்கினேன்;
உவர் நிலத்தை அதற்கு உறைவிடமாக்கினேன்.


7 நகர அமளியை அது நகைக்கும்;
ஓட்டுவோன் அதட்டலுக்கும் செவிகொடாது.


8 குன்றுகள் எங்கும் தேடும் மேய்ச்சலை;
பசுமை அனைத்தையும் நாடி அலையும்.


9 காட்டெருமை உனக்கு ஊழியம் செய்ய விரும்புமா?
உன் தொழுவத்தில் ஓர் இரவேனும் தங்குமா?


10 காட்டெருமையைக் கலப்பையில் பூட்டி உழுதிடுவாயோ?
பள்ளத்தாக்கில் பரம்படிக்க அது உன் பின்னே வருமோ?


11 அது மிகுந்த வலிமை கொண்டதால் அதனை நம்பியிருப்பாயோ?
எனவே, உன் வேலையை அதனிடம் விடுவாயோ?


12 அது திரும்பி வரும் என நீ நம்புவாயோ?
உன் களத்திலிருந்து தானியத்தைக் கொணருமோ?


13 தீக்கோழி சிறகடித்து நகைத்திடும்;
ஆனால், அதன் இறக்கையிலும் சிறகுகளிலும் இரக்கம் உண்டோ?


14 ஏனெனில், மண்மேலே அது தன் முட்டையை இடும்;
புழுதிமேல் பொரிக்க விட்டுவிடும்.


15 காலடி பட்டு அவை நொறுங்குமென்றோ
காட்டு விலங்கு அவைகளை மிதிக்குமென்றோ அது நினைக்கவில்லை.


16 தன்னுடையவை அல்லாதன போன்று தன் குஞ்சுகளைக் கொடுமையாய் நடத்தும்;
தன் வேதனை வீணாயிற்று என்று கூடப் பதறாமல்போம்.


17 கடவுள் அதை மதிமறக்கச் செய்தார்;
அறிவினில் பங்கு அளித்தார் இல்லை.


18 விரித்துச் சிறகடித்து எழும்பொழுது,
பரியோடு அதன் வீரனையும் பரிகசிக்குமே!


19 குதிரைக்கு வலிமை கொடுத்தது நீயோ?
அதன் கழுத்தைப் பிடரியால் உடுத்தியது நீயோ?


20 அதனைத் தத்துக்கிளிபோல் தாவச் செய்வது நீயோ?
அதன் செருக்குமிகு கனைப்பு நடுங்க வைத்திடுமே?


21 அது மண்ணைப் பறிக்கும்;
தன் வலிமையில் மகிழும் போர்க்களத்தைச் சந்திக்கப் புறப்பட்டுச் செல்லும்.


22 அது அச்சத்தை எள்ளி நகையாடும்; அசையாது;
வாள் முனை கண்டு பின்வாங்காது.


23 அதன்மேல் அம்பறாத் தூணி கலகலக்கும்;
ஈட்டியும் வேலும் பளபளக்கும்;


24 அது துள்ளும்; பொங்கி எழும்;
மண்ணை விழுங்கும்; ஊதுகொம்பு ஓசையில் ஓய்ந்து நிற்காது;


25 எக்காளம் முழங்கும்போதெல்லாம் 'ஐஇ' என்னும்;
தளபதிகளின் இடி முழக்கத்தையும் இரைச்சலையும்
அப்பால் போரினையும் இப்பாலே மோப்பம் பிடிக்கும்.


26 உன் அறிவினாலா வல்லூறு பாய்ந்து இறங்குகின்றது?
தெற்கு நோக்கி இறக்கையை விரிக்கின்றது?


27 உனது கட்டளையாலா கழுகு பறந்து ஏறுகின்றது?
உயர்ந்த இடத்தில் தன் உறைவிடத்தைக் கட்டுகின்றது?


28 பாறை உச்சியில் கூடுகட்டித் தங்குகின்றது;
செங்குத்துப் பாறையை அரணாகக் கொண்டுள்ளது.


29 அங்கிருந்தே அது கூர்ந்து இரையைப் பார்க்கும்;
தொலையிலிருந்தே அதன் கண்கள் அதைக் காணும்.


30 குருதியை உறிஞ்சும் அதன் குஞ்சுகள்;
எங்கே பிணமுண்டோ அங்கே அது இருக்கும். [*]


குறிப்பு

[*] 39:30 = மத் 24:28; லூக் 17;37.


அதிகாரம் 40[தொகு]


1 பின்பு யோபைப் பார்த்து ஆண்டவர் கூறினார்:


2 குற்றம் காண்பவன், எல்லாம் வல்லவரோடு வழக்காடுவானா?
கடவுளோடு வாதாடுபவன் விடையளிக்கட்டும்.


3 யோபு ஆண்டவர்க்குக் கூறிய மறுமொழி:
4 இதோ! எளியேன் யான் இயம்புதற்குண்டோ?
என் வாயைக் கையால் பொத்திக் கொள்வேன்.


5 ஒருமுறை பேசினேன்; மறுமொழி உரையேன்;
மீண்டும் பேசினேன்; இனிப் பேசவேமாட்டேன்.

கடவுளின் இரண்டாம் சொற்பொழிவு[தொகு]


6 ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்:


7 வீரனைப்போல் இடையை இறுக்கிக் கட்டிக்கொள்;
வினவுவேன் உன்னிடம்; விடையெனக்கு அளிப்பாய்.


8 என் தீர்ப்பிலேயே நீ குற்றம் காண்பாயா?
உன்னைச் சரியெனக் காட்ட என்மீது குற்றம் சாட்டுவாயா?


9 இறைவனுக்கு உள்ளதுபோல் உனக்குக் கையுண்டோ?
அவர்போன்று இடிக்குரலில் முழங்குவாயோ?


10 சீர் சிறப்பினால் உன்னை அணி செய்துகொள்;
மேன்மையையும், மாண்பினையும் உடுத்திக்கொள்.


11 கொட்டு உன் கோபப் பெருக்கை!
செருக்குற்ற ஒவ்வொருவரையும் நோக்கிடு; தாழ்த்திடு!


12 செருக்குற்ற எல்லாரையும் நோக்கிடு; வீழ்த்திடு!
தீயோரை அவர்கள் இடத்திலேயே மிதித்திடு!


13 புழுதியில் அவர்களை ஒன்றாய்ப் புதைத்திடு!
காரிருளில் அவர் முகங்களை மூடிடு.


14 அப்பொழுது, உனது வலக்கை உன்னைக் காக்குமென்று
நானே ஒத்துக்கொள்வேன்.

பெகிமோத்து[தொகு]


15 இதோ பார், உன்னைப் படைத்ததுபோல் நான் உண்டாக்கிய பெகிமோத்து
காளைபோல் புல்லைத் தின்கின்றது.


16 இதோ காண், அதன் ஆற்றல் அதன் இடுப்பில்;
அதன் வலிமை வயிற்றுத் தசைநாரில்.


17 அது தன் வாலைக் கேதுருமரம்போல் விரைக்கும்;
அதன் தொடை நரம்புகள் கயிறுபோல் இறுகியிருக்கும்;


18 அதன் எலும்புகள், வெண்கலக் குழாய்கள்;
அதன் உறுப்புகள் உருக்குக் கம்பிகள்.


19 இறைவனின் படைப்புகளில் தலையாயது அதுவே!
படைத்தவரே அதைப் பட்டயத்துடன் நெருக்க முடியும்.


20 மலைகள் அதற்குப் புற்பூண்டுகளை விளைவிக்கின்றன;
விலங்குகள் எல்லாம் விளையாடுவதும் அங்கேதான்.


21 அது நிழற்செடிக்கு அடியிலும் நாணல் மறைவிலும்
உளைச் சேற்றிலும் படுத்துக் கிடக்கும்.


22 அச்செடி தன் நிழலால் அதை மறைக்கும்;
ஓடையின் அலரி அதைச் சூழ்ந்து நிற்கும்.


23 ஆறு புரண்டோடினும், அது மிரண்டோடாது;
அதன் முகத்தே யோர்தான் மோதினும் அசைவுறாது.


24 அதன் கண்காண அதனைக் கட்டமுடியுமோ?
கொக்கியால் அதன் மூக்கைத் துளைக்க முடியுமோ?


(தொடர்ச்சி): யோபு:அதிகாரங்கள் 41 முதல் 42 வரை