திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோபு/அதிகாரங்கள் 41 முதல் 42 வரை
யோபு (The Book of Job)
[தொகு]அதிகாரங்கள் 41 முதல் 42 வரை
அதிகாரம் 41
[தொகு]லிவியத்தான்
[தொகு]
1 தூண்டிலால் லிவியத்தனைத் தூக்கிடுவாயோ?
கயிற்றினால் அதன் நாக்கினைக் கட்டிடுவாயோ? [*]
2 அதன் மூக்கிற்குக் கயிறு இட உன்னால் முடியுமோ?
அதன் தாடையில் கொக்கியினால் குத்த முடியுமோ?
3 வேண்டுகோள் பல அது உன்னிடம் விடுக்குமோ?
கனிவாக உன்னிடம் கெஞ்சுமோ?
4 என்றும் உனக்கு ஏவல்புரிய உன்னுடன்
அது உடன்படிக்கை செய்யுமோ?
5 பறவைபோல் துள்ளி அதனுடன் ஆடுவாயா?
உம் மகளிர்க்கென அதனைக் கட்டிவைப்பாயா?
6 மீனவர் குழுவினர் அதன்மேல் பேரம் பேசுவார்களோ?
அவர்கள் வணிகரிடையே அதைக் கூறுபோடுவார்களோ?
7 கூரிய முட்களால் அதன் தோலையும்
மீன் எறி வேல்களால் அதன் தலையையும் குத்தி நிரப்புவாயோ?
8 உன் கையை அதன்மேல் வைத்துப்பார்;
எழும் போராட்டத்தை மறக்கமாட்டாய்.
மீண்டும் அதைச் செய்ய மாட்டோம்.
9 இதோ! தொடுவோர் நம்பிக்கை தொலைந்துபோம்;
அதனைக் கண்டாலே ஒருவர் கதிகலங்குவார்.
10 அதை எழுப்பும் வீரம் எவருக்கும் இல்லை;
பின்பு அதன்முன் நிற்கத் துணிபவர் யார்?
11 அதனை எதிர்த்து உயிரோடிருந்தவர் எவராவது உண்டோ?
விண்ணகத்தின்கீழ் அப்படிப்பட்டவர் யாருமில்லை!
12 அதன் உறுப்புகள், அதன் ஆற்றல் அதன் அமைப்பின் அழகு
அனைத்தையும் பற்றி அறிவிக்காது விடேன்.
13 அதன் மேல்தோலை உரிப்பவர் யார்?
அதன் தாடை இரண்டுக்குமிடையே நுழைபவர் யார்?
14 அதன் முகத்தில் வாயிலைத் திறப்பவன் யார்?
அதன் பற்களைச் சூழ்ந்து பேரச்சமே உள்ளது.
15 அதன் முதுகு கேடய வரிசையாம்;
நெருங்க மூடி முத்திரை இடப்பட்டதாம்.
16 ஒன்றோடு ஒன்று ஒட்டி உள்ளது.
காற்றும் அதனிடையே கடந்திடாது;
17 ஒன்றோடு ஒன்றாய் இணைந்துள்ளன;
பிரிக்கமுடியாதவாறு ஒன்றாய்ப் பிடித்துள்ளன.
18 துலங்கும் மின்னல் அதன் தும்மல்;
வைகறை இமைகள் அதன் கண்கள்.
19 அதன் வாயினின்று புறப்படுவது தீப்பிழம்பு;
அங்கிருந்து பறப்பது நெருப்புப் பொறிகளே.
20 நாணல் நெருப்புக் கொதிகலனின்று வருவதுபோல்
அதன் நாசியினின்று புகை கிளம்பும்.
21 அதன் மூச்சு கரிகளைப் பற்றவைக்கும்;
அதன் வாயினின்று தீப்பிழம்பு கிளம்பிவரும்.
22 அதன் கழுத்தில் வலிமை வதிகின்றது;
நடுக்கம் அதன்முன் துள்ளியாடுகின்றது.
23 அதன் தசைமடிப்புகள் ஒட்டியிருக்கும்;
கெட்டியாயிருக்கும் அவற்றை அசைக்க ஒண்ணாது.
24 அதன் நெஞ்சம் கல்லைப்போல் கடினமானது;
திரிகையின் அடிக்கல்போல் திண்மையானது.
25 அது எழும்பொழுதே தெய்வங்கள் அஞ்சுகின்றன;
அது அறையவரும்போதே நிலைகுலைகின்றன.
26 வாள் அதைத் தாக்கிடினும், ஊடுருவாது;
ஈட்டியோ அம்போ, எறிவேலோ உட்செல்லாது.
27 இரும்பை அது துரும்பெனக் கருதும்;
வெண்கலத்தை உளுத்த கட்டையெனக் கொள்ளும்.
28 வில்வீரன் அதை விரட்ட முடியாது;
கவண் கல்லும் கூளம்போல் ஆகுமே.
29 பெருந்தடியைத் தாளடி எனக்கருதும்;
எறிவேல் ஒலிகேட்டு எள்ளி நகைக்கும்.
30 அதன் வயிற்றுப்புறம் ஒட்டுத் துண்டுகளின் அடுக்கு;
அது சேற்றில் படுத்துக்கிடக்கையில் பரம்புக் கட்டை.
31 கொதிகலமென அது கடலைப் பொங்கச் செய்யும்;
தைலச் சட்டியென அது ஆழியைக் கொப்பளிக்கச் செய்யும்.
32 அது போனபிறகு பாதை பளபளக்கும்;
கடலே நரைத்ததெனக் கருதத்தோன்றும்.
33 அகிலத்தில் அதற்கு இணையானது இல்லை;
அச்சம் கொண்டிலாப் படைப்பு அதுவே.
34 செருக்குற்ற படைப்பு அனைத்தையும் ஏளனமாய் நோக்கும்;
வீறுகொண்ட விலங்குகட்கு வேந்தனும் அதுவே.
- குறிப்பு
[*] 41:1 = திபா 74:14; 104:26; எசா 27:1.
அதிகாரம் 42
[தொகு]யோபின் இறுதி உறுதிமொழி
[தொகு]
1 அப்பொழுது யோபு ஆண்டவர்க்குக் கூறிய பதில்:
2 நீர் அனைத்தையும் ஆற்றவல்லவர்; அறிவேன் அதனை;
நீர் நினைத்த எதையும் தடுக்க இயலாது.
3 'அறிவில்லாமல் ஆலோசனையை மறைப்பவன் எவன்?' என்று கேட்டீர்;
உண்மையில் நான்தான் புரியாதவற்றைப் புகன்றேன்;
அவை எனக்கு விளங்கா அளவுக்கு விந்தையானவை. [1]
4 அருள்கூர்ந்து கேளும் அடியேன் பேசுவேன்;
வினவுவேன் உம்மை; விளங்க வைப்பீர் எனக்கு. [2]
5 உம்மைப்பற்றிக் காதால் மட்டுமே கேள்விப்பட்டேன்;
ஆனால் இப்பொழுது, என் கண்களே உம்மைக் காண்கின்றன.
6 ஆகையால் என்னையே நொந்து கொள்ளுகின்றேன்;
புழுதியிலும் சாம்பலிலும் இருந்து மனம் வருந்துகின்றேன்.
முடிவுரை
[தொகு]
7 ஆண்டவர் இவ்வாறு யோபிடம் பேசினபிறகு,
தேமானியனான எலிப்பாசைப் பார்த்துக் கூறியது:
"உன்மீதும், உன் இரு நண்பர்கள் மீதும் எனக்குச் சினம் பற்றி எரிகிறது.
ஏனெனில் என் ஊழியன் யோபு போன்று
நீங்கள் என்னைப் பற்றிச் சரியாகப் பேசவில்லை.
8 ஆகவே இப்பொழுது,
ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக் கிடாய்களையும்
நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்;
என் ஊழியன் யோபிடம் செல்லுங்கள்;
உங்களுக்காக எரிபலியை ஒப்புக்கொடுங்கள்.
என் ஊழியன் யோபு உங்களுக்காக மன்றாடும் பொழுது,
நானும் அவன் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வேன்.
என் ஊழியன் யோபு போன்று என்னைப் பற்றிச்
சரியாகப் பேசாத உங்கள் மடமைக்கு ஏற்றவாறு செய்யாது விடுவேன்".
9 அவ்வாறே தேமானியனான எலிப்பாசும்,
சூகாவியனான பில்தாதும்,
நாமானியனான சோப்பாரும் சென்று
ஆண்டவர் அவர்களுக்குக் கட்டளை இட்டவாறே செய்தார்கள்.
ஆண்டவரும் யோபின் இறைஞ்சுதலை ஏற்றார்.
செல்வச் சிறப்புகளை ஆண்டவர் யோபுக்கு மீண்டும் அளித்தல்
[தொகு]
10 யோபு தம் நண்பர்களுக்காக மன்றாடின பிறகு,
ஆண்டவர் செல்வங்களையெல்லாம் மீண்டும் நல்கினார்.
மேலும் அவர் யோபுக்கு இருந்தனவற்றை எல்லாம்
இரண்டு மடங்கு ஆக்கினார். [3]
11 பின்னர் அவருடைய எல்லாச் சகோதரர்களும், சகோதரிகளும்,
அவரை முன்பு தெரிந்திருந்த அனைவரும் அவரிடம் வந்தனர்;
அவரது இல்லத்தில் அவரோடு விருந்துண்டனர்;
ஆண்டவர் அவருக்கு வரச்செய்த தீமை அனைத்திற்காகவும்
ஆறுதல் கூறி அவரைத் தேற்றினர்.
ஒவ்வொருவரும் அவருக்கு வெள்ளியும் பொன்மோதிரமும் வழங்கினர்.
12 யோபின் முன்னைய நாள்களில் இருந்ததைவிட,
பின்னைய நாள்களில் ஆண்டவர் அதிகமாக ஆசிவழங்கினார்.
இப்பொழுது பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும்,
ஆயிரம் ஏர்மாடுகளும்,
ஆயிரம் பெட்டைக் கழுதைகளும் அவருக்கு இருந்தன.
13 அவருக்கு ஏழு புதல்வர்களும் மூன்று புதல்வியரும் பிறந்தனர்.
14 மூத்த மகளுக்கு எமிமா என்றும்,
இரண்டாவது மகளுக்குக் கெட்டிசியா என்றும்,
மூன்றாவது மகளுக்குக் கெரேன் அப்பூக்கு என்றும் பெயரிட்டார்.
15 யோபின் புதல்வியரைப் போல்
அழகுவாய்ந்த நங்கையர் நாடெங்கும் இருந்ததில்லை.
அவர்களின் தந்தை, அவர்களின் சகோதரர்களோடு
அவர்களுக்கும் சொத்தில் உரிமை கொடுத்தார்.
16 அதன்பின் யோபு நூற்று நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தார்;
தம் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும்
நான்காம் தலைமுறைவரை கண்டுகளித்தார்.
17 இவ்வாறு யோபு முதுமை அடைந்து,
பல்லாண்டு வாழ்ந்து இறந்தார்.
- குறிப்பு
[1] 42:3 = யோபு 38:2.
[2] 42:4 = யோபு 38:2.
[3] 42:10 = யோபு 1:1-3.
(யோபு நிறைவுற்றது)
(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 1 முதல் 2 வரை