திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/லேவியர் (லேவிய‌ராகமம்)/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
யூதர்கள் கோவிலில் காணிக்கை செலுத்தல் (லேவி 1). 15ஆம் நூற்றாண்டு ஓவியம். ஓலாந்து.

லேவியர் (The Book of Leviticus) [1][தொகு]

முன்னுரை


திருவிவிலியத்தின் பகுதியாகிய பழைய ஏற்பாட்டின் மூன்றாம் நூலாக அமைந்தது லேவியர் ஆகும். பழங்கால இஸ்ரயேலர்தம் கடவுளின் தூய தன்மையும் அவரை வழிபடுவதற்கான முறைகளும், அவற்றை நிறைவேற்றும் குருக்களுக்கான நெறிகளும் அவ்வினத்தார் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளும் இந்நூலில் இடம்பெறுகின்றன.

'உன்மீது நீ அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!' என்னும் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் பெரிய கட்டளை இந்நூலில் (19:18) இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.


லேவியர்[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. காணிக்கைப் பலிகளுக்கான சட்டங்கள் 1:1 - 7:33 153 - 162
2. ஆரோன், அவர்தம் புதல்வர் ஆகியோரின்

திருநிலைப்பாட்டிற்கான நெறிமுறைகள்

8:1 - 10:20 162 - 166
3. குருக்களின் தூய்மையும் தீட்டும் பற்றிய

சட்டங்கள்

11:1 - 15:33 166 - 175
4. பாவக்கழுவாய் நாள் 16:1-34 175 - 177
5. தூய்மையான வாழ்விற்கும் வழிபாட்டிற்குமான

சட்டங்கள்

17:1 - 27:34 177 - 195

லேவியர்[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 7 வரை

அதிகாரம் 1[தொகு]

எரி பலிகள்[தொகு]


1 ஆண்டவர் மோசேயை அழைத்துச்
சந்திப்புக் கூடாரத்திலிருந்து அவரோடு பேசினார்.
2 இஸ்ரயேல் மக்களோடு நீ பேசி அவர்களுக்குச் சொல்ல வேண்டியது:
உங்களில் ஒருவர் ஆண்டவருக்கு நேர்ச்சை செலுத்த வந்தால்,
மாட்டு மந்தையிலிருந்தோ ஆட்டு மந்தையிலிருந்தோ
கால்நடையை ஒப்புக்கொடுப்பார்.
3 அவரது நேர்ச்சை எரிபலி எனில்,
மாட்டு மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட,
பழுதற்ற ஒரு காளையை அவர் படைக்கவேண்டும்.
ஆண்டவர் திருமுன் ஏற்புடையதாகுமாறு,
அதைச் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் அவர் படைக்கட்டும்.
4 அவர் எரிபலியின் தலைமேல் தம் கையை வைப்பார்.
அது அவருடைய பாவத்திற்கு கழுவாயாக ஏற்றுக்கொள்ளப்படும்.
5 அந்த இளம் காளையை அவர் ஆண்டவர் திருமுன் அடிப்பார்.
ஆரோனின் புதல்வராகிய குருக்கள் அதன் இரத்தத்தைக் கொண்டு வந்து,
சந்திப்புக் கூடார நுழைவாயிலில் இருக்கும் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளிப்பர்.
6 பின்பு, அவர் எரிபலியைத் தோலுரித்துப் பகுதி பகுதியாகத் துண்டிப்பார்.
7 ஆரோனின் புதல்வராகிய குருக்கள் பலிபீடத்தின்மேல் தழல் இட்டு
அந்நெருப்பின்மேல் விறகுக் கட்டைகளை அடுக்குவர்.
8 ஆரோனின் புதல்வராகிய குருக்கள்
துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும்
பலிபீடத்திலுள்ள நெருப்பில் அடுக்கியிருக்கிற
கட்டைகளின்மேல் அடுக்கிவைப்பர்.
9 அதன் குடலையும் கால்களையும் தண்ணீரில் கழுவி
அவை எல்லாவற்றையும் குருக்கள் பலிபீடத்தின்மேல் எரித்துவிடுவர்.
நெருப்பாலான இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்புப்பலி ஆகும்.


10 எரிபலிக்கான அவரது நேர்ச்சை
ஆட்டுமந்தையிலுள்ள செம்மறி அல்லது வெள்ளாடாக இருந்தால்,
அவர் பழுதற்ற ஓர் ஆட்டுக் கிடாயைக் கொண்டு வரவேண்டும்.
11 ஆண்டவர் திருமுன் பலிபீடத்தின் வடபுறத்தில்
அதை அவர் கொல்ல வேண்டும்.
ஆரோனின் புதல்வராகிய குருக்கள் அதன் இரத்தத்தைப்
பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிப்பர்.
12 அவர் அதைப் பகுதிகளாகத் துண்டித்து,
துண்டங்களோடு தலையையும் கொழுப்பையும் சேர்த்து வைப்பார்.
பின்பு, குரு அவற்றைப் பலிபீடத்திலுள்ள நெருப்பின்மேல் இருக்கிற
கட்டைகளின்மேல் அடுக்கி வைப்பார்.
13 அதன் குடலும் பின்னந்தொடைகளும் தண்ணீரால் கழுவப்படும்.
அவை அனைத்தையும் பலிபீடத்தின்மேல் குரு எரியூட்டுவார்.
இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்பாலான எரிபலி ஆகும்.
14 அவர் ஆண்டவருக்குச் செலுத்தும் நேர்ச்சை
பறவை எரிபலி எனில்,
காட்டுப் புறாக்களையாவது மாடப்புறாக்களையாவது
நேர்ச்சையாகச் செலுத்த வேண்டும்.
15 அதைக் குரு பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து
அதன் தலையைத் திருகி,
பலிபீடத்தில் எரித்து விடுவார்;
அதன் இரத்தத்தையோ பலிபீடத்தின் பக்கத்தில் சிந்த விடுவார்;
16 அதன் இரைப்பையையும் இறகுகளையும் அகற்றி,
அவற்றைப் பலிபீடத்திற்கருகில்
கிழக்குப்புறமாக சாம்பல் இடுகிற இடத்தில் எறிந்து விடுவார்;
17 அதன் இறக்கைகளைப் பிடித்து இரண்டாக்காமல் அதனைக் கிழிப்பார்.
அவ்வாறு கிழித்தபின் குரு
அதைப் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற
கட்டைகளின்மேல் எரியூட்டுவார்.
இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்பாலான எரிபலி ஆகும்.

அதிகாரம் 2[தொகு]

தானியப் படையல்கள்[தொகு]


1 ஒருவர் ஆண்டவருக்கு நேர்ச்சையாக உணவுப் படையல் செய்ய வந்தால்,
அவர் படையல் மெல்லிய மாவாய் இருக்கட்டும்.
அவர் அதன் மேல் எண்ணெய் வார்த்து சாம்பிராணிப் பொடி தூவி,
2 அதை ஆரோனின் புதல்வராகிய குருக்களிடம் கொண்டு வருவார்.
குரு அந்த எண்ணெய், சாம்பிராணி கலந்த அந்த மாவில் கை நிறைய எடுப்பார்.
நினைவுப் படையலாக அதைக் குரு பலிபீடத்தின் மேல் எரிப்பார்.
இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்புப் பலி ஆகும்.
3 உணவுப் படையலில் எஞ்சியது
ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் உரியது.
ஆண்டவருக்கான நெருப்புப் பலிகளில் அது மிகவும் தூயது.
4 நேர்ச்சையாக அடுப்பிலே சுட்ட உணவுப் படையலைச் செலுத்தினால்,
அது எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவில் செய்த
புளிப்பற்ற அதிரசங்களும்,
எண்ணெயில் தோய்த்த அடைகளுமாய் இருக்கட்டும்.
5 உனது நேர்ச்சை தட்டையான சட்டியில் சுட்ட உணவுப் படையலாக இருந்தால்,
அது எண்ணெய் வார்த்த புளிப்பற்ற மெல்லிய மாவால் செய்யப்பட வேண்டும்.
6 அதைத் துண்டுகளாகப் பிட்டு அதன்மேல் எண்ணெய் விட வேண்டும்;
அது ஓர் உணவுப் படையல்.
7 உனது நேர்ச்சை, சட்டியில் செய்யப்படுகிற உணவுப்படையல் எனில்,
அது மெல்லிய மாவால் எண்ணெயில் செய்யப்படவேண்டும்.
8 இம்முறையில் செய்யப்பட்டவற்றை
ஆண்டவருக்கு உணவுப் படையலாகச் செலுத்துவாயாக.
அது குருவிடம் வந்து சேரும்போது
அவர் அதைப் பலிபீடத்துக்குக் கொண்டு போவார்.
9 குரு உணவுப் படையலிலிருந்து நினைவுப் படையலைத் தனித்தெடுத்துப்
பலிபீடத்தின்மேல் எரிப்பார்.
இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்புப்பலி.
10 உணவுப்படையலில் எஞ்சியது ஆரோனுக்கும்
அவர் புதல்வருக்கும் உரியது.
ஆண்டவருக்கான நெருப்புப் பலிகளில் இது மிகவும் தூயது.


11 ஆண்டவருக்குச் செலுத்தும் உணவுப்படையல் எதுவும்
புளிப்பேறியதாய்ச் செய்யப்படலாகாது.
புளிக்காரம், தேன் எதையுமே ஆண்டவருக்கு நெருப்புப் பலியாக்க வேண்டாம்.
12 அவற்றை, முதற்பலன் படையலாக ஆண்டவருக்குச் செலுத்தலாம்.
ஆனால், இவை இனிய நறுமணமாகப் பலிபீடத்தில் எரிக்கப்படலாகாது.
13 நேர்ச்சையான எந்த உணவுப் படையலும் உப்பிடப்பட வேண்டும்.
உன் உணவுப் படையலில்
கடவுளின் உடன்படிக்கையாகிய உப்பைக் குறையவிடாமல்
உன் நேர்ச்சைகள் அனைத்தோடும் உப்பையும் படைப்பாயாக.
14 முதற்பலன்களின் உணவுப் படையலை ஆண்டவருக்கு செலுத்தினால்,
அறுவடையான கதிர்களை நெருப்பில் வாட்டி உதிர்த்து,
உன் முதற்பலன்களின் உணவுப் படையலாகச் செலுத்த வேண்டும்.
15 அதன்மேல் எண்ணெய் ஊற்றிச் சாம்பிராணி போடவேண்டும்.
இதுவும் ஓர் உணவுப் படையலே.
16 உதிர்க்கப்பட்டவற்றிலும்
எண்ணெயிலுமிருந்து நினைவுப் படையலுக்கான பகுதியை குரு எடுத்துச்
சாம்பிராணியோடு எரித்து விடுவார்.
இது ஆண்டவருக்கான நெருப்புப்பலி.


(தொடர்ச்சி):லேவியர்: அதிகாரங்கள் 3 முதல் 5 வரை