திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/லேவியர் (லேவியராகமம்)/அதிகாரங்கள் 3 முதல் 5 வரை
லேவியர் (The Book of Leviticus)
[தொகு]அதிகாரங்கள் 3 முதல் 5 வரை
அதிகாரம் 3
[தொகு]
1 ஒருவரது நேர்ச்சை நல்லுறவுப் பலியாய் இருந்தால்,
அது அவரது மாட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்தப்படும்.
காளையாகவோ பசுவாகவோ இருந்தால்,
அவர் பழுதற்ற ஒன்றை ஆண்டவருக்கு முன்பாகக் கொண்டு வருவார்.
2 நேர்ச்சையின் தலைமேல் அவர் தம் கையை வைத்துச்
சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் அதனைக் கொல்லவேண்டும்.
அப்போது ஆரோனின் புதல்வராகிய குருக்கள்
அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிப்பர்.
3 நல்லுறவுப் பலியிலிருந்து அவர் ஆண்டவருக்கு
நெருப்புப்பலியாகக் குடல்களைச் செலுத்த வேண்டியது:
அவற்றைச் சுற்றிலுமுள்ள கொழுப்பு முழுவதும்
4 இரு சிறுநீரகங்களும்
அவற்றின்மேல் சிறு குடல்களிடத்தில் இருக்கும் கொழுப்பும்
சிறுநீரகங்களோடு கல்லீரலின் மேல் இருக்கிற கல்லும் ஆகும்.
5 ஆரோனின் புதல்வர் அதைப் பலிபீடத்தில்
நெருப்பின் மீது உள்ள கட்டைகளில்
ஏற்கெனவே வைத்திருக்கும் எரிபலியோடு எரிப்பர்.
அது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி ஆகும்.
6 ஒருவர் ஆண்டவருக்கு நேர்ச்சையாக நல்லுறவுப் பலியைத்
தம் ஆட்டு மந்தையிலிருந்து செலுத்தினால்,
அது பழுதற்ற கிடாயாகவோ ஆடாகவோ இருக்கட்டும்.
7 ஒருவர் நேர்ச்சையாக ஆட்டைச் செலுத்தினால்,
அதை ஆண்டவர் திருமுன் கொண்டு வந்து,
8 நேர்ச்சையின் தலைமேல் அவர் தம் கையை வைத்து,
சந்திப்புக் கூடாரத்தின் முன்பாக அதனைக் கொல்லவேண்டும்.
ஆரோனின் புதல்வர் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளிப்பர்.
9 நல்லுறவுப் பலியிலிருந்து அவர் ஆண்டவருக்கு நெருப்புப் பலியாகச் செலுத்துவது,
அதன் கொழுப்பும், முதுகெலும்பின் அருகில் வெட்டியெடுத்த கொழுப்பு வாலும்
குடல்களை மூடிய கொழுப்பும், அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு முழுவதும்,
10 இரு சிறுநீரகங்களும், அவற்றின்மேல் இடுப்பையொட்டி உள்ள கொழுப்பும்,
சிறுநீரகங்களை அடுத்து கல்லீரலின்மேல் உள்ள சவ்வும் ஆகும்.
11 இவற்றைக் குருக்கள் பலிபீடத்தின்மேல் எரிப்பர்.
இது ஆண்டவருக்கு உகந்த நெருப்புப்பலி உணவாகும்.
12 நேர்ச்சையாக ஒருவர் வெள்ளாட்டுக் கிடாயைச் செலுத்தினால்,
அதை அவர் ஆண்டவர் திருமுன் கொண்டுவந்து
13 அதன் தலைமேல் தம் கையை வைத்துச்
சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாக அதைக் கொல்வார்.
ஆரோனின் புதல்வர் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிப்பர்.
14 நல்லுறவுப் பலியிலிருந்து அவர் ஆண்டவருக்கு நெருப்புப் பலியாகச் செலுத்த வேண்டியது:
குடல்களை மூடிய கொழுப்பும் அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு முழுவதும்,
15 இரு சிறுநீரகங்களும்
அவற்றின் மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பும்
சிறுநீரகங்களோடு கல்லீரல்மேல் இருக்கிற சவ்வும் ஆகும்.
16 குருக்கள் பலிபீடத்தின்மேல் அவற்றை எரிப்பர்.
இது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி உணவாகும்.
17 கொழுப்பையோ இரத்தத்தையோ நீங்கள் உண்ணலாகாது.
இது உங்கள் உறைவிடம் எங்கும் தலைமுறைதோறும்
உங்களுக்கு மாறாத நியமமாக விளங்கும்.
அதிகாரம் 4
[தொகு]அறியாமல் செய்த பாவங்களுக்கான காணிக்கைகள்
[தொகு]
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 நீ இஸ்ரயேல் மக்களிடம் அறிவிக்க வேண்டியது:
ஒருவர் அறியாமையினால் ஆண்டவரின் கட்டளைகளில்
ஒன்றையேனும் மீறிப் பாவம் செய்தால் அவர் செய்யவேண்டியது:
3 அருள்பொழிவு பெற்ற குரு பாவம் செய்து
மக்கள்மீது குற்றப்பழி வந்தால்,
தான் செய்த பாவத்தை முன்னிட்டுப்
பழுதற்ற ஓர் இளங்காளையைப் பாவம் போக்கும் பலியாக
ஆண்டவருக்குச் செலுத்துவாராக.
4 சந்திப்புக் கூடார நுழைவாயிலில்,
ஆண்டவர் திருமுன் அதைக்கொண்டு வந்து,
அதன் தலைமேல் தன் கையை வைத்து ஆண்டவர் திருமுன் அதைக் கொல்வார்.
5 அருள்பொழிவு பெற்ற குரு
அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து
அதைச் சந்திப்புக் கூடாரத்திற்குள் கொண்டுவந்து,
6 அந்த இரத்தத்தில் தன் விரலைத் தோய்த்துத்
தூயகத்தின் தொங்கு திரைக்கு எதிரே
ஆண்டவர் திருமுன் ஏழுமுறை தெளிப்பாராக.
7 குரு அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துச்
சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் திருமுன் இருக்கும்
நறுமணத்தூப பீடக்கொம்புகளில் பூசுவார்.
காளையின் எஞ்சிய இரத்தம் முழுவதையும்
சந்திப்புக் கூடார நுழைவாயிலில் இருக்கும் எரிபலி அடித்தளத்தில் ஊற்றுவார்.
8 பாவம் போக்கும் பலிக்காளையின் எல்லாக் கொழுப்பையும்
குடல்களைச் சுற்றியுள்ள கொழுப்பையும்
அவற்றின் மேலுள்ள கொழுப்பு முழுவதையும் எடுப்பார்.
9 மேலும் இரு சிறுநீரகங்கள்,
அவற்றின்மேல் இடுப்பையொட்டி உள்ள கொழுப்பு,
சிறுநீரகங்களை அடுத்துக் கல்லீரலின்மேல் உள்ள சவ்வு ஆகியவற்றை
10 நல்லுறவுப் பலிக் காளையிலிருந்து எடுப்பதுபோல எடுத்து,
குரு அவற்றை எரிபலிபீடத்தின்மேல் எரிப்பார்.
11 காளையின் தோலையும் அதன் இறைச்சியையும்
தலையையும் கால்களையும் குடல்களையும் சாணத்தையும்
12 காளை முழுவதையும்
பாளையத்திற்கு வெளியே சாம்பல் கொட்டுகிற
தூய்மையான இடத்தில் கொண்டுபோய்
விறகுக்கட்டைகளிட்டு நெருப்பால் எரிக்க வேண்டும்.
சாம்பல் கொட்டும் இடத்தில் அனைத்தையும் சுட்டெரிக்க வேண்டும்.
13 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் அறியாமையினால் தவறிழைத்து,
அது அவர்கள் கண்களுக்கு மறைவாய் இருந்தாலும்,
ஆண்டவரின் கட்டளைகளை மீறி,
தகாதன செய்து குற்றத்திற்கு உள்ளானால்,
14 அவர்கள் செய்தது பாவம் எனத் தெரியவரும்போது,
ஓர் இளங்காளையைச் சபையார் சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாகப்
பாவம் போக்கும் பலியாகக் கொண்டு வர வேண்டும்.
15 மக்கள் கூட்டமைப்பின் பெரியோர் அனைவரும்
ஆண்டவர் திருமுன் தம் கைகளைக்
காளையின் தலைமேல் வைப்பார்கள்.
ஆண்டவர் திருமுன் அந்தக் காளை கொல்லப்படும்.
16 அருள்பொழிவு பெற்ற குரு அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து,
சந்திப்புக் கூடாரத்திற்குள் கொண்டுவருவார்.
17 குரு அந்த இரத்தத்தில் தம் விரலைத் தோய்த்து
ஆண்டவர் திருமுன் தொங்குதிரைக்கு முன்பாகத் தெளிப்பார்.
18 சந்திப்புக் கூடாரத்தில்
ஆண்டவர் திருமுன் இருக்கும் பலிபீடக் கொம்புகளின்மேல்
அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி,
எஞ்சிய இரத்தத்தை எல்லாம் சந்திப்புக்கூடார நுழைவாயிலில் இருக்கும்
எரிபலி பீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடுவார்.
19 காளையின் கொழுப்பு முழுவதையும் எடுத்துப் பலிபீடத்தில் எரிப்பார்.
20 பாவம் போக்கும் பலிக்காளைக்குச் செய்ததுபோல,
இந்தக் காளைக்கும் செய்து,
குரு அவர்களுக்குப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்.
அப்பொழுது அவர்கள் மன்னிப்புப் பெறுவர்.
21 முன்னைய காளையை எரித்ததுபோல
இதையும் பாளையத்திற்கு வெளியே கொண்டு போய்ச் சுட்டெரிப்பாராக.
இது சபையாருக்கான பாவம்போக்கும் பலி.
22 தலைவன் ஒருவன் தன் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளில்
எதையாவது அறியாமையால் மீறிப் பாவம் செய்து குற்றத்திற்குள்ளானால்,
23 தான் செய்தது பாவமென்று அவனுக்குத் தெரியவரும்போது,
வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு கிடாயைப் பலியாகக் கொண்டு வருவான்.
24 அந்த ஆட்டுக்கிடாயின் தலைமேல் அவன் தன் கையை வைத்து,
எரிபலிப்பொருள் வெட்டப்படும் இடத்தில்,
ஆண்டவருக்குமுன் அந்தக் கிடாயைப் பலிகொடுப்பான்;
இது பாவம் போக்கும் பலி.
25 குரு பாவம் போக்கும் பலிஇரத்தத்தில் சிறிது தம்விரலால் எடுத்து
எலிபலிபீடக் கொம்புகளில் பூசி,
எஞ்சிய இரத்தத்தை அப்பீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடுவார்.
26 அதன் கொழுப்பு முழுவதையும் நல்லுறவுப்பலியின் கொழுப்புக்குச் செய்வதுபோல,
பலிபீடத்தின்மேல் எரித்துவிடுவார்.
குரு அவனுக்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்;
அவன் மன்னிப்புப் பெறுவான்.
27 பொதுமக்களின் ஒருவர் ஆண்டவரின் கட்டளைகளில் எதையாவது
அறியாமையால் மீறிப் பாவம் செய்து குற்றத்திற்குள்ளானால்,
28 தாம் செய்தது பாவம் என்று அவருக்குத் தெரியவரும்போது,
அவர் செய்த பாவத்தை முன்னிட்டு,
பழுதற்ற ஒரு வெள்ளாட்டுப் பெண் குட்டியைப் பலியாகக் கொண்டு வருவார்.
29 பாவம் போக்கும் பலியின் தலைமேல் தம் கையை வைத்து,
எரிபலியிடும் இடத்தில் அந்தப் பாவம் போக்கும் பலியாட்டை அடிப்பார்.
30 குரு அதன் இரத்தத்தில் சிறிது தம் விரலால் எடுத்து,
எரிபலிபீடக் கொம்புகளில் பூசி,
எஞ்சிய இரத்தத்தை அப்பீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடுவார்.
31 அதன் கொழுப்பு முழுவதையும்
நல்லுறவு பலியிலுள்ள கொழுப்பைப் போன்று எடுத்துப்
பலிபீடத்தின் மேல் ஆண்டவர் விரும்பும் நறுமணமாக குரு எரித்துப்
பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்.
அந்த மனிதரும் மன்னிப்புப் பெறுவார். [*]
32 பாவக்கழுவாய் பலியாக அவர் ஓர் ஆட்டுக் குட்டியைக் கொண்டு வந்தால்
அது பழுதற்ற பெண் ஆட்டுக் குட்டியாக இருக்கவேண்டும்.
33 அந்தப் பாவம்போக்கும் பலிப்பொருளின் தலைமீது
தம் கையை வைத்து எரிபலியை அடிக்க வேண்டும்.
அதே இடத்தில், இப்பாவம் போக்கும் பலியையும் அடிக்க வேண்டும்.
34 குரு அந்தப் பாவம்போக்கும் பலியின் இரத்தத்தில் சிறிது
தம் விரலால் எடுத்து
எரிபலிபீடக் கொம்புகளின்மேல் பூசி,
எஞ்சிய இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடுவார்.
35 அதன் கொழுப்பு முழுவதையும்
நல்லுறவுப் பலிக்கிடாயின் கொழுப்பை எடுப்பது போன்று எடுத்து,
எரிபலிபீடத்தின்மேல் ஆண்டவருக்கான நெருப்புப்பலி போல எரித்துவிடுவார்.
இவ்வாறாக அந்த மனிதர் செய்த பாவத்திற்குக்
குரு பாவக் கழுவாய் நிறைவேற்றுவார்;
அவரும் மன்னிப்புப் பெறுவார்.
- குறிப்பு
[*] 4:27-31 = எண் 15:27-28.
அதிகாரம் 5
[தொகு]பாவக் கழுவாய்க்கான காணிக்கைகள்
[தொகு]
1 ஒருவர் ஒரு காரியத்தைக் கண்டோ கேட்டோ அதற்குச் சாட்சியாளராய் இருந்தும்,
அதுபற்றிச் சான்று கூறப் பணிக்கும் பொதுக்கட்டளையைக் கேட்டும்,
அதை அறிவிக்காமல் இருந்து பாவத்திற்கு உட்பட்டால்,
அவரே இத்தீச்செயலுக்குப் பொறுப்பாவார்.
2 ஒருவர் தீட்டான எதையும் -
செத்துத் தீட்டான காட்டு விலங்கையோ,
செத்துத் தீட்டான கால்நடையையோ,
செத்துத் தீட்டான ஊர்வனவற்றையோ -
தெரியாமல் தொட்டுவிட்டாலும் அவர் தீட்டுப்பட்டவரே.
அவர் குற்றவாளி ஆவார்.
3 மேலும் எத்தகைய தூய்மைக்கேட்டினாலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதரை
ஒருவர் அறியாமலே தொட்டு,
பின்பு அதை அறிந்துகொண்டாலும் அவரும் குற்றவாளியே.
4 தீமை செய்வதற்கோ நன்மை செய்வதற்கோ,
எக்காரியத்திலும் ஒருவர் சிந்திக்காமல் வாய்விட்டு ஆணையிட்டபின்னர்,
தாம் அறியாமல் பதற்றத்தில் ஆணையிட்டு விட்டதாக அவர் உணர்ந்தால்,
இக்காரியத்தினாலும் அவர் குற்றவாளியே.
5 மேற்குறிப்பிட்டவைகளில் அவர் தவறிழைத்தவராகக் காணப்படும்போது
தாம் இழைத்த குற்றத்தை அறிக்கையிட்டு,
6 பாவம்போக்கும் பலிப்பொருளை ஆண்டவருக்குக் கொண்டுவரவேண்டும்.
ஆட்டு மந்தையிலிருந்து பிடித்த ஒரு பெண் ஆட்டையோ,
செம்மறியாட்டுக் குட்டியையோ, வெள்ளாட்டுக் குட்டியையோ
பாவம்போக்கும் பலியாகக் கொண்டுவர வேண்டும்.
அவருக்காகக் குரு அவரது பாவம் நீங்குவதற்குப் பாவக் கழுவாய் நிறைவேற்றுவார்.
7 அவர் தம் குற்றப்பழியை அகற்ற,
ஆட்டுக்குட்டி கொண்டுவர இயலாதிருந்தால்,
இரு காட்டுப் புறாக்களையோ,
இரு புறாக்குஞ்சுகளையோ கொண்டு வந்து,
ஒன்றைப் பாவம்போக்கும் பலியாகவும்
மற்றொன்றை எரிபலியாகவும் ஆண்டவருக்குச் செலுத்த,
8 அவற்றைக் குருவிடம் கொண்டுவர வேண்டும்.
குரு முதலில் பாவம் போக்கும் பலிக்கு உரியதை எடுத்து
அதன் கழுத்தைத் திருகித் தலையைத் துண்டிக்காமல் வைக்க வேண்டும்.
9 பாவம் போக்கும் பலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து
பலிபீட ஓரங்களைச் சுற்றிலும் தெளித்து
எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் வடியவிடவேண்டும்.
இது பாவம் போக்கும் பலி.
10 இரண்டாவதை ஒழுங்குமுறைப்படி
அவர் எரிபலிக்கெனச் செலுத்தவேண்டும்.
அவர் செய்த பாவம் நீங்கக் குரு பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்;
அவரும் மன்னிப்புப் பெறுவார்.
11 இரண்டு காட்டுப் புறாக்களையாவது
புறாக்குஞ்சுகளையாவது கொண்டு வர இயலாதிருந்தால்
குற்றவாளி தாம் செய்த குற்றத்தினிமித்தம்
தாம் படைக்கும் காணிக்கைக்கென இருபதுபடி [*] அளவு
மிருதுவான மாவில் பத்தில் ஒருபங்கைக் கொண்டுவருவாராக.
அதன் மேல் எண்ணெயோ சாம்பிராணியோ இடலாகாது.
ஏனெனில் அது பாவம் போக்கும் பலி.
12 அது குருவிடம் கொண்டு வரப்படவேண்டும்.
குரு நினைவுப்பங்காக ஒரு கைப்பிடி நிறைய எடுத்து
ஆண்டவரின் நெருப்புப்பலிகளோடு பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும்.
இது பாவம் போக்கும் பலி.
13 இவ்வாறு, குரு இத்தகைய பாவங்களில் ஒன்றைச் செய்தவருக்காகப்
பாவக் கழுவாய் நிறைவேற்றுவாராக.
அப்போது அவர் மன்னிப்புப்பெறுவார்.
எஞ்சியது உணவுப் படையலைப்போல குருவைச் சேரும்.
பதிலாகச் செலுத்தவேண்டிய காணிக்கைகள்
[தொகு]
14 ஆண்டவா மோசேயிடம் கூறியது:
15 ஒருவர் ஆண்டவருக்கு அர்ப்பணித்தவற்றில் ஒழுங்கை மீறி
அறியாமல் தவறிழைத்தால்,
அவர் பழுதற்ற ஓர் ஆட்டுக்கிடாயை ஆண்டவருக்குத்
தம் குற்றப்பழி நீக்கும் பலியாகக் கொண்டு வருவாராக.
அது திருத்தலச் செக்கேல் கணக்குக்கேற்ப
நீ விதிக்குமளவு மதிப்புடையதாய் இருக்கவேண்டும்.
16 அர்ப்பணித்தவற்றில் தவறிழைத்தால்,
ஈட்டுத் தொகையோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாக்கிக் கொடுக்கவேண்டும்.
அதைக் குருவிடமே கொடுக்க வேண்டும்.
குரு பாவக்கழுவாய் செய்து குற்றம் போக்கும் பலியான ஆட்டுக்கிடாயை
அவருக்காகப் பலியிடவேண்டும்.
அப்பொழுது அவர் மன்னிப்புப்பெறுவார்.
17 ஆண்டவரின் கட்டளைகளின்படி,
செய்யக்கூடாதென்று விலக்கப்பட்ட ஒன்றை ஒருவர் செய்து
பாவத்திற்கு உள்ளானால்,
அவர் அறியாமல் செய்தாலும்கூட, அவர் குற்றவாளியே.
அத்தீச்செயலுக்கு அவரே பொறுப்பாவார்.
18 அவர் நீ விதிக்கும் மதிப்பிற்கு ஏற்ப,
பழுதற்ற ஓர் ஆட்டுக்கிடாயை ஆட்டு மந்தையிலிருந்து பிடித்து
அதைக் குற்றப்பழி நீக்கும் பலியாகக் குருவிடம் கொண்டு வருவார்.
அவர் அறியாமல் செய்த பிழைக்காகக்
குரு அவருக்கெனக் கறைநீக்கம் செய்வார்.
அது அவருக்கு மன்னிக்கப்படும்.
19 அது குற்றப்பழி நீக்கும் பலி.
அவர் ஆண்டவருக்கு எதிராகவே குற்றம் செய்துள்ளார்.
- குறிப்பு
[*] 5:11 'ஓர் ஏப்பா' என்பது எபிரேய பாடம்.
(தொடர்ச்சி): லேவியர்: அதிகாரங்கள் 6 முதல் 7 வரை