திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/லேவியர் (லேவிய‌ராகமம்)/அதிகாரங்கள் 6 முதல் 7 வரை

விக்கிமூலம் இலிருந்து
லேவியர் நூல். எபிரேய மூல மொழியில் அமைந்த பாடம். வெளியீட்டு ஆண்டு: 1618.

லேவியர் (The Book of Leviticus)[தொகு]

அதிகாரங்கள் 6 முதல் 7 வரை

அதிகாரம் 6[தொகு]


1 ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:
2 தம்மிடம் கொடுக்கப்பட்டிருந்த
அல்லது பணையமாய் வைக்கப்பட்டிருந்த பொருளை
ஒருவர் தம் இனத்தாரிடமிருந்து ஏமாற்றி எடுத்துக் கொண்டோ,
அவரிடமிருந்து ஒரு பொருளைத் திருடிக்கொண்டோ,
தம் இனத்தாரை ஒடுக்கிப் பறித்துக் கொண்டோ,
3 காணாமற்போனதைக் கண்டெடுத்தும் அதை மறுத்துப் பொய்யாணையிட்டோ -
இவற்றைப் போன்ற பாவத்திற்கு உட்பட்டு, ஆண்டவருக்குத் துரோகம் செய்தால்,
4 அவர் பாவத்திற்கு உட்பட்டு, குற்றப்பழி உடையவராய் இருப்பார்.
அவர் தாம் திருடிக்கொண்டதையோ, ஒடுக்கிப் பறித்துக்கொண்டதையோ
தம்மிடம் கொடுக்கப்பட்டிருந்த பொருளையோ
காணாமற்போய்த் தாம் கண்டெடுத்ததையோ
5 பொய் ஆணையிட்டுப் பெற்றுக்கொண்டதையோ -
இவை அனைத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
அந்த முதலை முழுமையாகக் கொடுப்பதோடு,
அதன் ஐந்தில் ஒருபங்கைச் சேர்த்துக்
குற்றப்பழி நீக்கும் பலிநாளில் உரியவருக்குக் கொடுக்க வேண்டும்.
6 குற்றப்பழி நீக்கும் பலியாக நீ விதிக்கும் மதிப்பிற்குச் சரியாகப்
பழுதற்ற ஓர் ஆட்டுக்கிடாயை ஆண்டவருக்குச் செலுத்தும்படி
குற்றப்பழி நீக்கும் பலியாக குருவிடம் செலுத்தவேண்டும்.
7 அப்பொழுது குரு ஆண்டவருக்கு முன்பாகக் கறை நீக்கம் செய்வார்;
இவற்றுள் எதையேனும் செய்து குற்றத்திற்கு உள்ளானால், அது மன்னிக்கப்பெறும். [1]

எரிபலிகள்[தொகு]


8 ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:
9 ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் நீ கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது:
எரிபலி பற்றிய சட்டம் இதுவே:
இரவு முழுவதும் காலைவரையும்
பலிபீடத்தின் நெருப்பின் மேல் எரிபலி இருக்க வேண்டும்.
பலிபீடத்தின்மேல் நெருப்பு எரிந்து கொண்டே இருக்கவேண்டும்.
10 குரு தன் நார்ப்பட்டு அங்கியை அணிந்து
தன் நார்ப்பட்டு உள்ளாடையை இடுப்பில் கட்டிக்கொள்ளவேண்டும்;
பலிபீடத்தின்மேல் நெருப்பில் எரித்த எரிபலியின் சாம்பலை எடுத்துப்
பலிபீடத்திற்கருகே கொட்டவேண்டும்;
11 பின்னர் தன் உடைகளை மாற்றி வேறு ஆடைகள் அணிந்துகொண்டு
அந்தச் சாம்பலைப் பாளையத்திற்கு வெளியே
தூய்மையான இடத்தில் கொண்டுபோய்க் கொட்ட வேண்டும்.
12 பலிபீடத்தின்மேல் இருக்கிற நெருப்போ
அணையாமல் எரிந்து கொண்டே இருக்கவேண்டும்.
காலைதோறும் குரு அதன்மேல் எரியும்படி கட்டைகளை வைத்து,
அதன்மேல் எரிபலியை அடுக்கி
அவற்றின் மீது நல்லுறவுப் பலிகளின் கொழுப்பை இட்டு எரிக்கவேண்டும்;
13 பலிபீடத்தின்மேல் நெருப்பு எப்போதும் எரிந்து கொண்டே இருக்க வேண்டும்.
அது ஒருபோதும் அணைந்துவிடலாகாது.

தானியப் படையல்கள்[தொகு]


14 உணவுப் படையல் பற்றிய சட்டம் இதுவே:
ஆண்டவரின் திருமுன் அதைப் பலிபீடத்திற்கெதிரே
ஆரோனின் புதல்வர் படைக்க வேண்டும்.
15 அவர்கள் உணவுப் படையலின் மிருதுவான மாவிலும்
அதன் எண்ணெயிலும்
உணவுப் படையலின் மீதுள்ள எல்லாச் சாம்பிராணியிலும்
ஒரு கைப்பிடி நிறைய எடுத்து,
அதை நினைவுப் படையலாகப் பலிபீடத்தின்மேல் எரிப்பர்.
அது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நினைவுப்பலியாகும்.
16 எஞ்சியதை ஆரோனும் அவன் புதல்வரும் உண்பர்.
அதைப் புளிப்பற்றதாகப் புனிதத் தலத்தில் உண்பர்.
சந்திப்புக் கூடாரத்தின் முற்றத்தில் அதை உண்பர்.
17 அதைப் புளிப்பேற்றிச் சுடவேண்டாம்.
எனக்குச் செலுத்தும் நெருப்புப் பலிகளில்
அதை நான் அவர்கள் பங்காகக் கொடுத்துள்ளேன்.
அது பாவம் போக்கும் பலிபோலவும் குற்றப்பழி நீக்கும் பலிபோலவும் மிகத் தூயது.


18 ஆரோனின் பிள்ளைகளில் ஆண்கள் மட்டுமே அதை உண்ணவேண்டும்.
இது தலைமுறைதோறும் உங்களுக்கு மாறாத நியமமாய் விளங்கும்.
ஆண்டவருக்குச் செலுத்தும் நெருப்புப் பலிகளில் எதையும் தொடுகிறவன் தூயவனாய் இருப்பான்.
19 ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:
20 ஆரோனும் அவன் புதல்வரும் அருள்பொழிவு பெறுகின்ற நாளில்
அவனும் அவன் புதல்வரும் ஆண்டவருக்குக் கொண்டுவர வேண்டிய படையல் இதுவே.
இருபது படி [2] அளவான மிருதுவான மாவில்
பத்தில் ஒரு பங்கை எடுத்துக்
காலையில் பாதியும், மாலையில் பாதியுமாக
எந்நாளும் உணவுப் படையலாக அளிக்க வேண்டும்.
21 தட்டையான சட்டியில் எண்ணெய் விட்டு அதைச் சுடவேண்டும்.
சுட்ட பின்னர் அதை எடுத்துப் பத்துத் துண்டுகளாக்கி
ஆண்டவருக்கே உகந்த நறுமணமிக்க உணவுப் படையலாக அளிக்க வேண்டும்.
22 அவன் புதல்வரில் அவனுக்குப்பின் அருள்பொழிவு பெறும் குரு
என்றென்றும் மாறாத நியமமாக இதைப்படைக்க வேண்டும்.
இது ஆண்டவருக்காக முழுவதும் எரிக்கப்படும்.
23 குருவின் எந்த உணவுப்படையலும்
முழுவதும் எரிக்கப்படவேண்டும். அதை உண்ணலாகாது.

குற்ற நீக்கக் காணிக்கைகள்[தொகு]


24 ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:
25 நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்ல வேண்டியது:
பாவம் போக்கும் பலி பற்றிய சட்டம் இதுவே:
எரிபலிக்குரியதும் பாவம் போக்கும் பலிக்குரியதும்
பலியாக்கப்படுகிற இடத்திலேயே ஆண்டவர் திருமுன் அடிக்கப்படவேண்டும்.
அது மிகத் தூயது.
26 பாவம் போக்குவதற்கென அதைப் படைக்கும் குரு அதை உண்பார்.
சந்திப்புக் கூடாரத்தின் முற்றமாகிய தூய தளத்தில் அது உண்ணப்படவேண்டும்.
27 அந்த இறைச்சியில்படுகிற எதுவும் தூய்மையானதே.
அதன் இரத்தம் ஒரு துணியில் தெறித்தால்,
இரத்தம் தெறித்த துணியைத் தூய தளத்தில் துவைக்கவேண்டும்.
28 அதை வேகவைத்த மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்.
வெண்கலப் பானையில் வேகவைத்தால்
அதைத் தேய்த்துத் தண்ணீரால் நன்கு கழுவவேண்டும்.
29 குருக்களில் ஆண் மக்கள் யாவரும் அதை உண்ணலாம்.
அது மிகத் தூயது.
30 கறைநீக்கம் செய்யும்படி சந்திப்புக் கூடாரத்திற்குள்
தூயகத்திற்குக் கொண்டு வரப்பட்ட
இரத்தத்திற்குரிய பாவம் போக்கும் பலி உண்ணப்படலாகாது;
நெருப்பில் எரிக்கப்படவேண்டும்.


குறிப்புகள்

[1] 6:1-7 = எண் 5:5-8.
[2] 6:20 = 'ஓர் ஏப்பா' என்பது எபிரேய பாடம்.

அதிகாரம் 7[தொகு]


1 குற்றப்பழி நீக்கும் பலிபற்றிய கட்டளை இதுவே: அது மிகத்தூயது.
2 எரிபலி அடிக்கப்படும் இடத்திலேயே
குற்றப்பழி நீக்கும் பலியும் அடிக்கப்படவேண்டும்.
அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கவேண்டும்.
3 அதன் கொழுப்பு முழுவதையும்,
அதன் கொழுப்பு வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும்,
4 இரு சிறுநீரகங்களையும்
அவற்றின்மேல் குடல்களோடு சேர்ந்திருக்கிற கொழுப்பையும்
சிறுநீரகங்களோடு கல்லீரலின் மேல் இருக்கிற சவ்வையும் எடுத்து,
5 இவற்றைக் குரு பலிபீடத்தின்மேல்
ஆண்டவருக்கு நெருப்புப்பலி ஆக்கவேண்டும்.
அது குற்றப்பழி நீக்கும் பலி.
6 குருக்களில் ஆண்மக்கள் யாவரும் அதை உண்பர்.
அதைத் தூய தலத்தில் உண்ண வேண்டும். அது மிகத் தூயது.


7 பாவம் போக்கும் பலியைப் போன்றதே குற்றப்பழி நீக்கும் பலியும்.
அவற்றிற்குரிய சட்டம் ஒன்றே.
அது கறை நீக்கம் செய்யும் குருவுக்கே உரியது.
8 ஒருவர் செலுத்தும் எரிபலியின் தோல்
அப்பலியைச் செலுத்தும் குருவுக்கே உரியது.
9 அடுப்பில் சுட்டதும்,
பொரிக்கும் சட்டியிலும் தட்டையான சட்டியிலும் தயாரித்ததுமான
உணவுப் படையல் அனைத்தும் அதைச் செலுத்துகிற குருவுக்கே உரியவை.
10 எண்ணெயில் பிசைந்ததும் பிசையாததுமான உணவுப்படையல் அனைத்தும்
ஆரோனின் புதல்வர் யாவருக்கும் சரிபங்காகச் சேரும்.

நல்லுறவுக் காணிக்கைகள்[தொகு]


11 ஆண்டவருக்கு ஒருவர் செலுத்தும் நல்லுறவுப் பலிபற்றிய சட்டம் இதுவே:
12 அவர் அதை நன்றிக் கடனாகச் செலுத்தினால்
எண்ணெயில் தோய்த்த நெய்யப்பங்கள்,
எண்ணெய் பூசிய புளிப்பற்ற அடைகள்,
மெல்லிய மாவினால் எண்ணெயில் நன்கு பிசைந்து செய்த நெய்யப்பங்கள்
ஆகியவற்றை நன்றிப் பலியோடு கொண்டுவர வேண்டும்.
13 புளித்த மாவினால் செய்த நெய்யப்பங்களை
நன்றிக்கடனாகச் செலுத்தும் நல்லுறவுப் பலியைத்
தமது நேர்ச்சையாக அவர் கொண்டுவருவார்.
14 ஒவ்வொரு காணிக்கையிலும் ஒன்றை எடுத்து,
ஆண்டவருக்குரிய பங்காகப் படைக்க வேண்டும்.
இப்பொருள்கள் நல்லுறவுப் பலியின் இரத்தத்தைத் தெளிக்கும் குருவுக்கே உரியவை.
15 நன்றிக் கடனாகச் செலுத்தும் நல்லுறவுப் பலியின் இறைச்சி
படைக்கப்படும் நாளில் உண்ணப்படவேண்டும்.
விடியுமட்டும் அதில் எதையும் மீதி வைக்கலாகாது.


16 அவர் செலுத்தும் நேர்ச்சைப் பலி
ஒரு பொருத்தனையாகவோ தன்னார்வப்பலியாகவோ இருந்தால்,
அதைப் படைக்கும் நாளிலும் எஞ்சியதை மறுநாளிலும் உண்ணலாம்.
17 பலி இறைச்சியில் எஞ்சியிருப்பதெல்லாம்
மூன்றாம் நாளில் நெருப்பால் எரிக்கப்பட வேண்டும்.
18 நல்லுறவுப்பலி இறைச்சியில் எஞ்சியதை
மூன்றாம் நாளில் உண்பது உகந்தன்று.
அதைச் செலுத்தினவருக்கும் அது பயன் அளிக்காது.
அது அருவருப்பானது. அதை உண்பவர் தம் குற்றபழியைச் சுமப்பார்.
19 தீட்டான எந்தப் பொருளிலாவது
அந்த இறைச்சி பட நேர்ந்தால் அதை உண்ணலாகாது.
அதை நெருப்பில் எரிக்க வேண்டும்.
மற்ற இறைச்சியையோ தூய்மையாய் இருக்கிறவர் எவரும் உண்ணலாம்.
20 தீட்டுப்பட்ட ஒருவர் ஆண்டவரின் நல்லுறவுப் பலியின் இறைச்சியை உண்பாராகில்,
அவர் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார்.
21 தீட்டான எதையும் தீட்டுப்பட்ட மனிதரையோ கால்நடையையோ,
தீட்டான ஊர்வனவற்றையோ ஒருவர் தீண்டியவராக இருந்து
ஆண்டவருக்குப் படைக்கும் நல்லுறவுப்பலி இறைச்சியை உண்டால்,
அவர் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார்.


22 ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:
23 நீ இஸ்ரயேல் மக்களிடம்,
"மாடு, ஆடு, வெள்ளாடு இவற்றின் கொழுப்பை நீங்கள் உண்ணலாகாது.
24 தானாய்ச் செத்ததின் கொழுப்பையும்,
பீறுண்டதின் கொழுப்பையும் வேறு செயல்களுக்குப் பயன்படுத்தலாமேயன்றி
நீங்கள் அதை ஒருபோதும் உண்ணலாகாது.
25 ஏனெனில், ஆண்டவருக்கு நெருப்புப்பலியாகப் படைக்கும் கால்நடையின் கொழுப்பை
உண்கிற எவரும் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார்.
26 உங்கள் குடியிருப்புகள் எங்கும்,
பறவையின் இரத்தத்தையோ கால்நடைகளின் இரத்தத்தையோ,
வேறு எந்த இரத்தத்தையுமோ உண்ணலாகாது.
27 இரத்தத்தை உண்ணும் எவரும்
தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார்" என்று சொல். [*]


28 ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:
29 நீ இஸ்ரயேல் மக்களிடம்,
"ஆண்டவருக்கு நல்லுறவுப் பலி செலுத்துபவர்,
தாம் செலுத்தும் நல்லுறவுப் பலியிலிருந்து
ஆண்டவருக்குரிய நேர்ச்சையைக் கொண்டுவர வேண்டும்.
30 ஆண்டவருக்குரிய நெருப்புப் பலியை அவரே கொண்டு வரவேண்டும்.
நெஞ்சுக் கறியையும் அதனோடு அதன் மேலுள்ள கொழுப்பையும்
ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாகக் கொண்டு வர வேண்டும்.
31 குரு அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தில் எரிப்பார்.
நெஞ்சுக் கறியோ ஆரோனுக்கும் அவன் புதல்வர்க்கும் உரியதாகும்.
32 நல்லுறவுப் பலிகளில் வலது பின்னந்தொடையைக்
குருவிடம் பங்காகக் கொடுக்க வேண்டும்.
33 ஆரோனின் புதல்வருள் நல்லுறவுப் பலியின் இரத்தத்தையும்,
கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு வலது பின்னந்தொடை பங்காகச் சேரும்.
34 நல்லுறவுப் பலிகளில் ஆரத்திப் பலியாகிய நெஞ்சுக் கறியையும்
பங்காகிய பின்னந்தொடையையும்
நான் இஸ்ரயேல் மக்களிடமிருந்து எடுத்து
குருவாகிய ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் கொடுத்துள்ளேன்.
இது இஸ்ரயேல் மக்களிடமிருந்து பெறும் நிலையான பங்காகும்" என்று சொல்.
35 ஆரோனும் அவன் புதல்வரும்
ஆண்டவர்க்குரிய குருக்களாகும்படி அழைத்து வரப்பட்ட நாளிலிருந்து
இது ஆண்டவரின் நெருப்புப் பலியிலிருந்து
அவர்களுக்கென அர்ப்பணிக்கப்பட்ட பங்காகும்.
36 ஆண்டவர் அவர்களுக்கு அருள்பொழிவு செய்த நாளில்,
அவர்கள் தலைமுறைதோறும்
அவர்களுக்கு மாறாத பங்காகக் கொடுக்கக் கட்டளையிட்டார்.


37 எரிபலி, உணவுப் படையல், பாவம் போக்கும் பலி,
குற்றப்பழி நீக்கும் பலி, திருநிலைப்படுத்தும் பலி,
நல்லுறவுப் பலி ஆகிய பலிகளைப்பற்றிய சட்டம் இதுவே.
38 தமக்குச் செலுத்த வேண்டிய நேர்ச்சைகளைப் பற்றி
ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்குச்
சீனாய்ப் பாலைநிலத்தில் கட்டளையிட்ட நாளில்
மோசேக்கு அவர் சீனாய் மலையில் இட்ட கட்டளைகள் இவையே.


குறிப்பு

[*] 7:26-27 தொநூ 9:4; லேவி 17:10 14; 19:26; இச 12:16,23; 15:23.


(தொடர்ச்சி): லேவியர்: அதிகாரங்கள் 8 முதல் 10 வரை