திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/லேவியர் (லேவிய‌ராகமம்)/அதிகாரங்கள் 8 முதல் 10 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
மோசே ஆரோனையும் அவர்தம் மகன்களையும் திருநிலைப்படுத்தல்; பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுத்தல் (லேவி 8). ஆண்டு: 1728. காப்பிடம்: ஓலாந்து.

லேவியர் (The Book of Leviticus)[தொகு]

அதிகாரங்கள் 8 முதல் 10 வரை

அதிகாரம் 8[தொகு]

ஆரோன், அவர்தம் மகன்கள் ஆகியோரின் திருநிலைப்பாடு[தொகு]

(விப 29:1-37)


1 ஆண்டவர் மோசேயிடம்,
2 "நீ ஆரோனையும் அவனுடன் அவன் புதல்வரையும் வரவழைத்து,
உடைகளையும் திருப்பொழிவு எண்ணெயையும்,
பாவம்போக்கும் பலிக்காக ஒரு காளையையும்,
இரண்டு ஆட்டுக் கிடாய்களையும்
மற்றும் ஒரு கூடையில் புளிப்பற்ற அப்பங்களையும் கொண்டு வரச்செய்.
3 மக்கள் கூட்டமைப்பு முழுவதையும்,
சந்திப்புக்கூடார நுழைவாயிலின் முன் கூடிவரச்செய்" என்றார்.
4 மோசே தமக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி செய்தார்.
சந்திப்புக் கூடார நுழைவாயில்முன் கூட்டமைப்பு குழுமியபோது,
5 மோசே கூட்டமைப்பிடம்,
"இக்காரியத்தைச் செய்யும்படி ஆண்டவர் கட்டளையிட்டுள்ளார்" என்று கூறி,
6 ஆரோனையும், அவர் புதல்வரையும் வரவழைத்துத்
தண்ணீரில் குளிக்கச்செய்தார்.
7 உள்ளங்கியை உடுக்கச் செய்து இடைக்கச்சையைக் கட்டி,
மேலங்கியை அணிவித்து, ஏப்போதை அவர்மேல் போட்டு,
ஏப்போதின் கைவண்ணப் பட்டையை அவருக்குக் கட்டி,
8 மார்புப் பட்டையை அவருக்கு அணிவித்து,
அதில் ஊரிம், தும்மிம் ஆகியவற்றை வைத்து,
9 தலையில் பாகை அணிவித்து,
பாகையின்மேல் முன்பக்கம், புனித பொன்முடியான பொற்பட்டத்தைக் கட்டினார்.


10 பின்னர் மோசே, திருப்பொழிவு எண்ணெயை எடுத்துத்
திருஉறைவிடத்தையும் அதில் உள்ள எல்லாவற்றையும்
திருப்பொழிவு செய்து புனிதப்படுத்தினார்.
11 திருப்பொழிவு எண்ணெயில் கொஞ்சம் எடுத்து,
பலிபீடத்தின்மேல் ஏழு முறை தெளித்து,
பலிபீடத்தையும் அதன் அனைத்துக் கருவிகளையும்
நீர்த்தொட்டியையும், அதன் தாங்கியையும் புனிதப்படுத்தும்படி திருப்பொழிவு செய்து,
12 ஆரோனின் தலையின்மேல் திருப்பொழிவு எண்ணெயில் கொஞ்சம் வார்த்து
அவரைத் திருநிலைப்படுத்தும்படி அவருக்கு அருள்பொழிவு செய்தார்.
13 ஆண்டவரது ஆணைப்படி,
மோசே ஆரோனின் புதல்வரை வரவழைத்து,
அவர்களுக்குக் கோடிட்ட உள்ளாடைகளை உடுத்துவித்து,
இடைக்கச்சைகளைக் கட்டித் தலையில் பாகை அணிவித்தார்.


14 பின்னர், பாவம் போக்கும் பலிக்கான காளையை அவர் கொண்டு வந்தார்.
அதன் தலையின்மேல் ஆரோனும் அவர் புதல்வரும் தங்கள் கைகளை வைத்தனர்.
15 அது வெட்டப்பட்டது.
மோசே அதன் இரத்தத்தில் சிறிது தம் விரலால் எடுத்துப்
பலிபீடத்தின் கொம்புகளைச் சுற்றிலும் பூசி,
பலிபீடத்திற்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றி,
எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றி,
கறைநீக்கப்பலி செய்வதற்காக அதைப் புனிதப்படுத்தினார்.
16 ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டபடி
குடல்கள்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும்,
கல்லீரலின் மேலிருந்த சவ்வையும்,
இரு சிறுநீரகங்களையும் அவற்றின் கொழுப்பையும்
பலிபீடத்தில் மோசே எரித்தார்.
17 காளையின் தோலையும் இறைச்சியையும் சாணத்தையும்
பாளையத்திற்கு வெளியே நெருப்பிட்டுக் கொளுத்தினார்.


18 பின்னர், அவர் எரிபலிக்கான ஆட்டுக்கிடாயைக் கொண்டு வந்தார்.
அதன் தலைமீது ஆரோனும் அவர் புதல்வரும் கைகளை வைத்தனர்.
19 அது வெட்டப்பட்டது.
மோசே அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளித்தார்.
20 ஆட்டுக்கிடாய் துண்டிக்கப்பட்டது.
மோசே அதன் தலையையும் துண்டங்களையும் கொழுப்பையும் எரித்து,
21 குடல்களையும், தொடைகளையும் தண்ணீரால் கழுவிய பின்னர்,
ஆட்டுக்கிடாய் முழுவதையும்
ஆண்டவர் கட்டளையிட்டபடியே பலிபீடத்தின்மேல் எரிபலியாக எரித்தார்.
இது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி.


22 பின்னர், அவர் திருநிலைப்பாட்டுக்குரிய
அடுத்த ஆட்டுக்கிடாயைக் கொண்டு வந்தார்.
அதன் தலைமீது ஆரோனும் அவர் புதல்வரும் கைகளை வைத்தனர்.
23 அது வெட்டப்பட்டது.
மோசே அதன் இரத்தத்தில் சிறிது எடுத்து,
ஆரோனின் வலக்காதுமடலிலும், வலக்கைப் பெருவிரலிலும்,
வலக்கால் பெருவிரலிலும் பூசினார்.
24 பின்னர், அவர் ஆரோனின் புதல்வரையும் அழைத்து,
அவர்களுடைய வலக்காது மடலிலும் வலக்கைப் பெருவிரலிலும்
வலக்கால் பெருவிரலிலும் சிறிது இரத்தத்தைப் பூசி,
எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
25 கொழுப்பையும், கொழுப்பு வாலையும்,
குடல்கள் மேலிருந்த கொழுப்பு முழுவதையும்
கல்லீரலின் மேலிருந்த சவ்வையும்
இரு சிறுநீரகங்களையும் அவற்றின் கொழுப்பையும்
வலது முன்னந்தொடையையும் எடுத்து,
26 ஆண்டவர் திருமுன் வைத்திருக்கும்
புளிப்பற்ற அப்பக்கூடையிலுள்ள புளிப்பற்ற நெய்யப்பம் ஒன்றும்,
எண்ணெயில் தோய்த்த அப்பம் ஒன்றும் அடை ஒன்றும் எடுத்து,
அந்தக் கொழுப்பின் மேலும் வலது முன்னந்தொடையின் மேலும் வைத்து,
27 அவற்றையெல்லாம் ஆரோனின் உள்ளங்கைகளிலும்
அவர் புதல்வருடைய உள்ளங்கைகளிலும் வைத்து
ஆரத்திப் பலியாக ஆண்டவர் திருமுன் அசைத்து,
28 அவற்றை அவர்கள் உள்ளங் கைகளிலிருந்து எடுத்து,
பலிபீடத்தின் மேல் இருந்த எரிபலியோடு எரித்தார்.
இது திருநிலைப்பாட்டுப்பலி.
இதுவே ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி.
29 பின்னர், மோசே நெஞ்சுக்கறியை எடுத்து,
அதை ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாக அசைத்தார்.
ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டவாறு,
திருநிலைப்பாட்டுக்கான ஆட்டுக்கிடாயில் அது மோசேயின் பங்காயிற்று.


30 மோசே திருப்பொழிவு எண்ணெயிலும்
பலிபீடத்தின் மேலிருக்கும் இரத்தத்திலும் சிறிது எடுத்து
ஆரோன் மேலும் அவர்தம் உடைகள்மேலும்
ஆரோனின் புதல்வர் மேலும் அவர்கள் உடைகள்மேலும் தெளித்தார்;
இவ்வாறு ஆரோனையும் அவர் உடைகளையும்
அவர் புதல்வரையும் அவர்கள் உடைகளையும் புனிதப்படுத்தினார்.


31 பின்னர் மோசே ஆரோனையும் அவர் புதல்வரையும் நோக்கி,
"நான் கட்டளையிட்டவாறு அந்த இறைச்சியைச்
சந்திப்புக் கூடார நுழைவாயில் முன்பாகச் சமைத்து,
அத்துடன் திருநிலைப்பாட்டுக் காணிக்கைக் கூடையிலிருக்கும் அப்பத்தையும் உண்பீர்கள்.
32 இறைச்சியிலும் அப்பத்திலும் எஞ்சியிருப்பதை நெருப்பிலிட்டுக் கொளுத்திவிடுங்கள்.
33 திருநிலைப்பாட்டு நாள்கள் முடியும்வரை ஏழு நாள்கள்
சந்திப்புக்கூடார நுழைவாயிலைவிட்டு நீங்காதீர்கள்.
ஏழு நாள்கள் நீங்கள் புனிதப்படுத்தப்படுவீர்கள்.
34 இன்று செய்யப்பட்டது உங்கள் கறையை நீக்குவதற்காக
ஆண்டவர் கட்டளையிட்டதாகும்.
35 நீங்கள் சாகாதபடி ஏழு நாள்கள் இரவும் பகலும்
சந்திப்புக் கூடார நுழைவாயிலில் ஆண்டவருக்காகக் காவல் காப்பீர்கள்.
இதுவே நான் பெற்ற கட்டளை" என்றார்.
36 மோசேயின் மூலமாக ஆண்டவர் கட்டளையிட்ட எல்லாவற்றையும்
ஆரோனும் அவர் புதல்வரும் செய்தனர்.

அதிகாரம் 9[தொகு]

ஆரோன் பலி செலுத்தல்[தொகு]


1 மோசே எட்டாம் நாளில் ஆரோனையும் அவர் புதல்வரையும்
இஸ்ரயேலின் பெரியோர்களையும் வரவழைத்தார்.
2 அவர் ஆரோனிடம் கூறியது:
"நீ பாவம் போக்கும் பலியாக ஊனமற்ற காளைக்கன்று ஒன்றைத் தேர்ந்தெடுத்து
ஆண்டவர் திருமுன் கொண்டு வா.
நீ சொல்ல வேண்டியது:
3 இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர் திருமுன்
பாவக் கழுவாய்ப் பலிக்காக ஒருவயது நிரம்பிய மறுவற்ற காளைக்கன்று ஒன்றையும்
செம்மறிக்கிடாய் ஒன்றையும்
4 நல்லுறவுப் பலிகளுக்காக ஒரு காளையையும் ஓர் ஆட்டுக் கிடாயையும்
எண்ணெயோடு கூடிய உணவுப் படையல்களையும் கொண்டு வாருங்கள்.
ஏனெனில் இன்று ஆண்டவர் உங்களுக்குத் தோன்றுவார்."


5 அவர்கள் மோசே கட்டளையிட்டவற்றைச்
சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டு வந்தார்கள்.
சபையார் அனைவரும் வந்து ஆண்டவர் முன்பாக நின்றனர்.
6 அப்பொழுது மோசே,
"நீங்கள் செய்யுமாறு ஆண்டவர் கட்டளையிட்டது இதுவே;
ஆண்டவரது மாட்சி உங்களுக்குத் தோன்றும்" என்றார்.
7 மோசே ஆரோனிடம்,
"நீ பலிபீடத்தருகில் வந்து உன் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் செலுத்தி,
உனக்காகவும் மக்களுக்காகவும் கறை நீக்கம் செய்வாய்.
ஆண்டவர் கட்டளைப்படி அதற்காக மக்கள் செலுத்த வேண்டிய பலியையும் செலுத்தி
அவர்களுக்காகக் கறை நீக்கம் செய்வாய்" என்றார். [1]


8 ஆரோன் பலிபீடத்தருகில் தமக்கென்று பாவக்கழுவாய்ப் பலியாகக்
காளைக்கன்று ஒன்றை அடித்தார்.
9 ஆரோனின் புதல்வர்கள் அதன் இரத்தத்தை அவரிடம் கொண்டு வர,
அவர் தம் விரலை அதில் தோய்த்து பலிபீடத்தில் கொம்புகளில் பூசி,
எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்திற்கு அடியில் ஊற்றினார்.
10 பாவம் போக்கும் பலியின் கொழுப்பையும் சிறுநீரகங்களையும்
கல்லீரலிலிருந்து எடுத்த சவ்வையும்
ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பலிபீடத்தின் மேல் சுட்டெரித்து,
11 இறைச்சியையும் தோலையும் பாளையத்திற்கு வெளியே நெருப்பிலிட்டு அழித்தார்.


12 பின்பு அவர் எரிபலிக்கிடாயை அடித்தார்.
ஆரோனின் புதல்வர் அதன் இரத்தத்தை அவரிடம் கொண்டு வர,
அவர் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தார்.
13 எரிபலியின் துண்டங்களையும் தலையையும் அவரிடம் கொண்டு வந்தனர்.
அவர் அவைகளைப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து,
14 குடல்களையும் தொடைகளையும் கழுவி,
இவற்றைப் பலிபீடத்தின் மேல் இருக்கும் எரிபலியோடு சுட்டெரித்தார்.


15 பின்னர், அவர் மக்களுக்கான பலியை,
பாவம் போக்கும் பலிக்கிடாயைக் கொண்டுவந்து அதைக்கொன்று,
முன்னதைப்போலவே பாவம்போக்கும் பலியாகச் செலுத்தினார்.
16 பின்னர் அவர் எரிபலியைக் கொண்டு வந்து நியமத்தின்படியே செலுத்தினார்;
17 உணவுப் படையல்களைக் கொண்டுவந்து
தம் கைநிறைய எடுத்து காலையில் செலுத்தும் எரிபலியோடு
பலிபீடத்தின்மேல் சுட்டெரித்தார்.
18 பின்னர், மக்களின் நல்லுறவுப் பலிகளாகிய காளையையும் கிடாயையும் கொன்று,
அவற்றின் இரத்தத்தை ஆரோனின் புதல்வர் அவரிடத்தில் கொண்டு வந்தனர்.
அவர் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தார். [2]
19 காளையிலும் கிடாயிலுமிருந்து எடுத்த கொழுப்பு வாலையும் குடல்களையும்
சிறுநீரகங்களையும் கல்லீரலின் மேலிருந்த சவ்வையும் கொண்டு வந்து,
20 நெஞ்சுக் கறிகளின்மீது வைத்தார்கள்.
கொழுப்புப் பகுதிகளைப் பலிபீடத்தின்மேல் ஆரோன் சுட்டெரித்தார்.
21 நெஞ்சுக் கறியையும் வலதுமுன்னந்தொடையையும்
மோசே நியமித்தபடி ஆரோன் ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாக அசைத்தார்.


22 பின்னர், ஆரோன் மக்களுக்கு நேராகத் தம் கைகளை உயர்த்தி
அவர்களுக்கு ஆசி வழங்கினார்;
தாம் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும்
நல்லுறவுப் பலிகளையும் செலுத்திய பின் கீழே இறங்கினார். [3]
23 மோசேயும் ஆரோனும் சந்திப்புக் கூடாரத்தினுள் நுழைந்தனர்;
பின்னர் வெளியே வந்து மக்களுக்கு ஆசி வழங்கினர்.
அப்போது ஆண்டவருடைய மாட்சி மக்கள் அனைவருக்கும் தோன்றியது.
24 ஆண்டவர் முன்னிலையிலிருந்து நெருப்பு புறப்பட்டு வந்து,
பலிபீடத்தின் மேலிருந்த எரிபலியையும் கொழுப்பையும் விழுங்கியது.
மக்கள் அதைக் கண்டு ஆரவாரம் செய்து முகங்குப்புற விழுந்தனர்.


குறிப்புகள்

[1] 9:7 = எபி 7:27.
[2] 9:18 = லேவி 3:1-11.
[3] 9:22 = எண் 6:22-26.

அதிகாரம் 10[தொகு]

நாதாபு, அபிகூ ஆகியோரின் பாவம்[தொகு]


1 ஆரோனின் புதல்வர்களான நாதாபும் அபிகூவும்
தம் தூபக் கலசத்தை எடுத்து அதில் நெருப்பையும் தூபத்தையும் இட்டு
ஆண்டவர் கட்டளைக்கு எதிராக நெருப்பைக் கொண்டு சென்றனர்.
2 உடனே, ஆண்டவரிடமிருந்து நெருப்பு விரைந்தெழுந்து அவர்களை விழுங்கியது.
அவர்கள் ஆண்டவர் முன்னிலையிலேயே மடிந்தனர்.
3 அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி,
"'என்னை அணுகிவருவோர்மூலம் என் தூய்மையை வெளிப்படுத்துவேன்.
எல்லா மக்களுக்கும் முன்பாக நான் மாட்சியுறுவேன்' என
ஆண்டவர் உரைத்ததன் பொருள் இதுதான்" என்றார்.
ஆரோன் மௌனமாயிருந்தார்.


4 மோசே, ஆரோனின் சிற்றப்பனாகிய
உசியேலின் புதல்வராகிய மிசாவேலையும், எல்சாபானையும் அழைத்து,
"நீங்கள் இங்கே வந்து உங்கள் சகோதரரின் சடலங்களைத்
தூயகத்தின் முன்னின்று எடுத்துப் பாளையத்திற்கு வெளியே கொண்டு போங்கள்" என்றார்.
5 மோசே சொன்னபடியே அவர்கள் சென்று
அவர்கள் சடலங்களை அவர்கள் உடைகளோடும் எடுத்துப்
பாளையத்திற்கு வெளியே கொண்டு போனார்கள்.


6 மோசே, ஆரோனையும் எலயாசர், இத்தாமர் என்னும் அவர் புதல்வரையும் நோக்கி,
"நீங்கள் உங்கள் தலைமுடியைக் கலைத்துக் கொள்ளவும்,
ஆடைகளைக் கிழித்துக் கொள்ளவும் வேண்டாம்.
அப்படிச் செய்தால் நீங்கள் சாவீர்கள்.
மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் எதிராக அவரது சினம் மூளும்.
உங்கள் சகோதரராகிய இஸ்ரயேல் குடும்பத்தார் யாவரும்
ஆண்டவர் மூட்டிய இந்த நெருப்பை முன்னிட்டுப் புலம்புவார்கள்.
7 நீங்கள் அழியாதபடி,
சந்திப்புக் கூடார நுழைவாயிலிலிருந்து எங்கும் செல்லாதீர்கள்.
ஆண்டவரது அருள்பொழிவு உங்கள்மீது இருக்கிறதே!" என்றார்.
அவர்கள் மோசேயின் வார்த்தையின்படியே செய்தார்கள்.

குருக்களுக்கான ஒழுங்கு முறைகள்[தொகு]


8 ஆண்டவர் ஆரோனிடம் கூறியது:
9 "நீரும் உம்மோடு உம் புதல்வரும் சாகாதிருக்க வேண்டுமெனில்,
நீங்கள் சந்திப்புக்கூடாரத்திற்குள் நுழையும்போது
திராட்சை இரசத்தையோ மதுவையோ குடிக்க வேண்டாம்.
இது உங்கள் தலைமுறைதோறும் மாறாத நியமமாக விளங்கும்.
10 தூயதற்கும் தூய்மையற்றதற்கும்,
தீட்டுள்ளதற்கும் தீட்டற்றதற்கும் வேறுபாடு தோன்றும்படி,
11 ஆண்டவர் மோசேயைக் கொண்டு
இஸ்ரயேல் மக்களுக்குக் கூறி அறிவித்த அவருடைய எல்லாச் சட்டங்களையும்
நீங்கள் மக்களுக்குப் போதிக்கும்படி இது என்றுமுள நியமமாக விளங்கும்".


12 மோசே ஆரோன், அவருடைய எஞ்சிய புதல்வர்களாகிய
எலயாசர், இத்தாமர் ஆகியோரிடம் கூறியது:
நீங்கள் ஆண்டவரின் நெருப்புப் பலிகளில் எஞ்சிய உணவுப் படையலை எடுத்துப்
பலிபீடத்தருகில் புளிப்பற்றதாய் உண்ணவேண்டும். அது மிகவும் தூயது.
13 அதைத் தூய இடத்தில் உண்ண வேண்டும்.
ஏனெனில் அது ஆண்டவரின் நெருப்புப் பலிகளில்
உமக்கும் உம் புதல்வருக்கும் உரிய பங்காகும்.
இதுவே நான் பெற்ற கட்டளை. [1]
14 ஆரத்திப் பலியான நெஞ்சுக் கறியையும்
உயர்த்திப் படைக்கும் பலியான முன்னந் தொடையையும்
நீரும் உம்மோடு உம் புதல்வரும் புதல்வியரும்
ஒரு தூய்மையான இடத்தில் வைத்து உண்பீர்கள்.
இஸ்ரயேல் மக்களின் நல்லுறவுப் பலிகளில்
இவை உமக்கும் உம் புதல்வருக்கும் புதல்வியருக்கும் உரிய பங்காகும்.
15 உயர்த்திப் படைக்கும் பலிப்பொருளான முன்னந்தொடையையும்
ஆரத்திப் பலிப்பொருளான நெஞ்சுக்கறியையும்
நெருப்புப் பலிப்பொருளான கொழுப்பையும்
ஆண்டவர் திருமுன் அவர்கள் கொண்டுவந்து
ஆரத்திப் பலியாக அசைவாட்டுவார்கள்.
அது ஆண்டவரின் கட்டளைப்படியே உமக்கும்
உம் புதல்வருக்கும் மாறாத நியமமாக விளங்கும்." [2]


16 இதற்கிடையில்,
மோசே பாவம் போக்கும் பலிப்பொருளான ஆட்டுக்கிடாயைத் தேடிப்பார்த்தார்.
அது எரித்தழிக்கப்பட்டிருந்தது.
எனவே மோசே ஆரோனின் எஞ்சியிருந்த புதல்வராகிய
எலயாசர், இத்தாமர் மீது கடும் சினமுற்றுச் சொன்னது:
17 நீங்கள் பாவம் போக்கும் பலியைத்
தூய தலத்தில் ஏன் உண்ணவில்லை?
அது மிகவும் தூயதன்றோ?
மக்கள் கூட்டமைப்பின் குற்றப்பழியை ஏற்றுக்கொண்டு
நீங்கள் ஆண்டவர் திருமுன் அவர்களுக்குக் கறை நீக்கம் செய்ய
ஆண்டவர் அதை உங்களுக்குக் கொடுத்தார். [3]
18 அதன் இரத்தம் தூயகத்திற்குள் கொண்டுபோகப்படவில்லை.
ஆகையால் நீங்கள் அதை நான் கட்டளையிட்டபடி
தூயகத்திலேயே உண்டிருக்க வேண்டும்!


19 உடனே ஆரோன், மோசேயை நோக்கி,
"ஆண்டவர் திருமுன் பாவம் போக்கும் பலியும்
எரிபலியும் செலுத்தப்பட்ட இன்றுதானே எனக்கு இப்படி நடந்தது!
எனக்கு நேரிட்ட துன்பம் உமக்குத் தெரியாதா?
நான் பாவம் போக்கும் பலியை இன்று உண்டிருந்தால்
அது ஆண்டவரின் பார்வைக்கு உகந்ததாய் இருக்குமோ?" என்றார்.
20 மோசே இதைக்கேட்டு அமைதியடைந்தார்.


குறிப்புகள்

[1] 10:12-13 = லேவி 6:14-18.
[2] 10:14-15 = லேவி 7:30-34.
[3] 10:17 = லேவி 6:24-26.


(தொடர்ச்சி): லேவியர்: அதிகாரங்கள் 11 முதல் 12 வரை