உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/உரோமையர்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
"கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ள உரோமை நகர மக்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனாக அழைப்புப் பெற்றவனும் கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கி வைக்கப்பட்டவனுமாகிய பவுல் எழுதுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!"- உரோமையர் 1:1,7

பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் (Romans) [1]

[தொகு]

முன்னுரை

விவிலியத்தில் உள்ள ஆழமான இறையியல் பகுதியாக விளங்குவது உரோமையர் திருமுகமாகும். தூய பவுல் எழுதிய போதனையின் சுருக்கம் இந்நூலில் அடங்கியுள்ளது எனலாம். இத்திருமுகக் கருத்துக்களின் அடிப்படையில் திருச்சபையின் இறையியல் கோட்பாடுகள் பல வடிவங்களில் வளர்ச்சியடைந்துள்ளன.

இதனைத் தூய பவுல் கைப்பட எழுதவில்லை; மாறாக 16:22இல் காண்கிறபடி தெர்த்தியு என்பவரை எழுத்தாளராகக் கொண்டு எழுதியுள்ளார்.

சூழலும் நோக்கமும்

[தொகு]

தூய பவுல் இத்திருமுகத்தை எழுதும்போது உரோமைக்குச் சென்றிருக்கவில்லை. எனினும் அக்காலத்தில் திருச்சபை அங்கே வேரூன்றியிருந்தது. வேறு பல நற்செய்தியாளர்கள் அங்குச் சென்று மறைப்பணி புரிந்திருந்தனர். அது உரோமைப் பேரரசின் தலைநகராக இருந்ததால், பல நாடுகளிலிருந்து கிறிஸ்தவர்கள் அங்குப் போய் வாழ்ந்து வந்தனர். இந்த உரோமைச் சபையைச் சந்திக்க விழைந்தார் பவுல். ஸ்பெயின் நாடு போகும் வழியில் உரோமக் கிறிஸ்தவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டார் (15:28). மாசிதோனியா, அக்காயா ஆகிய நாடுகளிலிருந்து இறைமக்கள் கொடுத்த காணிக்கையை எருசலேம் கொண்டு போகுமுன் கொரிந்து நகரிலிருந்து இத்திருமுகத்தை அவர் 57-58 காலக் கட்டத்தில் வரைந்திருக்க வேண்டும்.

பவுல் இத்திருமுகத்தை எழுதுமுன் கலாத்தியருக்கு ஒரு திருமுகத்தை எழுதியிருந்தார். நம்பிக்கையினால் இறைவனுக்கு ஏற்புடைமை ஆதல் குறித்து அத்திருமுகத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்க வேண்டும். அத்துடன் செயல்கள், சட்டங்கள் ஆகியவற்றைவிட நம்பிக்கையே மேலானது என்னும் பவுலின் போதனையும் கரும் எதிர்ப்புக்குள்ளாகியது. சிலர் தவறான கருத்துக்களை உரோமையிலும் பரப்பி, செயல்கள் மற்றும் சட்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க முனைந்தனர். யூத மறைக்கெதிரான பல தவறான கருத்துக்களைப் பவுல் பரப்பிக் குழப்பம் ஏற்படுத்துவதாகக் கூறினர். எனவே பவுல் இத்திருமுகத்தை எழுதுகிறார். தம்முடைய போதனையைக் குறித்தும் தம் திருத்தூதுப் பணியைக் குறித்தும் தெளிவான கண்ணோட்டத்தை உரோமைக் கிறிஸ்தவர் பெறவேண்டும்; தாம் அவர்களைச் சந்திக்குமுன் அவர்கள் தம்மைப் பற்றிய தவறான கருத்துக்களைக் கைவிட வேண்டும் என்றெல்லாம் எண்ணி அவர் இத்திருமுகத்தை எழுதியதாகத் தெரிகிறது.

எருசலேம் மக்களுக்கான நன்கொடையை நேரில் சென்று கொடுக்குமுன் தம்மையும் தாம் திரட்டிய கொடையையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும்பட் (15:31), அவர்களைத் தயாரிப்பதும் இத்திருமுகத்தின் சில பகுதிகளின் (குறிப்பாக அதி 9-11) நோக்கமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

உள்ளடக்கம்

[தொகு]

இத்திருமுகத்தின் அதி 1-11 வரையிலான பகுதியில் ஆழமான இறையியல் கொள்கைகள் காணப்படுகின்றன.

1:17இல் பவுல் திருமுகத்தின் மையக் கருத்தை முன் வைக்கிறார்; நம்பிக்கையினால் இறைவனுக்கு ஏற்புடையவரே வாழ்வு பெறுவர் என்கிறார்.

தொடர்ந்து இக்கருத்து விளக்கம் பெறுகிறது. யூதர்கள் என்றாலும் பிற இனத்தவர்கள் என்றாலும் அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாதவர்களே. மனித குலம் முழுவதுமே பாவத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனவே எல்லாருக்கும் மீட்பு தேவை. இந்த மீட்பு இயேசு மீது நம்பிக்கை கொள்வதால் வருகிறது. திருச்சட்டத்தினாலோ, விருத்தசேதனத்தினாலோ இது வருவதில்லை.

தொடர்ந்து, புதுவாழ்வு பற்றிப் பேசும் பவுல் அதை ஆவிக்குரிய வாழ்வு என்கிறார். ஏனெனில் தூய ஆவியால் நம்பிக்கை கொள்வோர் பாவம், சாவு ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுதலை பெறுகின்றனர்.

9-11 அதிகாரங்களில் யூதர்களைப் பற்றிப் பேசுகிறார் பவுல். யூதர்கள் கிறிஸ்துவைப் புறக்கணித்தது கடவுளின் திட்டப்படி மனிதகுலம் முழுவதும் கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுளின் அருளைப் பெறவே என்றும், பிற இனத்தார் இப்போது மனம் மாறியிருப்பது யூதர்களிடையே போட்டி மனப்பான்மையை வளர்க்கவே என்றும், கடவுள் யூதர்களுக்குக் கொடுத்த வாக்கு மாறுவதில்லை என்பதால் யூதர்கள் ஒருநாள் மனம் மாறுவர் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

12 முதல் 15 வரையுள்ள அதிகாரங்களில் நடைமுறை ஒழுங்குகள் தரப்பட்டுள்ளன. உரோமைத் திருச்சபையில் யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்துக் கிறிஸ்தவர்களும் இருந்ததை மனத்தில் கொண்டு, அவர்கள் அன்புடன் கிறிஸ்தவ நெறிப்படி வாழும் முறைகுறித்துப் பவுல் பேசுகிறார்.

16ஆம் அதிகாரம்

சில கையெழுத்துப் படிகளில் 15:1-16:24 வரையுள்ள பகுதி நீக்கப்பட்டு, 16:25-27இல் உள்ள இறுதி வாழ்த்து 14ஆம் அதிகாரத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே 15 மற்றும் 16ஆம் அதிகாரம் வேறு ஒருவரால் எழுதப்பட்டது என்பர் சிலர். இருப்பினும் 15ஆம் அதிகாரம் கருத்தின் அடிப்படையில் முன்னைய அதிகாரங்களுடன் ஒத்துப்போகிறது.

16ஆம் அதிகாரத்தில் 26 பேரைப் பவுல் வாழ்த்துகிறார். இவர்கள் பவுல் சென்றிராத உரோமைச் சபையின் உறுப்பினர்களாக இருக்க முடியாது; எபேசில் பணிபுரிந்தவர்களாக இருக்க வேண்டும். இவ்வதிகாரம் இத்திருமுகத்தை எடுத்துச்சென்ற பெய்பா, செல்லும் வழியில், எபேசிலிருந்த பணியாளர்களிடம் கொடுக்க வேண்டிய வாழ்த்து மடலாக இருக்கலாம். அது காலப்போக்கில் உரோமையர் திருமுகத்துடனே இணைக்கப்பெற்றிருக்க வேண்டும்.

உரோமையர்

[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை (வாழ்த்து, நன்றியும் மன்றாட்டும்) 1:1-17 274 - 275
2. மனிதருக்கு மீட்பு தேவை 1:18 - 3:20 275 - 278
3. கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் முறை 3:21 - 4:25 278 - 280
4. கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் புது வாழ்வு 5:1 - 8:39 280 - 286
5. கடவுளின் மீட்புத் திட்டத்தில் இஸ்ரயேலர் 9:1 - 11:36 286 - 292
6. கிறிஸ்தவ வாழ்வு 12:1 - 15:13 292 - 297
7. முடிவுரையும் வாழ்த்தும் 15:14 - 16:27 297 - 299

உரோமையர் (Romans)

[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1

[தொகு]

1. முன்னுரை

[தொகு]

வாழ்த்து

[தொகு]


1,7 கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ள
உரோமை நகர மக்கள் அனைவருக்கும்
இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனாக அழைப்புப் பெற்றவனும்
கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கி வைக்கப்பட்டவனுமாகிய பவுல் எழுதுவது:


நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும்
ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும்
உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! [1]


2 நற்செய்தியைத் தருவதாகக் கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக
ஏற்கெனவே திருமறை நூலில் வாக்களித்திருந்தார்.
3 இந்த நற்செய்தி அவருடைய மகனைப்பற்றியதாகும்.
இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்;
4 தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன்.
இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது.
இவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.
5 பிற இனத்தார் அனைவரும் இவர்மீது நம்பிக்கை கொண்டு
இவருக்குக் கீழ்ப்படியுமாறு
இவர் பெயர் விளங்க
இவர் வழியாகவே நாங்கள் திருத்தூதுப்பணி செய்வதற்குரிய
அருளைப் பெற்றுக்கொண்டோம்.


6 பிற இனத்தவராகிய நீங்களும் இயேசுகிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க
அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள்.

நன்றியும் மன்றாட்டும்

[தொகு]


8 முதற்கண் உங்கள் அனைவருக்காகவும் நான் இயேசு கிறிஸ்து வழியாய்
என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.
ஏனெனில் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை உலக முழுவதிலும் தெரிந்திருக்கிறது.
9 தம் திருமகனைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் பணியின் மூலம்
நான் உளமார வழிபட்டுவரும் கடவுள் சாட்சியாய்ச் சொல்கிறேன்:
உங்களை நினைவுகூர்ந்து,
10 உங்களுக்காக எப்போதும் இறைவனிடம் வேண்டி வருகிறேன்.
கடவுளின் திருவுளத்தால் நான் உங்களிடம் வருவதற்கு
இப்பொழுதாவது இறுதியாக ஒரு வாய்ப்புக் கிடைக்க வேண்டுமென
மன்றாடி வருகிறேன்.
11 நான் உங்களைக் காண ஏங்குகிறேன்;
அங்கே வந்து உங்களை உறுதிப்படுத்துவதற்காக
ஆவிக்குரிய கொடை ஏதேனும் உங்களுக்கு வழங்க வேண்டுமென விழைகிறேன்.
12 நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையால் நானும்,
நான் கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்களும்
ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டப் பெறவேண்டுமென விழைகிறேன்.


13 பிற மக்களிடையே நான் செய்த பணியால் பயன்விளைந்தது.
அதுபோல உங்களிடையேயும் சிறிதளவாவது பயன்விளையும் முறையில்
பணியாற்ற விரும்பி உங்களிடம் வர பன்முறை திட்டமிட்டேன்;
ஆயினும் இன்று வரை தடைகள் வந்து கொண்டே இருக்கின்றன.
சகோதர சகோதரிகளே, இதை நீங்கள் அறியவேண்டுமென விரும்புகிறேன். [2]
14 கிரேக்கருக்கும் கிரேக்கரல்லாதார்க்கும்,
அறிவாளிகளுக்கும் அறிவிலிகளுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
15 ஆதலால்தான் உரோமையராகிய உங்களுக்கும்
நற்செய்தி அறிவிக்கவேண்டுமென நான் ஆர்வம் கொண்டுள்ளேன்.

நற்செய்தியின் ஆற்றல்

[தொகு]


16 நற்செய்தியை முன்னிட்டு வெட்கப்படமாட்டேன்;
ஏனெனில், அதுவே கடவுளின் மீட்பளிக்கும் வல்லமை.
முதலில் யூதருக்கும், அடுத்துக் கிரேக்கருக்கும் -
அதாவது நற்செய்தியை நம்பும் ஒவ்வொருவருக்கும் - அந்த மீட்பு உண்டு. [3]
17 ஏனெனில் "நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வு அடைவர்" என
மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா!
இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுளின் செயல்
நற்செய்தியில் வெளிப்படுகிறது.
தொடக்கமுதல் இறுதிவரை இந்தச் செயல்
நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிகழ்கிறது. [4]

2. மனிதருக்கு மீட்பு தேவை

[தொகு]

மனிதர் அனைவரும் குற்றவாளிகள்

[தொகு]


18 இறைப்பற்று இல்லா மனிதர்களின் எல்லா வகையான நெறிகேடுகளின் மீதும்
கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகிறது;
ஏனெனில், இவர்கள் தங்கள் நெறிகேட்டினால் உண்மையை ஒடுக்கிவிடுகின்றார்கள். [5]
19 கடவுளைப் பற்றி அறியக்கூடியதெல்லாம் அவர்களுக்குத் தெளிவாக விளங்கிற்று;
அதைக் கடவுளே அவர்களுக்குத் தெளிவுறுத்தியிருக்கிறார்.
20 ஏனெனில் கண்ணுக்குப் புலப்படா அவருடைய பண்புகள் -
அதாவது, என்றும் நிலைக்கும் அவரது வல்லமையும் கடவுள் தன்மையும் -
உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில்
மனக் கண்களுக்கு தெளிவாய்த் தெரிகின்றன.
ஆகவே அவர்கள் சாக்குப்போக்கு சொல்வதற்கு வழியே இல்லை.
21 ஏனெனில், அவர்கள் கடவுளை அறிந்திருந்தும்
கடவுளுக்குரிய மாட்சியை அவருக்கு அளிக்கவில்லை;
நன்றி செலுத்தவுமில்லை.
அதற்கு மாறாக அவர்கள் எண்ணங்கள் பயனற்றவையாயின.
உணர்வற்ற அவர்களது உள்ளம் இருண்டு போயிற்று. [6]
22 தாங்கள் ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளும் அவர்கள் மடையர்களே.
23 அழிவில்லாக் கடவுளை வழிபடுவதற்குப் பதிலாக
அழிந்துபோகும் மனிதரைப்போலவும்,
பறப்பன, நடப்பன, ஊர்வன ஆகியவற்றைப் போலவும் உள்ள உருவங்களை வழிபட்டனர். [7]


24 ஆகவே, அவர்களுடைய உள்ளத்தின் இச்சைகளுக்கு ஏற்ப
ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்துகின்ற
ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டார்.
25 அவர்கள் கடவுளைப் பற்றிய உண்மைக்குப் பதிலாகப்
பொய்ம்மையை ஏற்றுக் கொண்டார்கள்;
படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்குப் பணி செய்தார்கள்;
படைத்தவரை மறந்தார்கள்;
அவரே என்றென்றும் போற்றுததற்குரியவர். ஆமென்.
26 ஆகையால் கடவுள்,
கட்டுக்கடங்காத இழிவான பாலுணர்வுகொள்ள அவர்களை விட்டு விட்டார்.
அதன் விளைவாக, அவர்களுடைய பெண்கள்
இயல்பான இன்ப முறைக்குப் பதிலாக
இயல்புக்கு மாறான முறையில் நடந்துகொண்டார்கள்.
27 அவ்வாறே ஆண்களும்
பெண்களோடு சேர்ந்து இன்பம் பெறும் இயல்பான முறையைவிட்டு
தங்களிடையே ஒருவர்மீது ஒருவர் வேட்கை கொண்டு
காமத்தீயால் பற்றி எரிந்தார்கள்.
ஆண்கள் ஆண்களுடன் வெட்கத்திற்குரிய செயல்களைச் செய்து,
தாங்கள் நெறி தவறியதற்கான கூலியைத் தங்கள் உடலில் பெற்றுக்கொண்டார்கள்.


28 கடவுளை அறிந்து ஏற்றுக் கொள்ளும் தகுதியை அவர்கள் இழந்து விட்டதால்
சீர்கெட்ட சிந்தனையின் விளைவாகத் தகாத செயல்களைச் செய்யுமாறு
கடவுள் அவர்களை விட்டு விட்டார்.
29 இவ்வாறு, அவர்கள் எல்லா வகை நெறிகேடுகளும்,
பொல்லாங்கு, பேராசை, தீமை ஆகியவையும் நிறைந்தவர்களானார்கள்.
அவர்களிடம் பொறாமை, கொலை, சண்டைச் சச்சரவு,
வஞ்சகம், தீவினை முதலியவை மலிந்துவிட்டன.
அவர்கள் புறங்கூறுபவர்கள்,
30 அவதூறு பேசுபவர்கள், கடவுளை வெறுப்பவர்கள், இழித்துரைப்பவர்கள்,
செருக்குற்றவர்கள், வீம்பு பாராட்டுபவர்கள்,
தீய வழிகளைக் கண்டுபிடிப்பவர்கள், பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்கள்;
31 சொல் தவறுபவர்கள், மதிகெட்டவர்கள்,
பாசம் அற்றவர்கள், இரக்கம் இல்லாதவர்கள்.
32 இப்படியெல்லாம் நடப்பவர்கள் சாவுக்குரியவர்கள்
என்னும் கடவுளின் ஒழுங்கை அறிந்திருந்தும் இவ்வாறு நடக்கின்றார்கள்;
தாங்கள் நடப்பது மட்டுமன்று, அப்படி நடப்பவர்களையும் பாராட்டுகிறார்கள்.


குறிப்புகள்

[1] 1:1 = திப 26:16-18.
[2] 1:13 = திப 19:21.
[3] 1:16 = மாற் 8:38.
[4] 1:17 = அப 2:4; கலா 3:11; எபி 10:38.
[5] 1:18 = எபே 5:6; கொலோ 3:6.
[6] 1:21 = எபே 4:17,18.
[7] 1:23 = இச 4:16-18; திபா 106:20; திப 17:29.

அதிகாரம் 2

[தொகு]

நடுநிலை தவறாத கடவுளின் தீர்ப்பு

[தொகு]


1 ஆகையால், பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிப்போரே,
நீங்கள் யாராயினும், சாக்குப் போக்குச்சொல்வதற்கு உங்களுக்கு வழியில்லை.
ஏனெனில் பிறருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும் போது
நீங்கள் உங்களுக்கே தண்டனைத் தீர்ப்பை அளிக்கிறீர்கள்.
தீர்ப்பளிக்கும் நீங்களே அந்தத் தீர்ப்பைப் பெறுவதற்கான செயல்களைச் செய்கிறீர்களே! [1]
2 இத்தகையவற்றைச் செய்வோருக்குக் கடவுள் அளிக்கும் தீர்ப்பு
நீதி வழுவாதது என்பது நமக்குத் தெரியும்.
3 இவற்றைச் செய்வோர் மேல் தீர்ப்பளிக்கும் நீங்களும்
இவற்றையே செய்து வருகிறீர்கள்!
நீங்கள் மட்டும் கடவுளின் தீர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறீர்களா?
4 அல்லது, அவரது அளவற்ற பரிவையும் சகிப்புத்தன்மையையும்
பொறுமையையும் ஏளனம் செய்கிறீர்களா?
உங்களை மனம்மாறச் செய்வதற்கே கடவுள் பரிவுகாட்டுகிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா?
5 உங்கள் கடின உள்ளம் உங்களை மனம் மாற விடவில்லை;
ஆகையால் கடவுளின் சினமும் நீதித் தீர்ப்பும் வெளிப்பட வேண்டிய நாளில்
உங்களுக்கு வரப்போகும் தண்டனையைச் சேமித்து வைக்கிறீர்கள்.
6 ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார். [2]
7 மனஉறுதியோடு நற்செயல் புரிந்து
மாட்சி, மாண்பு, அழியாமை ஆகியவற்றை நாடுவோருக்கு
அவர் நிலைவாழ்வை வழங்குவார்.
8 ஆனால், தன்னலம் நாடுபவர்களாய் உண்மைக்குப் பணியாமல்,
அநீதிக்குப் பணிபவர்களின் தலைமேல் அவருடைய சினமும் சீற்றமும் வந்து விழும்.
9 முதலில் யூதருக்கும் பிறகு கிரேக்கருக்கும் அதாவது,
தீமை செய்யும் எல்லா மனிதருக்குமே வேதனையும் நெருக்கடியும் உண்டாகும்.
10 அவ்வாறே, முதலில் யூதருக்கும் அடுத்துக் கிரேக்கருக்கும் அதாவது,
நன்மை செய்யும் அனைவருக்குமே பெருமையும் மாண்பும் அமைதியும் கிடைக்கும்.
11 ஏனெனில் கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை. [3]


12 திருச்சட்டத்தை அறியாமல் பாவம் செய்யும் எவரும்,
அந்தச் சட்டத்தின் தீர்ப்புக்கு உட்படாமலேயே அழிவுறுவர்;
திருச்சட்டத்துக்கு உட்பட்டு எவரும் பாவம் செய்தால்,
அச்சட்டத்தாலே தீர்ப்பளிக்கப்படுவர்.
13 ஏனெனில், திருச்சட்டத்தைக் கேட்பதால் மட்டும்
யாரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை;
அதனைக் கடைப்பிடிப்பவர்களே அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
14 திருச்சட்டத்தைப் பெற்றிராத பிற இனத்தார்
அதில் உள்ள கட்டளைகளை இயல்பாகக் கடைப்பிடிக்கும்போது,
அவர்களுக்குத் திருச்சட்டம் இல்லாத போதிலும்
தங்களுக்குத் தாங்களே அவர்கள் சட்டமாய் அமைகிறார்கள்.
15 திருச்சட்டம் கற்பிக்கும் ஒழுக்கநெறி
தங்கள் உள்ளத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை
அவர்கள் தங்கள் நடத்தையில் காட்டுகிறார்கள்.
அவர்களது மனச்சான்றே இதற்குச் சாட்சி.
ஏனெனில் அவர்கள் செய்வது குற்றமா குற்றமில்லையா என
அவரவர் எண்ணங்களே வெளிப்படுத்துகின்றன.
16 நான் அறிவிக்கும் நற்செய்தியின்படி,
மனிதர் உள்ளங்களில் மறைந்திருப்பவற்றைக் குறித்து
இயேசு கிறிஸ்துவின் வாயிலாய்க் கடவுள் தீர்ப்பளிக்கும் நாளில்
மேற்சொன்னவை நிகழும். [4]

திருச்சட்டத்தால் யூதர்களுக்கும் பயனில்லை

[தொகு]


17 யூதர் என்னும் பெயரைத் தாங்கித்
திருச்சட்டத்தின் அடிப்படையில் வாழும் நீங்கள்
கடவுளோடு கொண்டுள்ள உறவைப்பற்றிப் பெருமைப்படுகிறீர்கள்;
18 அவருடைய திருவுளத்தை அறிந்திருக்கிறீர்கள்;
திருச்சட்டத்தைக் கற்றறிந்துள்ளதால் எது சிறந்தது எனச் சோதித்து அறிகிறீர்கள்.
19-20 அறிவையும் உண்மையும் தன்னகத்தே கொண்டுள்ள திருச்சட்டம்
உங்களிடம் இருக்கிறது என்னும் உறுதியான நம்பிக்கையில்
பார்வையற்றோருக்கு வழிகாட்டியாகவும்,
இருளில் இருப்போர்க்கு ஒளியாகவும்,
அறிவிலிகளுக்குக் கல்வி புகட்டுபவராகவும்
குழந்தைகளுக்கு ஆசிரியராகவும் இருக்க முற்படுகிறீர்கள்.
21 ஆனால் பிறருக்குக் கற்றுக்கொடுக்கும் நீங்களே கற்றுக் கொள்ளவில்லையே!
திருடாதே எனப்பறைசாற்றுகிறீர்கள்; நீங்களே திருடுவதில்லையா?
22 விபசாரம் செய்யாதே எனச் சொல்கிறீர்கள்; நீங்களே விபசாரம் செய்வதில்லையா?
தெய்வச் சிலைகளைத் தீட்டாகக் கருதுகிறீர்கள்;
நீங்களே அவற்றின் கோவில்களைக் கொள்ளையிடுவதில்லையா?
23 திருச்சட்டத்தைப் பற்றிப் பெருமைப்படுகிறீர்கள்;
நீங்களே அச்சட்டத்தை மீறிக் கடவுளை இழிவுபடுத்துவதில்லையா?
24 ஆம், மறைநூலில் எழுதியுள்ளவாறு
"உங்களால் கடவுளின் பெயர் பிற இனத்தாரிடையே இகழப்படுகின்றது." [5]


25 நீங்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தால்
விருத்தசேதனத்தால் உங்களுக்கு பயனுண்டு;
ஆனால் திருச்சட்டத்தை மீறினால்
நீங்கள் விருத்தசேதனம் பெற்றிருந்தும் பெறாதவர்களாகவே இருக்கிறீர்கள்.
26 ஆகையால், விருத்தசேதனம் செய்துகொள்ளாத ஒருவர்
திருச்சட்டத்தின் ஒழுங்குகளைக் கடைப்பிடித்தால்,
விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டாலும்
விருத்தசேதனம் செய்து கொண்டவராக அவர் கருதப்படலாம் அல்லவா?
27 உடலில் விருத்தசேதனம் செய்யாதிருந்தும் திருச்சட்டத்தை நிறைவேற்றுவோர்,
எழுதிய சட்டத்தையும் விருத்தசேதனத்தையும் பெற்றிருந்தும்
அச்சட்டத்தை மீறும் நீங்கள் குற்றவாளிகளெனத் தீர்ப்பு அளிப்பர்.
28 ஏனெனில், புறத் தோற்றத்தில் மட்டும் யூதராய் இருப்பவர் யூதரல்ல;
அவ்வாறே, புறத்தோற்றத்தில்,
அதாவது உடலில் மட்டும் செய்யப்படும் விருத்தசேதனமும்
விருத்தசேதனம் அல்ல.
29 ஆனால் அகத்தில் யூதராய் இருப்பவரே உண்மையான யூதர்,
உள்ளத்தில் செய்யப்படும் விருத்தசேதனமே உண்மையான விருத்தசேதனம்.
அது எழுதிய சட்டத்தின்படி செய்யப்படுவது அல்ல,
தூய ஆவியால் செய்யப்படுவதாகும்.
அத்தகையவர் மனிதரிடமிருந்து அல்ல,
கடவுளிடமிருந்தே பாராட்டுப் பெறுவர். [6]


குறிப்புகள்

[1] 2:1 = மத் 7:1; லூக் 6:37.
[2] 2:6 = திபா 62:12; நீமொ 24:12.
[3] 2:11 = இச 10:17.
[4] 2:16 = 1 கொரி 4:5.
[5] 2:24 = எசா 52:5.
[6] 2:29 = இச 30:6; பிலி 3:3; கொலோ 2:11.


(தொடர்ச்சி):உரோமையர்: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை