திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/உரோமையர்/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஆகவே கடவுளின் அருள்செயலால் நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையாயிற்று. இவ்வாறு வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எல்லாருக்கும் - திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு மட்டுமல்ல, அவரைப்போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும் - உரியது என்பது உறுதியாயிற்று. ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை. ஏனெனில் 'எண்ணற்ற மக்களினங்களுக்கு உம்மை நான் தந்தையாக்குகிறேன்' என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆம், இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள் மீது நம்பிக்கை கொண்டு அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார்."- உரோமையர் 4:16-17

உரோமையர் (Romans)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]


1 அப்படியானால், மற்றவர்களை விட யூதர்கள் பெற்றுள்ள சிறப்பு என்ன?
விருத்தசேதனத்தால் அவர்களுக்குப் பயன் என்ன?
2 எல்லா வகையிலும் அவர்கள் பெரும்பயன் பெற்றுள்ளார்கள்.
முதலாவது, கடவுளின் வாக்குகள் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன.
3 ஆனால், அவர்களுள் சிலர் அவ்வாக்குகளை நம்பவில்லையே!
அதனாலென்ன? அவர்கள் நம்பாதலால், கடவுள் நம்பத்தகாதவர் ஆகிவிடுவாரா?
4 ஒருபோதுமில்லை.
மனிதர் எல்லாரும் பொய்யர்; கடவுளோ உண்மை உள்ளவர் என்பது தெளிவாகும்.
ஏனெனில்,


"உமது சொற்களில் நீதி வெளிப்படுகிறது;


உம் தண்டனைத் தீர்ப்புகளில்


வெற்றி விளங்குகிறது"


என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ! [1]


5 நீதியற்ற நம் நடத்தையின் மூலம் கடவுளின் நீதி வெளிப்படுமாயின்
நாம் என்ன சொல்வோம்?
கடவுள் சினந்தெழுந்து தண்டித்தால், அவர் நீதியற்றவர் என்போமா? -
இதை நான் மனிதர் பேசும் முறையில் சொல்லுகிறேன் -
6 ஒருபோதும் இல்லை.
கடவுள் நீதியற்றவர் என்றால் எப்படி அவர் உலகிற்குத் தீர்ப்பளிக்க முடியும்?
7 என் பொய்ம்மையின் மூலம் கடவுளின் வாய்மை வெளிப்படுவதோடு
அவரது மாட்சியும் பெருகுமானால்,
இன்னும் நான் பாவி எனத் தீர்ப்பளிக்கப்படுவது ஏன்?
8 அப்படியானால், 'நன்மை விளையும்படி தீமையைச் செய்வோம்' என்று சொல்லலாமா!
நாங்கள் இவ்வாறு கூறுவதாகச் சிலர் எங்கள் மீது வீண்பழி சுமத்துகின்றனர்.
இவர்கள் தகுந்த தண்டனை பெறுவார்கள்.

எல்லாரும் பாவிகள்[தொகு]


9 அப்படியானால், மற்றவர்களைவிட யூதர்களாகிய நாம் மேலானவர்களா?
இல்லவே இல்லை.
ஏனெனில் யூதர், கிரேக்கர் யாவரும்
பாவத்துக்கு உட்பட்டிருப்பதாக ஏற்கெனவே எடுத்துரைத்தாயிற்று.
10 அவ்வாறே மறைநூலிலும் எழுதியுள்ளது:


"நேர்மையாளரே இல்லை, ஒருவர் கூட இல்லை;


11 மதிநுட்பம் உள்ளவர் ஒருவருமில்லை;
கடவுளைத் தேடுபவர் எவராவது உண்டோ?
12 எல்லாரும் நெறிபிறழ்ந்தனர்;
ஒருமிக்கக் கெட்டுப்போயினர்.
நல்லது செய்பவர் யாருமில்லை;
ஒருவர்கூட இல்லை." [2]
13 "அவர்களது தொண்டை திறந்த பிணக்குழி;
அவர்களது நாக்கு வஞ்சகமே பேசும்.
அவர்கள் உதட்டில் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சு." [3]
14 "அவர்கள் வாயில் சாபமும் கொடுமையும் நிறைந்துள்ளது." [4]
15 "இரத்தம் சிந்துவதற்கு அவர்கள் கால்கள் விரைகின்றன;
16 பாழாக்குதலும் அழிவுமே அவர்கள் வழித்தடங்களில் உள்ளன;
17 அமைதி வழியை அவர்கள் அறியார்." [5]


18 "அவர்களது மனக்கண்களில் இறையச்சம் இல்லை." [6]


19 திருச்சட்டம் சொல்வதெல்லாம்
அந்தச் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்குப் பொருந்தும் என நமக்குத் தெரியும்.
ஆகவே இவர்களும் உலக மக்கள் அனைவரும்
சாக்குப்போக்குச் சொல்ல வழியின்றி இருக்கிறார்கள்.
20 ஏனெனில், திருச்சட்டம் சார்ந்த செயல்களால்
எவரும் கடவுள் முன்னிலையில் ஏற்புடையவர் ஆவதில்லை.
மனிதர்கள் பாவிகள் என்பதையே சட்டம் அவர்களுக்கு உணர்த்துகிறது. [7]

3. கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் முறை[தொகு]


21 இப்பொழுதோ கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் செயலுக்கும்
திருச்சட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது வெளியாக்கப்பட்டுள்ளது;
திருச்சட்டமும் இறைவாக்குகளும் இதற்குச் சான்று பகர்கின்றன.
22 இயேசு கிறிஸ்துவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் வழியாகக்
கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்;
நம்பிக்கை கொள்வோர் அனைவரையுமே அவர் ஏற்புடையவராக்குகிறார்.
அவர் வேறுபாடு காட்டுவது இல்லை. [8]
23 ஏனெனில், எல்லாருமே பாவம் செய்து
கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர்.
24 ஆயினும் அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச் செயலின் மூலம்
கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர்.
25 இரத்தம் சிந்தி மனிதருடைய பாவத்துக்குக் கழுவாய் ஆகுமாறு
இயேசுவைக் கடவுள் நியமித்தார்.
அவரிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவே அவ்வாறு செய்தார்.
கடவுள் கடந்த காலத்தில் மனிதர் செய்த பாவங்களைக்
கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்.
இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் முறையை அவர் காட்டினார்.
26 இக்காலத்தில் தமது நீதியைக் கடவுள் பொறுமையோடு காட்டி வருகிறார்.
ஆம், அவர் நீதியுள்ளவர்.
இயேசுவின்மீது நம்பிக்கை கொள்வோரைத் தமக்கு ஏற்புடையவராக்கி வருகிறார்.
27 அப்படியிருக்க, பெருமை பாராட்ட இடமேது? இடமில்லை.
எந்த அடிப்படையில் பெருமைபாராட்ட இடமில்லை?
செயல்களின் அடிப்படையிலா? இல்லை;
நம்பிக்கையின் அடிப்படையில்தான்.
28 ஏனெனில் திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல,
இயேசுவின்மீது வைக்கும் நம்பிக்கையின் வாயிலாகவே
எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும் எனக் கருதுகிறோம்.
29 கடவுள் யூதருக்கு மட்டுமா கடவுள்?
பிற இனத்தாருக்கும் அவர் கடவுள் அல்லவா?
ஆம், பிற இனத்தாருக்கும் அவரே கடவுள்.
30 ஏனெனில் கடவுள் ஒருவரே.
விருத்தசேதனம் பெற்றவர்களாயினும் விருத்தசேதனம் பெறாதவர்களாயினும்,
இயேசுவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில்
யாவரையும் கடவுள் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்.
31 அப்படியானால், நம்பிக்கை தேவை என வலியுறுத்துவதன்மூலம்
திருச்சட்டத்தைச் செல்லாததாக்குகிறோமா? ஒரு போதும் இல்லை.
மாறாக, அவ்வாறு செய்வதன் மூலம் திருச்சட்டத்தை நிலைநாட்டுகிறோம். [9]


குறிப்புகள்

[1] 3:4 = திபா 51:4.
[2] 3:10-12 = திபா 14:1-3; 53:1-3.
[3] 3:13 = திபா 5:9; 140:3.
[4] 3:14 = திபா 10:7.
[5] 3:15-17 = திபா 59:7,8.
[6] 3:18 = திபா 36:1.
[7] 3:20 = திபா 143:2; கலா 2:16.
[8] 3:22 = கலா 2:16.
[9] 3:31 = மத் 5:17; திப 24:14.

அதிகாரம் 4[தொகு]

ஆபிரகாம் ஓர் எடுத்துக்காட்டு[தொகு]


1 அப்படியானால், இதுகாறும் கூறியவை
நம் இனத்தின் தந்தையாகிய ஆபிரகாமுக்கு எப்படிப் பொருந்தும்?
2 தாம் செய்த செயல்களினால் அவர் கடவுளுக்கு ஏற்புடையவராகியிருந்தால்,
பெருமை பாராட்ட அவருக்கு இடமுண்டு;
ஆனால் கடவுள் முன்னிலையில் அவர் அப்படிப் பெருமை பாராட்ட இடமே இல்லை.
3 ஏனெனில், மறைநூல் கூறுவதென்ன?


"ஆபிரகாம் கடவுள் மீது நம்பிக்கை கொண்டார்;
அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்." [1]


4 வேலை செய்தவர் பெறும் கூலி, நன்கொடையாகக் கருதப்படுவதில்லை;
அது அவர்கள் உரிமை.
5 தம் செயல்கள்மீது நம்பிக்கை வையாது,
இறைப்பற்றில்லாதோரையும் தமக்கு ஏற்புடையவராக்கும்
கடவுள்மீது நம்பிக்கை வைப்போரை,
அவரது நம்பிக்கையின் பொருட்டுக் கடவுள் தமக்கு ஏற்புடையோர் எனக் கருகிறார்.
6 அவ்வாறே, கடவுள் ஒருவருடைய செயல்களைக் கணிக்காமலே,
அவரைத் தமக்கு ஏற்புடையவர் எனக் கருதுவதால்
அம்மனிதர் பேறுபெற்றவர் என்று தாவீது கூறியிருக்கிறார்:


7 "எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ,


எவரது பாவம் மறைக்கப்பட்டதோ அவர் பேறுபெற்றவர். [2]
8 ஆண்டவர் எந்த மனிதரின் தீச் செயலைக்


கருத்தில் கொள்ளவில்லையோ அவர் பேறு பெற்றவர்."


9 பேறுபெற்றோர் விருத்தசேதனம் செய்து கொண்டோர் மட்டுமா?
செய்யாதோரும் கூடவா?


"ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்;
அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்"

என்றோமே.


10 அவர் எந்த நிலையில் இருந்தபோது கடவுள் அவ்வாறு கருதினார்?
விருத்தசேனம் செய்துகொண்ட நிலையிலா?
செய்துகொள்ளாத நிலையிலா?
விருத்தசேதனம் செய்துகொண்ட நிலையில் அல்ல;
செய்து கொள்ளாத நிலையில்தான்.
11 விருத்தசேதனம் இல்லாத நிலையிலேயே
அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையில்
கடவுளுக்கு ஏற்புடையவர் என்று கருதப்பட்டார்;
அதை உறுதிப்படுத்தும் அடையாளமாக விருத்தசேதனத்தைப் பெற்றார்.
இவ்வாறு விருத்தசேதனம் இல்லாதிருந்தும்,
கடவுள்மீது நம்பிக்கை கொள்வதால்
அவருக்கு ஏற்புடையவர்களாகக் கருதப்படும் அனைவருக்கும் அவர் தந்தையானார். [3]
12 அதேபோல, விருத்தசேதனம் பெற்றிருந்தும்,
அதுவே போதுமென்றிருந்திடாமல் நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கும்
அவர் தந்தையானார்;
எப்படியெனில், நம் தந்தையாம் ஆபிரகாம்
விருத்தசேதனம் பெறுமுன்பே நம்பிக்கை கொண்டிருந்ததுபோல,
இவர்களும் நம்பிக்கை கொண்டவர்களாய் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறார்கள்.

நம்பினோர்க்கே வாக்குறுதி பயன்தரும்[தொகு]


13 உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி
ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமரபினர்களுக்கோ
திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை;
நம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால்தான்
அவ்வாக்குறுதி கிடைத்தது. [4]
14 ஏனெனில் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்குத்தான்
அந்த உரிமைச் சொத்து கிடைக்கும் எனின்,
நம்பிக்கை கொள்வது பொருளற்றதாகும்;
அந்த வாக்குறுதியும் செல்லாததாகும். [5]
15 திருச்சட்டம் இறைவனின் சினத்தை வருவிக்கிறது.
சட்டம் இல்லையெனில் அதை மீறவும் இயலாது. [6]
16 ஆகவே கடவுளின் அருள்செயலால்
நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையாயிற்று.
இவ்வாறு வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எல்லாருக்கும் -
திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு மட்டுமல்ல,
அவரைப்போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும் -
உரியது என்பது உறுதியாயிற்று.
ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை. [7]
17 ஏனெனில் "எண்ணற்ற மக்களினங்களுக்கு
உம்மை நான் தந்தையாக்குகிறேன்" என்று மறைநூலில் எழுதியுள்ளது.
ஆம், இறந்தவர்களை வாழ்விப்பவரும்
இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய
கடவுள் மீது நம்பிக்கை கொண்டு
அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார். [8]
18 "உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர்" என்றும்
அவருக்குச் சொல்லப்பட்டது.
இக்கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு
இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்;
தயங்காமல் நம்பினார்.
ஆகவே அவர் பல மக்களினங்களுக்குத் தந்தையானார். [9]
19 தமக்கு ஏறத்தாழ நூறு வயது ஆகிவிட்டதால்
தமது உடலும் சாராவுடைய கருப்பையும் செத்தவைபோல்
ஆற்றலற்றுப் போய்விட்டதை எண்ணிப் பார்த்தபோதுகூட,
அவர் நம்பிக்கையில் உறுதி தளரவில்லை; [10]
20 கடவுளின் வாக்குறுதியைப் பற்றி ஐயப்படவே இல்லை;
நம்பிக்கையில் அவர் மேலும் வலுப் பெற்றார்;
கடவுளைப் பெருமைப்படுத்தினார்.
21 தாம் வாக்களித்ததைக் கடவுள் செய்ய வல்லவர் என்பதை
அவர் உறுதியாய் அறிந்திருந்தார்.
22 ஆகவே "அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்."


23 "நீதியாகக் கருதினார்" என்று எழுதியுள்ளது அவரைமட்டும் குறிக்கவில்லை;
24 நம்மையும் குறிக்கின்றது;
இறந்த நம் ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்தவர்மீது
நம்பிக்கை கொண்டிருக்கும் நாமும்
அவ்வாறே கடவுளுக்கு ஏற்புடையவர்கள் எனக் கருதப்படுவோம்.
25 நம் குற்றங்களுக்காகச் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார்;
நம்மைத் தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச்செய்தார். [11]


குறிப்புகள்

[1] 4:3 = தொநூ 15:6; கலா 3:6; யாக் 2:23.
[2] 4:7 = திபா 32:1,2.
[3] 4:11 = தொநூ 17:10; யோவா 7:22.
[4] 4:13 = தொநூ 17:4-6; 22:17-18; கலா 3:29.
[5] 4:14 = கலா 3:18.
[6] 4:15 = கலா 3:10.
[7] 4:16 = கலா 3:7.
[8] 4:17 = தொநூ 17:5.
[9] 4:18 = தொநூ 15:5.
[10] 4:19 = தொநூ 17:17.
[11] 4:25 = எசா 53:4,5.


(தொடர்ச்சி):உரோமையர்: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை