உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/கொரிந்தியருக்கு எழுதிய 2ஆம் திருமுகம்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
"கொரிந்து நகரில் உள்ள கடவுளின் திருச்சபைக்கும் அக்காயா மாநிலம் முழுவதிலும் வாழும் இறைமக்கள் அனைவருக்கும் கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாயிருக்கும் பவுலும் சகோதரராகிய திமொத்தேயுவும் எழுதுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!" (2 கொரிந்தியர் 1:1-2)


கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்
(II Corinthians) [1]

[தொகு]

முன்னுரை

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் தன்னிலை விளக்க மடலாக அமைந்துள்ளது. இது பவுலின் உள்ளத்தையும் உணர்வுகளையும் மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது; தம் திருத்தூதுப் பணி முறையானது என நிலைநாட்டுவதையும், தம் பணியை இகழ்ந்து பேசியவர்கள்மேல் சினங்கொண்டு அவர்களைத் தாக்குவதையும், தாம் இகழ்ச்சிக்கு உட்படுத்தப்பட்டபோது உள்ளம் வேதனையடைந்து கண்ணீர் விடுவதையும், கொரிந்தியர் மனம் மாறியபோது ஆறுதலால் நிறைந்து மனம் மகிழ்ச்சியடையவதையும் நாம் கண்டு அவரோடு ஒத்துணர முடிகிறது.

சூழலும் நோக்கமும்

[தொகு]

பவுல் கொரிந்தியருக்கு முதலாம் திருமுகத்தை எழுதிய பின் கொரிந்திலிருந்து போலிப் போதகர்கள் அவருக்கு எதிராகக் கலகமூட்டினர். அவர் கொரிந்துக்கு வரும் திட்டத்தை மாற்றியதால் அவர் உறுதியற்ற மனமுடையவர் என்றனர்; நன்கொடை திரட்டி வந்ததால் நேர்மையற்றவர் என்றனர்; அவர் தற்பெருமைமிக்கவர், நல்ல தோற்றமோ பேச்சுவன்மையோ இல்லாதவர், இயே கிறிஸ்துவின் அப்போஸ்தலாராய் இருக்கத் தகுதியற்றவர் என்றனர்.

பவுல் தீத்துவைக் கொரிந்துக்கு அனுப்பி இச்சில்களுக்குத் தீர்வு காணப் பணித்தார்; தீத்து திரும்பி வந்தபின் கொரிந்தியர் மனம் மாற்றம் பெற்றதை அவரிடமிருந்து அறிந்து மகிழ்ந்தார்; குறிப்பாக, 1 கொரி 5இல் சொல்லப்பட்ட ஒழுக்கக்கேடான ஒருவன் மனம்மாறி மீண்டும் திருச்சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது குறித்து மகிழ்ந்தார். எனவே மனம் மாறிய கொரிந்தியருக்கு நன்றி கூறும் நோக்குடனும் தம் திருத்தூதுப் பணியின் அதிகாரத்தை ஏற்காதோரை அதை ஏற்கச் செய்யும் நோக்குடனும் அவர் இம்மடலை எழுதினார். கி.பி. 55-56ஆம் ஆண்டுகளில் இதனை எழுதியதாகத் தெரிகிறது.

ஒரே கடிதமா, கடிதங்களின் தொகுப்பா?

[தொகு]

இத்திருமுகம் ஒரே மடலா அல்லது பல மடல்களின் தொகுப்பா என்பது பற்றி அறிஞரிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. சிலர் இதனை இன்றும் ஒரே மடலாகவே பார்க்கின்றனர். மற்றும் சிலர் 1-9 அதிகாரங்களை ஒரு மடலாகவும், 10-13 அதிகாரங்களை இன்னொரு மடலாகவும் பார்க்கின்றனர். ஆனால் வேறு சில அறிஞர்கள் இத்திருமுகம ஐந்து மடல்களின் தொகுப்பு என்கின்றனர்:

  • (1) தம் பணி பற்றிய விளக்க மடல் (2:14 - 7:4);
  • (2) கண்ணீர் மடல் (10 - 13);
  • (3) ஒப்புரவு மடல் (1:1 - 2:13);
  • (4) நன்கொடை பற்றிக் கொரிந்தியருக்கு மடல் (8:1-24);
  • (5) நன்கொடை பற்றி அக்காயாவினருக்கு மடல் (9:1-15);

இவ்வாறு பகுத்து இந்த வரிசையில் வாசிக்கும்போது மிகுந்த கருத்துத் தொடர்பும் பொருள் தெளிவும் கிடைக்கிறது.

உள்ளடக்கம்

[தொகு]

இத்திருமுகத்தின் முதற்பகுதியில் பவுல் கொரிந்து திருச்சபையுடம் தமக்கிருந்த உறவை விவரிக்கிறார்; புதிய உடன்படிக்கையே தம் பணிக்கும் கிறிஸ்துவின் பணிக்கும் அடிப்படை என்கிறார். பணியில் வரும் துன்பங்கள் குறித்தும் அப்பணிக்கான நோக்கம் குறித்தும் பேசுகிறார்; அந்நோக்கம் கிறிஸ்துவுடன் ஒப்புரவு ஆதல் என்கிறார்; தாம் வரும்போது நன்கொடைகளைத் தயாராக வைத்திருக்க வேண்டுமென அறிவுரை கூறுகிறார்.

இறுதியில், தாம் நிச்சயமாகக் கொரிந்துக்கு வரப்போவதாக வலியுறுத்தித் தாம் உண்மையான திருத்தூதர் என்றும் ஒரு திருத்தூதருக்குரிய தன்மையுடன் கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்கப்போவதாகவும் கூறுகிறார்.

2 கொரிந்தியர்

[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை (கடவுளுக்கு நன்றிகூறுதலும்) 1:1-11 328
2. பவுலின் பயணத் திட்டத்தை மாற்றியது குறித்து விளக்கம் 1:12 - 2:13 328 - 330
3. தம் பணிபற்றிய விளக்கம் 2:14 - 6:13 330 - 334
4. தூய வாழ்விற்கான அழைப்பு 6:14 - 7:2 334
5. பவுலின் ஆறுதலும் மகிழ்ச்சியும் 7:3-16 334 - 335
6. யூதேயாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு நன்கொடை திரட்டுதல் 8:1 - 9:15 335 - 338
7. பணிபற்றிய குற்றச்சாட்டுக்கு மறுமொழி 10:1 - 13:10 338 - 343
8. முடிவுரை 13:11-14 343

2 கொரிந்தியர் (2 Corinthians)[2]

[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1

[தொகு]

1. முன்னுரை

[தொகு]

வாழ்த்து

[தொகு]


1 கொரிந்து நகரில் உள்ள கடவுளின் திருச்சபைக்கும்
அக்காயா மாநிலம் முழுவதிலும் வாழும் இறைமக்கள் அனைவருக்கும்
கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாயிருக்கும் பவுலும்
சகோதரராகிய திமொத்தேயுவும் எழுதுவது: [1]
2 நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும்
உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

கடவுளுக்கு நன்றிகூறுதல்

[தொகு]


3 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள்.
அவரே ஆறுதல் அனைத்துக்கும் ஊற்று; அவரைப் போற்றுவோம்.
4 கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்.
நாங்களே கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால்
பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும்
ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது.
5 கிறிஸ்து நமக்காக மிகுதியாகத் துன்புற்றார்;
அது போல அவர் வழியாக நாம் மிகுதியான ஆறுதலும் பெறுகிறோம். [2]
6 ஆகவே நாங்கள் துன்புறுகிறோம் என்றால்
அது உங்கள் ஆறுதலுக்காகவும் மீட்புக்காகவும்தான்;
நாங்கள் ஆறுதல் பெறுகிறோம் என்றால்
அது உங்கள் ஆறுதலுக்காகவே.
நாங்கள் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதைப் போல
நீங்களும் உங்கள் துன்பங்களைத் தளராமனத்துடன் பொறுத்துக் கொள்வதற்கு
இந்த ஆறுதல் ஆற்றல் அளிக்கிறது.
7 நீங்கள் எங்கள் துன்பத்தில் பங்கெடுத்ததைப்போல்
எங்களுடைய ஆறுதலிலும் பங்குபெறுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
நீங்கள் இவ்வாறு செய்வீர்கள் என உறுதியாக எதிர்நோக்கி இருக்கிறோம்.


8 சகோதர சகோதரிகளே,
ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட இன்னல்களைப் பற்றி
நீங்கள் அறிந்திருக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்.
அவை எங்களை அளவுக்கு மிஞ்சி வாட்டின;
எங்களால் தாங்க முடியாத சுமையாக மாறின.
இனிப் பிழைப்போம் என்னும் நம்பிக்கையே இல்லாமல் போயிற்று.
9 எங்களுக்கு மரணதண்டனையே விதிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.
நாங்கள் எங்களை அல்ல,
இறந்தோரை உயிர்த்தெழச்செய்யும் கடவுளையே நம்பி இருக்க வேண்டும்
என்பதற்காகவே இவ்வாறு நிகழ்ந்தது.
10 அவரேதான் இத்துணைக் கொடிய சாவிலிருந்து எங்களை விடுவித்தார்;
இன்னும் எங்களை விடுவிப்பார்.
11 நீங்களும் உங்கள் மன்றாட்டு மூலமாக எங்களுக்கு உதவினால்
இனிமேலும் எங்களை விடுவிப்பார் என்று எதிர் பார்க்கிறோம்.
இவ்வாறு பலர் எங்களுக்காக மன்றாடி
இந்த அருளுக்காக எங்கள் சார்பில் கடவுளுக்கு நன்றி செலுத்துவர். [3]

2. பவுலின் பயணத்திட்டத்தை மாற்றியது குறித்து விளக்கம்

[தொகு]


12 மக்களிடையே, குறிப்பாக உங்களிடையே
மனித ஞானத்தின்படி நடவாமல்,
கடவுளின் அருளைச் சார்ந்து
அவர் தரும் நேர்மையோடும் நாணயத்தோடும் நடந்து வந்தோம் என
எங்கள் மனச்சான்று உறுதியாகச் சொல்லுகிறது.
இதுவே எங்களுக்குப் பெருமை.
13 நாங்கள் உங்களுக்கு எழுதும் திருமுகங்களில்
நீங்கள் வாசித்துப் புரிந்து கொள்ள முடியாதது எதுவுமில்லை.
இப்போது நீங்கள் எங்களை ஓரளவுக்குத்தான் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.
14 ஆனால் நம் ஆண்டவர் இயேசு வரும் நாளில்
நீங்கள் எங்களை முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள்
என்னும் எதிர்நோக்குடன் இருக்கிறேன்.
அப்போது நாங்கள் உங்களைக் குறித்துப் பெருமைகொள்வது போன்று,
நீங்களும் எங்களைக் குறித்துப் பெருமை கொள்வீர்கள். [4]


15 இந்த உறுதியான நம்பிக்கை இருந்ததால்தான்
நான் முதலில் உங்களிடம் வரத் திட்டமிட்டேன்.
அப்போது நீங்களும் என்னை இருமுறை சந்திக்கும் பேற்றைப் பெற்றிருப்பீர்கள்.
16 மாசிதோனியாவுக்குப் போகும் வழியிலும்
அங்கிருந்து திரும்பி வரும் வழியிலும் நான் உங்களைச் சந்தித்திருப்பேன்.
நீங்களும் என்னை யூதேயாவுக்கு வழியனுப்பி வைத்திருப்பீர்கள்.
17 இப்படித் திட்டமிட்ட பிறகு
நான் பொறுப்பற்ற முறையில் அதை மாற்றிவிட்டேன் என நினைக்கிறீர்களா?
அல்லது உள்நோக்கத்தோடு திட்டமிடுகிறேன் என்று நினைக்கிறீர்களா?
ஒரே நேரத்தில் 'ஆம்' என்றும் 'இல்லை' என்றும் சொல்பவன் நான் என்று நினைக்கிறீர்களா?
18 நான் ஒரே நேரத்தில் 'ஆம்' என்றும் 'இல்லை' என்றும் உங்களிடம் பேசுவதில்லை.
கடவுள் உண்மையுள்ளவராயிருப்பது போல் நான் சொல்வதும் உண்மையே.
19 நானும் சில்வானும் திமொத்தேயுவும் உங்களிடையே இருந்தபோது
நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிறிஸ்து
ஒரே நேரத்தில் 'ஆம்' என்றும் 'இல்லை' என்றும் பேசுபவர் அல்ல.
மாறாக அவர் 'ஆம்' என உண்மையையே பேசுபவர். [5]
20 அவர் சொல்லும் 'ஆம் வழியாக, '
கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன.
அதனால்தான் நாம் கடவுளைப் போற்றிப்புகழும்போது
அவர் வழியாக 'ஆமென்' [6] எனச் சொல்லுகிறோம்.
21 கடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்;
இவ்வாறு கிறிஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவை அவர் உறுதிப்படுத்துகிறார்.
அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.
22 அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத்
தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப் பதித்தார்.


23 என் உயிரின் மேல் ஆணையாகச் சொல்கிறேன்:
உங்களை வருத்தத்துக்கு உள்ளாக்காமல் இருக்கவே
இதுவரை நான் கொரிந்துக்கு வரவில்லை. கடவுளே இதற்குச் சாட்சி.
24 நீங்கள் எதையெதை நம்ப வேண்டும் என
நாங்கள் உங்களை கட்டாயப்படுத்துவதில்லை.
நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையில் நிலையாய்த் தான் இருக்கிறீர்கள்.
உங்கள் மகிழ்ச்சிக்காக உங்களோடு ஒத்துழைக்கிறோம்.


குறிப்புகள்

[1] 1:1 = திப 8:1.
[2] 1:5 = கொலோ 1:24; திப 20:19; 1 கொரி 15:32.
[3] 1:11 = உரோ 15:30-31.
[4] 1:14 = 1 தெச 2:19-20.
[5] 1:19 = திப 18:5.
[6] 1:20 - "ஆமென்" என்ற சொல்லுக்கு "அப்படியே ஆகட்டும்" என்பது பொருள்.


அதிகாரம் 2

[தொகு]


1 நான் மீண்டும் உங்களிடம் வந்து
உங்களுக்கு மனவருத்தத்தைக் கொடுக்க விரும்பவில்லை.
2 நான் உங்களுக்கு மனவருத்தத்தைக் கொடுத்தால்
எனக்கு மகிழ்ச்சியூட்ட யார் இருக்கிறார்?
என்னால் மனவருத்தத்துக்குட்பட்ட நீங்கள்தானே
எனக்கு மகிழ்ச்சியூட்ட வேண்டும்!
3 நான் வரும்போது எனக்கு மகிழ்ச்சி தர வேண்டிய உங்களாலே
எனக்கு மனவருத்தம் வரக்கூடாது என்பதற்காகவே
அத்திருமுகத்தை உங்களுக்கு எழுதினேன்.
நான் மகிழ்ச்சியடைந்தால் நீங்கள் எல்லாரும் மகிழ்ச்சியடைவீர்கள்.
இதுவே உங்கள் அனைவரையும் பற்றிய என் உறுதியான நம்பிக்கை.
4 நான் மிகுந்த வேதனையோடும் மனக்கவலையோடும்
கலங்கிய கண்களோடும் அதை உங்களுக்கு எழுதினேன்.
உங்களுக்கு மனவருத்தம் தரவேண்டும் என்பதற்காக அல்ல,
மாறாக நான் உங்கள் மேல் கொண்டுள்ள மிகுந்த அன்பை
நீங்கள் உணரவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு எழுதினேன்.


5 ஒருவன் எனக்கு மனவருத்தம் தந்தால் அது எனக்கு மட்டும் அல்ல,
ஓரளவுக்கு உங்கள் அனைவருக்குமேதான் என்றே சொல்லவேண்டும்.
அவன் செய்ததை மிகைப்படுத்த நான் விரும்பவில்லை.
6 அந்த ஆளுக்கு உங்களுள் பெரும்பான்மையோர் கொடுத்த தண்டனையே போதும்.
7 எனவே இப்பொழுது நீங்கள் அவனை மன்னித்து ஏற்றுக்கொள்வது தான் நல்லது.
அவன் மனவருத்தத்தில் மூழ்கிவிடாமல் இருக்கும் வண்ணம்
அவனுக்கு ஆறுதல் அளியுங்கள். [1]
8 நீங்கள் அவன்மீது அன்புகொண்டிருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துமாறு
நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
9 நீங்கள் எப்போதும் எனக்குக் கீழ்ப்படிகிறீர்களா எனச் சோதித்து அறியவே
அத்திருமுகத்தை நான் எழுதினேன்.
10 நீங்கள் ஒருவனை மன்னித்தால் நானும் அவனை மன்னிக்கிறேன்.
நான் மன்னிக்க வேண்டியது ஏதாவது இருந்தால்
அதை உங்கள் பொருட்டுக் கிறிஸ்துவின் முன்னிலையில் மன்னித்து விட்டேன்.
11 இவ்வாறு சாத்தான் நம்மை வஞ்சிக்க இடம் கொடுக்க மாட்டோம்.
அவனது சதித்திட்டம் நமக்குத் தெரியாதது அல்ல. [2]

துரோவாவில் பவுல் அமைதியின்றித் தவித்தல்

[தொகு]


12 துரோவா என்னும் நகருக்குக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க வந்த பொழுது
அங்கே ஆண்டவர் எனக்குப் பணியாற்ற நல்ல வாய்ப்பைத் தந்தார்.
13 ஆனால் அங்கே என் தம்பி தீத்துவைக் காணாததால்
என் மனம் அமைதியின்றித் தவித்தது.
எனவே அம்மக்களிடம் விடை பெற்றுக் கொண்டு
அங்கிருந்து மாசிதோனியாவுக்குப் புறப்பட்டேன். [3]

3. தம் பணி பற்றிய விளக்கம்

[தொகு]

கிறிஸ்துவால் கிடைக்கும் வெற்றி நிறைந்த வாழ்வு

[தொகு]


14 கிறிஸ்துவோடு இணைந்து வாழும் எங்களைக்
கடவுள் கிறிஸ்துவின் வெற்றிப் பவனியில் பங்கு கொள்ளச் செய்து
எங்கள் வழியாய்த் தம்மைப்பற்றி யாவரும் அறியச் செய்கிறார்;
இவ்வறிவு நறுமணம் போல் எங்கும் பரவுகிறது.
இவ்வாறு செய்யும் கடவுளுக்கே நன்றி உரித்தாகுக!
15 மீட்புப் பெறுவோரிடையேயும் அழிவுறுவோரிடையேயும்
நாங்கள் கடவுள்பால் எழும் கிறிஸ்துவின் நறுமணமாயிருக்கிறோம்.
16 அழிவுறுவோருக்கு அது சாவை விளைவிக்கும் நச்சுப் புகையாகும்.
மீட்புப் பெறுவோருக்கு அது வாழ்வளிக்கும் நறுமணமாகும்.
அப்படியெனில் இத்தகைய பணியை யார்தான் செய்ய இயலும்?
17 நாங்கள் கடவுளின் வார்த்தையை மலிவுச் சரக்காகக் கருதும்
பலரைப் போன்றவர்கள் அல்ல.
மாறாக, கிறிஸ்துவோடு இணைந்துள்ள நாங்கள்
கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்னும் முறையில்
அவர் முன்னிலையில் நேர்மையோடு பேசுபவர்கள்.


குறிப்புகள்

[1] 2:7 = கொலோ 3:13.
[2] 2:11 = எபே 4:27.
[3] 2:12,13 = திப 20:1.


(தொடர்ச்சி): கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை